Monday, April 18, 2011

"நம்பர்-4,சுடலை கோவில் தெரு"





வணக்கம் நண்பர்களே ,



ஓவ்வொரு தெருவிற்கும் ஒரு வரலாறு உண்டு. அதில் பல விசயங்கள் பதிவு செய்யப்படுகின்றன.சில விஷயங்கள் பதிவு செய்யாமலே கரைந்து விடுகின்றன,சாதனையாளர்களை மட்டுமே கொண்டது அல்ல வரலாறு. சாமானியர்களுக்கும் அதில் ஒரு இடம் வேண்டும் என்கிற ஆதங்கத்தோடு நான் கடந்து வந்த சில சாதாரண மனிதர்களை பற்றி இங்கு என் வலைப்பூவில் எழுத தொடங்குகிறேன். படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .....

விரைவில் .......................................







இப்படிக்கு



திருநெல்வேலியிலுருந்து .மு.வெங்கட்ராமன்

Saturday, April 9, 2011

ஏன் ?



               "எல்.ஐ.சி பில்டிங் பார்த்து ஆச்சிரியபட்டதுலாம் அந்த காலம். இப்ப சென்னையில 13 ,14 பில்டிங்கலாம் சாதாரணமா போச்சு " ஆச்சரியமா சொல்றான், 16அடுக்கு மாடி குடியிருப்போட மொட்டை மாடியில நிக்கிற மோகன்.

              "ஆமாடா சென்னை பாப்புலேசன் டே பை டே இன்க்ரீஸ் ஆகுதே தவிர 1 % கூட குறையிரதில்ல", இது அவன் மாமா...

           விருதுநகர் பக்கத்தில ஒரு சின்ன கிராமத்துலேர்ந்து வேலைதேடி சென்னையில மாமா வீட்டுக்கு வந்துருக்கான் மோகன்...

          வந்த அன்னைக்கு ஊர் சுற்றி பார்க்க முடியலைனாலும், மாடியில நின்னாவது ஊரை பார்த்துரனும்னு காலையிலேயே டிபன் சாப்பிட்டதுலேர்ந்து மொட்டை மாடியிலேயே குடியிருக்கான். திடீர்னு ரெண்டு முணு  விமானம் கிராஸ் ஆகுது. இவ்வளவு குளோசா விமானம் பறக்கிறத பார்த்ததும் சந்தோசத்துல குதிக்கிறான் மோகன். கொஞ்ச நேரத்தில 10 , 15 விமானம் வரிசையா வர ஆரம்பிச்சதுமே அடிவயித்துல ஏதோ உருள ஆரம்பிச்சிடுச்சு....


              கீழ இறங்கி வீட்டுக்குள்ள வர்றான். நியூஸ்ல, "சீன ராணுவ விமானங்கள் தமிழ்நாட்டுக்குள்ள வருதுனும் ஆனால் தாக்குதல் எதுவும் நடத்தல , அதனால மக்கள் தாழ்வான பகுதிகளுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் போய் பத்திரமா இருங்கன்னு அறிவிப்பு கொடுக்கிறாங்க" ... உடனே அந்த அப்பார்ட்மென்ட்ஸ் முழுக்க அலறுது. லிப்ட் எல்லாம் ஹௌஸ்புல், அவசரத்தில எத எடுக்கிறது எத விடுறதுன்னு தெரியாம சர்டிபிக்கேட் பைலையும் , அவன் பேமிலி போட்டோவையும் ஒரு பையில போட்டுக்கிட்டு படியில வேகமா கீழ இறங்கி ஓடுறான். அவசரத்தில அவங்க மாமா குடும்பத்தையே மறந்துட்டான்.
தொடர்ந்து விமானங்கள் வந்துகிட்டே இருக்கு. "சீனா தமிழ்நாட்ட பிடிச்சுருவாங்க, அங்கங்க குண்டு போடுறாங்களாம்," அப்படின்னு ஒரு குரல்.... மரணபயத்தில என்ன செய்யன்னு தெரியாம, "சத்தம் போட்டு கத்துறான் " மோகன் .....


     அவங்க அம்மா பயந்துட்டாங்க, "டேய் மோகன் நைட் ஷோ சினிமா போகாத, பகல்ல தூங்காதேனா கேட்கிறியா ? சாயங்காலம் உனக்கு சென்னைக்கு டிரெயின் ஞாபகத்தில இருக்கா.....?



         ஒரு பெருமூச்சு  விட்டு தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கிற மோகன் மனசில ஒரு கேள்வி, " கனவில சில போர் விமானங்கள பார்த்ததுக்கே இப்படினா நெஜத்தில தினம் தினம் போர் வலிய அனுபவிக்கிற நாடுகளையும் அங்க வாழுற மக்களையும் நெனைச்சு பார்த்தான்" ...

       ஒரு சில நிமிஷம் அமைதியாவே கழிஞ்சது... அப்ப படுக்கையிலிருந்து எந்தரிச்ச மோகன்  மூஞ்ச கழுவ போயிட்டான்.....

                                                                                   
இப்படிக்கு  


திருநெல்வேலியிலிருந்து
 மு.வெங்கட்ராமன்.....

ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு நாள்...2011

Sunday, April 3, 2011

வாசனை !!!





         மதியம் நாலாவது சயின்ஸ் பிரியட் ஆரம்பிச்சதிலிருந்தே மகேஸ்வரி கடிகாரத்தையே தான் பார்த்துகிட்டிருக்கா வேற ஒன்னும்மில்ல 4 மணி எப்ப ஆகும்ன்னு தான்....

        அஞ்சாவது  படிக்கிற மகேஸ்வரிக்கு தினமும் 4 மணிக்கு தான் ஸ்கூல் விடும். இன்னைக்கு அவளால கிளாஸ்ல இருக்க முடியல,எப்ப கிளாஸ் முடியும் வீட்டுக்கு ஓடலாம்னு உட்கார்ந்திருக்கிற பெஞ்சில இருக்க முடியாம உரு​ண்டுட்டு வர்றா ...

        கார்ட்டூன் பாக்க போவாளோ? இல்ல தெரு பிள்ளைகளோட கிடந்து விளையாட இவ்வளவு அவசரமா? வீட்டுல எங்கேயாவது வெளியில கூட்டிட்டு போவாங்களா இருக்கும். ஹூம்.. இப்ப உள்ள பிள்ளைங்களுக்கெல்லாம் வீடியோ கேம்ஸ் எத்தனை? எவ்வளோ டி.வி சேனல்ஸ்? எப்ப பார்த்தாலும் விளையாட்டு... கொடுத்து வச்சதுங்க.... அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்களே ! கொஞ்சம் பொறுங்க ..

      ஆமா எல்லாருடைய கதையும் ஒரே மாதிரி இருக்கிறதில்லையே!!!!!!!!

      ஸ்கூல்ல மணி அடிச்சுருச்சு.........

     முதல் ஆளா வெளிய வர்றா மகேஸ்வரி, ஒரு கையில இடுப்பு பாவடைய தூக்கி பிடிச்சுகிட்டா. தோள்ல புத்தகப்பைய போட்டு அதோட வார் இருக்குல்ல, அத  தலைக்கு மேல் வழியா கொண்டு வந்து வாயாலகவ்விகிட்டு வேகமா ஓடுறா!....

     மகேஸ்வரி ஸ்கூல்ல இருந்து நாலு தெரு தள்ளி இருக்குது அவ வீடு அஞ்சு நிமிஷம் கூட ஆகல,அவ்வளவு  வேகத்தில வீட்டுக்கு வந்துட்டா, உள்ள நுழைஞ்​சதும் ஸ்கூல்பைய தூக்கி ஒரு ஓரமா போட்டுட்டு, மூஞ்ச கழுவி,பொட்ட வச்சு, மேல்டாப்ல இருந்த கூடைய தூக்கிட்டு நேரா ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்புறா...

    மறுபடியும் ஒரு ஓட்டம் வீட்டிலயிருந்து நெனைச்சத விட வேகமாவே ரயில்வே ஸ்டேசனுக்குள்ள நுழைஞ்சுட்டா, ஆனா அங்க இவளுக்கு முன்னாடியே நெறைய பேரு ஆஜராயிருந்தாங்க.

     இங்கெல்லாம் முன்ன பின்ன மகேஸ்வரி இப்படி வந்ததது கிடையாது. இன்னைக்கு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அதனால இவ இங்க வந்தாதான் அவங்க வீட்டுல இன்னைக்கு  ராத்திரி சாப்பாடு.


    அவ கூடையிலிருந்து வர்ற வாசம் மெல்ல மெல்ல காத்துல பரவுது....கூட்டத்தில இருக்கிற யாரவது ஒருத்தர் நிச்சயமா அவக்கிட்ட வருவாங்கங்கற நம்பிக்கையில சத்தம்போட்டு கத்துறா... ஆனா அவ குரல், பக்கத்துல நிக்கிற ஆளுக்கு கூட கேக்கல...

     ஆனாலும் தொடர்ந்து கத்துறா...."அம்மா பூவே , அக்கா பூவே, மல்லி கனகாம்பரம் பூவே... முலம் 5 ரூபா பூவே பூவேணு கத்துறா..."




எல்லா வீதிகளிலும் ஏதோ ஒரு பிஞ்சின் குரல் இப்படி மணத்து கொண்டே தான் இருக்கிறது..... 




இப்படிக்கு 

மு.வெ.ரா-
திருநெல்வேலியிலுருந்து


மார்ச் நான்காவது வாரம்...2011

Friday, March 25, 2011

பூச்சாண்டி !!!


       
        ராமு 6.3அடி உயரம் கொஞ்சம் ஸ்மார்ட் பார்க்கிறதுக்கு கொஞ்சம் முரடா தெரிஞ்சாலும் மனசளவில ரொம்ப சாப்ட் நேச்சர் தான்.

      காதல் பண்றதுக்கு பயந்து வருஷத்த கடத்திட்டான் 29 வயசில அவன் வீட்டுலயே ஒரு நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணத்த முடிச்சு வச்சுட்டாங்க...

      அவன் மனைவிக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலைங்கறதால காலைல சீக்கிரமாவே கிளம்பி போயிருவாங்க. அதனால தினமும் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கிரீச்ல கொண்டு விடுறது ராமுவோட பொறுப்பு. குழந்தைய சாப்பிட வைக்கிறதுக்குள்ள தினமும் அவனுக்கு போதும் போதும்னு ஆயிடும் .

    கடைசியா அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான் ரோட்ல நின்னு போற வர்ற ஆட்கள குழந்தைக்கு காட்டி "சாப்பிடு இல்ல, அந்த மாமாக்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," "இந்த தாத்தாகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்," இப்படி பயமுறுத்தியே தினமும் சாப்பிட வச்சுட்டான். இன்னொரு பக்கம் போறவர்றவங்கள்ல குழந்தைய வச்சு கலாய்க்கிரதில இவனுக்கு ஒரு சந்தோசம்.

   இன்னைக்கும் அப்படி அவன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துகிட்டு வீட்டுக்குள்ள நுழையுறான் அப்ப ஜன்னல் ஓரத்தில ஒரு சத்தம் "ஏய் கஸ்துரி பாரு ராமுமாமா வந்துட்டார் சாப்பிடுரியா இல்ல உன்ன தூக்கிட்டு போய்டுவார் சீக்கிரம் சாப்பிடுன்னு" ஒரு குரல்...




ஒரு நொடி அதிர்ச்சி ஆகி அந்தபக்கம் எட்டி பார்க்கிறான் ராமு,

 'அவன் முகத்த பார்த்ததும் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிற குழந்தை மெதுவா சாப்பிட வாய திறக்குது '!!!







இப்படிக்கு 

மு.வெ.ரா-
திருநெல்வேலியிலுருந்து


மார்ச் மூன்றாவது வாரம்...2011





Monday, March 14, 2011

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்! ! !



      குமாருக்கு
 காலையில அவன் பேங்க் பேலன்ஸ் செக் பண்ணதிலருந்து மனசே சரியில்ல....


  அவன் மனைவிகிட்ட இருந்து முணு மிஸ்டு கால் இவன் போனையே எடுக்கல....


   இந்த மாசம் சம்பளம் இன்கிரிமென்ட் போடுவாங்கன்னு ஒரு வருஷமா காத்துக்கிட்டிருந்தான். நெறைய ப்ளான்லாம் வச்சுருந்தான்.பட் எல்லாம் ப்ளாப்... அவனுக்கு 1000 ரூபாய் தான் இன்கிரிமென்ட் போட்டுருக்காங்கங்கிறது கூட அவனுக்கு வருத்தமா இல்ல, ஆனா அவன் ஜுனியர்ஸ்ல சிலருக்கு 4000௦௦௦ ரூபாய் இன்கிரிமென்ட் போட்டுருக்கிறத நெனைச்சா அவனுக்கு இன்னும் அவமானமா இருந்தது.

   யார்கிட்டயும் பேசல....

    அவன் சீட்ல உட்கார்ந்து எம்.டிய மனசுக்குளையே திட்டி தீர்த்துக்கிட்டுருக்கான். வொர்க்கர்ஸ் பத்தி யார் கவலைபடுறாங்க, அவங்க வருமானம் வருஷம் வருஷம் ஏறுது. நமக்கும் சம்பளம் கூட்ட வேண்டாம் ச்சே...அவன் எரிச்சல் பட்டுக்கிட்டிருக்கும்போதே அவன்  மனைவிகிட்டே இருந்து ஒரு போன்கால் வருது ...




  முதல் கால அவன்  அட்டெண்ட் பன்னல ...

இரண்டாவது, மூணாவது தொடர்ந்து ஒரு அஞ்சு மிஸ்டு  கால்...

குமார் போன அட்டென்ட் பண்றான்...

ஹலோ......சொல்லு

    எதிர்முனையில அவன் மனைவி " ஹலோ என்னங்க சிவகாமி அம்மா நம்ம வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்து 2 வருஷம் ஆச்சு, இந்த மாசமாவது ஒரு நூறு ரூபா சம்பளத்துல ஏத்தி கொடுக்க முடியுமானு கேட்கிறாங்க "...

     "ஏய் உனக்கு அறிவில்ல ஆபீஸ் நேரத்தில இப்படி தொந்தரவு பண்ற, அவங்க துவைக்கிற நாலு துணிக்கு மாசம் முண்ணூறு ரூபாவே அதிகம். இதுல கூட 100 ரூபா வேற குடுக்கணுமோ வையுடி போனனு கத்திட்டு போன வச்சுட்டான்.....
     


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் இரண்டாவது வாரம் ...

Tuesday, March 8, 2011

அம்மா அம்மாதானே !


நான் வெளியே கிளம்பும்போது குறுக்கே வரும்

குட்டிபூனையை கையால் தடுக்கிறாள் என் அம்மா...

" ஏய் சூ...போ...."

அதை எதிரில் இருந்து பார்த்து முறைக்கிறாள் அவள் அம்மா...

"மியாவ்...மியாவ்...
"

இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...09-03-2011

Sunday, March 6, 2011

காதலா ! காதலா !


     
         எப்பவும் காலேஜ் முடிஞ்சா தனியா வீட்டுக்கு வர்ற உமா இன்னைக்கு அவங்க அப்பாவோட வண்டியில வந்து இறங்கறத பார்க்கும்போது அவங்க அம்மா கலைவாணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு...

"என்ன உமா இவ்ளோ சீக்கிரம் காலேஜ் விட்டு வந்துட்ட?"

பதில் உமா அப்பாக்கிட்ட இருந்து வருது....

"ஆமா உன் பொண்ணு காலேஜ் படிக்கிற இலட்சணத்தை இன்னைக்குதான பார்த்தேன்...பஸ் ஸ்டாண்ட்ல யாரோ ஒரு பையன் கூட நின்னு பேசிகிட்டிருக்கா..."வார்த்தைகள் வேகமாய் வந்தன..

என்னங்க சொல்றிங்க ?

   "ம்...கேட்டா ரொம்ப நல்ல பையன்ப்பா என் கிளாஸ்மெட்,அவங்க அப்பா அம்மாவுக்குலாம் கூட என்னை நல்ல தெரியும்ங்கிறா..."

  அங்கும் இங்கும் நடக்கிறார் ஏதோ நினைத்தவர் மீண்டும் உமாவ பார்த்து பேசுறார். "ஏய்...உமா இந்த காதல் கீதல்னு ஏதாவது பேசிகிட்டிருந்த நடக்கிறதேவேற, என் சொந்தத்துல நல்ல மாப்பிள்ளையா பார்த்து நானே கட்டிவைக்கிறேனு" கத்திட்டு அந்த இடத்த விட்டு நகர்ந்துட்டார்...

   அந்த வார்த்தை காற்றில கரையிரதுக்குள்ள உமா மனசுக்குள்ள அவங்க அப்பா என்னைக்கோ தன்ன பத்தி பெருமையா சொன்ன சில வார்த்தைகள் திரும்ப திரும்ப ஓடுது "உங்க அம்மாவை நா காதலிச்சப்ப வேறசாதி பையன் எப்படின்னு தெரியலையேனு பல காரனங்கள் சொல்லி எதிர்த்த உங்க தாத்தாவ என் உழைப்பால முன்னேறி போராடி சம்மதிக்க வச்சேன் தெரியுமா"....




"காற்றில் உயிர் இருக்கிறது! ஆம் எத்தனை உயிர்களின் உணர்வுகள் அதில் கலந்திருக்கிறது!"


இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து வெங்கட்ராமன்,

காலம்: மார்ச் முதல் வாரம்.....