Thursday, July 14, 2016

"சினிமாக்களும் நானும் - 01" - மகேந்திரனின் முள்ளும் மலரும்

நான் ரசித்த முள்ளும் மலரும் ...

           
                          நீண்ட நாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் ஒரு பதிவு .....
        தமிழில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்தாலும் காலம் கடந்தும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது ஒரு சில திரைப்படங்கள் தான்.அப்படி ஒரு பொக்கிஷமான திரைப்படம் தான் முள்ளும் மலரும். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது.  ரஜினியின் பெஸ்ட் படம்,தன்னை இயக்கிய சிறந்த இயக்குனர் மஹேந்திரன்  என்று அவரே அடிக்கடி சொல்வது இந்த "முள்ளும் மலரும்" படம் பத்தி தான்.
                                               
"முள்ளும் மலரும் படம் பார்க்காதவர்கள் டைரக்டர்களே இல்லை!" இது சமீபத்தில் ஒரு பேட்டியில் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர். தங்கர்பச்சான் சொல்லியது....

              நடிகர்கள் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், இயக்குநர்களில் ‘எப்போதும் எவர்கிரீன்’ இயக்குநர் மகேந்திரன்தான். எடுத்த படங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவுக்கு வேறு பரிமாணங்களைத் தந்தவை.அவரின் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம் முள்ளும் மலரும் அந்த படத்தை பத்தி தான் இன்னைக்கு நம்ம சினிமாயனா கோலிவுட் க்ளாசிக்ஸ் செக்மென்ட்ல  பேசப்போறோம் ...

                 அண்ணன்-தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சிவாஜியும், சாவித்திரியும் நடித்த 'பாசமலர்' எப்படி ஒரு  வாடா மலரா விமர்சகர்கள் சொல்றாங்களோ , அதே மாதிரி ரஜினியும், ஷோபாவும் நடித்த 'முள்ளும் மலரும்' ஒரு குறிஞ்சி மலர்னு சொன்னா அது நிச்சயம் மிகையாகாது.

                ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு,வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோர் நடிப்பில் பாலுமஹேந்திரா அவர்கள் ஒளிப்பதிவில் மஹேந்திரனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் உருவான படம் முள்ளும் மலரும் 1966 ல் தமிழ் சினிமாவில் நுழைந்த இயக்குனர் மஹேந்திரன் 7 படங்களுக்கு கதை, 6 படங்களுக்கு கதை வசனம், 3 படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதிஇருக்கிறார் அவர் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் முள்ளும்மலரும்.எப்போதும் தன்னை அவர் முன்னிலைப்படுத்தியதில்லை. அவர் படைப்புகள்தான் அவரைப் பற்றி பேசவைக்கின்றன.தலைமுறை கடந்தாலும், தமிழ் ரசிகனால் கொண்டாடப்படும் இயக்குநர் அவர்.

            முள்ளும்மலரும் திரைப்படம் .1978 சுதந்திர தினத்தன்று வெளிவந்தது.வில்லன் குணச்சித்திர வேடம் என மாறி மாறி நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்தின் புதிய பரிமாணத்தை எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டிய படம் முள்ளும் மலரும் இது  நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த  32 வது படம் அது அவருக்கு  மெகா ஹிட் படமாகவும் வெள்ளி விழாப் படமாகவும் அமைந்தது.
     
            கல்கி வார இதழில் வெள்ளிவிழாவிற்க்காக நடத்தப்பட்ட  நாவல் போட்டி ஒன்றில், எழுத்தாளர் உமா சந்திரன் எழுதி முதல் பரிசு பெற்றதுதான் 'முள்ளும் மலரும்.' கதை அந்த கதைக்கு திரைக்கதை-வசனம் எழுதி இயக்கினார், ' திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருது பெற்ற படம்  தமிழக அரசின் விருது பெற்ற படம்   தமிழில் வெற்றி பெற்ற இந்த படம்  1979 ல் வேனலில் ஒரு மழா என்ற பெயரில் மலையாளத்திலும்  1985 ல்  பியாரி பேஹானா என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.
.
                    ” முள்ளும் மலரும்’ படத்துக்கு முன்புவரை ரஜினிக்கு வில்லன் முத்திரைதான் அழுத்தமா இருந்துச்சு. அவரை எப்படி ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?” என்று ஒரு பேட்டியில்  இயக்குனர் மஹேந்திரன் கிட்ட கேட்டப்ப அவர் என்ன சொன்னார்னா ....

       ”நடிகர், ஸ்க்ரிப்ட், இயக்கம்னு எதையும், நான் யார்க்கிட்டேயும் கத்துக்கலை. எது எப்படி இருக்கணும்னு எனக்கு நானே தீர்மானிச்சேன்.

          போகிப் பண்டிகையில வேண்டாத விஷயங்களைக் கொளுத்துற மாதிரி, சினிமாவில் யதார்த்தத்துக்குப் புறம்பான, பிடிக்காத விஷயங்களைத் தூக்கிப்போட்டேன்.

             ‘ஆடுபுலி ஆட்டம்’ படத்துக்கு வசனம் எழுதினப்ப, ரஜினி எனக்கு நல்ல நண்பர் ஆனார். விடிய விடிய சினிமாபத்திப் பேசுவோம். சினிமா மேல அவருக்கு  வேட்கையும் தீராக் காதலும் இருந்துச்சு.

           ‘முள்ளும் மலரும்’ எழுதினப்ப ரஜினிதான் சரியா இருப்பார்னு தோணுச்சு. தயாரிப்பாளர் வேணுகிட்ட சொன்னப்ப, ‘ரஜினி கறுப்பா இருக்காரு. வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோவா போட்டா எடுபடுமா?’ன்னு தயங்கினார்.

          ஆனா, ‘ரஜினிதான் ஹீரோ’ன்னு நான் தீர்மானமா இருந்தேன். படம் வெளியான மூணு வாரம் மக்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறந்தவுடனே குழந்தை சத்தம் போடாம இருந்தா, எப்படிப் பதைபதைப்பா இருக்குமோ, அப்படித்தான் நானும் ரஜினியும் இருந்தோம். நாலாவது வாரத்துல படம்  பிக்-அப் ஆச்சு. இப்போ யோசிச்சாலும் காளி கேரக்டருக்கு ரஜினியைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை!”

         முள்ளும் மலரும் திரைப்படத்தின் கதை

        இளமையிலேயே தாய்-தந்தையரை இழந்த ரஜினி தன் ஒரே தங்கை ஷோபாவோட  , கழைக் கூத்தாடியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஊர் ஊரா சுத்தி கடைசியில ஒரு ஊர்ல அடைக்கலமாவாரு, அப்புறம் படி முன்னேறி பக்கத்து மலையில இருக்கிற மின்சார அலுவலகத்தில விண்ட்ச்  ஆப்பரேட்டரா  ஆயிருவாரு.அந்த கிராமத்தில எல்லாருக்கும் பிடித்த அதே நேரத்தில எல்லாரும் பயப்படுற ஒரு கோபாக்கார இளைஞரா இருப்பாரு.

             தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார் ரஜினி. அமைதியாக போய் கொண்டிருக்கும் இவங்க வாழ்க்கையில இன்னொரு ஆதரவற்ற குடும்பம் நுழைவாங்க  படாப்பட் ஜெயலட்சுமி மற்றும் அவரது தாய்க்கும் தங்கைக்காக தன் வீட்டு பக்கத்திலேயே இடம் கொடுக்கிறார் ரஜினி

      அந்த ஊருக்கு புதிதாக வரும் என்ஜினீயர் (சரத்பாபு), கண்டிப்பானவர். அவர் வந்ததில் இருந்து ரஜினிக்கும் அவருக்கும் பிடிக்காமல் போய்விடும் அவரிடம் ரஜினி அடிக்கடி முறைச்சுக்குவார், கோபமாக நடந்துப்பார் .  ஒருமுறை ரஜினி வின்ச் இயக்க தாமதமாக வர்றதால  ரஜினியை பத்து நாள் சஸ்பெண்ட் செய்வார். இதனால் ஆத்திரம் அடையுற  ரஜினி, அளவுக்கு மீறி குடிச்சுட்டு . சாலையில் விழுந்து கிடப்பார். அதனால், விபத்தில் சிக்கி, ஒரு கையை இழந்துவிடுவார்.

              அதன் பின்  ரஜினியிடம் அடைக்கலம் தேடிவந்து அவர்கள் பக்கத்தில் வீட்டில் வாழ்ந்து இவர்களோடு பழகி வரும்  `படாபட்' ஜெயலட்சுமி, ரஜினியை திருமணம் செஞ்சுக்குவார் .

       இதற்கிடையே சரத்பாபுவுக்கு, ஷோபா மேல்  காதல் ஏற்படுகிறது.அதை ஷோபாவிடம் சொல்ல அவர் தான் அண்ணனிடம் அனுமதி கேட்க சொல்ல,வீடு தேடி வந்து பொண்ணு கேட்கும் சரத்பாபுவை  அவமானப்படுத்த அவரை  தன் எதிரியாக நினைக்கும் ரஜினி, இந்தக் காதலை ஏற்காம அவரோட பழகிவரும் கொஞ்சம் வயது முதிர்ந்த வெண்ணிறாடை மூர்த்திய மாப்பிளையா  தேர்ந்தெடுப்பாரு.அவர் ஏற்கனவே ஊரில் ஒரு திருமணமான பெண்ணோடு தொடர்பில் இருப்பாரு .இது தெரிந்து அனைவரும்  அந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ரஜினி பிடிவாதமாக இருப்பார்.அண்ணனுக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கும் ஷோபாவை எல்லாரும் சேர்ந்து மணம்  மாத்துறாங்க

         அண்ணன் மீது அளவற்ற பாசம் வச்சுருந்தாலும்  சரத்பாபுவை மணக்க தீர்மானிக்கிறாங்க , ரஜினிக்கு தெரியாம ஊரே சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் கல்யாணம் நடந்த கோவிலை நோக்கி போய்கிட்டுருப்பாங்க  கல்யாணத்துக்கு சில நிமிஷங்களே இருக்கும்போது, அங்க வர்ற ரஜினியை பார்த்து முதல தயங்குற ஷோபா மனம் மாறி ரஜினியிடமே  ஓடி வந்துருவாங்க . தங்கை தன் மீது கொண்டிருக்கும் ஆழமான பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போயிருவாரு , ரஜினி.

             அந்த சந்தோஷத்தில சரத்பாபுவுக்கும், ஷோபாவுக்கும் திருமணத்தை நடத்த அவர் சம்மதிக்கிற  அந்த காட்சியோட படம் நிறைவடையும் .

                            முள்ளும் மலரும்' படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்த டைரக்டர் பாலசந்தர் பிரமித்துப்போனார்.

            உடனடியாக ரஜினிக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார். உன்னை அறிமுகபடுத்தியதில் நான் பெருமைகொள்கின்றேன்  என்று எழுதியிருந்தார் .அந்த கடிதத்தை ஒரு பொக்கிஷமாக இன்னைக்கு  பாதுகாத்து வச்சிருக்காரு  ரஜினி.

ரஜினி
                           தன் உச்சபட்ச சிறப்பான நடிப்புத் திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.தங்கைக்கு  சோறு போடாமல் பட்டினியாவச்சுருக்கானு  புரளி பேசின ஆபீஸ் பியூன அடிச்சுட்டு "என் வள்ளி பட்டினியா இருக்கான்னா, அது இந்த காளி செத்த நாளாத்தான் இருக்கும்" என்று சொல்றது , கை போனதால் வேலையை விட்டு தூக்கிட்டாங்கனு சொல்ற  சரத்பாபுக்கிட்ட ரஜினி  "பரவாயில்ல சார். நானும் உங்க இடத்துல இருந்தா, இப்படித்தான் செஞ்சிருப்பேன். கேவலம்.... நாம எல்லாம் மனுஷங்கதானே சார்" என்று விரக்தியா சொல்லிட்டு , டக்குனு  தன் முகபாவத்தை சீரியஸா ஆக்கிக்கிட்டு "ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" னு டயலாக் பேசுவாரு பாருங்க அது க்ளாஸ் , கை போன பிறகு  உதவிக்காக திருமணத்திற்கு சூசகமாக வற்புறுத்துற தன் தங்கை ஷோபாக்கிட்ட  "ம்..... வள்ளிக்குட்டி. நான் என்னவோ நெனச்சேன். நீ கூட பொடி வெச்சு பேச கத்துக்கிட்டியே' என்று நக்கலடிப்பதாகட்டும், தனக்கு பிடிக்காத சரத்பாபுவோட , ஊர்க்காரங்க சேர்ந்து கல்யாணம் பண்ண கூட்டிட்டு போகும் போது  தங்கை ஷோபாகிட்ட  "அந்த நாயிங்க எல்லாம் போகட்டும். ஏன்னா அதுங்க என் கூட பிறந்துதங்க இல்ல. ஆனா நீ என் ரத்தம்" என்று உருகுவதிலாகட்டும்,ஷோபா திருப்பி தன்னை ஓடி வந்து கட்டிபிடிச்சவுடனே  "இப்ப உங்க மூஞ்சுங்கள எங்கடா வெச்சுக்கப் போறீங்க" என்று பெருமைப்படுவதிலாகட்டும்.கடைசிவரைக்கும் அந்த கேரக்டரா வாழ்ந்துருப்பாரு..ரஜினி .

ஷோபா 
           அடுத்தது ஷோபா அப்பாவி முகத்துடன் அறிமுகமாகி சரத்பாபுவோட  ஜீப்பை பஸ் டிரைவர் போல  ஓட்டி விளையாடும் போதும் அப்புறம் பின்னால வந்து நிக்கிற சரத்பாவுவை மிரட்சியுடன் பார்க்கிறது எல்லாம் பயங்கர கியூட்டா பண்ணியிருப்பாங்க சரத்பாபுவுக்கும் இவங்க சந்திக்கிற காட்சியில் முகபாவங்கள் அற்புதம் படத்தின் க்ளைமாக்ஸ்ல சரத்பாபுவோட போறதா? அல்லது அண்ணனோட போறதானு குழம்பி  தவிக்கிற காட்சியில அட்டகாசமா நடிச்சிருப்பாங்க ...


            காளி (ரஜினி )யால் 'லா பாயிண்ட்' என்று பட்டப் பெயர் வச்சு கூப்பிடுற கேரக்டர் ல டிவிசனல் எஞ்சினியரா சரத்பாபு நேர்மையான அதிகாரி அதே நேரத்தில மனிதாபிமானமுள்ள நபர் தானே மாதிரியே யாரும் இல்லாத குடும்பத்தை சேர்ந்த ஷோபா மேல ஆசைப்படுறது தோற்றம் உடை தனக்கு கொடுக்கப்பட்டதை சிறப்ப செஞ்சுருந்தாரு...சரத்பாபு

                  அடுத்து படாபட் ஜெயலட்சுமி ஆரம்பத்தில அப்பாவி பொண்ணு அப்புறம் கலாட்டா போன்ற கேரக்டர் அப்புறம்  கையிழந்த ரஜினியை கிண்டலடிக்கிற ஊர்க்காரங்க கிட்ட ஆக்ரோஷமாகிறது குடும்பத்தலைவிக்கேயுரிய பொறுப்போட ஷோபாவுக்காக தன் கணவனையே எதிர்த்து ஒரு முடிவு எடுக்குற போலடான கேரக்டர்  .பல பரிமாணங்க்ளா வெளிப்படுத்தியிருக்காங்க...இவங்களோட இந்த படத்தில வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு அவர் மனைவியாக வருகிறவர் னு  எல்லா கேரக்டரும் ஒரு கிராமத்தை அச்சு அசலா நம்ம கண்ணு முன்னாடி வந்து நிறுத்தியிருப்பாங்க...

                குறைகள்னு  சொல்ல எதுவுமே இல்லையானா? இல்லைதான்..... ஆனா படத்தில  முக்கிய கதாபாத்திரத்தில் ஒண்ணான படாபட் ஜெயலட்சுமி ஆரம்பத்தில ஆதரவற்ற நிலையில அடைக்கலம் தேடி ரஜினி ( காளி )
 வீட்டுக்கு வர்றாங்க ஆனா அப்பவே அந்த கேரக்டர் வறுமையில் இருக்காங்க ஆனா அவங்களுக்கு லிப்ஸ்டிக் போட்டு மேக்கப் பண்ணி இருக்கிறது உறுத்தலா இருக்கு.எதார்த்தத்தில இருந்து விலகி இருக்கு...மத்தபடி பெரிய குறைகள்  எதுவும் இல்லை. ஒரு கதையை எபப்டி படமாக்கணும்ங்கிறதுக்கு  சினிமாக்குள்ள நுழைய விரும்புற ஒவ்வொருத்தரும் பார்க்கவேண்டிய படம்தான்....


            இசை 

                 இசையமைப்பாளர் இளையராஜா: 1980, 90-களில் இயக்குநர்கள் கதையை முடிவு செஞ்சுட்டு  அதை திரைக்கதையாக்கும் போது இளையராஜாவையும் மனசில வச்சுட்டு தான் ஸ்க்ரீனிப்பிலே பண்ணுவாங்கனு சொல்வாங்க  ராஜாவும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாம மிகச் சிறப்பாக அவரோட தேவ இசையால் நிரப்புவார், சில சமயங்களில் சைலன்ஸ பல இடங்கள அட்மாஸ்பியர் எபெக்ட்ஸ்  மட்டும் தான்.  இந்தப் படத்திலையும்  அப்பப்ப Theme Music மாதிரி வர்ற கழைக் கூத்தாடிகளோட  மேளச் சத்தத்தை பல காட்சிகள்ல  சூப்பரா  பயன்படுத்தியிருப்பார் இளையராஜா .

               இதை பத்தி ஒரு தொலைக்காட்சி நேர்காணல் ல இயக்குனர் மஹேந்திரன் என்ன சொன்னார்னா

              இந்தக் கதையில  திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்ற மாதிரி பல இடங்களில் வசனங்களை குறைச்சு  மெளனங்களை அதிகப்படுத்தியிருந்தேன் சொன்னாரு . உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:

          ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவரை கட்டிப்பிடிக்கிற ஷோபா அப்பதான் ரஜினி கையை இழந்துருக்கிறத பீல் பண்ணி அழ ஆரம்பிப்பாங்க .ராஜா அந்த இடத்தில தான்  இசையால் பார்வையாளர்கள் உருகும்படி செஞ்சுருப்பாரு .

           அதே போல் இந்த முள்ளும் மலரும்  படத்தை பார்ஸ்ட காப்பி பார்த்த  இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ரீ-ரிகார்டிங் முடிவதற்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, பல இடங்கள் வசனங்கள் இல்லாமல் மெளனமாக இருப்பதை பார்த்து ஷாக்காகி இருக்கிறார். 'இன்னாங்க இப்படி எடுத்து வச்சிருக்கீங்க. நான் போண்டிதான் ஆயிடுவேன் போலிருக்கு". னு சொன்னாராம் இறுதியா படம் பிடிக்க வேண்டிய பாடல் காட்சிக்கு பணம் தர மாட்டேன்னு சொல்லிட்டாரு அப்புறம் நடிகர்  கமலின் உதவியால அந்த பாடல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல்தான் இன்றளவும் அழியா இசை பெருவெள்ளமாக இருக்கும் “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்கிற பாடல்ஆனா படம் வெளியாகி  மக்கள் அதை ஆரவாரமாக வரவேற்றது சரித்திரம்.

               அதனால  இந்தப்படத்தின் முதுகெலும்பாக இளையராஜாவின் இசையை குறிப்பிடலாம். பாட்ட ஒவ்வொன்னும் கதையோடு இணைஞ்சு வந்தது . 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' பட்ட கண்ணை மூடி  கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோனும் . இந்த பாட்ட  கண்ணதாசன் வரிகள் எழுத கே.ஜெ.யேசுதாஸ் பாடியிருப்பார் .
'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே'  லேலேலெலெ.... ஹம்மிங் அற்புதமா இருக்கும் கங்கை அமரன் எழுத எஸ்.பி.பி பாடியிருப்பார்...

          படத்தின் ஆரம்பத்தில் இளையராஜா படும் "மானினமே" பாடலின் இசையே படத்தில் பெரும்பாலும் பின்னணி இசையாகத் தூவ பட்டிருக்கும் .


             மங்காவுக்கும் காளிக்கும் திருமணம் நடந்து முடிஞ்ச ராத்திரியில வர்ற  "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு" பாடல கங்கை அமரன் எழுத வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க



            வள்ளிக்கு என்ஜினியர் மேல் வரும் காதலுக்கு பிறகு வரும்  "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை" பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுத ஜெஸ்ஸி பாடியிருப்பாங்க...
                               


ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா

                இந்த படத்தில ஆர்வோ (ORWO) கலரில்  பல ஜாலங்கள செஞ்சுருப்பாரு .பாலுமஹேந்திரா பாடல்கள் ல மான்டேஜ் காட்டுற கான்செப்ட்டை தமிழுக்கு அறிமுகப்படுத்தினது இவர் தான் . பல காட்சிகள் ல ஷோபாவுக்கு அற்புதமான குளோசப்புகள். முக்கியமாக  செந்தாழம்  பூவில்  சாங்கில் ஜீப்பில் உட்கார்ந்து இருக்கும் ஷேபாவுக்கு வச்சுருக்குற  குளோசப்.சரத் பாபு திருமணம் பண்ண விருப்பமனு சோப்பாகிட்ட சொன்னதுக்கு அப்புறம் வர்ற அடி  பெண்ணே பாடலில் ஷோபாவோட  இயல்பான அழக பதிவு பண்ணியிருக்கிற ஷாட்டுகள் கவிதையா இருக்கும். ஒரு நல்ல ஒளிப்பதிவாளனின் வேலை, தன் திறமையை தனியே காண்பிக்காமல், கதையோட்டத்திற்கு குறுக்கே நிற்காமல், சம்பவங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப கோணங்களை ஒழுங்குபடுத்துவதுதான். சொல்வாங்க அத சிறப்ப செஞ்சுருப்பாரு பாலு மஹேந்திரா ...

         இயக்குனர் மஹேந்திரன் 

                  1978 ஆம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றின் ஒரு அற்புத அத்தியாயத்தின் தொடக்கம். இயக்குனராக இது மகேந்திரனுக்கு முதல் படம். அதுவரை வசனங்களால் நிரம்பி வழிஞ்ச தமிழ் சினிமாவ காட்சிகளால் நிரப்பும் வேலையை தொடங்கி வச்சவர் மகேந்திரன். ஒரு காட்சியோட  தன்மையை உணர்த்துற மாதிரி  பல நீளமான காட்சிகளை இந்த படத்தில் மகேந்திரன் பயன்படுத்தி இருப்பார். அதுவரை, வசனம், நடிப்பு, கட் அடுத்தக் காட்சினு பார்த்துட்டிருந்த  தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நீளமான காட்சிகள் பிரம்மிப்பை கொடுத்த அதே நேரத்தில், கதையில் ஒவ்வொரு காட்சிகளின், கதாபாத்திரங்களின் தன்மையையும் உணர உதவிச்சு .

                  எஞ்சினியர் திட்டிவிட்டார் என்று கோபத்தில் இருக்குற  அண்ணனுக்கு தங்கை ஷோபா சாப்பாடு கொண்டு வர்ற காட்சி . அண்ணன் தன்னுடைய சுய கௌரவத்திற்கு ஏற்பட்ட இழிவை எண்ணி கழிவிரக்கம் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தங்கையின் பாசம், அவனது கழிவிரக்கத்தை இன்னும் அதிகமாக்குது உரிமையா  தங்கைக்கிட்ட  அண்ணன் கோவிச்சுக்கிறான். அப்புறம் ராத்திரி வீட்டுக்கு வந்ததும்  தங்கையை, அண்ணனும், அண்ணனை தங்கையும் சமாதானப்படுத்தும் இடங்கள் காட்சிகளால் நிரம்பி வழியும் அற்புதமா திரைக்கதை அமைச்சுருப்பாரு மஹேந்திரன் கிட்டத்தட்ட ஒரு படமாகவே எடுக்க வேண்டிய விசயத்தை ஒரே காட்சியிலேயே காட்டியிருப்பார்

                        காளியின் கதாப்பாத்திரம் பத்தி  எஞ்சினியர் இன்னொரு அலுவலரிடம் கேட்கும்போது அதற்கு அவர் காளியின் கதாப்பாத்திரத்தை விளக்கும்போதே, காளியின் நிஜ கதாப்பாத்திரத்தை பின்னணியில் காட்சிகளாக காட்டியிருப்பார் காட்சிகளால் நகர்ந்துட்டருக்கும் கதையை, ஒரே ஒரு வசனத்தால் இன்னும் பல படிகள் முன்னோக்கி நகர்த்தி இருப்பார் இயக்குனர். தம்பி இல்லாத வேற ஏதாவது கிளார்க்  இருந்தா வர சொல்லுங்கள்,அப்படினு  என்று எஞ்சினியர் சரத்பாபு சொல்ற  கதாப்பாத்திரம் சொல்கின்ற அந்த இடம், காட்சிகளும், வசனமும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு படத்தை நகர்த்தி செல்லும் காட்சியமைப்பு அருமையா இருக்கும் .

                   தமிழ்சினிமாவை சர்வதேச தரம் நோக்கி அழைத்து செல்லகூடிய இயக்கத்தை  மகேந்திரன் வெளிப்படுத்தியிருப்பார்.அவருடைய ஒவ்வொரு படமுமே தமிழில் ஒரு உலக சினிமா தான்...நான் காம்ப்ரமைஸ் டைரக்டர் அவரு,.,

                     ஒரு புத்தகத்தில் மஹேந்திரன் இந்த கதையை இயக்கனும்னு பத்தி சொன்னது என்னனா “முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை. ஆனா அந்த படம் அவர் இயக்கத்திலேயே வெளிவந்து தமிழ் சினிமாவில் வரலாறாகவே மாறியது....
                                       
https://www.youtube.com/watch?v=u7cGyXMHeI0  MULLUM MALARUM FILM YOU TUBE LINK....
                   சரி தமிழ் சினிமாவில பார்த்தே தீர வேண்டியபடம். முள்ளும் மலரும் இந்த அற்புதமான படத்தை பத்தி பல விஷயங்கள்  உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன் படம் பார்த்தவங்களுக்கு காட்சிகள் கண் முன்னாடி வந்து போயிருக்கும் பார்க்கத்தவங்க கண்டிப்பா உடனே போய் படத்தை போய் பாருங்க...அடுத்ததா இன்னொரு அழகான படத்த பத்தி  சினிமாக்களும் நானும்ல எழுதுறேன்....



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து.....