Wednesday, January 23, 2013

காதல் டூ கல்யாணம்



           ஹேய் ராஜி  இந்த பேப்பர்ல போட்டிருக்கிற நியூஸ் பாரேன் . "அவன விட  வயது மூத்த காலேஜ் புரோபஸர லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கான் ஒரு பையன் .அவங்க வீட்டிலையும் அவங்கள ஏத்துக்கிட்டாங்க..அவங்கலாம் ரொம்ப லக்கி இல்லடா  நா என் சொந்தகார பொண்ணு உன்ன பிடிச்சு போய் லவ் பண்ணி  கல்யாணம் பண்ணினேன். அதுக்கு உங்க குடும்பமே  நம்மள ஒதுக்கி வச்சுட்டாங்க.நமக்கு பொண்ணு பிறந்து அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் உன் அம்மா அப்பா  அண்ணனுங்க யாரும் வந்து அவ முகத்தை கூட பார்க்கல  அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமடி " தன்னுடைய ஆற்றாமையை  வெளிப்படுத்தினான் முத்துகுமார்.

         ஆமாங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாளாச்சு .எங்க அண்ணன் கல்யாணத்துக்கு  இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.இதுக்கும் கூட நம்மள கூப்பிட மாட்டாங்க போல " ராஜி இந்த   வார்த்தைகள சொல்லும் போது அவளுக்கு லேசா தொண்டை அடைக்க ஆரம்பிச்சிருந்தது.

           " ஏண்டி இப்ப பீல் பண்ற  விடு நாமளும் போய் பேசி பார்த்தாச்சு எல்லா சொந்தகாரங்களும் நமக்காக பேசிட்டாங்க உங்க  வீட்டில நம்மள வேண்டவே வேண்டாம்ங்கிறாங்க . நாம என்ன தான் பண்றது...நம்ம கதை சினிமா  படத்த விட பெரிசால  இருக்கு.நா ஒன்னு சொல்றேன் கேளு இப்ப உங்க அண்ணன்  கல்யாணத்துக்கு மட்டும் நம்மள கூப்பிடல நம்ம  குடும்பமும் சேரவே முடியாது " முத்துகுமார் சொல்லி முடிக்கவும் ராஜி அழ ஆரம்பித்துவிட்டாள். 

              இதே நேரத்தில ராஜி வீட்டில அவங்க அம்மா ரெண்டு அண்ணன் சித்தி இன்னும் சில உறவினர்கள் எல்லாரும் கல்யாண ஏற்பாடுகள்  பத்தி பேசுறதுக்காக உட்கார்ந்திருக்காங்க அவங்க சித்தி  தான் முதல பேச்ச ஆரம்பிச்சாங்க "ராஜிய கல்யானத்துக்கு கூப்பிட்டுட்டிங்களா "

           அவ பேச்ச  எடுக்கிற யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம் கோபமா பேசின  ராஜி சின்ன அண்ணன் அந்த அறைய விட்டு எந்திரிச்சு வெளிய  போறான்.அப்ப அங்க  இருந்த ஒரு பெரியவர் " நம்ம குடும்ப ஜோசியர்ட்ட பேசிதான நாள் குறிச்சிருக்கீய " என்று கேட்கிறார்.

     " இல்லயா பொண்ணு வீட்ல தான் நாள் குறிச்சாங்க நம்ம ஜோசியர் காசி போயிருக்கார் இன்னும் வரல" தயங்கிகிட்டே ராஜி அப்பா சொல்லிக்கிட்டிருக்கும் போதே  அவங்க குடும்ப ஜோசியர் அவங்க வீட்டுக்குள்ள நுழையவும் சரியா இருந்தது...

     "ஏம்பா என்ன கூப்பிடாமலே உன் மூத்தமகன் கல்யாணத்த முடிச்சிரலாமுனு பார்க்குறியா" செல்ல கோபத்தோட கேட்டுட்டே சோஃபால வந்து உட்காருராறு அவங்க குடும்ப ஜோசியர்.

       "வாங்கய்யா அப்படிலாம் ஒண்ணுமில்ல எப்ப வந்தீங்க ஊர்ல இருந்துன்னு..." வார்த்தைய முழுங்குராறு ராஜி அப்பா... 
       
         அதுக்கு ஜோசியர் "நா பஸ் இறங்கி நேர உங்க வீட்டுக்கு தான் வரேன் .ஆமா கல்யாணம்  என்னைக்கு வச்சுக்ருகிய?னு " கேட்டார்.

         "அய்யா தை பத்தாம்நாள் வர்ற திங்கள்கிழமை வச்சுருக்கோம் .நீங்க சொன்ன நட்சத்திரத்தில தான் பொண்ணு பார்த்துருக்கோம். 
நம்ம பிள்ளைகள் ஜாதகம் இது நீங்களும்  ஒரு தடவை பார்த்து அந்த நாள் நல்லது தான்னு கொஞ்சம் பார்த்து சொல்லிட்டிங்கனா எங்க எல்லார் மனசும்  திருப்தியாயிரும்" இப்படி சொல்லிட்டே மாப்பிளை பொண்ணு ஜாதக ஜெராக்ஸ் எடுத்து ஜோசியர் கையில கொடுக்கிறாரு  ராஜி அப்பா ...

        அத வாங்கின ஜோசியர் கொஞ்சம் திருப்பிட்டு கட்டத்த எண்ணி எதோ மன கணக்கு போடுறாரு, அப்படியே தன்  கையில இருக்கிற மஞ்சபைய எடுத்து தூசி தட்டி அதுக்குள்ளே இருக்கிற ஒரு ஏடு எடுத்து பார்க்கிறாரு "ஒரு ரெண்டு நிமிஷம் யோசனைக்கு அப்புறம் மெதுவா பேச ஆரம்பிக்கிறாரு"நா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க இப்ப உங்க பையனுக்கு நேரம் சரியில்ல,ஆனா நீங்க  தேதி குறிச்சு பத்திரிகை எல்லாம் குடுத்துட்டிங்க.  நீங்க நெனைக்கிற தேதியில கல்யாணம் பண்ணணும்னா   உங்க பையனோட  உடன் பிறந்தாளுக்கும் அவ மாப்பிள்ளைக்கும் புது துணி எடுத்து கொடுத்து உங்க குடும்பம் எலாரும் சேர்ந்து போய் உங்க குலசாமி கோவில்ல ஒரு பொங்கல் வச்சு படையல் போட்டுருங்க எல்லா பிரச்சனையும் தானா சரியாகிரும்"  சட்டுப்புட்டுனு ஆகிற வேலைய பாருங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு  அந்த ஜோசியர்..

       ஒரு நிமிஷம்  ஒருத்தர் முகத்த  ஒருத்தர் பார்த்துக்குறாங்க,அவங்க அப்பா அம்மா பெரியண்ணன் 
எல்லாரும் அப்புடியே அமைதியா இருக்காங்க ,திரும்ப உள்ள வர்ற ராஜியோட  சின்ன அண்ணன் மட்டும் இன்னும் கோபமாகி "ஏம்ப்பா இந்த ஜோசியர் சொல்றதெல்லாம் நம்பாதீங்க அவளெல்லாம் கூப்பிட முடியாது .நம்ம சம்மதம் இல்லாம அவளுக்கு பிடிச்ச  மாப்பிள்ளைய கட்டிட்டு போனால அவகிட்ட போயெல்லாம் நிக்க முடியாது" னு கத்துறான்.

        அப்ப ராஜியோட அப்பா அவ சித்திக்கிட்ட மெதுவா கேட்கிறாரு "ஏம்மா என் பொண்ணு வீடு எங்க இருக்கு ஒரு எட்டு போய் அவளயும் அவ அண்ணன் கல்யாணத்துக்கு கூப்பிட்டுட்டு வந்துருவோம்ங்கிறார்"

        இதே நேரத்தில அங்க ராஜி வீட்டில அவளுக்கு விக்கல் எடுக்குது....


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

நடைநேரத்தில் சில நிமிடங்கள்


          விசு பியூர் வெஜிடேரியன் எல்லாமே சரியா இருக்கனுமுன்னு நெனைக்கிறவன். கடவுள் பக்தி ரொம்ப அதிகம் கொஞ்சம் சுத்தம், ஆனா அடிக்கடி ரோட்டில எச்சில் துப்புவான். அதவச்சு அவன லாக் பண்ணுவான் சம்பத் இவன் விசுவோட வாக்கிங் பிரென்ட் .அதாங்க காலையில உடம்பு குறைக்கிறேங்கிற பேர்ல கதை அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு வருவாங்கள அந்த கூட்டத்த சேர்ந்தவங்க ... 

          சம்பத் ஒரு 'எக்கிடேரியன்' வெஜிடேரியன் தான் எக் மட்டும் சேர்த்துக்குற மாடர்ன் பையன் வேற வழியில்ல காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிதான ஆகணும்.  


         இரண்டு பேரும் மிடில் கிளாஸ் தான். தினமும் காலையில ஜிம் போகணுமுன்னு இவங்களுக்கு ஆசைதான் வசதியில்ல, அதனால 6 மணிக்கெல்லாம் முயற்சி பண்ண ஆரம்பிச்சி ஒரு வழியா 7 மணிக்கு வாக்கிங் போக  ...
தொடங்குவாங்க....

          இவங்க போற வழி எல்லாம் நெறைய கறிகடைகளா இருக்கும் சம்பத் சாதாரணமா வந்தாலும் விசு வால   மூக்க பொத்தாம வர முடியாது. தினமும் ஏதாவது சொல்லிக்கிட்டே வருவான் .அன்னைக்கும் அப்படிதான்  வாக்கிங் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில அந்த கறிக்கடைகள்  இருக்கிற ரோட்டு பக்கம்  வந்துட்டுருந்தாங்க ,அப்ப விசு சொல்றான் "ஏண்டா சம்பத் தினமும் இந்த கறியெல்லாம் எப்படித்தான் ருசிச்சு ரசிச்சு திங்கிறாங்களோ ரத்தமும் சதையுமா ப்பா நெனைச்சாலே உதறுது நிம்மதியா வாக்கிங் போக விடுறாங்களா வெஜிடேரியன் ஹோட்டல் நான் வெஜ் ஹோட்டல்னு இருக்கிற மாதிரி நான் வெஜ் கடைகள் தனியா ஒரு ஏரியா பிரிச்சு அங்க திறக்க வேண்டியதான இந்த கரி கடைய, இப்படி நாம போற ரூட் எல்லாத்திலையும்  ஒரு கடைய திறந்து வச்சு சாகடிக்கிறாங்களே  " புலம்பி தள்ளிட்டான் 

     சம்பத் அவன் பக்கமே திரும்பல மெதுவா காதில ஹெட் போன மாட்டிட்டு எப்.எம் கேட்டுக்கிட்டே  வாக்கிங்க  கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டான்...

    சம்பத்கிட்ட இருந்து பதில் வராததுனால அமைதியா இருந்த விசு ஒரு ரெண்டு தெரு போகவும் திரும்பியும் வேற ஒரு பிரச்சனைய ஆரம்பிச்சிட்டான் .அங்க ஒரு நாலஞ்சு பொண்ணுங்க விதவிதமா நகைகளா போட்டுக்கிட்டு எங்க கடையில் நகை வாங்குங்க உங்க ஊரே செழிக்கும்னு போஸ் குடுத்துட்டு நிக்கிறாங்க.. 

  "டேய் சம்பத் இங்க பாருடா அடுத்த கடைய நம்ம ஊர்ல ஆரம்பிச்சிடாங்க கடந்த ரெண்டு வருஷத்தில மட்டும் நம்ம ஊர்ல புதுசா ஒரு பத்து நகை கடை வந்துருக்கு. தங்க நகை விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டு இருக்கு .ஆனா இங்க எல்லா கடையிலையும் எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே தான் இருக்கு.இவங்களுக்கு மட்டும் எங்கேர்ந்துதான் காசு வருதோ?"விசு இப்புடி சொல்லி முடிக்கவும் டெண்சன் ஆயிட்டான் சம்பத்.

      "விசு கொஞ்ச நேரம் அமைதியா நடக்க மாட்டியா உனகெல்லாம் எதுக்கு டா வாக்கிங் ...." என்றான் சம்பத்

        விசு விடல "சம்பத் இப்புடி காலையிலேயே பல விஷயங்கள் மனச ஸ்பாயில் பண்ணிருதுடா, இந்த டென்சன்ல ஆபிஸ் போனா அங்கையும் பல தொல்லைகள் எனக்கு ஒரு நாள் போறது ஒரு யுகம் மாதிரி இருக்குடா என்னடா வாழக்கை இது ஒரு நிம்மதி இல்ல நம்மளால என்ன முடியும் இப்படி புலம்பிட்டே போயிற வேண்டியதான்...லைப்ல ஒரு சந்தோசம் இல்ல வேலைக்கு போறோம் சாப்பிடுறோம் தூங்குறோம் அவ்வளோதான் "விரக்தியா சொன்னான் விசு...

         அப்ப அங்க ஒரு குரல்  ரெண்டு பேர்  கவனத்தையும் ஈர்த்துது...

மல்லி கீரை.... அர கீரை.... பொண்ணாங்கண்ணி கீரை.....பசலிக்கீரை.....
  அம்மா அக்கா  கீரை வாங்கலியோ நாட்டுக்கீரை ஒரு கட்டு அஞ்சு ரூபா கீரை...கீரை.....கீரை...

      ஒரு நிமிஷம் அந்த ஆள  திரும்பி பார்த்த விசு "ஹலோ கீரை கொஞ்ச இங்க வாங்கனு  கூப்பிட்டான் "  

        அவர் வேகமா நடந்து இவங்ககிட்ட வர்றாரு இத பார்த்துகிட்ட்ருந்த சம்பத் ஏதோ முடிவு பண்ணின மாதிரி பேச ஆரம்பிச்சான் "விசு இந்த கீரைகாரர்ர பாருடா நான் நாலாங்கிலாஸ் படிக்கும் போதிலிருந்து இந்த அய்யா நம்ம ஏரியால தான் கீரை விக்கிறாரு ஒரு நாலாவது சிரிச்ச முகம் மாறினதில்ல இவங்களா இந்த உலகத்தில சந்தோசமா  வாழல" சும்மா என்னக்கு மட்டும் இப்புடி அப்புடின்னு புலம்பிறது நிறுத்து இல்ல நாளைல இருந்து நான் உன் கூட வாக்கிங் வர மாட்டேண்டா"  

     அதுக்குள்ளே அவர் வந்துட்டாரு விசு ஒரு இருபது ரூபாயைய அந்த  ஆள்கிட்ட குடுத்து ஒரு கட்டு கீரை கேட்கிறான்.அவர் கீரைய கொடுத்துட்டு "அய்யா என்கிட்டே சில்லறை இல்லங்க நீங்க தான் முதல் போனி அஞ்சு ரூபாய் இருந்த கொடுங்கன்னு கேட்கிறார்.   
  
     சம்பத் டக்னு அவன் பாக்கெட்ல இருந்து ஒரு அஞ்சு ரூபாய் நோட்ட எடுத்து கொடுக்கிறான்.அத வாங்கின அந்த கீரைகாரர் ஒரு நிமிஷம் அந்த நோட்ட பார்த்துட்டு  சம்பத் கிற "அய்யா ரொம்ப நன்றி இந்தாங்க இத வச்சுகோங்கனு " சொல்லி ஒரு சின்ன கட்டு கீரைய கொடுக்கிறாரு "

       எதுக்கு இதுங்கிற மாதிரி மனசில நெனைச்சுகிட்டு அத வாங்க கையா நீட்டினான் சம்பத் அப்ப "டேய் சம்பத் இதுக்குதான் இப்படி ஓசி கீரை வாங்கிறதுக்குதான் இந்த கீரைக்காரற பத்தி கொஞ்சம் நேரம் புகழ்ந்துக்கிட்டிருந்தியா சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்" என கிண்டலா பேசினான் விசு..

         பதில் சம்பத் கிட்ட இருந்து வரல அந்த கீரைகாரர்கிட்ட இருந்து வந்தது  "அய்யா அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு இந்த அய்யா ரூபா கொடுத்தப்ப என்  மனசு ரொம்ப சந்தோசமா இருந்த்து . அதான் கீரைய சும்மா கொடுத்தேன் இந்த ரூபாய் நோட்ட கொஞ்சம் பாருங்கனு  இவங்க பக்கமா திருப்பி காட்டினார்.

         அதுல "நல்ல பெரிய எழுத்துகள்ல  "இறைவன் உன்னை உயர்த்துவார் மகிழ்ச்சியாயிரு"னு  எழுதியிருந்தது.


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

பழிக்கு பழி




   அப்படியா 
   ஆ ...
   சாப்பிட்டேன்....ம் ம் ....

  ராத்திரி சாப்பாட்டுக்கு சப்பாத்தி போட்டு வைனு  சொல்லிட்டு போஃ ன கட் பண்றான்  சிவா...

    அவன்  ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். ஏகப்பட்ட பிரெண்ட்ஸ் வயசு கம்மிதான்.ஆனா நெறைய ஆலோசனை சொல்றேன் உதவி பன்றேன்கிற பேர்ல நாள் முழுக்க போஃன் பேசிட்டே இருப்பான்.

       வீட்ல இருந்து அம்மாவோ அவன் தங்கச்சியோ போஃன் பேசினா மட்டும் ஆ..சரி...ஓகே... அவ்வளவு தான் இதுக்குமேல பேசமாட்டான் ஒரு நிமிஷத்தில போன கட் பண்ணிருவான் ஏன் சாப்பிடவும்,தூங்கவும் மட்டும்தான் வீட்டுக்கே போறான்னு வச்சுக்கோங்களேன்.

      ஆனா அவன்  வீட்டுல எல்லாரும் இவன் மேல உயிரே வச்சுருக்காங்க.என்ன சமையல் செஞ்சாலும் இவன் சாப்பிட்டு மிச்சம் இருந்தாதான் அவங்கலாம்  சாப்பிடுவாங்க எல்லாத்திலையும் இவனுக்கு  தான் முன்னுரிமை...

         ஏதாவது ஒரு சென்டிமென்டான குடும்ப படம் பார்த்தாலே அழுதுருவான்...படம் பார்க்குபோதே அவன் அம்மா தங்கச்சி மேல எல்லாம் பாசம் பொத்துக்கிட்டு வரும் படம் முடியும் போது போன இடம் தெரியாம போயிரும்....

       இன்னும் அவன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அவன் கல்யணம் பண்ணணும்.இதுக்கெலாம் எப்படி பணம் சேர்க்கிறது. இதுதான் அவனோட மிகப்பெரிய லட்சியம் .

        ஒரு நாள்  வழக்கம்போல அவன் வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்தான்..டிவி பார்த்துகிட்டே அவனுக்கு முழிச்சிருந்து சாப்பாடு பண்ணி வச்சு பரிமாறிக்கிட்டிருக்கிற தங்கச்சிய ஏதோ டென்சன்ல நல்ல திட்டிட்டான்.பதிலுக்கும் அவளும்  சத்தம் போட கோபத்தில அவ பின் தலையில் ஒரு அடி ஓங்கி அடிச்சுட்டான்.உடனே சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டா அவன்  தங்கச்சி...

           தூக்கம் கலைஞ்சு அவன் அம்மாவும்  எந்திரிச்சுட்டாங்க  ஒரே சண்டை "பாவம் உன்ன இப்படி கவனிச்சுக்கிற பிள்ளைய போய் இப்படி அடிச்சிட்டியே "திட்டிட்டு அவங்க அம்மாவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க...

      சிவா எதையும் கண்டுக்காம என்ன கோவப்படுத்தாதீங்கனு கத்திட்டு  வீட்டோட  உள் அறையில போய் தூங்க போயிட்டான்... 

       தூக்கத்தில ஒரே கெட்ட கனவு வந்து எல்லாருக்கு முன்னாடி காலையில அஞ்சு மணிக்கெலாம் எந்திரிச்சு ஒரே யோசனையா உட்கார்ந்திருந்தான். மனசு கேட்கல "என்ன நாளும் நம்ம இப்படி  அடிச்சிருக்க கூடாது மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே"அவன் தங்கச்சிய எழுப்பி ரொம்ப வலிக்குதா சாரி அப்படிங்கிறான்.

       அப்ப அவன் தங்கச்சி "ஹே பழிக்கு பழி நான் நைட்டே உன் தலையில் பத்து குண்டு பேண்ன  எடுத்து போட்டுட்டேனே"  அபப்டின்னு கத்திட்டு  அந்த இடத்த  விட்டு ஓடி போயிட்டா...

        ஒரு சில நிமிஷம் அமைதியா இருந்து ஏதோ யோசிச்ச சிவா சிரிச்சுகிட்டே அவன் தலைய தடவி பார்க்கிறான் அதுக்குள்ளே உள்ள இருந்து திரும்பி வந்த அவன் தங்கச்சி ஒரு பேன் சீப்ப எடுத்துட்டு வந்து அவன் தலைய சீப்பால நல்ல சீவி ஒவ்வொரு பேண்னா  எடுத்து குத்த ஆரம்பிச்சிட்டா, ரொம்ப நேர தேடுதலுக்கு அப்புறம் சில பேன் கிடைக்கவும் உற்சாகமாகி  சொல்றா  " ஐ..... அண்ணா  ரெண்டு பேண்  தான் கிடைச்சுருக்கு நல்ல குண்டு பேண்  மீதிய காணோமே" 



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

கலியுக பாண்டவர்கள்


    முத்தம்மா கணபதி ரெண்டு பெரும் என்பதாம் கல்யாணம் பார்த்த தம்பதிகள்.அந்த கால உழைப்பு,உணவுகள்னால பிரசர் ,சுகர்னு எந்த நோயும் இல்ல, ஆனா  வயாதிகம் காரணமாக டிவி பிரிட்ஜ் ,எல்லா வசதியும் உள்ள ஒரு வாடகை வீட்டில சமைக்க பாத்திரம் கழுவ வீடு துடைக்க மட்டும் வந்துட்டு போற வேலைகாரி துணையோட வாழ்ந்துட்டு வர்றாங்க. 

    இவங்களுக்கு மொத்தம் ஐந்து ஆம்புள பிள்ளைகள் பிறந்தது இருந்தாலும்  முத்தமாவையும் அவர்  கணவர் கணபதியையும் அவங்க அவங்க வீட்டில வச்சு ஒரு நாள் கூட பார்த்துக்க யாரும் தயாரில்ல யாரவது ஒருத்தர் வேணா  எங்க வீட்டுக்கு வரட்டும் பார்த்துகுறோம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதா இருந்த பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்க, அதான் இவங்க எல்லா பையன்களோட குழுந்தைகளும் வளர்ந்துட்டாங்கல,இனி தாத்தா பாட்டி தேவையில்ல போல...

             அதனால வேற வழியில்லாம 90 வயசுக்கு மேல ஆன கணபதியும் என்பத்தைந்து  வயது ஆன அவர் மனைவி முத்தம்மாவும் சில வருஷங்களா தனியாதான் இந்த வீட்ட்ல இருக்காங்க.

            அவங்க பசங்க ரெண்டு பிரிவா பிரிஞ்சுருக்காங்க ஒருத்தருக்கும் அவங்களுக்குள்ள பெரிய அளவில ஒட்டு உறவில்ல அப்பா அம்மாக்கு பென்சன் எதுவும் கிடையாததுனால  ஆளுக்கு கொஞ்சம் பணத்த மாசம் மாசம் அனுப்புவாங்க.எப்பயாவது சில நாள் வந்து ரெண்டு பேரையும் பார்த்துட்டு ஒரு சிலமணி நேரம் மட்டும் இருந்து பேசிட்டு போவாங்க அவ்வளவுதான்.

          எல்லா வசதியும் இருந்தாலும் எதையும் செய்ய முடியாத அளவுக்கு தளர்ந்து போயிருக்கிற முத்தம்மா கணபதி ரெண்டு பேருமே சின்ன வயசில அவங்க தூக்கி வச்சு கொண்டாடின பசங்க செய்ய முடியாத காலத்தில துணைக்கு இல்லையே அப்படிங்கற வருத்தத்த வெளிகாட்டல எல்லா பிள்ளைங்க கிட்டயும் பாசமா தான் இருப்பாங்க...

          இன்னைக்கு அப்படி அவங்கள் பார்க்க வந்த இரண்டாவது பையன் பாலமுருகனுக்கு கை நடுங்க காப்பி போட்டு கொடுத்துட்டு இருக்கும்  போதே போ ஃன்  அடிக்குது அத அட்டெண்ட் பண்ற முத்தம்மா காதுல ஹலோ சொல்ல எதிர்முனையில ஒரு ஆள் குரல் கேட்கவும் பதறி போய் பக்கத்து  ரூம் குள்ள போறாங்க... 

       ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வெளியில வராங்க...

  அப்ப அவங்க வீட்டு வேலைகாரி "என்னம்மா எதுவும் தூக்க செய்தியா னு" கேட்கிறாள் 

    அதுக்கு முத்தம்மா சோகமா சொல்றாங்க"இப்ப நா யாருக்கு போஃன் பேசினேன்னு தெரிஞ்சா எங்கள பார்க்க வந்துருக்கிற  என் ரெண்டாவது பையன் இனிமேல் எங்கள பார்க்க வரவே மாட்டான்..

          அதிர்ச்சி ஆகி "அப்படி யாருமா"என்று கேட்கிறா  

           மனம் கனத்த நிலையில் முத்தம்மா   சொல்கிறார் "என் சின்னபையன் தான் பேசினான் அவனுக்கும் இவனுக்கும் ஆகாது "உன் மத்த பிள்ளைங்க யாரும் அங்க வராதப்ப எனக்கு போஃன் பண்ணு, நா வந்து உங்கள பர்க்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போஃன கட் பண்ணிட்டான்மா" 

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

பல நேரங்களில் பல மனிதர்கள்



               காலையில நாலு மணிய கடிகாரத்தில பார்க்கிற சிலர்ல பழனிசாமியும் ஒருத்தர்.அவருக்கு வயசு 55 க்கு மேல இருக்கும்.அதிகாலையிலேயே  குளிச்சு கிளம்பி நெத்தியில ஒரு பெரிய பட்டைய அடிச்சிட்டு நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு ஊர்வலம் கிளம்பிருவாறு....

      நம்ம பழனிசாமி போகிற வழியில ஆவாரம்பூவா பூத்திருக்கும்.அதுல ஒரு அஞ்சு பூவா பறிச்சு வெறும் வயித்துல மென்னு திம்பார். 45 வருஷபழக்கம் இதனாலயும்  அவர் உடம்புல பிரசர், சுகர்,கொலஸ்ட்ரால்னு ஒரு நோயும் கிடையாது. அவர் படிச்ச ஆள்தான் தான் பார்த்துட்டிருந்த கவர்ன்மெண்ட் வேலைய வாலண்டியர் ரிடயிர்ட்மெண்ட் கொடுத்துட்டு  இப்ப பென்சன் வாங்கிட்டு வீட்ல தான் இருக்கார்.

         ஊர  சுற்றி நடையா நடந்து காற்று வாங்கிட்டு வந்து வள்ளி விலாஸ்ல கடையில ஒரு கடும் காபி வாங்கி குடிப்பார். கொஞ்சம் மூக்குபொடி வேற எந்த கேட்ட பழக்கமும் கிடையாது.ஆனா இத அவர் ஒத்துக்கமாட்டார் "மூக்குபொடி மூலிகைகள் , நெய் எல்லாம் சேர்த்து செஞ்சது உடம்புக்கு ரொம்ப நல்லதாம்" பெருமையா சொல்வார் .

        அவர் பாக்கெட்ல சில்லறை காசு ,ஒரு செல்போஃன் ,ஒரு மூக்குபொடி டப்பா அவ்வளவுதான் இருக்கும். எப்பவும் வெள்ளை வேட்டி, கலர்சட்டை தோள்ல ஒரு குற்றாலதுண்டு போட்டுட்டு நடந்தே ஊர்  பெரிய கோவிலுக்குள்ள அவர் நுழையும் போது  மணி டான்னு 8 அடிக்கும்." நம்ம கடிகாரத்தையே அவர் உள்ள நுழையுற நேரத்தை  வச்சு சரி செஞ்சுக்கலாம். அவ்வளவு  தெய்வ பக்தி...

         அன்னைக்கு செவ்வாய்க்கிழமை வேற  அதனால கோவில்ல கூட்டம் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு....பழனிச்சாமி கோவிலுக்குள்ள நுழையுராறு, இவர் வந்தாலே கோவில்ல எல்லாருக்கும் கொஞ்சம் பயம்தான் "ஏன் சாமி பிள்ளையார் முன்னாடி நின்னுட்டு பெருமாள் மந்திரத்த சொல்றீய"அசால்ட்டா கேட்டுட்டு கடந்து போயிருவார். மகா கோபக்காரர்.எழல் விஷ்யத்திளையும் பெர்பக்சனிஸ்ட்டா இருக்குறதா காட்டிப்பார்.அதேமாதிரி அவர  சுற்றி இருக்கிறவங்களும் அப்படி இருக்கனுமுன்னு ஆசைப்படுவார். அதனாலேயே வெளியில நெறையபேர் ஏன் வீட்டுல அவர் பொண்டாட்டி பிள்ளைகள் கூட இவர் கூட  பேச்ச நிறுத்தி ரொம்ப நாளாச்சு.

         இவர் இன்னைக்கு பிரகாரத்தில நிக்கும்போது ஒரு சின்னபையன் சண்டிகேஸ்வரர் சன்னத்தியில நின்னு சத்தமா கைதட்டி சாமி கும்பிட்டுட்டு இருந்தான் அவன பார்த்து  " தம்பி சண்டீகேஸ்வரர் சன்னதியில இப்புடி சத்தமா கைதட்டி சாமி கும்பிட கூடாது பா அவர் தூக்கத்தில இருப்பார் முழிச்சிருவார். அவரு காவல் தெய்வம் கோவில விட்டு நாம வெளியில போகும் போது இங்கயிருந்து கோவில் சொத்து எதையும் நம்ம கையில எடுத்துட்டு  போகலனு  ரெண்டு கையையும் திறந்து காட்டி  ஒன்னும் இல்லனு உதறிட்டு போனா போதும் புரிஞ்சுதா" சொல்லிட்டு செல்லமா அவன் கண்ணத்த  தட்டிட்டு அந்த  இடத்த விட்டு நகர்ந்து மூலவர தரிசிக்க போயிட்டார்.

        இவர் எப்பவும் வெளியில் தான் நின்னு சாமி கும்பிடுவார்.சிறப்பு தரிசனம்னு காசு வங்கி கடவுளையே பிரிக்கிறாங்கப்பானு வருத்தப்படுவார்..."இவர் மூலவர் சன்னத்திகுள்ள நுழையவும் அங்க அப்ப  தீபாராதனை தொடங்கவும் சரியா இருந்துச்சு. அந்த அறையில அடிச்ச மணி சத்தத்த விட அதிகமா ஒரு குழந்தையோட அழுகுரல் விடாம  கேட்டுது .அந்த குழந்தையோட அம்மா சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் அந்த குழந்தை அழுகைய நிறுத்தல.

          "அறிவில்ல, ஏம்மா சாமி  கும்பிடுற நேரத்தில ஏன் இப்படி குழுந்தைய அழ வச்சு பார்த்துகிட்டிருக்கீங்க, கோவிலுக்கு வரும் போது குழந்தைய வெளியில  யார்க்கிட்டையாவது கொடுத்துட்டு  வர வேண்டியதான  "சத்தம் போட்டு கத்திட்டு கண்ணா மூடி சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டாரு.

            அந்த பொண்ணு தலைய குனிஞ்சுட்டு வெளியே போயிட்டா,கொஞ்சம் கொஞ்சம் குழந்தை அழுகை சத்தம் மறையவும் பழனிசாமி மனசுல ஒரு பெருமிதம் என்னமோ உலகத்துக்கே அமைதியே உருவாக்கிட்ட மாதிரி  அடுத்த தீபராதனை தொடங்குது...அந்த நேரம் சரியா பழனிச்சாமி செல்போஃன் ல பழைய செட் பாலிபோனிக்  ரிங்டோன் சத்தமா  அந்த சன்னதியே அதிர கேட்குது."வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்....... 

   இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-2011

Tuesday, November 20, 2012

என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

" தெய்வம்"

ஆஹா என்ன அழகு
                                                           எத்தனை அழகு 
எங்கெங்கோ அலைந்து 
எத்தனையோ  கைமாறி 
கடைசியில் 
மோட்சம்  பெற்றன ! 
மௌனத்திலேயே 
மகிழ்விக்க தொடங்கின  
உயிரில்லை  என்றாலும் 
நேசிக்க தொடங்கின
தன் அங்கங்கள்  இழந்தும்
சிரிக்கின்றன
தன்  சகாக்களின் மீதே  
 பொறாமை கொள்கின்ற
ஒன்றோடொன்று 
போட்டி போடுகின்றன
மற்றொரு தொடுதலுக்காக 
ஏங்குகின்றன 
 காத்திருக்கமுடியாமல் 
தனிமை சோகத்தில் 
தவிக்கின்றன இந்த 
பொம்மைகள் 
ஆம் 
உறங்குகிறது குழந்தை (தெய்வம் ) !


இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...
நவம்பர் -2012

Wednesday, November 14, 2012

அ...............க சில கவிதைகள் -3

அ...............க ஒரு கவிதை :- 7  ( நவம்பர் -2012 இரண்டாவது வாரம்.)

                           
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
நீ 
நோயுற்றால் 
மருந்துகள் தேடுகிறாய் 
நீ 
மருந்தாய் இருப்பதனாலே 
நான் நோய்களை தான் 
தேடுகிறேன்
நீ
மருந்தாய் இருக்கும் வரை 
எனக்கு 
மருத்துவம் தேவையில்லை 
மரணமும் வரப்போவதில்லை...!

******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 8 ( நவம்பர் -2012 இரண்டாவது வாரம்.)


 என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
என் கைபேசி 
இன்னொரு கையாய் மாறி போயிருந்தது 
அன்று 
எங்கிருக்கிறது 
என்று தெரியாமல் இருக்கிறது 
இன்று
உன்னிடம் பேச முடியாத  நாட்களில் 
கைபேசி மட்டுமல்ல 
எதுவுமே தேவைப்படுவதில்லை 
எனக்கு
எதிர்பார்ப்பே இல்லாத வாழ்க்கை 
அது 
அந்த நாட்களில் 
எதிர்பார்ப்பே 
என் வாழக்கைதான் ( நீ )

******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 9 ( நவம்பர் -2012 இரண்டாவது வாரம்.)

                              
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
ஏதோ சில தருணங்களில் 
உன் தாயை
விமர்சித்து  இருக்கிறேன் 
அமைதி காத்திருந்தாய் 
உன் தந்தையை 
விமர்சித்து இருக்கிறேன் 
மௌனமாய் கடந்தாய் 
பல தடவை 
உன்னையும் விமர்சித்து கொண்டே இருப்பேன் 
சலனமற்று புன்னகைத்தாய் 
என்னை நானே 
எப்பொழுதாவது விமர்சித்தால் 
கூட
அழுத்தமாய் சொன்னாய்  
அதற்கு உனக்கு 
உரிமையில்லை என்று...!

******************************************************************************************************



இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து...