எப்பொழுதும் எல்லோருக்கும் யாராலும் மிகச்சிறந்த மனிதர்களாய் இருக்க முடியாது..ஆகவே மிகச்சிறந்த மனிதர்களாய் இருப்பதற்க்கான சந்தர்ப்பங்களை மட்டும் அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிப்போம்--மு.வெ.ரா....
Tuesday, November 30, 2010
பரிசு போட்டி-"2" (நவம்பர்-டிசம்பர்-2010)
எப்படி இருக்கீங்க? நம்ம வலைப்பூவில ஒவ்வொரு மாசமும் ஒரு போட்டி நடத்துறதா சொல்லியிருந்தேன்.இந்த நவம்பர் மாத போட்டி ஆரம்பிக்கறதுக்குள்ள,இந்த மாசமே முடிஞ்சுபோச்சு.அதனால இந்த வருஷம் தொடங்கி இனி ஒவ்வொரு வருஷமும் நவம்பர்-டிசம்பர் ரெண்டு மாசமும் சேர்த்து ஒரு போட்டி வைக்கலாம்னு நெனைச்சுருக்கேன்.
(போட்டி நடத்துவதற்க்கான காரணத்தை என் பழைய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்)போட்டி ஒண்ணுமில்ல>>>>>>>> இத வைக்கிறதுக்கு காரணம் சில விசயங்கள் நமக்கு தெரியாது! நம்மளால முடியுமா? முடியாதான்னு யோசிப்போம்,சில விசயங்கள் நம்ம முயற்சிக்கும் போது தான் வெளிப்படும்.என்னைக்கோ யாரோ நம்ம முதாதையர்கள்ல ஒருத்தர் சும்மா கிடந்த ரெண்டு கல்ல உரசி பார்க்கலேனா(அதாங்க சிக்கி முக்கி கல்லு) மனித இனத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு நெருப்பு தான் வந்துருக்குமா? இல்ல அத தொடந்து உருவான வளர்ச்சிகள் தான் நடந்திருக்குமா?
நாம இருட்டுல முழ்கி மறைஞ்சுருப்போம்.ஏன் மனித வரலாறே மாற்றமாகியிருக்கும்.ஆக நம்ம செய்யுற முயற்சிகள் வெற்றியா? தோல்வியானு? பார்க்கிரத விட,அது ஒரு பெரிய மாற்றத்தோட துவக்கமா இருக்கலாம்னு தான் நான் நெனைக்குறேன்.அந்த தைரியத்துல தான் இந்த போட்டி "உங்க மனச பாதிச்ச ஒரு விசயத்த ஒரு குட்டி கதையா எழுதி அல்லது டைப் பண்ணி எனக்கு அனுப்புங்க" "கடைசி தேதி டிசம்பர் 25-2010அப்புறம் டிசம்பர் 31-2010ஆம் தேதி முடிவ அறிவிக்கிறோம்.
முதல் கதைக்கு பரிசு முதல் முன்று சிறந்த கதைகளில் இருந்து உங்கள் வாக்கெடுப்பின் படி தேர்ந்தடுக்கபடும் ஒரு கதையை குறும்படமாக எடுக்க போகிறேன்...
எல்லார்கிட்டயும் ஒரு கதை இருக்கு.நமக்குள்ளையும் ஒரு கலைஞன் ஒளிஞ்சுக்கிட்டுதான இருக்கான்.அவன கொஞ்சம் தட்டி எழுப்புவோம்."நிபந்தனை ஒண்ணுமில்ல" நாலு வரி கதையில் இருந்து ஒரு ரெண்டு பக்கம் வரைக்கும் (குட்டி கதைப்பா) எழுதலாம்.
கதைய அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:- venkatraman1988@gmail.com
கண்டிப்பா எல்லாரும் எழுதனும்னு நான் ஆசைப்படுறேன்.உங்கள் பங்கேற்பு தான் நீங்கள் எனக்கு தரும் பரிசு>>>>>>>>
பரிசுக்காக காத்துருக்கிறேன் !!!!!!!!!!!!!
--
"விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை"...
அன்புடன் உங்கள்
--
மு.வெங்கட்ராமன்...-(உலகில்
அதிக மனிதர்களை சம்பாதிக்க விரும்பும் ஒருவன்)
திருநெல்வேலி.....
"கனவு காணுங்கள் நண்பர்களே !
உங்கள் ஒவ்வொரு கனவுகளும் நிச்சயம் ஒருநாள் மெய்ப்படும் " ....
Saturday, November 20, 2010
" ஒரு நாள் ஒரு சந்திப்பு ..." பகுதி - 2 (20-10-10-புதன் கிழமை- " 208 பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை-14)
ஆதி காலம் தொடங்கி தன் வரலாறு தெரிந்த ஒரே இனம்,மனிதன் மட்டுமே! என்று பெருமை பட்டு கொள்கிறோம்.ஆனால் வரலாற்றில் சில விசயங்களை பதிவு செய்யாமலே கடந்து விடுகிறோம்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுள் ஒன்று சினிமா,அது அமெரிக்காவானாலும் சரி ஆந்திராவானாலும் சரி திரைப்படங்கள் பொழுதுபோக்காய் ஒதுங்கி விடாமல் நாட்டின் தலைவர்களை கூட உருவாக்கியது.இன்று அது பல மாற்றங்களை அடைந்தாலும்,தொழில்நுட்பபுரட்சியால் நம்மை மிரட்டினாலும்,நேற்று அது பொழுதுபோக்கு என்கிற நிலையிருந்தது பின் வியாபாரமாகி,இன்று சூதாட்டம் என்கிற அபாய நிலையில் ஒரு ஆரோக்கியமற்ற சுழலை நோக்கி போய் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், இன்னும் அடிப்படையில் சமுகத்திற்கான ஒரு கலைவடிவமாக அதை தக்க வைத்துக்கொள்ள எங்கோ ஒரு மூலையில் சிலர் போராடி கொண்டு தான் இருக்கிறார்கள். அது “உலக சினிமா” என்றால் தான் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டுமா? அவர்கள் "hall of fame" வைத்தால் வியந்து பார்க்கும் நாம். நம் தமிழகத்தின் வாழ்வோடு கலந்துவிட்ட,கலாச்சாரமாய் மாறி போன ஒரு விஷயம் திரைப்படங்கள்.அதில் பணிபுரிந்தவர்களே மறந்து போன பல விசயங்களை 1931 முதல் பேசும் சினிமாவில் தொடங்கி தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெனகத்தினர் தயாரித்த இந்தி படங்கள் என்ன இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு திரைப்படங்கள் பற்றிய அத்தனை புள்ளிவிவரங்கள்,அறிய தகவல்கள் என்று பார்த்து பார்த்து சேமித்து வைத்திருக்கும் ஒரு 84 வயது திரை சரித்திரத்தை ஒதுக்கி அவரின் பொக்கிஷங்களை கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து கொண்டிருக்கும் அவலம் பற்றிய ஒரு மனவருத்தமே இந்த கட்டுரை.
எனக்கு இவரை பற்றி நான் திருநெல்வேலியில் ஹலோ பண்பலையில் வேலை பார்க்கும் போதே அறிமுகம்,சில பிரபலங்களின் தொலைபேசி எண் தேவைப்படும் போது இவரை அணுகு,இவர் ஒரு சினிமா தகவல் களஞ்சியம்,அது மட்டுமில்லாமல் கேட்டவருக்கெல்லாம் தரும் மனதும் படைத்தவர் என்று சொல்லி,அவருடைய தரை வழி தொடர்பு எண்ணையும் கொடுத்தார்.எங்கள் நிலைய இயக்குனர் திரு.சகாயராஜ் அவர்கள், நானும் தொடர்பு கொள்ள சரியாய் நினைவு இல்லை.நான் கேட்ட பிரபலத்தின் தொடர்பு எண்ணை,ஒரு இரண்டு நிமிடம் கழித்து அழையுங்கள் என்று சொல்லி திரும்ப அழைத்ததும் கொடுத்து விட்டார்.எனக்கு அப்பொழுது அவர் மதிப்பு தெரியவில்லை.
பின்னால் நான் இந்த காட்சி ஊடகத்துறையில் நுழைந்ததும்,ஒரு தொடர்பு எண்ணை சக பணியாளர்களிடமிருந்து,ஏன் நண்பர்களிடமிருந்து வாங்குவது கூட கடினம்.ஏன்னென்றால் ஒரு பிரபலத்தின் எண் சேகரிப்பை அவர்களுடைய சொத்தாக கருதுகிறார்கள்.மக்கள் தொடர்பாளர்களில் சிலரோ பெண் செய்தியாளர்களோ,பெண் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களோ கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். அங்கேயும் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான். மேலும் இன்று அது ஒரு வருமானம் வர கூடிய தொழில். ஒரு நபரை அறிமுகப்படுத்துவதற்கு நீங்கள் ஏதாவது விலை கொடுத்தே ஆக வேண்டும்.இதிலும் சில நல்ல உள்ளங்கள் உண்டு. இந்த உண்மையை, ஒரு தொடர்பு எண்ணின் வலிமையை நான் அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
பின் மக்கள் தொலைகாட்சிக்கு வந்ததும் இந்த முதன் முதலாய் நிகழ்ச்சி செய்ய சொன்னவுடன், நானா வி.ஐ.பிக்களை வைத்தா எனக்கு பிரபலங்களோடு அவ்வளவு அறிமுகங்கள் கிடையாதே என்று பயந்தேன். நீ தான் செய்ய வேண்டும் என்றார்கள். முதலாவதாக 2009 -அக்டோபரில் கிராமிய பாடகி சின்னபொண்ணுவில் (அதாங்க நாக்கு முக்க பாடுன அக்கா இப்புடி சொன்ன தான் நெறைய பேருக்கு தெரியுது ) தொடங்கி டிராட்ஸ்கி மருது, பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.ஜனநாதன், நா.முத்துக்குமார், தடகள வீராங்கனை ஷைனி வில்சன் என இப்ப நாற்பதாவது நபர் ஓவியர். மாருதி வரைக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆளுமைகள் கூட நெருங்கி பழகுற வாய்ப்பு கிடைச்சுது.திரையில நா தெரியலேனாலும் அவ்வளவு பெரிய மனிதர்கள,நான் கேள்வி கேட்டு இயக்குன அனுபவம்,அவங்க பதிலேர்ந்து கிடைச்ச அனுபவம் எல்லாமே எனக்கு கடவுள் கொடுத்த வரம்னு தான் சொல்லுவேன்.அவ்வளவு பகிர்வுகள் என் மனம் முழுக்க நெறைஞ்சு என்னையும் ஒரு நல்ல ஆளுமையா தயார் செஞ்சுக்கிட்டிருக்குனு சொன்னா அது மிகையாகாது.அதுல ஒவ்வொருத்தர் கூட பழகினது பற்றியும் எழுதனனும்னு நெனைச்சாலும் அவங்க ப்ரைவசி கருதி தவிர்த்துட்டேன்.
ஆனா இவர பற்றி எழுதாட்ட என்மனசு ஆறாது. ஒருநாள் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு ஆள் இல்லாம தேடிகிட்டிருக்கும் போது நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் கிட்ட கேட்டப்ப ( www.tamizhstudio.com இந்த லிங்க் போய் பாருங்க ஒரு நல்ல மனிதரின் நல்ல தகவல்கள் உங்களுக்கே தெரிய வரும் ஏன்னா புகழுக்காகவும்,பெயருக்காகவும் மட்டும் சினிமாவ பயன்படுத்துற இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில நல்ல திரைப்படங்களுக்காக ஆசை மட்டும் படாமல் அது உருவாக பலபேரையும் உருவாக்கி வருகிறார்.)அவர் இவர பத்தி சொல்லி,உடனே தொடர்பு கொள்ளுங்க இவர பத்தி நானும் ஒரு ஆவணப்படம் எடுக்க இருக்கிறேன்னு சொல்லி அவருடைய கைபேசி எண்ணை கொடுத்தார்.
நானும் தொடர்பு கொண்டு கேட்க ஒரு தளர்ந்த குரல் உற்சாகமா வாங்க கண்டிப்பா தரேன்னு சம்மதம் சொல்லி என்னை உற்சாக படுத்திச்சு. மறு நாள் நானும் என் படப்பிடிப்புகுழுவும் 20-10-10-புதன் கிழமை- " 208 பீட்டர்ஸ் ரோடு, ராயபேட்டை, சென்னை-14 அந்த முகவரியை போய் அடைந்தோம். இந்த இடத்துல நான் என் ஒளிப்பதிவாளர் திரு.மோகன் அவர்கள பத்தி கண்டிப்பா சொல்லணும் எங்க தொலைகாட்சியின் அழகிய ஒளி பதிவுகளுக்கு சொந்தக்காரர்.இவரோட அர்ப்பணிப்ப பார்த்த பிறகு தான் இயக்குனரும்-ஒளிப்பதிவாளரும் ஒன்றாக கலந்ததால் தான் பல காவியங்கள் உருவானது என்பதை உணர முடிந்தது.
அப்புறம் மக்கள் தொலைகாட்சியில் என் இன்னொரு நண்பர் அவரும் எனக்கு ஒரு இன்ஷ்பிரேஷன் கடந்த மாதம் நம்ம வலைபூவோட போட்டியில வெற்றி பெற்றாரே திரு.செல்லையா அவரே தான் நான் வியந்த மனிதர்களில் இவரும் ஒருவர் ( "என் ப்ளாக் டைட்டில் கீழ் உள்ள வாசகத்தை ஒரு முறை படிக்கவும் " ) அவர் இப்படி சொல்வதுண்டு.நல்ல சினிமா படைப்பாளிகள் எல்லா காலகட்டத்திலையும் இருந்தாங்க,இருக்கிறாங்க,இருப்பாங்க ஒரு தனிமனிதனா அந்த படைப்போட முழு பொறுப்பேற்று அத காலத்தால் அழியாத வடிவமா மாத்துற சக்தி அவங்ககிட்ட இருக்கும்.அது குறிஞ்சிமலர் மாதிரி எப்பவாவது நடக்கிற விஷயம். இன்னைக்கு இருக்கிற நம்ம தமிழ் திரையுலக சுழல்ல பார்த்தோம்னா “சினிமா ஒன்னும் ஒரு தனிப்பட்ட இயக்குனரின் சாதனை இல்ல அது முகம் தெரியாத,பெயர் தெரியாத பல்வேறு மனிதர்களின் உழைப்புன்னு”உண்மைதானங்க,சில நேரங்கள சில எளியவர்கள் கால ஓட்டத்தில பதிவு செய்யப்பட்டாலும் பல நேரங்கள அநேக உழைப்பாளிகள் சரித்திர பக்கங்கள மறைக்கப்பட்டு தான் இருக்காங்க."தாஜ்மஹால் என்ற உடன் ஷாஜஹான் மட்டும் தான் நமக்கு நினைவுக்கு வருது,அது உருவாகுறதுக்கு உதிரம் மட்டுமல்ல,வாழ்கையையே கொடுத்தவர்களை பற்றி நாம் யோசித்து பார்ப்பது கூட இல்லை,"ஏனென்றால் வரலாறு அலெக்ஸாண்டரையும்,நெப்போலியனையும் பற்றிய பதிவுகளை தான் தாங்கி வந்திருக்கிறதே தவிர,அவர்களின் குழுவில் இருந்த அவர்கள் உலக புகழ் பெற உழைத்த சக மனிதர்களை பதிவு செய்ய மறந்துவிட்டது அல்லது மறந்துவிட்டோம் என்று தான் வருந்த வேண்டியிருக்கிறது.
இப்படி ஒரு சிலர் என்றால் தனக்கு எந்த வித லாபமும் இல்லாமல் ஆர்வத்தினால் பல வரலாற்று பதிவுகளை தேடி தேடி நமக்கு சேகரித்து தந்தவர்களும் அன்றிலுருந்து இன்று வரை இருக்க தான் செய்கிறார்கள். தேடி தேடி நாடுகளையும். வழித்தடங்களையும் கண்டுபிடித்த(அவர்கள் நோக்கம் பற்றி நான் பேச வரவில்லை ஆர்வம் பற்றி மட்டுமே ) யுவான்சுவாங்,மெகஸ்தனிஸ் தொடங்கி வாஸ்கோடகாமா வரை சாதாரண பயணங்களா அவை கடல் கடந்து,பல மொழி கடந்து
ஏன்? எங்கு போகிறோம் என்பது கூட தெரியாமல் எந்த வித துணையும் இல்லாமல் இவர்கள் செய்த பயணங்கள் ஒவ்வொன்றும் ஒரு சரித்திரம்.அவர்களில் சிலர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் பலர் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி வெகுஜன மக்களால் அவ்வளவாய் அறிய படாமல் ஊடகங்களால் அதிகமாக கண்டு கொள்ளபடாமல் போன நபரில் இவரும் ஒருவர்.இவரை பார்க்க வீட்டுக்குள் நுழைந்த உடனேயே தன் வீட்டில் எப்பொழுதும் இருக்கும் உடை களைந்து தன் உடல் சுகமின்மையையும் மறந்து தனது அடையாள ஜிப்பா உடை அணிந்து வந்து அமர்ந்தார்.
நானும் இவரை போல் சினிமா மேல் ஆர்வம் கொண்டவன் தான் ஆர்வம் மட்டும் தான் அதை வளர்க்கவில்லை நான் மட்டும் வளர்ந்துவிட்டேன். நான் சின்ன வயதில் இருந்து என் குடும்பத்தினரோடு சேர்ந்து ஒரு படம் கூட பார்த்தது கிடையாது. நான் என் தந்தை,தாய்,தங்கை, நால்வரும் இணைந்து ஒரு புகைப்படம் கூட எடுத்தது கிடையாது. என் தந்தையும் காலமாகிவிட்டார்.ஆம் நம்மில் நெறைய பேர் உலகின் பல சந்தோசங்களை அனுபவிக்க எண்ணி வீட்டின் பல சந்தோசங்களை உணராமலேயே போய்விடுகிறோம்.அதில் நானும் ஒருவன்.
நான் சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டருகே வசித்த எங்கள் வீட்டு உரிமையாளர் அவரை சிலர் "ரெட்டியார் அம்மா" என்று அழைப்பார்கள்.சிலர் "விஜி அம்மா" என்று அவர் பெண் பெயர் சொல்லி அழைப்பார்கள்,(அவர் உண்மையான பெயர் லீலாவதி ) இதெல்லாம் நான் பேச தொடங்கும் வயது வரை தான்,என் அம்மா வேலை பார்க்கும் போது
ஒரு கிண்ணத்தில் உணவு,பிஸ்கட் போட்டு அவர் வீட்டில் கொண்டு விட்டு விடுவார். என்னை கவனித்து கொள்பவர் அவர் தான் அவருக்கு பெயர் வைத்த பெருமையும் எனக்கு தான் உண்டு நான் வைத்த பெயர் " அந்தம்மா " என் வீட்டில் இருப்பது என் அம்மா, அது பக்கத்து வீட்டு அம்மா என்று உணர்ந்து அதனால் அந்த+ அம்மா என்று நான் இப்படி "அந்தம்மா” “அந்தம்மா” என்று தான் அழைப்பேனாம்.நீங்கள் நம்புவீர்களோ என்னமோ எனக்கு தெரியவில்லை இன்றளவும் 22 வருடங்களுக்கு பிறகும் எங்கள் வீட்டருகில் இருக்கும் பலருக்கு அவரை “அந்தம்மா" என்று அழைத்தாள் தான் தெரியும். அந்த அளவுக்கு அவர் பெயர் தான் பிரபலம்.( இதே போல் என் அண்டை வீட்டில் ஒரு பெண் வளர்ந்து அவள் சந்ததி உருவாகும் வயது வந்துவிட்டால் இன்னும் அவளை “பாப்பா” என்று தான் அழைப்பார்கள்.) இதே போல் எங்கள் ஊரின் செல்லபெயர்களுக்கு பல உதாரனங்கள்."கிராமங்களில் நம் அப்பா வைக்கும் பெயர்களை விட நம் ஊர் நமக்கு வைக்கும் பெயரே நிலைத்து விடுகின்றன,அது அவர்கள் வாழ்க்கைக்கு பிறகும் கூட மறையாது."
அந்த அந்தம்மா என்னை நாலு வயதிலிருந்து நான் தனியாய் செல்ல பழகும் வயது வரை கிட்டத்தட்ட 100௦௦ படங்களுக்கு மேல் அழைத்து சென்றிருக்கிறார்.இன்று சினிமவை நான் ஒரு ரசிகராய் மட்டும் அல்லாமல்,ஒரு பங்கேற்பாளறாய் இருக்கும் நிலைக்கு மாற்றியதில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. இப்ப சினிமா மூலம் எதாவது செய்யவேண்டும்.என்ற எண்ணம் உருவாக உதவியை இருந்தவரும் அவரே! (விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதிலையே!) இன்று அவருக்கு அந்தம்மாவுக்கு ஒரு 65வயது இருக்கும் அவர் திரையரங்கம் பக்கம் போயே பத்து வருடங்கள் மேல ஆகிடுச்சு... காலம் எல்லாத்தையும் மாத்திருதுல....
இந்த மாதிரி ஆர்வம் மட்டுமே இருந்த எனக்கு,அந்த ஆர்வம் ஒரு மனுஷன எவ்வளவு மாத்தியிருக்கு அப்படிங்கற விஷயம். கலைமாமணி.திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள சந்திச்ச பிறகு தான் புரிஞ்சுது.
ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றால் அது ஒரு நாற்பது வருடங்களுக்கு முன் பெரிய விஷயம்.ஊருக்கு ஏதோ ஒன்று இரண்டு திரையரங்கங்கள் இருந்த காலம். அதுவும் கிராமங்களில் மாலை நேர டூரிங் டாக்கீஸ்களில் மட்டும் தான் ஒரு இரண்டு காட்சிகள் பார்க்க முடியும்.பின் மெல்ல மெல்ல வளர்ந்து திரையரங்கங்கள் அதிகமாகி திரைப்படங்கள் மட்டுமே பொழுதுபோக்காய் இருந்த காலங்கள்,சுற்றுலா செல்வது போல குடும்பத்தோடு கிளம்பி படம் பார்த்து மகிழ்ந்த அனுபவம்.ஒவ்வொரு தமிழ் குடும்பங்களுக்கும் உண்டு.இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது.தொலைகாட்சியின் புழக்கம் அதிகமானதும்,திருட்டு குறுந்தகடுகளின் அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாகவும், திரைப்படங்கள் சாதாரணமாகிவிட்டன.திரையரங்கங்கள் எல்லாம் பல ஊர்களில் திருமண மண்டபமாகவும்,வேறு பல இடங்களாகவும் மாறிக்கொண்டு இருக்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாவதில்லை.வருடத்திற்கு 200படங்கள் மேல் வெளியானாலும் பல புதுமுகங்கள் போல் நினைவில் நிற்கும்படியாக ஒன்றிரண்டு இருந்தாலே அதிசயம் என்கிற நிலையில் தான் உள்ளது.
திரைப்படங்கள் நிலையே இப்படி என்றால் அதில் பணியாற்றியவர்கள் நிலை. சினிமாவில் டைட்டிலில் பெயர் வருவதை க்ரெடிட்ஸ் என்பார்கள்.படம் தொடங்கும் முன்னே வரும் பெயர்களை படம் முடிந்த பின் அத்துணை பேரின் பெயர்களும் வரும்.நீங்கள் என்றாவது அந்த பெயர்களை எல்லாம் நின்று கவனித்து பார்த்திருக்கிறிர்களா கண்டிப்பாக இல்லை,சிலர் விரும்பினாலும் திரையரங்கில் அடுத்த காட்சி அவசரத்தில் படம் முடிந்த அடுத்த நொடியே திரையை அனைத்து விடுவார்கள்.எங்கோ சில திரையரங்கில் தப்பி தவறி அப்படி ஓடும் அந்த படத்தின் எண்டு டைட்டில்க்காக,அந்த ஒரு நொடி திரையில் தோன்றி மறையும் தன் பெயருக்காக தன்னுடைய வாழ்வின் பல வருடங்கள், சுகதுக்கங்கள், குடும்பம்,இளமை, ஆசைகள்,பணம் இன்னும் எத்தனையோ விசயங்கள்,என எல்லாம் மறந்து,சிலர் எல்லாம் இழந்து,சென்னை நகர தெருக்களில் இன்னும் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன் இன்னும் பல வருடங்கள் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.அதவும் ஒரு உலக உண்மையாகிவிட்டது.
இதில் அந்த படம் பற்றிய விவரங்கள் ஆவணபடுத்தபடுவதில்லை என்கிற வருத்தம் சினிமாவை கண்டுபிடித்தவர்களுக்கோ,அதில் வாழ்ந்து பெயரும்,புகழும்,பணமும்,பெற்று கொண்டிருப்பவர்களுக்கோ,இருந்ததா என்று தெரியவில்லை,ஆனால் அறுபது வருடங்களுக்கு முன்னால் ஒரு இளைஞனுக்கு இருந்தது.அது இன்று அவரால் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.படத்தை இயக்கியவர்களோ, நடித்தவர்களோ
அந்த படம் பற்றி அறியாத பல விஷயங்களையும்,அறிய புகைப்படங்களையும் தமிழ்,தெலுங்கு.இந்தி,கன்னடம்,மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் இவர் சேகரித்து வைத்துள்ளார்.
இவர் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சென்னை ராயபேட்டை வீட்டில் தான் பிறந்ததிலிருந்து வாழ்ந்து வருகிறார்.(எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. "ஒரு ஊரில் ஒரே தெருவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைவது என்பதும் ஒரு கொடுப்பினை" தான் என்று ) ஆயிரம் சந்தோசங்கள் உலகம் எங்கும் கொட்டிக் கிடந்தாலும் நம் மண்ணின் மணம் நம் இந்த மண்ணை விட்டு அகலும் வரை மறையாது என்பது நிதர்சனம்.(பறவைகள் போல கண்டங்கள் தாண்டி பறப்போம்.நம்
ஆசைகளை அடைந்த பின் நாம் தோன்றிய இடத்தில் மீண்டும் கால் பதிப்போம்...)
அந்த இல்லத்தின் பழமையும், அது தாங்கி வந்திருக்கும் பதிவுகளும் ஒரு அதிசயம் தான்.கிட்டத்தட்ட 100 விருதுகள் 1977 ஆம் ஆண்டு அமெரிக்க பையோக்ராபிக்கள் இன்சிடியுட்" மேன் ஆப் தி இயர்" உலகின் பிரபலமான 5000 பேரில் அந்த ஆண்டில் இவரும் ஒருவராக தேர்ந்தடுக்க பட்டார். இவருக்கு முன்பும் இவருக்கு பிறகும் அந்த விருதுக்கு இந்தியாவில் இருந்து யாருமே தேர்ந்தடுக்கபடவில்லை.
தென்னகத்தின் 5 முதல்வர்களோடு நெருங்கி பழகியவர். (திரு.கருணாநிதி,ஜெயலலிதா,என்.டி.ஆர்,எம்.ஜி.ஆர்,ஜானகி)இவர் சினிமாவில் ஒரு ஸ்டில் போட்டோகிராபராக தான் தன் வாழ்கையை தொடங்கினார். திரைப்படங்களுக்காக பிரத்தியோகமாக போட்டோ சூட் செய்யப்பட படங்களை மட்டுமே பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்தார்கள்.அந்த காலத்தில் புகைபடங்களிலேயே ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.சினிமா கலைஞர்கள் சாதாரணமாக படப்பிடிப்பு தளங்களில் உலவும் போது,சக கலைஞர்களோடு பேசி கொண்டிருக்கும்போது புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினார்.இது ஒரு புது பாணியை தோற்றுவித்தது.இப்படி பல விசயங்களுக்கு திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் முன்னோடியாக இருந்திருக்கிறார்.பின் எம்.ஜி.ஆர் அவர்களின் நாடோடி மன்னன் திரைப்படத்தின் பத்திரிக்கை விளம்பர படங்களை எம்.ஜி.ஆரிடம் இருந்து கேட்டு வாங்கி பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தது.மறு நாள் பல பத்திரிக்கைகளில் பிரமாண்டமாய் வெளியானதும்.இவரையே அந்த திரைப்படத்தின் மக்கள் தொடர்பாளராக நியமித்தார்கள்.அது மட்டுமல்ல தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் இவரே.
ஆனால் "நாட்டுக்கொரு நல்லவன் " படத்தில் இருந்து தான் இவர் பெயர் பி.ஆர்.ஒ. வாக திரையில் வந்தது.அதற்கு முன்பே தொடங்கிய இவரது சேகரிப்பு.ஒரு படத்தின் பணியாற்றிய அனைவரை பற்றிய விவரங்கள்.முக்கியமான புகைப்படங்கள், இது மட்டுமா தென்னிந்திய சினிமாவில் மறைந்த அத்தனை கலைஞர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக பல போஸ்டர்களையும் தன் கைப்பட உருவாக்கி பாதுகாத்து வருகிறார். தன் வீட்டில் இதற்கு தனி தனி அலமாரிகள் அமைத்து சேகரித்து வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இவையெல்லாம் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள்,இயக்குனர்களுக்கே தெரியாத தகவல்கள். மேலும் சமீபத்தில் இதெல்லாம் கணிப்பொறியில் பதிவு செய்ய முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது. வந்த நபர் பாதி சேகரிப்புகள் பற்றிய தகவல்கள் மட்டுமே பதிவு செய்து விட்டு மீதியையும் குழப்பிவிட்டு சென்றுவிட்டார்,என்று வருந்துகிறார் திரு.ஆனந்தன்.
ஆனாலும் சோர்வடையவில்லை.இன்றும் தமிழின் முதல் பேசும் திரைப்படம்
1931-ல் வெளியான காளிதாஸ் தொடங்கி எந்திரன் வரை எந்த படம் பற்றி என்ன விவரங்கள் கேட்டாலும் உடனே நினைவில் கொண்டு வந்து பகிர்ந்து கொள்கிறார்.காளிதாஸ் திரைப்படத்தின் முதல் போஸ்டரையும் தேடி பத்திரபடுத்தி உள்ளார்.அந்த படம் வெளிவருவதற்கு முந்தின நாள்லே பத்திரிக்கையாளர்கள் காட்சி போடப்பட்டு அதன் விமர்சனம் வெளியாகியிருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டார். மேலும் 16-10-1944 முதல் 22-11-1946. 768 நாள் 110 வாரம் சென்னை ப்ராட்வே திரைஅரங்கில் ஓடிய “ஹரிதாஸ்” படத்தின் போஸ்டரும் இவர் சேகரிப்பில் உள்ளது.சினிமா கலைஞர்களின் முகவரிகள் பற்றி முதல் புத்தகம் எழுதியவரும் இவரே.இன்றும் தினகரன்
நாளிதழில் வெள்ளிக்கிழமை தோறும் தமிழ் சினிமா வரலாறு பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார்.பத்திரிக்கையாளர்கள் காட்சிக்கு படம் பார்க்க செல்கிறார்.எந்திரன் படத்துக்கு பத்திரிக்கையாளர் காட்சி இல்லாததால் அந்த படம் பார்பதையே தவிர்த்து விட்டேன் என்று சொன்ன போது ஒரு உண்மை கலைஞனின் தன்மானம் என்னையும் உறுத்தியது.
அதுமட்டுமா இவர் சேகரித்து வைத்துள்ள தகவல்கள் அப்பப்பா ஒவ்வொன்றும் ஆச்சிரியங்கள். உ.ம்- 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் பத்மினி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில்.வின்சென்ட்-இன் ஒளிப்பதிவில் வெளிவந்த "மீண்ட சொர்க்கம் " என்ற திரைப்படத்தில் தான் "ஜூம் லென்சே" பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அதுவும் ஒரே ஒரு காட்சியில் தான். அதை எடுத்தது ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவுக்கு சுற்றுபயணம் வந்த அவர் இங்கு படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க வந்தார்.அப்பொழுது ஒரு காட்சியை தன்னுடைய ஒளிப்பதிவு கருவியில் பதிவு செய்தார்.அதைப்பார்த்த இயக்குனர் ஸ்ரீதர் கேட்கவும் அந்த காட்சி பற்றியும் ஜூம் என்கிற தொழில்நுட்பம் பற்றியும் விளக்கிய அந்த வெளிநாட்டவர். இயக்குனரிடம் தான் தாய்நாட்டுக்கு திரும்பியதும் இந்த காட்சியை பதிவு செய்து அனுப்புவதாக சொல்லி விடைபெற்று சென்றார். பின் அதே போல் அனுப்பியும் வைத்தார். இது தான் இந்தியாவிலேயே ஜூம் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.அதற்கு முன்பு வரை ஒரு க்ளோசப் ஷாட் எடுக்கவேண்டுமென்றால் ஒளிப்பதிவு கருவியை தூக்கி சென்று சம்பந்தப்பட்ட நபரின் முகத்தின் அருகே வைத்து எடுக்கும் முறை தான் பின்பற்றப்பட்டு வந்ததாம். வாவ் எவ்வளவு பெரிய தகவல்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" இப்படி இந்த வாழும் பல்கலைகழகத்தில் பல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை பதிவு செய்யவேண்டிய கட்டாய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
"நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டதாவது செய்யாமலிரு" என்பார்கள்.இவர் பலகாலமாக தன் சேகரிப்புகளை நிரந்தர கண்காட்சியாக வைக்க ஒரு இடம் கேட்டு அரசாங்கத்திடம் போராடி வருகிறார்.அதற்கு யாரும் உதவவில்லை.ஆனால் தங்கள் தேவைக்காக பலரது விவரங்கள் அடங்கிய குறிப்புகளை,புகைப்படங்களை இவரிடம் இருந்து வாங்கி செல்லும்,தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் அதை திருப்பி கொடுப்பதும் இல்லை இவரே தேடி போய்கேட்டாலும் நான் அதை அன்றே கொடுத்துவிட்டேனே,என்று வாய் கூசாமல் பொய் சொல்லி ஒரு நல்ல இதயத்தை வேதனை அடைய செய்கின்றனர்.கடந்த மாதம் நடந்த இயக்குனர் சங்க விழாவுக்கு கூட அதன் தலைவர்கள் சிலர் கேட்டதுக்காக இயக்குனர்கள் பற்றி ஒரு சிறு புத்தகம் போடுமளவுக்கு தகவல் யோசித்து எழுதி வைத்திருந்தார்.ஆனால் இன்று வரை அதை வாங்க கூட யாரும் வரவில்லை என்பது வேதனையான நிஜம்.எனக்கு பிறகுஇதை வைத்து என் மகனுக்கு காசாக்க கூட தெரியாது அவர் இதை தவிர்த்து விடுவார்.என் பொக்கிஷங்கள் அழிந்து விடுமோ என்று நினைக்கும் போது என் மனம் துடிக்கிறது.என்று கூறும் போது எனக்கும் மனது வலித்தது..."சினிமா சம்பந்தமாக விழாவோ,புத்தகங்களோ எது வெளிவர வேண்டுமென்றாலும் இவருடைய துணையில்லாமல் முடியாது என்று சொல்கின்ற அளவுக்கு திரைத்துறையில் பங்காற்றியுள்ளார்".
திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருக்கும் பலர் ஒரு நிஜ ஹீரோவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.ஏன் நாளை ஒருவர் இது போல ஒரு சேகரிப்பு ஆர்வத்தை பற்றி யோசிக்க கூட முடியாத அளவுக்கு நல்ல முயற்சிகளுக்கு முடு விழா நடத்தும் பெருமை ஒவ்வொரு சம கால தமிழ் சினிமா கலைஞர்களுக்கும் உண்டு.அதற்கு என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை."தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்க வேண்டும் என்று ஆசை பட்டதற்காக என் பங்கிற்கு நான் இந்த தகவல்களை வேறு எந்த பத்திரிக்கையும் பதிவு செய்யாத சில தகவல்களை இங்கு பதிவு செய்ததால் சிறிது மனநிறைவு அடைகிறேன்".
ஒரு ஆவணம் சிதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.இது சினிமா துறையில் மட்டும்மல்ல நம் நாட்டின் அநேக துறைகளில் உண்மைகள் மறைக்கபட்டு அழிக்கப்பட்டு வருவது நிஜம். "இது நமக்கு புதிதா என்ன காலம் காலமாக நம் தமிழ் பொக்கிஷங்களை ஆற்றில் போட்டு கொண்டிருந்த நாம் ஒரு உ.வே.சா வந்ததால் ஓலை சுவடிகளில் இருந்து அச்சில் ஏறியது.இருட்டறையில் அடைந்து கிடந்த தேவார பாடல்கள் மாமன்னன் ராஜராஜனால் வளர்க்கப்பட்டு சுவடியில் காலம் காலமாக பணம் கொடுத்து ஆள் நியமித்து பாடப்பட்டு வந்ததால் இன்றளவும் அழியாமல் தமிழுக்கு புகழ் சேர்த்து வருகிறது" இது போல ஒரு வாய்ப்பு நம் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் கிடைக்காதா என்ன?
இதை படிக்கும் யாரேனும் அதை பாதுகாக்க உங்களால் முடிந்த உதவிகள் செயலாகவோ,ஆலோசனைகளோகவோ தரலாம்..."இனி வரும் காலத்திலாவது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வு முடிவதற்குள் எதாவது ஒரு விசயத்தை ஆவணப்படுத்தாமல் அடங்கமட்டோம் என்கிற உறுதி ஏற்ப்போம் நண்பர்களே!" இது தொடங்கினால் நம் சிறு துளிகளும் ஒரு நாள் பெரு வெள்ளங்களாகி பல அறியாமை கசடுகளை அடித்து களையும்.நம் நாளைய தலைமுறைக்கு அது பேருதவியாய் அமையும்.
வெறும் ஆனந்தனாக இருந்த இவர் பிலிம் நியூஸ் என்ற பத்தரிக்கைக்கு போட்டோ கிராபராக பணியற்றியதாலேயே இவருக்கு அந்த பெயர் வந்தது என்று நாம் அறிவோம். இவரின் 1931 -2010வரை உள்ள திரை சேகரிப்புகள் முடியபோவதில்லை. இன்னும் பல ஆண்டு தொடர போகிறது.அதற்கு நாமும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். "சரித்திரங்கள்,சாதனைகள் உருவாவதில்லை,உருவாக்கபடுகின்றன".அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது.
இன்னும் பல நாயகர்கள் வலம் வருவார்கள்...
டேக் ஓ.கே !!!!!!!!!!!!!!!!!!!!
மு.வெ.ரா
22-11-2010
Subscribe to:
Posts (Atom)