Thursday, August 18, 2011

லேட்டஸ்ட் டிரெண்டு !




"டேய் டேய் ஜான் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த சிஸ்டம்ம எனக்கு குடுடா" கெஞ்சுறான், சரவணன்... அவன சுற்றி நாலஞ்சு பசங்க 'ஓ' னு சத்தம் போட்டுட்டு  இருக்காங்க...

     எல்லாரும் கார்பரேட் கைஸ் ஆபீஸ் வொர்க் பிரஷர், டென்சன் இதுக்கு இடையில இவனுங்க ரிலாக்ஸ் ஆகுறது மெயில் பார்க்குறது, சாட் பண்றது, சோசியல் நெட்வொர்க்ஸ்ல  ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றது, புது புது பிரெண்ட்ஸ் பிடிக்கிறது இதுலல்லாம் தான்...


          டெய்லி ஆபீஸ் ஹவர்ஸ்ல சோசியல் நெட்வொர்க் சைட்ஸ் ஓபன் ஆகுறதில்ல சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பும் போது ஒரு பத்து நிமிஷம் நெட்ல அப்டேட் பண்றதில்ல இவங்களுக்குள்ள போட்டாபோட்டி..எல்லா சிஸ்டம்லையும் எப்பவுமே யாரவது உட்கார்ந்தே இருப்பாங்க...

    இவங்க சோசியல் நெட்வொர்க் சைட்ஸ்ல செய்யுற முக்கியமான சில வேலைகள் "நீச்சல் குளத்தில டைவ் அடிச்சு குளிச்ச போட்டோ ஷேர் பண்ணிட்டு ரெகார்ட் பிரேக்னு டைட்டில் போடுறது, ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கிற முள்ளுகாட்டுக்கு போய் நாலு போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிட்டு வைல்ட் டிராவல் வீக்லி ட்ரெக்கிங்னு கம்மென்ட் போடுறது, யாரவது ஒரு நடிகரோ நடிகையோ இவங்க ஏரியா பக்கம் ஷூட்டிங் வந்தாலோ இல்ல எதாவது கடை திறப்பு விழாவிற்கு வந்தாலோ அவங்க பின்னாடி எங்கேயாவது ஓரமா நின்னு இரு போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிட்டு 'மீ அண்ட் சூர்யா' னு கம்மென்ட் போடுறது இதெல்லாம் இந்த பசங்களோட சமீப கால சாதனைகள்...

      ஆனா சரவணன் இதுல எல்லாம் கொஞ்சம் டிப்பிரென்ட். அவன் பத்து போட்டோ எடுத்தா கூட போட்டோ சாப்ல வொர்க் பண்ணி ஒன்னோ, ரெண்டோ தான் அப்டேட் பண்ணுவான். அதுமட்டுமில்ல டெய்லி நாட்டில நடக்கிற பிரச்சனைகளை தவறாம ஸ்டேடஸ் அப்டேட்ல "இந்திய கறுப்பு பணம் இவ்வளவு இருக்கு மீட்க முடியுமா?" இப்புடி எதாவது கிரிட்டிசைஸ் பண்ணி அப்டேட்ஸ் போடுவான் .இவனோட எந்த ஸ்டேட்டஸ்க்கும் ஒரு கம்மென்ட் கூட வராது ஆனாலும் மனம் தளராம டெய்லி பல நல்ல விஷ்யங்க்கள அப்டேட் பண்ணிட்டே தான் இருப்பான்.



    இன்னைக்கும் அப்படி ஒரு அப்டேட் பண்ண வந்தா, அவன் கூட வேலை பார்க்கிற ஜான் சிஸ்டம் விடாம ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கான். ஒரு வழியா அவன்கிட்ட கெஞ்சி கூத்தாடி இடத்த பிடிச்சு அந்த சோசியல் நெட்வொர்க் வெப்சைட்டுக்குள்ள லாக் ஆண் பண்றான் சரவணன் வழக்கம் போல இவன் போட்ட ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு நோ கம்மென்ட்ஸ் ..


     ஆனா இவன் பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தி "இன்று நான் சாம்பார் வைத்தேன்" அப்புடின்னு ஒரு அப்டேட் பண்ணிருக்கா, அதுக்கு 160 கம்மென்ட் வந்துருக்கு 65 லைக் விழுந்துருக்கு நொந்துட்டான் சரவணன்
    " சே யுஸ்லெஸ் யூத்ஸ் இதுக்கெல்லாம் ரிப்ளை பண்றாங்களே"னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு 161 ஆவது கம்மென்ட்டா ' கங்கிராட்ஸ்  மேம் ஐ டூ லவ் சாம்பார்'னு போட்டுட்டு அவன் ஹோம் பேஜுக்கு வர்றான். அதுக்குள்ள சரவணன் அந்த பொண்ணோட ஸ்டேட்டசுக்கு போட்ட கம்மென்ட்டுக்கும் ஐஞ்சு லைக் விழுந்துருக்கு.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் மூன்றாவது வாரம்-2011

Monday, July 25, 2011

அட கடவுளே!!!!!!!!!!



    "காலைலயும் சீரியல் பாக்க முடியல சாயங்காலமும் சீரியல் பாக்க முடியல"....இது சதீஷோட பாட்டி

     "ஒரு சட்டினி அரைச்சு சாப்பிட முடியலங்கிறாங்க" சதீஷோட அம்மா 

     "அம்மா போன  சீக்கிரம்  சார்ஜ் போடு கரென்ட் போக போகுது "அப்படின்னு சதீஷ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவங்க ஏரியால கரென்ட் போயிடுச்சு..

     "இப்படிதாங்க ரெண்டு முணு வருஷமா எப்ப வரும் எப்படி வருமுன்னு யாருக்குமே தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வராம  போயிருது. இந்த கரென்ட்கட்டுக்கு  என்ன செய்யுறதுனே தெரியலடி ஈஸ்வரி" அப்படிங்கறான் சதீஷ்

     அதுக்கு அவன் பொண்டாட்டி ஈஸ்வரி  "என்னங்க பக்கத்து வீட்லலாம் எதோ இன்வெர்ட்டர் வாங்கியிருக்காங்கலாம். 12 ,000௦௦ ரூபாய் தான் ஒரு மெஷின் 3 லைட் ரெண்டு பேன் போட்டுக்கலாமாங்க நம்மளும் ஒண்ணும் வாங்கலமாங்க ? " கேட்டுட்டு அவன் மூஞ்சியையே பார்த்துக்கிட்டிருக்கா

    உடனே சதீஷ் "ஏய் அது ஒன்னு தான் இப்ப குறைச்சல் உங்களுக்கெல்லாம் டி.வி பாக்காம இருக்க முடியாதோ?

இல்லங்க "பேன் இல்லாம இருக்க முடியலங்க்ரா " ஈஸ்வரி

டென்சன் ஆயிட்டான் சதீஷ் "பச்சபுள்ள என் பையன் கரென்ட் இல்லாட்டா கூட அழமா தூங்குறான் உனக்கு என்ன ? தாட் பூட்னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

"ஆமா உங்க பிள்ளை பிறக்கும்போதே கரென்ட் இல்லாம பழகிட்டான் நாங்க அப்படியா! எங்க வீட்டுலலாம் நான் பிறக்கும் போதே பேன் உண்டு தெரியுமானு" ஈஸ்வரி சொல்லிமுடிக்கிறதுக்குள்ள தீடிர்னு கரென்ட் வருது பேன் ஓட ஆரம்பிக்குது  ....




   அங்க அதுவரை நல்லா தூங்கிட்டிருக்கிற சதிஷோட குட்டிபையன் தூக்கம் கலைஞ்சு சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கிறான் .....

அப்ப ஈஸ்வரி "ஏங்க அந்த பேன அனைங்க பிள்ளை பயப்படுதுபாருங்க அப்படின்னு" கத்துறா


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் இரண்டாவது வாரம்-2011


Friday, July 22, 2011

"போலாம் ரைட்"




   அந்த பஸ் கிளம்பி இரண்டு மணிநேரம் ஆயிருக்கும் ரொம்ப நேரமா  நின்னுகிட்டே தான் வர்றான் மாரியப்பன். கால்வலி அவனுக்கு பழகியிருந்தாலும், இன்னைக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே டையர்டாகி இருந்தான். பேக்ரௌன்ட்ல "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா " பாட்டு ஓடுது திரும்பி தன்னோட சீட்ட பார்க்குறான்.அங்க ஒரு ஆள் உட்கார்ந்திருக்கார் . எழுப்ப மனசு வரல,அப்படியே பாட்ட பீல் பண்ணிட்டே வலதுபக்கம் திரும்புறான்.அங்க ஒரு அழகான பொண்ணோட ஒருபக்கம் முகம் மட்டும் லேசா தெரியுது.பார்த்தவன் ஒரு நிமிஷம் அங்கிருந்து பார்வைய திருப்ப முடியாம தவிக்கிறான்.


         இப்படி டக்குனு இவன் எந்த பொண்ண பார்த்தும் இம்ப்ரெஸ் ஆனதில்ல, ஆனா எல்லாம் மனித இயல்பு தான சில தடவை அவன் மனக்கட்டுபாட்ட மீறி அவனோட பஸ் பயணத்தில வர்ற சில அழகான பொண்ணுங்கள ரசிக்க ஆரம்பிச்சிடுவான். நாகரிகமா நடந்துப்பான் அழகியலோட ரசிப்பானே தவிர தப்பா பார்க்கமாட்டான்.

         இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்படி பாவாடை தாவனியில ஒரு பொண்ண பார்க்கிறான் மாரியப்பன்."குட்டி ஜிமிக்கி வச்ச கம்மல் போட்டுருக்கு, மூக்குல சின்ன கல் வச்ச மூக்குத்தி தெரியுது.அப்ப நல்ல காற்று அடிக்குது உடனே இடது கை விரல்களால தன்னோட தலைமுடிய கோதி விடுறா அந்த பொண்ணு அவளோட மோதிர விரலில ஒரு ஹார்ட்டின் மோதிரம் சூரிய ஒளியில மினுங்குது. அந்த பொண்ணோட ஒவ்வொரு அசைவையும் கவனமா கவனிச்சிட்டு வர்றான்.அந்த பொண்ணு முகத்த திருப்புற முழுசா இவன் பக்கம் திருப்புற நொடிக்ககாக காத்துகிட்டிருக்கான். அந்தபக்கம் திரும்புது இந்தபக்கம் திரும்புது ஆனாலும்  இவனால  அந்த பொண்ணோட முழு முகத்தையும் பார்க்க முடியல, கொஞ்ச முன் பக்கமா போய் பார்க்கலாம்னா கூட்டம் அதிகமா இருக்கு. எங்கேயும் நகர முடியாம அப்படியே வச்சகண் வாங்காம அந்த பொன்னையே பார்த்துகிட்டிருக்கான் மாரியப்பன் .

      பஸ் ஸ்பீக்கர்ல ஓடுற முள்ளும் மலரும் பட பாட்டு வேற மாரியப்பன ரொம்ப தொந்தரவு பண்ணுது. எப்படியாவது அந்த பொண்ண பர்த்துரனும்னு எம்பி எம்பி குதிக்கிறான்.ம்ஹும் முடியல... அப்ப அவன் செல்போன் ரிங் அடிக்குது.. ஆனா அவனுக்கு அந்த சத்தமே  கேட்கல. பக்கத்தில உட்கார்ந்திருக்கிற ஒரு ஆள் இவன் தோள்ல தட்டி "சார் போன் அடிக்குது அட்டென்ட் பண்ணுங்க" அப்படின்னு சொல்றார்.


        உடனே நிதானத்துக்கு வந்து போன் எடுக்கிற மாரியப்பன் "ஹலோ" சொல்றான் அந்தபக்கம் அவன் அம்மா "ஏய் மாரியப்பா எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா உன் பொண்டாட்டி பிள்ளைங்களலாம் பார்த்து எத்தன நாள் ஆச்சு அப்படி என்ன டுயுட்டில ஓடுற திருச்சில இறங்கி ஒரு எட்டு எங்கள பார்த்துட்டு போப்பா" படபடனு பேசிட்டு போன் கட் பண்ணிட்டாங்க  அவன் அம்மா.

          அப்ப தான் சுதாரிச்சான் மாரியப்பன் கொஞ்ச நேரம் ஏதயோ யோசிச்சுகிட்டிருந்தான்,தீடிர்னு எதோ ஞாபகம் வந்த மாதிரி  கூட்டத்த விலக்கிட்டு விறுவிறுனு  நேரா அந்த பொண்ணு இருக்கிற சீட் பக்கம் போறான். அந்த பொண்ணோட முகத்த நல்லா பார்த்துட்டு கேட்கிறான் "டிக்கெட் கொடுக்கும் போது கவனிக்கல, ஆமா நீங்க எந்த ஊர்ல எறங்கணும் " அப்படின்னு, அதுக்கு அந்த பொண்ணுகிட்டருந்து பதி   "விழுப்புரம் சார் " னு வருது. ஒரு தடவை நல்லா அந்த பொண்ணு  முகத்த பார்த்துட்டு  "அடுத்த ஸ்டாப் தான் இறங்க ரெடியா இருங்க" சொல்லிட்டு அந்த இடத்த விட்டு வேகமா நகர்ந்துட்டான்.
          ஒரு அஞ்சு நிமிஷம் ஆயிருக்கும் விழுப்புரத்தில பஸ் நிக்குது. அந்த பொண்ணு இறங்கி போறா, கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கிட்டிருக்கான்.என்ன நெனைச்சானோ  முதல உட்கார முடியாம போன சீட் பக்கம் வர்ற மாரியப்பன் "சார் எந்திரிங்க இது கண்டக்டர் சீட் கொஞ்சம் எந்திரிச்சு இடம் விடுறீங்களானு" கேட்டுட்டு அவர் நகரவும் அந்த சீட்ல உட்காருறான் மாரியப்பன்.

                 அப்ப பல வருஷம் முன்னாடி அவன் மனைவிய இந்த ஸ்டாப்ல அவன் முதல் முதல  பார்த்து லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணின ஞாபகம் வரவும் பஸ் ஸ்பீக்கர்ல "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர்ற நெஞ்சம் இல்லையோ" பாட்டு தொடங்கவும் சரியா இருக்கு சத்தம் போட்டு போலாம் ரைட்டுன்னு கத்துறான் பஸ் மட்டும் இல்ல மாரியப்பனோட நினைவுகளும் வேகமா தன்னுடைய இலக்க நோக்கி கிளம்புது.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-ஜூன் முதல் வாரம்-2011

Wednesday, July 20, 2011

எஸ்கேப்பு !!!


         "ஏய் சக்தி அன்னைக்கே சொன்னோம்ல உள்ளுர்லையே படின்னு கேக்காம வெளியூருக்கு படிக்க போன, 'இப்ப ஹாஸ்டல்ல பெருச்சாளி தொல்லை,பூச்சி தொல்லைன்னு, நீ உங்க அம்மாகிட்டேயே பேசிக்கோ' 'நா குளிக்க போறேன்னு' " அவன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டு,
செல்போன்ன அவங்க அம்மாகிட்ட குடுத்துட்டு  பாத்ரூம்க்குள்ள போறான் -விகாஸ்.


                பாத்ரூம்க்குள்ள வந்த வேகத்தில கவனிக்காம கால் வச்சு வழுக்கி கீழ விழுறான். அப்ப கரெக்டா அவன் கால் போய் பாத்ரூம்ல் தண்ணி வெளியாகுற குழி பக்கம் ஸ்டாப் ஆகுது. நல்ல வேலைனு எட்டிபார்க்குறான் அப்ப அங்க ஒரு வாலறுந்த பல்லி குழியவிட்டு மேல வரமுடியாம துடிச்சுட்டு இருக்கு..


           மெல்ல நள்ளி  கம்பிய பிடிச்சு எந்திரிச்சு நிக்கிறான். ஒரு கப் தண்ணிய கோரி ஊத்தினா பல்லி குழிக்குள்ள ஓடி போயிரும்னு கப் எடுக்கிறான் மனசு கேக்கல.. 'ஆத்தி குழிக்குள்ள விழுந்தா செத்து போயிரும்ல' அப்படின்னு மனசுக்குள்ள 
திங்க் பண்ணும் போதே, விகாஷோட மைன்ட் வாய்ஸ்- "முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன், அந்த வரிசையில பல்லிக்குஉயிர் கொடுத்த விகாஸ்" ஆஹா அவன அவனே மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு  சந்தோசபட்டுக்கிட்டான்...

              உடனே பக்கத்தில் கிடக்கிற வாரியல்ல ஒரு ஈக்குச்சிய உருவி எடுத்து பல்லிய வெளியில எடுக்க போராடுறான்.பாவம் பல்லி இவன் காப்பாத்த முயற்சி பண்றது புரியாம பயத்தில அந்த பக்கமும் இந்த பக்கமும் பாய பாக்குது.


            இவனுக்கு டென்சன், ஆபிசுக்கும் டைம் ஆச்சு குளிக்கணும். பொறுமையில்லாம ஈக்குச்சிய பல்லி உடம்புக்கு அடியில விட்டு ஒரு கெந்து கெந்துறான் துள்ளி பறந்து வந்த பல்லி விகாஸ் வயித்துல பட்டு தரையில விழுந்து குடுகுடுன்னு ஓடி சுவற்றில ஏறிடுச்சு.


       இப்ப விகாஸ் கத்துறான் "அம்மா பல்லி வயித்தல விழுந்துடுச்சு கொஞ்சம் பால் கொண்டு வா பற்று விழுந்துற போகுது.அப்படியே பல்லி விழுந்த பலன் போட்டுருக்குற காலண்டர் அட்டையையும் எடுத்துட்டு வாமாங்க்றான்".

"யப்பா இத்துணுண்டு பல்லி இப்படி பயமுறுத்திட்டுருடுச்சேனு துண்ட உதறி கட்டுறான் -விகாஸ் ".


     அப்ப மேலே இருந்து பல்லியோட மைன்ட் வாய்ஸ் "நல்ல வேலை இவர் கீழ விழுந்த பலன்ல நா உயிர் பிழைச்சுகிட்டேன்"

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-மே மாதத்தில் நாலாவது வாரம்-2011

Friday, June 24, 2011

கட்டபொம்மனின் கடைசி நாள் !



        காலையில தூக்கம் கலைஞ்சு முழிக்கிறார் ஜெகவீரபாண்டிய மன்னனின் மூத்த மகன். வீணராஜஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.அவர் உட்கார்ந்திருக்கிற பெரிய மஞ்சனத்தி மரத்தோட உச்சியில இருந்து இறங்கி கொஞ்ச கீழ வர்றார்.


அன்னைக்கு செவ்வாய்கிழமை 15 அக்டோபர் 1799....

        பாஞ்சாலங்குறிச்சியிலுருந்து வெளியேறி கடந்த மூணுவாரமா புதுக்கோட்டை முழுக்க சுற்றி திம்மியம் வந்து, இப்ப விராச்சிலை வழியா சிவகங்கை பக்கத்தில ஒரு அர்ந்த காட்டுக்குள்ள வந்து பதுங்கியிருக்கிறார் மன்னர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.


          கட்டபொம்மனுக்கு கருத்தையானு ஒரு செல்ல பேர் உண்டு.இப்ப காட்டில சுத்தி நல்லாவே கருத்து போயிட்டார்... 


         பலமுறை வேட்டைக்காக காடுகள்ல சுற்றியிருந்தாலும் இப்புடி உணவு,உறக்கம் இல்லாம சுத்துறது மன்னருக்கு இதுதான் முதல்முறை.


       அவர் தலைக்கு மேல ஒரு சிலந்தி அழகா பெரிய வலை பிண்ணியிருக்கு,அப்ப அண்ணாந்து பார்க்கிற மன்னரோட கண்ணுல அந்த வலை வழியா வர்ற சூரிய ஒளி பட்டு கூசுது.தலைய குனிஞ்சுக்கிறார் காட்டுக்குள்ள உற்று பார்த்துகிட்டிருக்கார்....

     பகல்லையே மரங்களோட அடர்த்தியால காடே இருண்டு போய் கிடக்குது, விலங்குகளோட உறுமல் சத்தத்துல அமைதியான அந்த இடமே அலறுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிக்கிட்டிருக்கார் மன்னர்.அவரோட படையில இருந்து ஆள் வர்றதா தகவல் வந்துருக்கு அதான் காத்துகிட்டிருக்கார் .

அப்ப பக்கத்தில ஏதோ காலடி சத்தம் கவனிச்சு கேக்குறாரு மன்னர் ...

       சருகுகளோட சலசலப்பு, கோட்டான்களோட அலறல், நெறைய காலடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி மன்னர நெருங்கி வந்துகிட்டிருக்கு .

அப்புறம்...... அப்புறம்........வார்த்தைய முழுங்குறான் விஜயன்......

      அப்ப அவன் மனைவி கேட்கிறா " என்னங்க ஆச்சு உங்களுக்கு இப்படி கண்ணாடி முன்னாடி நின்னு அப்புறம் அப்புறம்னுகிட்டு அரை மணிநேரமா புலம்பிகிட்டிருக்கீங்க?"

      ஏய் நீ வேற பயப்படதாங்கிறான் விஜயன் ...

அப்ப ஒழுங்கா பதில் சொல்லுங்கன்னு அவன் மனைவி சொல்றா ...
        அதுவா நா வெளியூர்ல வேலை பார்த்தவரைக்கும் வாரத்தில ஒருநாள் தான் வீட்டுக்கு வந்து போவேன். இப்ப நம்ம ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்த பிறகு நம்ம பையன் தினமும் கதை சொன்னா தான் நைட்டு தூங்குவேன்னு சொல்றான்....

         அதுவும் ராஜா கதை தான் சொல்லணுமாம் அவங்க மிஸ் நெறைய கதை கேக்க சொல்லிருக்காங்களாம். நமக்கு தாத்தா பாட்டி கூடவே இருந்தாங்க கதை கேட்டோம் அவனுக்கு அந்த வாய்ப்பும் இல்ல சரி ஒரு கதை சொல்லலாம்னு இன்னைக்கு காலைல இருந்து மனப்பாடம் பண்ணி வச்சேன். இதுக்கு அப்புறம் இந்த கதை மறந்து போச்சு... ச்சே....


     காலடி சத்தம் கேட்குது ,,,கட்டபொம்மன் உஷார் ஆகுறாரு.... அப்ப யாரோ? ஹம்..ஞாபகம் வரலியே....அப்படின்னு விஜயன் சொல்லிகிட்டிருக்கும்போதே ...



      அவன் மனைவி சொல்றாங்க "சரி சரி விடுங்க நம்ம பையனுக்கு ஹோம் வொர்க் செய்யவே நேரம் இல்லை.கதை கேட்கனும்னு அடம்பிடிச்சான்.2 அடி கொடுத்தேன். பாவம் பிள்ள சாப்பிட கூட இல்ல அழுதுட்டே தூங்கிட்டான்".



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்.
திருநெல்வேலியிலிருந்து...
காலம்:- மே மாதத்தில் ஒருநாள் -2011

Tuesday, June 14, 2011

நினைவோ ஒரு பறவை -1


கரையாத நினைவுகளுக்கு அஞ்சலி

பிறக்கும் போதே சரியாக அழவில்லையாம் அந்த குழந்தை பயந்தார்கள் சுற்றத்தார்.

பிறந்த பின் ஓவ்வொரு நாளும் அழுதுகொண்டே தான் இருந்தது ...

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றால் ஒளவை, ,
அதனினும் கொடிது நோய் முற்றி அதை தீர்க்க விடாத வறுமை...


அழுதான் ஒவ்வொரு நாளும் அழுதான் அதைத்தவிர அவனால் எதையுமே செய்ய முடியவில்லை ...

முயற்சிக்க அவன் தவறவில்லை பொறுத்து பார்த்த அவன் புறப்பட்டுவிட்டான்.

இப்பொழுது சந்தோசமாய் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டான்...

இன்று அவனைத்தவிர

எல்லாரும் அழுதோம் அழுதோம் அழுகை மட்டுமே கொண்டு இருக்கிறோம்.....

இன்று காற்றில் கலந்து விட்ட என் கல்லூரி நண்பன் குற்றாலிங்கம் ஆத்மா சாந்தியடையட்டும் இனிமேலாவது அவன் குடுமபத்தில் மழிழ்ச்சி பிறக்கட்டும்.....

இல்லாததை நினைத்து தினமும் வருந்தி கொண்டிருக்கும் என் போன்ற சாதாரணன்களுக்கு எதுவுமே இல்லமால் போராடி முடியாமல் போய் சேர்ந்த இவன் போன்ற உயிர்களின் வாழ்க்கை ஒரு பாடம்.....

வாழ்கை மிகவும் அழகானது தான் ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது....

14-06-2011

Friday, June 10, 2011

பாஸ்போர்ட் !!!


" சே ரேஷன் கார்ட்ல வீட்டு டோர் நம்பர் தப்பா இருக்குனாங்க மாத்துனேன், வோட் கார்ட்ல அப்பா பேர்ல கூட ஒரு A போட்டுட்டாங்க அத மாத்த சொன்னாங்க மாத்துனேன், அப்புறம் பெர்த் சர்டிபிகேட்ல என் இன்சியல் தப்பா இருக்கு மாத்துனாங்க அதையும் மாத்துனேன்."...


    "ஹ்ம்....இப்படி அவங்க கொடுத்ததெலாம் தப்பா கொடுத்துட்டு எனக்கு இப்ப மூணு மாசமா பாஸ்போர்ட் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க . இன்னும் போலீஸ் என்கொயரி,லஞ்சம் அப்பப்பா முடியலடா தீபன்னு" புலம்பி முடிக்கிறான் சங்கர் .ரெண்டு பெரும் ஸ்கூல்ல ஒன்னா படிச்சவங்க.ரொம்பா நாளைக்கு பிறகு  பார்த்துகிட்டாங்க.

        தீபன் ஒரு இலங்கை தமிழர். அகதியா இந்தியா வந்து இருபது வருஷங்களுக்கு மேல ஆகி போச்சு. கூலி வேலை தவிர பெரிசா எந்த வேலைக்கும் போக முடியல, என்னைக்காவது சொந்த நாட்டுக்கு போயிறலாம்ங்கற நம்பிக்கையில வாழ்க்கைய ஓட்டிட்டுருக்கான். எப்பயாவது சங்கர ரோட்டல பார்த்தா பேசுவான்.



      ரொம்ப நேரம் அமைதியா சங்கர் சொன்னத கேட்டுகிட்டிருந்த தீபன் பேச ஆரம்பிக்கிறான் .." டேய் சங்கர் எங்கடா நம்ம தமிழ்நாட்ட நம்பி தான் இங்க வந்தோம். கஷ்டப்பட்டு 50,000௦௦௦ சேர்த்து வச்சுருந்தேண்டா. ஏஜென்ட் ஒருத்தன் இத்தாலில வேலை வாங்கி தரேன்னு கேரளா கூட்டிட்டு போய் அடிச்சு விரட்டிட்டான்" எல்லாம் போச்சுடா அப்படிங்கறான்.

        அவனை ஆறுதல் படுத்திற மாதிரி சங்கர். "சரி விடுடா மாப்பிள்ளைங்கறான் அதுக்கு தீபன்... நாம பிரியறது கடவுளுக்கே பொறுக்கல போல " னு  சொல்லிகிட்டிருக்கும் போதே தீபன் செல்லுக்கு ஒரு போன் வருது யார்டானு கேட்கிறான் சங்கர்? டேய் நம்ம கூட டெண்த்ல படிச்சானே சுரேஷ்டா அப்படிங்கறான் தீபன்.

       போன வாங்கி பேசுறான் சங்கர் "டேய் சுரேஷ் டக்னு உன் முகம்
ஞாபகத்துக்கு வரல,  வாலிபால் விளையாட வருவியா ? இல்ல குமார் சார் கிளாஸ்ஸா ? என்.சி.சி ல இருந்தியான்னு விடாம பேசிகிட்டே போனான் சங்கர்.

         மறுமுனையில் சுரேஷ் "டேய் சங்கர் என்ன எல்லாரும் உளுந்தவடைனு கூப்பிடுவாங்கலேடா"

                 இப்ப சங்கர் கண்டுபிடிச்சிட்டான் "டேய் உளுந்தவடை ரொம்ப சந்தோசம்டா ! உன் போன் நம்பர் கொடுடா டெய்லி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன். அப்புறம் உன் ஆளு மூண்டகண்ணி எப்படி இருக்கா ? நம்ம பிரெண்டு பி.பி உங்க ஊர்தான டா அவன பார்த்தியா? நம்ம பாம்பு மெட்ராஸ் போய்ட்டான் தெரியுமா! கொசு என் கூட தான் வேலை பார்க்குறேண்டா " அப்படின்னு விடாமல் பேசிக்கொண்டே போனான் சங்கர் .

              உடனே சுரேஷ் " ஏய் சங்கர் ஒரு நிமிஷம் நில்லுடா எனக்கு பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை கிடைச்சுருக்கு. அத சொல்லத்தான் போன் பண்ணினேன். தீபன்ட்ட சொல்லிரு பேலன்ஸ் இல்ல கட் பன்னுறேண்டா எதவும் ஹெல்ப்னா கூப்பிடுறா மச்சான்னு போன வைக்கிறான்..........

          இப்ப சங்கர் தீபன பார்த்து லேசா சிரிக்கிறான் .......

இப்படிக்கு
திருநெல்வேலியிலிருந்து.மு.வெங்கட்ராமன்
காலம்:-ஜூன் இரண்டாவது வாரம் 2011.