Wednesday, January 23, 2013

பழிக்கு பழி




   அப்படியா 
   ஆ ...
   சாப்பிட்டேன்....ம் ம் ....

  ராத்திரி சாப்பாட்டுக்கு சப்பாத்தி போட்டு வைனு  சொல்லிட்டு போஃ ன கட் பண்றான்  சிவா...

    அவன்  ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். ஏகப்பட்ட பிரெண்ட்ஸ் வயசு கம்மிதான்.ஆனா நெறைய ஆலோசனை சொல்றேன் உதவி பன்றேன்கிற பேர்ல நாள் முழுக்க போஃன் பேசிட்டே இருப்பான்.

       வீட்ல இருந்து அம்மாவோ அவன் தங்கச்சியோ போஃன் பேசினா மட்டும் ஆ..சரி...ஓகே... அவ்வளவு தான் இதுக்குமேல பேசமாட்டான் ஒரு நிமிஷத்தில போன கட் பண்ணிருவான் ஏன் சாப்பிடவும்,தூங்கவும் மட்டும்தான் வீட்டுக்கே போறான்னு வச்சுக்கோங்களேன்.

      ஆனா அவன்  வீட்டுல எல்லாரும் இவன் மேல உயிரே வச்சுருக்காங்க.என்ன சமையல் செஞ்சாலும் இவன் சாப்பிட்டு மிச்சம் இருந்தாதான் அவங்கலாம்  சாப்பிடுவாங்க எல்லாத்திலையும் இவனுக்கு  தான் முன்னுரிமை...

         ஏதாவது ஒரு சென்டிமென்டான குடும்ப படம் பார்த்தாலே அழுதுருவான்...படம் பார்க்குபோதே அவன் அம்மா தங்கச்சி மேல எல்லாம் பாசம் பொத்துக்கிட்டு வரும் படம் முடியும் போது போன இடம் தெரியாம போயிரும்....

       இன்னும் அவன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அவன் கல்யணம் பண்ணணும்.இதுக்கெலாம் எப்படி பணம் சேர்க்கிறது. இதுதான் அவனோட மிகப்பெரிய லட்சியம் .

        ஒரு நாள்  வழக்கம்போல அவன் வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்தான்..டிவி பார்த்துகிட்டே அவனுக்கு முழிச்சிருந்து சாப்பாடு பண்ணி வச்சு பரிமாறிக்கிட்டிருக்கிற தங்கச்சிய ஏதோ டென்சன்ல நல்ல திட்டிட்டான்.பதிலுக்கும் அவளும்  சத்தம் போட கோபத்தில அவ பின் தலையில் ஒரு அடி ஓங்கி அடிச்சுட்டான்.உடனே சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டா அவன்  தங்கச்சி...

           தூக்கம் கலைஞ்சு அவன் அம்மாவும்  எந்திரிச்சுட்டாங்க  ஒரே சண்டை "பாவம் உன்ன இப்படி கவனிச்சுக்கிற பிள்ளைய போய் இப்படி அடிச்சிட்டியே "திட்டிட்டு அவங்க அம்மாவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க...

      சிவா எதையும் கண்டுக்காம என்ன கோவப்படுத்தாதீங்கனு கத்திட்டு  வீட்டோட  உள் அறையில போய் தூங்க போயிட்டான்... 

       தூக்கத்தில ஒரே கெட்ட கனவு வந்து எல்லாருக்கு முன்னாடி காலையில அஞ்சு மணிக்கெலாம் எந்திரிச்சு ஒரே யோசனையா உட்கார்ந்திருந்தான். மனசு கேட்கல "என்ன நாளும் நம்ம இப்படி  அடிச்சிருக்க கூடாது மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே"அவன் தங்கச்சிய எழுப்பி ரொம்ப வலிக்குதா சாரி அப்படிங்கிறான்.

       அப்ப அவன் தங்கச்சி "ஹே பழிக்கு பழி நான் நைட்டே உன் தலையில் பத்து குண்டு பேண்ன  எடுத்து போட்டுட்டேனே"  அபப்டின்னு கத்திட்டு  அந்த இடத்த  விட்டு ஓடி போயிட்டா...

        ஒரு சில நிமிஷம் அமைதியா இருந்து ஏதோ யோசிச்ச சிவா சிரிச்சுகிட்டே அவன் தலைய தடவி பார்க்கிறான் அதுக்குள்ளே உள்ள இருந்து திரும்பி வந்த அவன் தங்கச்சி ஒரு பேன் சீப்ப எடுத்துட்டு வந்து அவன் தலைய சீப்பால நல்ல சீவி ஒவ்வொரு பேண்னா  எடுத்து குத்த ஆரம்பிச்சிட்டா, ரொம்ப நேர தேடுதலுக்கு அப்புறம் சில பேன் கிடைக்கவும் உற்சாகமாகி  சொல்றா  " ஐ..... அண்ணா  ரெண்டு பேண்  தான் கிடைச்சுருக்கு நல்ல குண்டு பேண்  மீதிய காணோமே" 



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

கலியுக பாண்டவர்கள்


    முத்தம்மா கணபதி ரெண்டு பெரும் என்பதாம் கல்யாணம் பார்த்த தம்பதிகள்.அந்த கால உழைப்பு,உணவுகள்னால பிரசர் ,சுகர்னு எந்த நோயும் இல்ல, ஆனா  வயாதிகம் காரணமாக டிவி பிரிட்ஜ் ,எல்லா வசதியும் உள்ள ஒரு வாடகை வீட்டில சமைக்க பாத்திரம் கழுவ வீடு துடைக்க மட்டும் வந்துட்டு போற வேலைகாரி துணையோட வாழ்ந்துட்டு வர்றாங்க. 

    இவங்களுக்கு மொத்தம் ஐந்து ஆம்புள பிள்ளைகள் பிறந்தது இருந்தாலும்  முத்தமாவையும் அவர்  கணவர் கணபதியையும் அவங்க அவங்க வீட்டில வச்சு ஒரு நாள் கூட பார்த்துக்க யாரும் தயாரில்ல யாரவது ஒருத்தர் வேணா  எங்க வீட்டுக்கு வரட்டும் பார்த்துகுறோம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதா இருந்த பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்க, அதான் இவங்க எல்லா பையன்களோட குழுந்தைகளும் வளர்ந்துட்டாங்கல,இனி தாத்தா பாட்டி தேவையில்ல போல...

             அதனால வேற வழியில்லாம 90 வயசுக்கு மேல ஆன கணபதியும் என்பத்தைந்து  வயது ஆன அவர் மனைவி முத்தம்மாவும் சில வருஷங்களா தனியாதான் இந்த வீட்ட்ல இருக்காங்க.

            அவங்க பசங்க ரெண்டு பிரிவா பிரிஞ்சுருக்காங்க ஒருத்தருக்கும் அவங்களுக்குள்ள பெரிய அளவில ஒட்டு உறவில்ல அப்பா அம்மாக்கு பென்சன் எதுவும் கிடையாததுனால  ஆளுக்கு கொஞ்சம் பணத்த மாசம் மாசம் அனுப்புவாங்க.எப்பயாவது சில நாள் வந்து ரெண்டு பேரையும் பார்த்துட்டு ஒரு சிலமணி நேரம் மட்டும் இருந்து பேசிட்டு போவாங்க அவ்வளவுதான்.

          எல்லா வசதியும் இருந்தாலும் எதையும் செய்ய முடியாத அளவுக்கு தளர்ந்து போயிருக்கிற முத்தம்மா கணபதி ரெண்டு பேருமே சின்ன வயசில அவங்க தூக்கி வச்சு கொண்டாடின பசங்க செய்ய முடியாத காலத்தில துணைக்கு இல்லையே அப்படிங்கற வருத்தத்த வெளிகாட்டல எல்லா பிள்ளைங்க கிட்டயும் பாசமா தான் இருப்பாங்க...

          இன்னைக்கு அப்படி அவங்கள் பார்க்க வந்த இரண்டாவது பையன் பாலமுருகனுக்கு கை நடுங்க காப்பி போட்டு கொடுத்துட்டு இருக்கும்  போதே போ ஃன்  அடிக்குது அத அட்டெண்ட் பண்ற முத்தம்மா காதுல ஹலோ சொல்ல எதிர்முனையில ஒரு ஆள் குரல் கேட்கவும் பதறி போய் பக்கத்து  ரூம் குள்ள போறாங்க... 

       ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வெளியில வராங்க...

  அப்ப அவங்க வீட்டு வேலைகாரி "என்னம்மா எதுவும் தூக்க செய்தியா னு" கேட்கிறாள் 

    அதுக்கு முத்தம்மா சோகமா சொல்றாங்க"இப்ப நா யாருக்கு போஃன் பேசினேன்னு தெரிஞ்சா எங்கள பார்க்க வந்துருக்கிற  என் ரெண்டாவது பையன் இனிமேல் எங்கள பார்க்க வரவே மாட்டான்..

          அதிர்ச்சி ஆகி "அப்படி யாருமா"என்று கேட்கிறா  

           மனம் கனத்த நிலையில் முத்தம்மா   சொல்கிறார் "என் சின்னபையன் தான் பேசினான் அவனுக்கும் இவனுக்கும் ஆகாது "உன் மத்த பிள்ளைங்க யாரும் அங்க வராதப்ப எனக்கு போஃன் பண்ணு, நா வந்து உங்கள பர்க்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போஃன கட் பண்ணிட்டான்மா" 

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

பல நேரங்களில் பல மனிதர்கள்



               காலையில நாலு மணிய கடிகாரத்தில பார்க்கிற சிலர்ல பழனிசாமியும் ஒருத்தர்.அவருக்கு வயசு 55 க்கு மேல இருக்கும்.அதிகாலையிலேயே  குளிச்சு கிளம்பி நெத்தியில ஒரு பெரிய பட்டைய அடிச்சிட்டு நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு ஊர்வலம் கிளம்பிருவாறு....

      நம்ம பழனிசாமி போகிற வழியில ஆவாரம்பூவா பூத்திருக்கும்.அதுல ஒரு அஞ்சு பூவா பறிச்சு வெறும் வயித்துல மென்னு திம்பார். 45 வருஷபழக்கம் இதனாலயும்  அவர் உடம்புல பிரசர், சுகர்,கொலஸ்ட்ரால்னு ஒரு நோயும் கிடையாது. அவர் படிச்ச ஆள்தான் தான் பார்த்துட்டிருந்த கவர்ன்மெண்ட் வேலைய வாலண்டியர் ரிடயிர்ட்மெண்ட் கொடுத்துட்டு  இப்ப பென்சன் வாங்கிட்டு வீட்ல தான் இருக்கார்.

         ஊர  சுற்றி நடையா நடந்து காற்று வாங்கிட்டு வந்து வள்ளி விலாஸ்ல கடையில ஒரு கடும் காபி வாங்கி குடிப்பார். கொஞ்சம் மூக்குபொடி வேற எந்த கேட்ட பழக்கமும் கிடையாது.ஆனா இத அவர் ஒத்துக்கமாட்டார் "மூக்குபொடி மூலிகைகள் , நெய் எல்லாம் சேர்த்து செஞ்சது உடம்புக்கு ரொம்ப நல்லதாம்" பெருமையா சொல்வார் .

        அவர் பாக்கெட்ல சில்லறை காசு ,ஒரு செல்போஃன் ,ஒரு மூக்குபொடி டப்பா அவ்வளவுதான் இருக்கும். எப்பவும் வெள்ளை வேட்டி, கலர்சட்டை தோள்ல ஒரு குற்றாலதுண்டு போட்டுட்டு நடந்தே ஊர்  பெரிய கோவிலுக்குள்ள அவர் நுழையும் போது  மணி டான்னு 8 அடிக்கும்." நம்ம கடிகாரத்தையே அவர் உள்ள நுழையுற நேரத்தை  வச்சு சரி செஞ்சுக்கலாம். அவ்வளவு  தெய்வ பக்தி...

         அன்னைக்கு செவ்வாய்க்கிழமை வேற  அதனால கோவில்ல கூட்டம் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு....பழனிச்சாமி கோவிலுக்குள்ள நுழையுராறு, இவர் வந்தாலே கோவில்ல எல்லாருக்கும் கொஞ்சம் பயம்தான் "ஏன் சாமி பிள்ளையார் முன்னாடி நின்னுட்டு பெருமாள் மந்திரத்த சொல்றீய"அசால்ட்டா கேட்டுட்டு கடந்து போயிருவார். மகா கோபக்காரர்.எழல் விஷ்யத்திளையும் பெர்பக்சனிஸ்ட்டா இருக்குறதா காட்டிப்பார்.அதேமாதிரி அவர  சுற்றி இருக்கிறவங்களும் அப்படி இருக்கனுமுன்னு ஆசைப்படுவார். அதனாலேயே வெளியில நெறையபேர் ஏன் வீட்டுல அவர் பொண்டாட்டி பிள்ளைகள் கூட இவர் கூட  பேச்ச நிறுத்தி ரொம்ப நாளாச்சு.

         இவர் இன்னைக்கு பிரகாரத்தில நிக்கும்போது ஒரு சின்னபையன் சண்டிகேஸ்வரர் சன்னத்தியில நின்னு சத்தமா கைதட்டி சாமி கும்பிட்டுட்டு இருந்தான் அவன பார்த்து  " தம்பி சண்டீகேஸ்வரர் சன்னதியில இப்புடி சத்தமா கைதட்டி சாமி கும்பிட கூடாது பா அவர் தூக்கத்தில இருப்பார் முழிச்சிருவார். அவரு காவல் தெய்வம் கோவில விட்டு நாம வெளியில போகும் போது இங்கயிருந்து கோவில் சொத்து எதையும் நம்ம கையில எடுத்துட்டு  போகலனு  ரெண்டு கையையும் திறந்து காட்டி  ஒன்னும் இல்லனு உதறிட்டு போனா போதும் புரிஞ்சுதா" சொல்லிட்டு செல்லமா அவன் கண்ணத்த  தட்டிட்டு அந்த  இடத்த விட்டு நகர்ந்து மூலவர தரிசிக்க போயிட்டார்.

        இவர் எப்பவும் வெளியில் தான் நின்னு சாமி கும்பிடுவார்.சிறப்பு தரிசனம்னு காசு வங்கி கடவுளையே பிரிக்கிறாங்கப்பானு வருத்தப்படுவார்..."இவர் மூலவர் சன்னத்திகுள்ள நுழையவும் அங்க அப்ப  தீபாராதனை தொடங்கவும் சரியா இருந்துச்சு. அந்த அறையில அடிச்ச மணி சத்தத்த விட அதிகமா ஒரு குழந்தையோட அழுகுரல் விடாம  கேட்டுது .அந்த குழந்தையோட அம்மா சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் அந்த குழந்தை அழுகைய நிறுத்தல.

          "அறிவில்ல, ஏம்மா சாமி  கும்பிடுற நேரத்தில ஏன் இப்படி குழுந்தைய அழ வச்சு பார்த்துகிட்டிருக்கீங்க, கோவிலுக்கு வரும் போது குழந்தைய வெளியில  யார்க்கிட்டையாவது கொடுத்துட்டு  வர வேண்டியதான  "சத்தம் போட்டு கத்திட்டு கண்ணா மூடி சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டாரு.

            அந்த பொண்ணு தலைய குனிஞ்சுட்டு வெளியே போயிட்டா,கொஞ்சம் கொஞ்சம் குழந்தை அழுகை சத்தம் மறையவும் பழனிசாமி மனசுல ஒரு பெருமிதம் என்னமோ உலகத்துக்கே அமைதியே உருவாக்கிட்ட மாதிரி  அடுத்த தீபராதனை தொடங்குது...அந்த நேரம் சரியா பழனிச்சாமி செல்போஃன் ல பழைய செட் பாலிபோனிக்  ரிங்டோன் சத்தமா  அந்த சன்னதியே அதிர கேட்குது."வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்....... 

   இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-2011

Tuesday, November 20, 2012

என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

" தெய்வம்"

ஆஹா என்ன அழகு
                                                           எத்தனை அழகு 
எங்கெங்கோ அலைந்து 
எத்தனையோ  கைமாறி 
கடைசியில் 
மோட்சம்  பெற்றன ! 
மௌனத்திலேயே 
மகிழ்விக்க தொடங்கின  
உயிரில்லை  என்றாலும் 
நேசிக்க தொடங்கின
தன் அங்கங்கள்  இழந்தும்
சிரிக்கின்றன
தன்  சகாக்களின் மீதே  
 பொறாமை கொள்கின்ற
ஒன்றோடொன்று 
போட்டி போடுகின்றன
மற்றொரு தொடுதலுக்காக 
ஏங்குகின்றன 
 காத்திருக்கமுடியாமல் 
தனிமை சோகத்தில் 
தவிக்கின்றன இந்த 
பொம்மைகள் 
ஆம் 
உறங்குகிறது குழந்தை (தெய்வம் ) !


இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...
நவம்பர் -2012

Wednesday, November 14, 2012

அ...............க சில கவிதைகள் -3

அ...............க ஒரு கவிதை :- 7  ( நவம்பர் -2012 இரண்டாவது வாரம்.)

                           
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
நீ 
நோயுற்றால் 
மருந்துகள் தேடுகிறாய் 
நீ 
மருந்தாய் இருப்பதனாலே 
நான் நோய்களை தான் 
தேடுகிறேன்
நீ
மருந்தாய் இருக்கும் வரை 
எனக்கு 
மருத்துவம் தேவையில்லை 
மரணமும் வரப்போவதில்லை...!

******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 8 ( நவம்பர் -2012 இரண்டாவது வாரம்.)


 என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
என் கைபேசி 
இன்னொரு கையாய் மாறி போயிருந்தது 
அன்று 
எங்கிருக்கிறது 
என்று தெரியாமல் இருக்கிறது 
இன்று
உன்னிடம் பேச முடியாத  நாட்களில் 
கைபேசி மட்டுமல்ல 
எதுவுமே தேவைப்படுவதில்லை 
எனக்கு
எதிர்பார்ப்பே இல்லாத வாழ்க்கை 
அது 
அந்த நாட்களில் 
எதிர்பார்ப்பே 
என் வாழக்கைதான் ( நீ )

******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 9 ( நவம்பர் -2012 இரண்டாவது வாரம்.)

                              
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
ஏதோ சில தருணங்களில் 
உன் தாயை
விமர்சித்து  இருக்கிறேன் 
அமைதி காத்திருந்தாய் 
உன் தந்தையை 
விமர்சித்து இருக்கிறேன் 
மௌனமாய் கடந்தாய் 
பல தடவை 
உன்னையும் விமர்சித்து கொண்டே இருப்பேன் 
சலனமற்று புன்னகைத்தாய் 
என்னை நானே 
எப்பொழுதாவது விமர்சித்தால் 
கூட
அழுத்தமாய் சொன்னாய்  
அதற்கு உனக்கு 
உரிமையில்லை என்று...!

******************************************************************************************************



இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து... 

Wednesday, September 19, 2012

அ...............க சில கவிதைகள் - 2


அ...............க ஒரு கவிதை :- 4  (செப்டம்பர்-2012 முதல் வாரம்.)


                            
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
முதல் நாள்
முதல் சந்திப்பு
உன் அலுவலக வாசலில்
உன்னை நான் பார்த்தபோது
உணர்ந்தேன்
நீ ஒரு காட்சி
கவிதை,
நீ நேரில் பேசிய
முதல் வார்த்தை
ஒரு
ஒலி கவிதை
ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தாலே பிறக்கும்
ஆயிரம் கற்பனைகள்
ஒவ்வொன்றும்
ஒரு கவிதை தொகுப்பு....!

**********************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 5(செப்டம்பர்-2012 இரண்டாவது வாரம்.)

                              
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! 
குழந்தை பெற்றெடுக்க
தகுதியுள்ள குழந்தை
நீ! 
என் குழந்தையை 
பெற்றெடுக்க தகுதியுள்ள 
குழந்தையும்
நீ தான்...!

***********************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 6  (செப்டம்பர்-2012 மூன்றாவது வாரம்.)

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! 
முதலிலேயே முடியாது என்றேன் 
சொல்லு அம்மு!
என்றாள்,
ம்ஹூம் என்றேன்,
சொல்லபோறியா இல்லையா குட்டி 
என்றாள்
மீண்டும் மறுத்தேன்,
என் செல்லம்ல சொல்லுமா
தங்கம்ல 
ப்ளீஸ் புஜ்ஜிம்மா
கட்டிப்புள்ள  
தொடர்ந்தன வார்த்தைகள்
தாமதத்திற்க்கு
பலன் கிடைத்தது 
உன் கொஞ்சல்களை 
சரியாய் அடுக்கி பார்த்தேன் 
எனக்காக நீ படைத்த 
புதுக்கவிதை பிறந்திருந்தது,

***********************************************************************************************
இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து... 

Monday, September 3, 2012

என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

" முற்பகல் செய்யாவிடில் நிச்சயம் பிற்பகலில் விளையாது "

 நம் முன்னோர்கள் 
                காக்கைக்கு தினமும் சாதம்
                 படைத்து உணவளித்தார்கள்,

நம் முன்னோர்கள்
              சிறு உயிரிகளுக்கும்
              மாக்கோலமிட்டு உணவளித்தார்கள்,

நம் முன்னோர்கள் 
            சாலைகளில் தாகமாய் கடந்து செல்லும்
            கால்நடைகளுக்காக
            வீட்டு வாசலிலேயே தண்ணீர் வைத்தார்கள் 
  
இன்று நாம் ?

            இந்த கேள்வி நீண்டநாளாய் என்
            மனதை உறுத்திக்கொண்டே இருந்தது....

            அப்பாடா !

           இன்று விடை கிடைத்துவிட்டது.....

          சாலையில் வெவ்வேறு இடங்களில் 
          இரு காட்சிகள் ...

             இந்த நாட்டின் சாதாரனர்களுக்கு
             அரசு அளிக்கும் ரேசன் பொருட்கள் 
             கொண்டும் செல்லும் வாகனம்
             ஊரெங்கும் அதை சிதறிகொண்டே
             செல்வதை பார்த்த போது 
             என் முதல் 
             கவலை குறைந்துவிட்டது.

            இந்த நாட்டின் சாதாரனர்களுக்கு 
           அரசு அளிக்கும் குடிதண்ணீர் வாகனம்
            ஊரெங்கும் சிந்தி செல்லும் தண்ணீர்  
            இரண்டாவது 
            கவலையை குறைத்துவிட்டது.


           எங்கேயாவது அலைபேசி கோபுரங்களின்
          கதிர்வீச்சுக்கு தப்பித்த பறவைகளும்,
          ரசாயன உரங்களுக்கு தப்பித்த
          சிறு பூச்சிகளும் நிச்சயம் இவற்றை உண்டு 
          சில காலம் தங்கள் ஆயுளை நீட்டித்துகொள்ளும்...

          பாவம் என்னதான் இந்த உலகம்
          நமக்கு  மட்டும் தான்
          என்று நம் மனித இனம்  சர்வாதிகாரம் செலுத்தினாலும்
          எப்படியோ தப்பி பிழைத்து கொள்கின்றன
          அதிர்ஷ்டசாலி உயிரினங்கள் சில ...
                                            
          நாளை நம் தலைமுறை நம்மை காரி உமிழலாம்..

          "எல்லா உயிரினங்களையும் ஒளி காட்சிகளில்
           மட்டுமே 
          விட்டு சென்றுவீட்டீர்களே....
           உங்கள் மனித நேயம் வாழ்க என்று..... "

இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...
செப்டம்பர்-2012