Sunday, April 22, 2012

" நானும் அவளும் "

      அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.


      சைதாப்பேட்டை பேருந்து  நிறுத்தம்..


     இரவு 10.30 மணிக்கு மேல இருக்கலாம்...

      அந்த பக்கம் இந்த பக்கம் ஒரு நாற்பது அம்பது கடையில வேலை பார்க்கிற நபர்கள் ரோட்டில நிக்கிற ஆட்டோ டிரைவர்கள் கடைய மூட தயாராகிட்டிருக்கிற சாலையோர வியாபாரிகள்,அவரவர் பகுதிக்கு கடைசி பஸ்ஸுக்காக காத்திருக்கிற பயணிகளோட நான்.எனக்கு வயசு 23 என் நண்பர் ஸ்டீபன் வயசு 31...

      இரவு பூலோக பிரமாண்டங்களின் பகல் பிம்பங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க தொடங்கியிருந்தது.

       நான் தான் முதல்ல பேச்ச தொடங்கினேன் "என்ன ஸ்டீபன் அண்ணா நேரம் போனதே தெரியல,என்னதான் நான் சென்னையில பிறந்திருந்தாலும் வளர்ந்ததெல்லாம் ஊர்ல தான். அப்பப்ப இங்க வந்து போயிருந்தாலும் இன்னைக்கு சென்னையில எனக்கு ஒரு வித்தியாசமான நாள், மறக்க முடியாத நாள் இதுக்கெல்லாம் நான் உங்களுக்குதான் நன்றி சொல்லணும் தேங்ஸ்னா" ரொம்ப சந்தோமா பேசி முடிச்சேன்.ஆனா அவர் கவனமெல்லாம் வேற பக்கம் இருந்துச்சு..

      அதுக்குள்ள என் செல்போனுக்கு அவகிட்ட இருந்து ஒரு கால் வந்துடுச்சு.."உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி" சைனா செட் ரிங் டோன் ஒரு நிமிஷம் அந்த இடத்தில இருக்கிற எல்லாரையும் திரும்ப வச்சுடுச்சு .சுத்தி லுக் விட்டுட்டு சிரிச்சுக்கிட்டே போன் அட்டென்ட் பண்ணினேன்...

       ஓ! அவ யாருன்னு உங்ககிட்ட சொல்லவே  இல்லலே.அவதான் என்னோட வைப் இன்னும் கல்யாணமெல்லாம் ஆகல. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு அப்படி  சொன்னேன். நாங்க எட்டு மாசமா  லவ் பண்ணிக்கிட்டிருக்கோம். பட்  நாங்க ப்பத்தான் இரண்டாவது தடவை  சந்திச்சோம். நேத்தே சென்னை வந்துட்டேன் பிரெண்ட்ஸ் கூட அவளையும் கூட்டிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டேன். அன்னைக்கு இரண்டாவது நாள்  பர்ஸ் கொஞ்சம் வீக்கா தான் இருந்துச்சு...


     என்ன ண்ணலாம்னு யோசிக்க டைம்  இல்ல, என் பிரெண்ட் ஸ்டீபன் இன்னிக்கு டே ஸ்பான்சர் பண்ணிட்டார். அவரோட புண்ணியத்தில வழக்கமா வெளியில இருந்தே வேடிக்கை பார்த்த பல இடங்களை  உள்ள போய் சுத்தி பார்த்தோம்.அப்புறம் அவளோட செலவில நெறைய பர்சேஸ் பண்ணி முடிச்சு எல்லா இடமும் சுத்திட்டு இப்ப தான் இங்க வந்தோம். அவள அவளோட ஹாஸ்ட்டல்ல டிராப்  பண்ணிட்டு நாங்க வந்த டாக்ஸிய  கட் பண்ணிட்டு நடந்தே பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.அன்னைக்கு  காலைலயிருந்தே  மனசு சந்தோமா இருந்ததால பசியும் தெரியல, நேரம் போனதும் தெரியல... 

        நாங்க அந்த பஸ் ஸ்டாண்ட்ல ஒரு ஓரமா நின்னுகிட்டிருந்தோம் "டேய் ராம் என்னடா இவ்ளோ நேரம் பார்த்து பேசிட்டு தான வந்தீங்க அதுக்குள்ள போன்ல என்ன பேச்சு.முதல்ல போன் கட் பண்ணு. அப்புறம் பேசிக்கலாம், போய் கோயம்பேட்டுக்கு பஸ் இருக்கானு கேட்டுட்டு வா" கொஞ்சம் கோபமாவே சொன்னார் ஸ்டீபன்...

         நானும் அங்க இங்க நின்னவங்கள்ல ஒவ்வொருத்தரையா பார்த்து கேக்க ஆரம்பிச்சேன்.

   தெரியல பாஸ்,

   நான் இந்த ஊர் இல்ல, வேற யார்கிட்டையாவது கேளுங்க தம்பி...,

  இருக்கலாம் இல்லாமலும் போகலாம் சும்மா நேரங்கெட்ட நேரத்தில.....,

  கடைசி ஆள் தலைய  மட்டும்தான் ஆட்டினார்.... 

         இப்படி பல பேர்கிட்ட விசாரிச்சுக்கிட்டு வரும் போதே என் பின்னாடி வேகமா இடிக்கிற மாதிரி வந்து சடன் ப்ரேக் போட்ட ஷேர்ஆட்டோ டிரைவர், நான் அதிர்ச்சி ஆகி நின்னத கூட கவனிக்காம "கோயம்பேடு கோயம்பேடு ஏறுங்க ஏறுங்கனு குரல் குடுத்தாரு"

        ஸ்டீபனுக்கு இப்ப தான் லேசா கோபம் குறையுது. "சரி ஏறுடா ராம்னு" சொல்லிட்டு அவரும் ஆட்டோக்குள்ள  ஏறினார். .

        நாங்க ஏறின பின்னாடி என்னோட பின் பக்கமிருந்த சீட்டில நாலு பசங்க முன்னாடி டிரைவர் பக்கம் ரெண்டு பசங்க, என் பக்கத்தில ஒரு பையன் உள்ள ஏறி உட்கார்ந்துட்டாங்க.ஆனா யார் முகத்திலையும் ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல.மணி கிட்டத்தட்ட 10.45 அந்த ஷேர்ஆட்டோ மெல்ல கிளம்ப ஆரம்பிக்குது.என் எதிர காலியா இருந்த சீட்டில ஒரு மூணு நார்த் இந்தியன் பொண்ணுங்க மாடர்ன் டிரெஸ்ல வந்து உட்காருறாங்க கூட ஒரு நார்த் இந்தியன் பையன் நல்ல குண்டா வெள்ளையா ஹிந்தி காமெடி ஆக்ட்டர் மாதிரி இருந்தான்.அந்த பொண்ணுங்க பெர்சனாலிட்டிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல, ஆனாலும் ஆட்டோ  கிளம்பினதுலேர்ந்து அவங்க நாலு  பேரும் ஹிந்தியில ஜாலியா ஏதேதோ சிரிச்சு பேசிக்கிட்டே வந்தாங்க.நான் உட்பட சுத்தி இருக்கிற யாருக்குமே அவங்க பேசுறது என்னனு புரியலனாலும் என்ன தவிர எல்லாரும் சந்தோமா அவங்க நாலு பேரையும் பார்த்துக்கிட்டே ஒரு சின்ன சிரிப்போடையே வந்தாங்க.

       அப்புறம் ஒரு மூணு  நாலு கிலோமீட்டர் அந்த ஷேர்ஆட்டோ சென்னையோட இரவு காட்சிகளை அழகாக கடந்து போய்
க்கிட்டிருந்தது. டிராபிக் ரொம்பவே கம்மியாயிருந்தது.சாலைகள்ல ஆளே இல்லாட்டாலும் ரெண்டு மூணு இடத்தில ஒரு அஞ்சு நிமிஷம் நிப்பாட்டி யாராவது வர்றாங்களானு பார்த்துகிட்டே தான் வண்டி ஒட்டினார்.அந்த  ஷேர்ஆட்டோ டிரைவர்.பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு வாசலில சின்ன சின்ன இட்லி கடைகள் முளைத்திருந்தன.

       நா ஸ்டீபன் அண்ணாவ திரும்பி பார்த்தேன் அவர் போன்ல பிஸி
யாயிருந்தாரு.

       ஹிந்தியில சத்தமா எதோ ஒரு குரல்  என் முன்னாடி இருந்த நாலுபேர்ல யாரோ பேசினாங்கனு மட்டும் புரிஞ்சுது.ஆனா 
யார் பேசினாங்க என்ன பேசினாங்கனு சத்தியமா தெரியல, டிரைவருக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவர் உடனே ஷேர்ஆட்டோவ நிப்பாட்டினார்.அந்த நாலு பேரும் இறங்க,அந்த இடத்துக்கு இப்ப ஒரே ஒரு தமிழ் பொண்ணு வந்து உட்காருறா... அந்த பொண்ணுங்க இறங்கவும் லேசா சோகமான என்னோட சக பயணிகளின் முகம் மீண்டும் சந்தோஷமாகுது.

        ஆஹா! பொண்ணு தமிழ்னு எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறீங்களா? எனக்கு கொஞ்சம் கால் முட்டு நீளம். நான் என் சீட்ல உட்கார்ந்தாலே எதிர் சீட்ல உட்கார்ந்துருக்குறவங்களுக்கு இடிக்கும் அதான் "கொஞ்சம் தள்ளிக்கோங்கன்னு அந்த பொண்ணு என்ன பார்த்து சொன்னத வச்சு தான் கண்டுபிடிச்சேன். நானும் கொஞ்சம் தலைய தூக்கி அந்த பொண்ணோட முகத்த பார்த்தேன்.
அந்த பொண்ணுக்கு ஒரு 
இருபத்து இரண்டு இல்ல இருபத்து  மூணு வயசுக்குள்ள இருக்கும்.கண்ணெல்லாம் வீங்கி சின்ன சினுங்களோட ஜன்னல பார்த்து  உட்கார்ந்துக்கிட்டா  .

       ப்ப நா
ன் ஸ்டீபன்ன பார்த்து திரும்ப சரியா அவரும் என்ன பார்த்து திரும்ப நாங்க ரெண்டும் பேரும் ஒருத்தர ஒருத்தர பார்த்துக்கிட்டோம் எதுவும் பேசிக்காம எதிர் எதிரா திரும்பிக்கிட்டோம். கொஞ்சம் தூரம் ஆட்டோ நகருது எனக்கு லேசா பசி தூக்குது. மணி பதினொன்னு தாண்டி இருக்கும்.

       எங்க எதிர புதுசா வந்து உட்கார்ந்திருக்கிற அந்த பொண்ணு ஏதோ இடம் சொல்லி அங்க ஆட்டோ நிக்கும்மானு எங்ககிட்ட கேட்டா,ஆமானு ஸ்டீபன் 
சொன்னாரு, பதில் கிடைச்ச உடனேதிரும்பவும் அந்த பொண்ணு  ஜன்னல் பக்கம்  திரும்பி உட்கார்ந்துகிச்சு.

      ப்ப அந்த பொண்ணுக்கு ஒரு போ
ன்கால் வருது அத அட்டன்ட் பண்ணின உடனே லேசா கண்ண துடைச்சிக்கிட்டு பேச ஆரம்பிக்குறா, "சொல்லு இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணின.... பொய் சொல்லாத நா பதினைஞ்சு நிமிஷமா அந்த ஓயின்ஷாப் வாசலில நின்னு உன்ன பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்.எனக்கு எல்லாம் தெரியும்னு கோபமா ஆட்டோல இருக்கிற எல்லாருக்கும் கேக்கிற மாதிரி பேசிட்டு அந்த பக்கம் பதில எதிர்பார்க்காம போன் கட் பண்ணிட்டு தலைய குனிஞ்சு அழ ஆரம்பிச்சுட்டா.அப்ப அந்த பொண்ண பார்த்து தண்ணி குடிக்கீறீங்களா மேம்னு கேட்டாரு ஸ்டீபன், குனிஞ்ச தலை நிமிராம தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு தொடர்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சு.
        
     எனக்கு அந்த பொண்ணுகிட்ட என்னமோ கேக்கனும்னு தோ
னுச்சு.ஆனா வார்த்தை வரல ஒரு பெரிய அமைதி சுத்தி அங்கங்க பாக்கிற மாதிரி காட்டிக்கிட்டாலும் கடைசியில கண்ணு அந்த பொண்ணு பக்கமே போச்சு. இப்ப இராத்திரி பதினோரு முப்பது மணிக்கு மேல ஆயிருக்கும்.இந்நேரம் ஒரு பொண்ணு தனியா வர்றது சென்னையில சாதாரண விஷயம்னாலும் இப்படி  அழுதுட்டே வர்றது  பார்க்கிறதுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு.என்ன பிரச்சனையா இருக்கும் நான் மனசில நெனைச்சுது  புரிஞ்ச மாதிரி பேசுறாரு ஸ்டீபன் "எதாவது லவ் மேட்டரா தான் இருக்கனும்  அவ ஆளு தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேனு சொல்லியிருந்துருப்பான். இப்ப கையும்களவுமா மாட்டிக்கிட்டிருப்பான்.அதுதான் பிரச்சனையா இருக்கும்" அப்படினு சொல்லி முடிக்கிறாரு  ப்ப அந்த பொண்ணு செல்போன்ல மறுபடியும் ரிங் அடிக்குது...

        ஒரு நிமிஷம் போ
ன் டிஸ்ப்ளேய பார்த்து யோசிக்கிற அந்த பொண்ணு அட்டென்ட் பண்ணுது "ஹலோ எனக்கு கால் பண்ணாதேன்னு சொன்னேன்ல  இப்ப எதுக்கு திரும்பவும் கால் பண்ற அவ்வளோதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. நாளைக்கு பேப்பர்ல நா செத்து போயிட்டேன்னு போட்டோவோட நியுஸ் வரும் த பார்த்து தெரிஞ்சிக்கோ" கத்திட்டு போன்  கட் பண்ணிட்டா....

        எனக்கு ஒரு நிமிஷம்  தூக்கி வாரி போட்டிருச்சு, ஏதோ விபரீதம் நடக்க போகுதோன்னு மனசு படபடனு அடிச்சு
து.....

                "ஹேய் நாளைக்கு பாரு,அவ ஆளுக்கிட்ட பேசிருவா ப்ரீத்தாவும் அடிக்கடி இப்படித்தான் சாக
ப்போறேனு சொல்லிக்கிட்டேயிருப்பா,என அவரது முன்னால் காதலியை பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லி முடித்தார் ஸ்டீபன். அவர் காதலிக்கிறத பார்த்துதான் நானெல்லாம் கல்யாணம்னா அது காதலிச்சு தான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன்.ஆனா இப்ப அவர்  காதல் முறிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆகிபோச்சு. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கு.ஆனா இவரு இன்னும் "போனால் போகட்டும் போடா பாட்டுல ஆரம்பிச்சு லேட்டஸ்ட் போ நீ போ வரைக்கும் அத்தனை காதல் பிரிவு பாடல்களையும் போட்டு போட்டு கேட்டுட்டே இருப்பார்.அவர் செட் பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணியும் இவர் இன்னும் கல்யாணமே பண்ணாம இருக்கிறாரு.அவர் அனுபவத்தில சொன்ன விஷயம் சரியா தான் இருக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்தாலும் அந்த பொண்ணு முகத்த பார்க்கும் போது  மனசுகுள்ள லேசா கஷ்டமாவும்,பயமாவும் இருந்துச்சு...

        
திடீர்னு அந்த பொண்ணு டிரைவர் பக்கம் திரும்பி "அண்ணா சீக்கிரம் வண்டிய நிப்பாட்டுங்க நா இறங்கிக்கிறேன்". அப்படின்னு சொல்லி அவசரமா ஒரு இடத்தில இறங்குனா, எனக்கென்னமோ அவ  இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு  இறங்கிருக்குமோனு  ஒரு சந்தேகம். ஆட்டோ கிளம்புது. நான் திரும்பி அந்த  பொண்ணையே  பார்த்துட்டிருந்தேன்.அவ  ரோட்டில எங்க போகனு தெரியாம அப்படியே நிக்குறா மணி பண்ணிரெண்டு கிட்ட நெருங்கிட்டிருக்கு.அந்த ரோட்டில ஆள் நடமாட்டம் ரொம்ப கம்மியா தான் இருந்தது. என் கண்ணவிட்டு அந்த  பொண்ணு மறையுற வரை நா பார்த்துக்கிட்டே இருந்தேன்...அப்படியே அசதியில கண்ணசந்து தூங்கிட்டேன்.

          சில நிமிடங்கள் கடந்தது......


         ஒரு கை என் முதுகுல தட்டுது,முழிச்சு பார்த்தா சுத்தியும் "பாம் பாம்"னு பயங்கர சத்ததோட நெறைய வாகனங்கள் போகுது ஒரே புகைவாசனை கோயம்பேடு வாசலில இறங்குறோம். 
நாங்க இறங்கினதும் , "சாப்பிட வாரியாடான்னு கேட்டாரு" ஸ்டீபன் "பசியில்லண்ணா, நீங்க சாப்பிடுங்க நா கிளம்புறேன்" என்று அவருக்கு பை சொல்லிட்டு நான் அங்க இருந்து நகர்ந்து வெளியூர் பஸ் நிற்குற பகுதிக்கு வந்தேன். அந்த பொண்ணோட அழுகை சத்தம் மட்டும் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்தது  .

           நா ஆந்தி
ரா ரூட்டில தமிழ்நாடு எல்லையில  உள்ள ஒரு  கிராமத்தில நடக்க இருக்கிற கல்யாணத்துக்கு போகணும்.அன்னைக்கு  சாயங்காலம்  கல்யாண ரிசெப்சன் முடிஞ்சிருந்தது. மறுநாள் திங்கள் கிழமை காலையில  கல்யாணம். மாப்பிள்ளை  என் நண்பன் அவனுக்கு நா ரிசெப்சனுக்கு வராததுல கொஞ்சம் வருத்தம்தான்.எங்க ஊரில எல்லாம் கல்யானம்னா தாலி கட்டறப்பதான் போவாங்க  இங்கதான் முந்தினநாள்  ரிசெப்சன்லையே எல்லாரும் வந்துட்டு போயிடறாங்க.ஆனா நா தான் பிடிவாதமா முகூர்த்ததுக்கு தான் 
வருவேன்னு சொல்லி  அன்னைக்கு அவ்ளோ லேட்டா  தான் போனேன். காலைல ஆறு மணிலேயிருந்து ஏழு மணி வரைக்கும் முகூர்த்தம்  நா போவேண்டிய ஊருக்கு பஸ் ஒண்ணுமே இல்ல.கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு. எனக்கு அந்த பொண்ணு ஞாபகமாவே இருந்தது என்னவாயிருக்கும்,வீட்டுக்கு போயிருக்குமா தற்கொலை தாவது? ச்சீ ச்சீ அப்படியெல்லாம் எதுவும் இருக்காதுனு நானே என் மனச தேத்திக்கிட்டு ரொம்ப பஸ்சுக்கு அப்புறம் வந்த ஒரு திருப்பதி பஸ்ல ஏறினேன். பஸ் மெல்ல கிளம்புச்சு டிக்கெட் எடுத்துட்டு நின்னுக்கிட்டே போய்கிட்டிருந்தேன்.


     லேசா கண்ணக்கட்டுச்சு ,எல்லாம்  மறையுது, திடீர்னு  ஒரு போன் சார் ரஜினி வந்துட்டாரு அந்த மேனேஜர் என்னை கூப்பிட்டு சொன்னாரு, அம்மாவோட குரல் இட்லி ரெடியா இருக்குடா சாப்பிட்டுட்டு போ,ஹே பார்த்து போ இடிச்சுற போகுதுடா,சொல்லி முடிப்பதற்குள் எதிரே உள்ள மரத்தின் மீது தூக்கி வீசப்பட்டு அலறுறேன்,சம்பந்த சம்பந்தமில்லமா என்னலாமோ காட்சிகள் தோணுது. என் முன்னாடி அந்த பொண்ணு நிக்கிறா.ஒரு பயங்கர சத்ததோட திடுக்கிட்டு முழிச்சா பஸ்ல என்னை தவிர எல்லாரும் நல்லா தூங்கிட்டிருக்காங்க, நம்ம நினைவு பதிவுகள் தான் கனவுகள்னாலும், நம்ம ஒவ்வொரு கனவுகளையும்  சரியா கோர்வையாக்கினா ஒரு திரைப்படத்துக்கு அருமையான திரைக்கதை பண்ணிரலாம்பா, நல்லவேளை என் சத்தத்தில யாரும் தூக்கம் கலைஞ்சு முழிக்கல,அப்புறம் எனக்கு தூக்கமே வரல அரைமணிநேரம் அப்படியே போச்சு நா இறங்க வேண்டிய ஸ்டாப்பும்  வந்துடுச்சு.இறங்கி மண்டபத்த நோக்கி கொஞ்சதூரம் நடந்துருப்பேன்.


    அப்ப அங்க நின்னுக்கிட்டிருந்த ஹைவே பேட்ரோல் வண்டி முன்னாடி காத்துகிட்டிருக்கிற  போலிஸ்காரங்க என்ன மறிச்சாங்க "சார் என்னவிஷயம் எங்க போறீங்க என்கிற வழக்கமான விசாரிப்புகள் தான்.நா என் ஆபிஸ் ஐ.டி  கார்டு காட்டி நண்பன் கல்யாணத்துக்கு வந்துருக்கேன்ங்கிறதா  புரிய வச்சுட்டு இருந்தேன்.அப்ப அந்த வண்டியில இருந்த ஓயர்லஸ்ல பீப் ஒலிக்கு பின்னாடி ஒரு குரல் "வடபழனி பக்கம் ஒரு பொண்ணு டெத் ஓவர்......  சூசைடு ஒரு செல்போன் மட்டும் இருக்கு ஓவர்..." என தகவல வர எனக்கு பதட்டம் அதிகமாகிறது. என்கிட்ட நிக்கிற போலிஸ்காரரிடம் அந்த பொண்ண பத்தி விளக்கம் கேட்கலாம் என நினைக்கும் போதே என் விவரங்களை சரிபார்த்த எஸ்.ஐ. "தம்பி நீங்க வெளியில ரொம்ப நேரம் நிக்காம மண்டபம் போய் சேருங்க என்று சொல்லிவிட்டு மற்ற போலீசாரோடு வண்டியை கிளப்பி சென்றார்.

      எனக்கு ஒண்ணுமே ஓடல,ஸ்டீபனுக்கு போன் அடிக்கிறேன் அவர் என் கால் அட்டென்ட் பண்ணல,ரொம்ப நேரம் அந்த தேசிய நெடுஞ்சாலையில் நின்று வானத்தையே வெறிச்சு  பார்த்துக்கிட்டிருந்தேன், "எல்லா 
காதலியும்   காதலனை ஏமாத்துறதில்ல, எல்லா  காதலனும் காதலிய ஏமாத்துறதில்ல அவர்களுக்குள்ள அப்பப்ப சில சண்டைகள் வந்து போகும்.ஆனா இப்படி சின்ன விஷயத்துக்கு போய் உயிரை விட்டுட்டுச்சே அந்த பொண்ணு, சென்னைதான் சொந்த ஊரா? இல்ல வேற எந்த ஊரோ? சென்னைக்கு படிக்க வந்துருப்பாளா? வேலைக்காக வந்தவளா? அவ அப்பா அம்மாக்கு இந்த தகவல் தெரிஞ்சா என்னாவங்க? எனக்கு ஒரே குழப்பம், காதலில் நேர்மை எவ்வளவு முக்கியம்.அந்த பையனின் நேர்மையின்மை தான்  இந்த பொண்ணோட உயிரை பறிச்சுடுச்சு" எவ்வளவோ கேள்விகள், விமர்சனங்கள் என்னை துளைத்தெடுக்க மௌனமாக நடந்தே கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தேன்.சிலமணி நேரங்கள் ஓடிபோச்சு.

       மணி அதிகாலை மூன்று மணிக்கு மேல இருக்கும் கண்ணை மூடினா அந்த பொண்ணோட முகம் தான் 
ன்  நினைவுக்கு வந்து." ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களின் தற்கொலை பாறைகளில், குளங்களில்,கிணறுகளில் ஆறுகளில் விழுந்து இறந்தவர்கள், மரங்களில் வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கியவர்கள், பாகற்காய் சாப்பிடவே கசப்பு என ஒதுக்கியவர்கள் எல்லாம்  எலி மருந்தையும் இன்னும் பிற வஸ்துக்களையும் உண்டு உயிர்விட்டவர்கள்,தீக்குளித்து  இறந்தவர்கள் என் பக்கத்து வீட்டில்,அடுத்து தெருவில்,ஊரில் இன்னும் எங்கெங்கோ நடந்த விபரீதங்களை பலதடவை கேள்விப்படும்போது, எங்கோ பேப்பரில் இதுபோன்ற இறப்பு செய்திகளை அடிக்கடி படிக்கும்போதெல்லாம் மிக சாதரனமாய் அதை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் அன்னைக்கு என்னால ஏனோ முடியல.

        மறுநாள் காலை விடிந்தது நல்லபடியாக திருமணம் முடிந்து நான்  ஊருக்கு கிளம்ப தயாரானேன்.பஸ் ஏறி கோயம்பேடு வந்து சேர்ந்தேன். சாப்பாடு இறங்கவே இல்ல தண்ணீர் மட்டும் இரண்டு மூன்று அதற்கும் மேல் பாட்டில் பாட்டிலாக வாங்கி குடித்து காலி செய்து கொண்டேயிருந்தேன். அன்று காலை செய்
தித்தாள் நான்கைந்தை வாங்கி படித்தேன். எல்லாவற்றிலும் அந்த பெண்ணின் தற்கொலை செய்தி பெரியதாய் வந்திருந்தது.பாலத்தில் இருந்து குதித்து இறந்திருந்தது என்றும் மூளை சட்டினி ரத்த வெள்ளம் என வார்த்தைகளில் விளையாண்டிருந்தார்கள். புகைப்படத்தில் முகம் சரியாக தெரியவில்லை.அந்த பெண்ணின் செல்போனில் சிம்கார்ட் எதுவும் இல்லாததால் உறவுகளுக்கு தகவல் சொல்லமுடியவில்லை. என்ற செய்தி என் இதயத்தை மேலும் கணமாக்கியது....

       நான்குமணிநேரம் பேருந்து நிலையத்திலேயே கழித்தேன், எங்கேயும் செல்லவில்லை, எனக்கு வந்த எந்த செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. ஸ்டீபன்,ஆபிஸ் கால், அவளிடமிருந்து மட்டும் இருபது மிஸ்
டு கால்கள். மாலை ஐந்து மணி சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் இரு பஸ்கள்  என் முன். அன்று வார நாள் என்பதால் கூட்டம் குறைவு தான், அதான் இரண்டு பேருந்து கண்டக்டர்களும் கூவி  கூவி அனைவரையும் அழைத்து கொண்டிருந்தார்கள்.நான் முதலில் டிக்கெட் வாங்கி பஸ்சில் ஏறி உட்கார்ந்தேன்.வலது பக்கம் இரண்டாவது ஜன்னல் ஓர சீட். பஸ்ஸின் உள்ளே இருந்த வெறுமையை பார்க்க பிடிக்காமல் நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியில் வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.சில நிமிடங்களில் ஒரு பத்து பதினைந்து ஆட்களோடு அந்த அரசு பஸ் அதன் பயணத்தை தொடங்கியது,

       கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அந்த பஸ் ஒரு டிரா
பிக் சிக்னலில் நின்து.அப்ப நா பார்த்த காட்சி எனக்கு ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துச்சு சிரிப்பு,அழுகை  தெல்லாம் கடந்து ஒரு மாதிரியான மனநிலை, நா பார்த்தது அந்த பொண்ண... 

photo

         எனக்கு நல்லா தெரியுது அது அந்த பொண்ணு தான்,ஒரு பையன் கூட பைக்ல பின்னாடி உட்கார்ந்து சிக்னல்ல ரோ கிராஸ் பண்றதுக்காக காத்துக்கிட்டிருந்தா.நேத்து ஏன் முன்னாடி ஷேர் ஆட்டோவில போன்ல அழுது சண்டை போட்டு திடீர்னு இறங்கி போச்சே, நிச்சயமா அதே பொண்ணு தான் இப்ப உயிரோட என் கண் முன்னாடி, அதுவும் பைக்ல ஒரு பையன்  பின்னாடி சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே உட்கார்ந்திருக்குறா.அப்ப   அன்னைக்கு காலைல பேப்பர்ல இறந்து போனதா செய்தி போட்டிருந்ததே  அது இவ இல்லையா? அப்டின்னா அந்த பொண்ணு யாரு?அவளுக்கு  என்ன பிரச்ச்னை? அ  ஏன் தற்கொலை பண்ணிகிட்டா? இப்ப  என் கண் முன்னாடி நிக்கிற பொண்ணு கூட இருக்கிறது யாரு? நேத்து சண்டை போட்ட லவ்வரா? இல்ல இது  வேற பையனா? கேள்விகள் அடுக்கடுக்காக வந்துகிட்டே இருந்துது எனக்கு, அதுக்குள்ள என் பஸ் அந்த இடத்த விட்டு நகர அந்த ஜோடி வேகமாக வேறு பக்கம்  சாலையில் திரும்ப என் கண்ணை விட்டு   மறைந்தார்கள்.


      அந்த பொண்ணோட பெயர் கூட தெரியாது ஆனா அவளோட உருவம் மட்டும் என் மனசில ஆழமா பதிஞ்சுருந்தது.எனக்கு  ப்பதான் நிம்மதியா  இருந்தது.ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு உணர்வு சொல்லமுடியாத சந்தோஷம். கடவுளே நன்றி,அப்டி இப்படின்னு ஒவ்வொன்னா யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது மனசுக்குள்ள எங்கேயோ எப்பயோ படிச்ச ஒரு வாசகம் மட்டும் திரும்ப திரும்ப வந்து போனது "தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ஏன் வாழ்ந்துபார்க்க கூடாது"...
         
இப்படிக்கு 
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் ஏப்ரல்-15 -2012...  

Thursday, March 22, 2012

"மூவாயிரம்மம்ம்ம்ம்"

             டங்........ டங்.......... டங்னு ...........பெரிய சத்தத்தோடு அந்த மூட்டை பச்சை பெயின்ட் அடிச்ச வீட்டு மாடியில இருந்து  ஒவ்வொரு படியா உருண்டு வர வர அந்த காம்பௌண்ட்ல இருக்கிற  ஓவ்வொரு வீட்ல இருந்தும் ஆட்களும் வெளியில வர்றாங்க.....

           "ஏண்டி மதி இவ்ளோ பெரிய பிள்ளையா வளந்துருக்க ஒரு பொருள பார்த்து கொண்டு வரமாட்ட என்ன இருக்கு இந்த சாக்கில" சொல்லிக்கிட்டே மூட்டைய பிரிக்க போறாங்க குச்சி வீட்டு வள்ளி ஆச்சி..

            மாடியில இருந்து குடுகுடுன்னு இறங்கி வர்ற மதி அந்த மூட்டைய மெதுவா கையில எடுத்துட்டு அந்த இடத்த விட்டு நகர பார்க்கிறா, விட்டுருவாங்களா நம்ம ஆட்கள் மாறி மாறி ஒவ்வொருத்தர்க்கிட்ட இருந்தும் ஒரு கேள்வி ஆனா  எல்லா கேள்வி அர்த்தமும் அந்த மூட்டைகுள்ள என்ன இருக்கு? அத எங்க கொண்டு போற? அப்படின்னு தான் முடிஞ்சுது.

             மதி எல்லாரையும் ஒரு முறை பார்த்துட்டு நாலு மணிநேரத்துக்கு முன்னாடி யோசிச்சு வச்ச அதே பதில வரி மாறாம ஆரம்பிக்கிறா 
"குத்துபோனியில  ஓட்டை அதான் பழைய கடையில போட்டுட்டு  வேற பொருள் எடுக்க போறேன்னு" சொல்லிட்டு யார்  பதிலையும்  எதிர்பார்க்காம அந்த இடத்த விட்டு கிளம்பிட்டா...

            இந்த மாதிரி காம்பவுண்ட் வீடுகள்ல எந்த வீட்டுக்கும் தெரியாம யாரும் ஒரு குண்டுஊசிய கூட வீட்டுக்குள்ளையோ இல்ல வீட்டில இருந்து வெளியையோ எடுத்துட்டு போக முடியாது. இவ்ளோ பெரிய  குத்துபோனிய    லேசில கொண்டு போயிர முடியுமா?ஆனா மதி சமாளிச்சுட்டா..எல்லாரும் அவளையே பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சும் வேகமா வெளியில வந்து அங்க ஏற்கனவே பின் வாசல் வழியா வண்டியில வந்து காத்துக்கிட்டிருந்த அவங்க அண்ணன் கூட ஏறி கிளம்பிட்டா.....


           மதி வீட்டில் நான்கு மணி நேரத்திற்கு முன்பு ....


         "சே  எரிச்சலா வருது எப்ப பார்த்தாலும் பணம் பணம்னு ஒன்னும் வாங்க முடியல, ஏன் தான் நம்ம வீட்டில மட்டும் இப்படி கஷ்டமாகுதோ அம்மா கையில் அம்பது ரூபா தான் இருக்கு இன்னிக்கு தேதி 21 தான் இன்னும் 10   நாள் கிடக்கு இந்த மாசம் முடிய" புலம்பிகிட்டே அடுப்பங்கரையில இருந்து தோசைய கொண்டு  வந்து அவங்க அண்ணன் தட்டுல போடுறா"...மதி 

        பாதியில் அவ பேச்ச மறிக்கிற அவ அம்மா "ஏட்டி அவன் என்ன செய்வான் யார்கிட்ட போய் காசு கேப்பான் அவனும் மாசம் மாசம் வீட்டுக்கு ஒழுங்கா காசு குடுக்கத்தான செய்யுறான். நமக்கு மட்டும் எப்புடி தான் காசு காலியாகுதோ தெரியில, ரெட்டியார் அம்மாகிட்டயும் கேட்டுட்டேன் இல்லேன்னுட்டாங்க நா என்ன செய்ய கவலபடாத நம்ம அப்பா தெய்வமா இருந்து எதாவது வழி விடுவாவ " அந்த வாரியல எடுத்து போடு நா புற வாசல தூத்துட்டு வரேன்னு சொல்றாங்க"

      வாரியல எடுக்க பரண்ல கைய விடுற மதிக்கு லேசா தட்டுப்படுது அந்த குத்துபோனி சந்தோசம் தாங்கல வாரியல விட்டுட்டு போனியோட பட்டாளைக்கு வாரா "யம்மா இது பித்தள தான எதுக்கு இத சும்மா போட்டு வச்சுருக்க எடைக்கு போட்டுருவோமா அப்படிங்கறா"

      " யேப்பிள்ள அது எனக்கு சீதனமா வந்ததுடி உன் கல்யாணத்துக்கு பாத்திரம் வாங்குறப்ப அத வித்து வாங்கனுமுன்னு நெனைச்சு போட்டு  வச்சுருந்தேன் சரி உனக்கு வேணுமுனா அத போட்டுட்டு வந்துரு ஆனா அந்த கண்ணா கடைக்கு மட்டும் போகாத இத்துனியோண்டு கொலுசையே எடை ஏமாத்தி கம்மி காச குடுத்துபுட்டான்.வேற கடையில போய் குடுங்கிறாங்க" மதி அம்மா

      இதெல்லாம் தோசைய பிச்சு தின்னுக்கிட்டே வேடிக்கை பார்த்துகிட்டிருந்த மதி அண்ணன் முந்திக்கிட்டு சொல்றான் "யம்மா நீயும் மதியும் ஒரு ஆட்டோ பிடிச்சு போய் அத வித்துட்டு வந்துருங்க என்னலாம் போக சொல்லாதீங்க"

      அம்மா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கும்முனு நெனைக்காத மதி சந்தோசத்தில சொல்றா "யம்மா நா டவுனுக்கு அண்ணன் கூட போய் இத போட்டுறேன், நீ வந்து கஷ்டப்பட வேண்டாம். எப்படியும் மூவாயிரத்துக்கு  மே​ல கிடைக்கும்னு நெனைக்கிறேன்மா"

      அவ சொன்னதும் தான் தாமதம் மூணு  பேரும் அவங்க அவங்க தேவைகள சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...

      அம்மாக்கு கோவில்ல பூஜைக்கு குடுக்கணுமாம்.

      அவன் அண்ணனுக்கு "கையில ஐநூறு ரூபா குடுத்துருங்க போதும் வேற எதுவும் கேக்கமாட்டேனு" சொல்லிட்டான்...


       மதிக்கு செல்போன் ரீசார்ஜ்க்காரனுக்கு கொடுக்க வேண்டிய  கடன் அடைக்கணுமாம். 


      எல்லாம் ஓ.கே அந்த பித்தளகுத்துபோனிய வித்துரலாமுனு முடிவு பண்ணி தூசி தட்டி துடைச்சி வைக்கிறா மதி.

        ரொம்ப நேர யோசனைக்கு அப்புறமா வேற வழியில்லனு முடிவு பண்ணி  ஐநூறு ரூபாய்க்கும்  ஆசைப்பட்டு நானே கூட்டிட்டு  போறேன் கிளம்பு மதின்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டான் அவ அண்ணன்.

          அம்மா ஒரு பிரச்சனை இருக்கே மதியே சொல்றா, இந்த பக்கத்து வீட்டுக்காரிகளுக்கெல்லாம் தெரிஞ்சா அவமானம் மா யாரவது கேட்டா என்ன சொல்ல எப்படி சமாளிக்க இத பத்தியே  மூணு  மணி நேரம் ஐம்பத்தி ஒன்பது நிமிடங்கள் பிளான் பண்ணி அந்த பித்தள போனிய ஒரு சாக்குல போட்டு தான் எடுத்துட்டு வந்தா கை தவறி விழுந்து அது இப்புடி பார்க்காதவங்கள எல்லாம் வீட்டுக்கு வெளிய வர வச்சு கேள்வி கேக்க வச்சுடுச்சேனு ஒரு வருத்தம் இருந்தாலும் "எங்க வீட்டு பொருளு நாங்க என்ன பண்ணினா எவனுக்கு என்ன நா ஏன் பயப்படனும்னு"புலம்பிக்கிட்டே தெருவெல்லாம் இவ வண்டியில் கொண்டு போற மூட்டைய பார்த்து தெரிஞ்ச ஆளுக கேட்க்கிற பல கட்ட கேள்விகள சமாளிச்சு  அவ அண்ணன் கூட டவுனுக்கு பைக்கில போய்க்கிட்டிருக்கா...

           ரோட்ல வேடிக்கை பார்த்துட்டே போறா இவங்க ரெண்டு  பேரையும் ஊரே வேடிக்கை  பார்த்துட்டு போகுது.. "ஆட்டோவில போனா மூண்ணூறு ரூபா பாரு உன்ன கூட்டிட்டு வந்து மிச்சப்படுத்திட்டேன் என் ஐடியா எப்புடினு" மதி சொல்லிக்கிட்டிருக்கும் போதே கடை வந்துருச்சு டவுன்ல அந்த தெரு முழுக்க பாத்திரக்கடைதான் ஒரே பேர்ல நாலைஞ்சு கடை கூட இருக்கும்.

           இறங்கி பைக்க ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு எந்த கடைக்குள்ள போகலாமுன்னு யோசிச்சு முடிவு எடுத்து ஒரு கடைக்குள்ள போறாங்க மதியும் அவ அண்ணனும் "வாசல்லையே வாங்க வாங்கனு சொல்ற கடையாளு, இவங்க  கையில இருந்து மூட்டைய வாங்கி எடைமிஷின்ல வச்சு எடைய  பார்த்துட்டாரு..

           மதி அண்ணன் லேசா பேச்சு கொடுக்கிறான் "நல்ல குத்துபோனி ஒரு ஓட்டை கிடையாது சார் வீடு காலி பண்றோம் பழைய பொருளு சும்மா இடத்த அடைக்குது இத மாதிரி நம்ம வீட்டில ரெண்டு மூணு கிடக்கு அதான் எடைக்கு போட்டுறலாமுன்னு வந்தோம்ங்கிறான்."

          "நாலரை கிலோ இருக்கு பா வேற பொருள் எதாவது வாங்குறீங்களா இல்ல காச வாங்கிட்டு போறீங்களானு கடையாளு அவன் மனச படிச்ச மாதிரி கேக்குறாரு" பொருள எடைக்கு போட்டுட்டா வேற பொருள்  தான் தருவாங்க காசெல்லாம் தரமாட்டங்க,அதான் வழக்கம் எப்புடி சொல்லி விற்க போறோமுன்னு குழம்பி நின்ன மதிக்கும் அவங்க அண்ணனுக்கும் கொஞ்சம் சந்தோசம் தான்..


       அதுக்குள்ள அங்க கல்லாவில உட்கர்ந்துக்கிற  ஆளு ஏதோ கணக்கெல்லாம் போட்டு "ஒரு கிலோ 290 க்கு போகுது மொத்தம் 1150 ரூபா வருது பா நம்ம கடையில தான் அதிகமா கொடுக்கிறோம் தம்பி எடுத்துக்கலாமா?" அப்படிங்கறாரு...

         ஒரு நிமிஷம் சார்னு சொல்லிட்டு வெளியில வந்து நின்னு பேசுற மதியும் அவ அண்ணனும் அவங்க அம்மாக்கு போன் பண்ணி இவ்ளோ விலை தான் போகுதுமானு சொல்லிட்டு ஏதோ முடிவெடுத்துட்டு கடைக்குள்ள வர்றாங்க, "சார் அப்புறமா வர்றோம்னு "அந்த குத்துபோனிய தூக்கிட்டு வெளியில வந்துட்டாங்க...

       அப்புறம் ஒரு மணி நேரமா அந்த ரத வீதி முழுக்க இருக்கிற எல்லா பாத்திர கடையிலையும் ஏறி இறங்கி சுத்தின பிறகு தான் ஒவ்வொரு கடையோட வியாபார தந்திரங்கள்,பேரங்கள் எல்லாம் புரிஞ்சி பொருள் வாங்காம  காச மட்டும் குடுக்காத கடையெல்லாம் தாண்டி ஆரம்பிச்ச கடைக்கே வந்து நிக்கிறாங்க...

       "நீங்க வருவீங்கன்னு தெரியும் தம்பின்னு சொல்லிக்கிட்டே அந்த கடையாளு அவங்க கையில இருந்த மூட்டைய வாங்கி அதுக்குள்ள இருக்கிற பித்தள போனிய எடுத்து அடுத்த விற்பனைக்கு பாலிஷ்  போட அனுப்பி வைக்கிறாரு. 
                                  
        தலைய குனிஞ்சிக்கிட்டே நிக்கிற மதிகிட்டையும் அவ அண்ணன்கிட்டையும்"அடிக்கடி வரணும் தம்பின்னு சொல்லிகூட ஐம்பது ரூபா வச்சுகோங்கனு குடுத்து வழி அனுப்புறாரு" அந்த பாத்திரக்கடை  கல்லாவில உட்கார்ந்திருக்கிற ஆளு...

         வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்த மதியும் அவ அண்ணனும் எதுவுமே பேசாமல் "அந்த ஆயிரத்தி இருநூறு ரூபாவ ஆச்சிரியமா பார்த்துகிட்டே பைக்கில ஏறி வீட்டுக்கு கிளம்புறாங்க...... "

இப்படிக்கு 
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் மார்ச்-21 -2012

Saturday, December 24, 2011

"தமிழ் சினிமா 2011"

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு கதை கவிதைகள தாண்டி என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற சில விசயங்கள பகிர்ந்துக்கலாம்னு நெனைக்கிறேன்.கடந்த வருடம் சென்னையில இருந்ததால முதல் முறையா சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சுது.அதுல பாடல்கள் இல்லாம சண்டைகள் இல்லாம பல்வேறு நாட்டோட பல மொழிகள்ல வந்திருந்த படங்கள சப் டைட்டில தாண்டி பல உணர்வுகள உள்வாங்கி பார்த்தது ஒரு புதிய அனுபவமா இருந்தது. அதை வார்த்தைகளால விவரிக்கிறது கடினம் சென்னையில வருடத்திற்கு ஒரு முறை வர்ற இந்த விழாவ தமிழகத்தில சினிமா ஆர்வலர்களா தங்கள நெனைக்கிற எல்லாருமே கண்டிப்பா கலந்துகிட்டு பார்க்கணும். நாலு ஸ்டார் படங்கள முதல் நாள் பார்த்தா ஆகுற செலவு தான் இங்க ஒன்பது நாட்கள் மொத்த படங்களையும் பார்க்குறதுக்கு ஆகுது. சில இந்திய மொழிப் படங்கள் திரையிடப்படும் போது அதில பணியாற்றின கலைஞர்கள்கிட்ட உரையாடி பல விஷ்யங்கள தெரிஞ்சிக்கிற வாய்ப்பும் கிடைக்குது.


ஆனா இந்த வருஷம் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்து வைக்கல, நா திருநெல்வேலியிலேயே என் வேலைய தொட்ரறதுனாலயும்,சென்னையில இருக்கிற பல நண்பர்களோடையே தொலைபேசி புண்ணியத்தல தான் உறவே தொடருதுங்கிறதாலயும். இந்த வருஷம் தமிழ் சினிமால எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் என்ன பாதிச்ச சில படங்கள் நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், எல்லாரையும் பத்தி கொஞ்சம் சுருக்கமா திரும்பி பார்க்கிற மாதிரி சில விசயங்கல பகிர்ந்துக்குறேன் படிச்சு உங்க கருத்துக்கள பகிர்ந்துக்கனுமுனு கட்டாயமா கேட்டுக்குறேன்.


சினிமா:-2011





நடிகர்கள்:-1

நிழல் கதநாயகர்களே நிஜ கதாநாயகர்களாக இன்னும் திரையில் தோன்றி கொண்டிருக்க முடியாது. மாஸ் ரசிகர்கள் குறைந்து கிளாஸ் ரசிகர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்கிற இன்றைய தமிழ் சூழலை தமிழ் சினிமா கதாநாயகர்கள் உணர தொடங்கிய வருடம் 2011 . உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமலின் படங்கள் இந்த வருடம் இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் மற்ற எல்லா முன்னணி நாயகர்களின் படங்கள் வெளிவந்து அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டன.அவர்களோடு போட்டிபோட நாளுக்குநாள் திறமையான புதுமுகங்களும் அறிமுகமாக தொடங்கியுள்ளத்தால் முன்னணி நாயகர்கள் கூட வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை தேடி நடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.



இது தமிழ் சினிமாவின் நல்ல மாற்றத்தின் தொடக்கம்.இந்த வருட சிறந்த நடிகர்களாக திரையில் வாழ்ந்தவர்களில் மனதில் நின்றவர்களில் சிலரை பத்தி இப்ப பார்க்கலாம்.முதலில் தனுஷ் இவருக்கு இந்த வருடம் அவரது திரைப்பட வாழக்கையில் முக்கியமான வருடம் மொத்தம் ஐந்து படங்கள் வெளிவந்தன அனைத்தும் அவரின் முத்திரை பதித்த படங்களாக வந்தன.முதல் படமான ஆடுகளமே அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று தனி இடம் பெற செய்தது.அடுத்து சேரன் இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த திரை பிரபலம் சென்ட்மென்ட் கதைகளை தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் மிஷ்கினின் யுத்தம் செய்,அவரது உதவியாளர் ராஜேஷ் மாதவ் இயக்கிய முரண் என்ற இரண்டு வித்தியாசமான படங்களில் கதை நாயகனாக தோன்றி மக்கள் மனதில் அழுத்தமான இடம் பிடித்த ஆண்டு இது.


அடுத்து விமல் பசங்க மூலம் அறிமுகமாகி இந்த வருடம் தூங்கா நகரம்,எத்தன்,வாகை சூட வா என்ற மூன்று படங்களின் இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் பட்டியலில் தன் இடத்தை தக்க வைத்து கொண்டார்.இந்த வருடம் பல திரைப்பட வாரிசுகள் மட்டுமல்லா மால் பல்வேறு புதிய நாயகர்கள் தமிழ் சினமாவில் அறிமுகமானாலும் நாய்கர்களுக்கான இலக்கணத்தை உடைத்து கதை தான் ரியல் ஹீரோ என உணர்த்திய அப்புக்குட்டி அழகர் சாமியின் குதிரை படம் மூலம் திறமைகளை மட்டுமே நம்பி இருக்கும் பல புதிய நடிகர்களுக்கான வாசலை திறந்துவிட்டார்.


அடுத்து தென்னிந்திய சினிமாவின் ஆல் டைம் பேவரைட்டான சூர்யா ஏழாம் அறிவில் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றி கலக்கினார். அடுத்து பாலாவின் அவன் இவன் மூலம் உலகிலேயே முதல்முறையாக மாறு கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.ஏற்கனவே வித்தியாசமான் கதாபாத்திரங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ள விக்ரமிற்கு தெய்வ திருமகள் படம் மேலும் ஒரு மணிமகுடம்.ஹீரோ என்றால் நேர்மறையான கதாபாத்திரங்கள் தான் அவர் நல்லது செய்ய வேண்டும் அநீதியை கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற லாஜிக்கை உடைத்தெறிந்து வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடித்து மங்கர்த்தா படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார். எந்த நடிகர் வந்தாலும் ரசிகர் மன்றம் தொடங்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டிய ஒரு சில நடிகர்களில் இவர்கள் இந்த வருடத்தின் முக்கியமானவர்கள்.


நடிகர்கள்:-2

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் பெர்பாமன்ஸ் மட்டும்மல்லாமல் வியாபார ரீதியாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறியிருக்கும் ஒரு சிலரை பற்றி இங்கே விரிவாய் பார்க்கலாம்.ஹீரோவிர்க்கான எந்த வித முக லட்சணங்களும் இல்லாதவர் என தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்ட இவர்.தற்பொழுது முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளார். இந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்களில் மூன்று பெரியளவில் பேசப்படவில்லை என்றாலும் ஆடுகளம் மயக்கம் என்ன என்ற இரு வெவேறு பரிமாணங்கள் நடிகர் தனுஷை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடமும் இந்திய அளவில் மிக பெரிய பெயரும் புகழும் பெற செய்திருக்கிறது.அடுத்து எந்த வித குடும்ப பின்னணியும் இல்லாமல் முறையான பயிற்சியோடு பல வருட போரட்டத்திற்கு பிறகு பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இந்த வருடம் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் நல்ல நடிகர் இயக்குனருக்கான நடிகர் என்கிற பெயரை வாங்கி தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் நடிகர் விமல்.அடுத்து விக்ரம், இயக்குனர் பாலா மூலம் மறுபிறவி கிடைத்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிப்போன விக்ரம் தன்னை மீண்டும் நிருபித்திருக்கும் வருடம் 2011. பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தெய்வ திருமகள் படம் மூலம் உடல் மொழியால் அதிகமாய் பேசி இந்த வருடத்தின் தேசிய விருது பட்டியலில் இவரும் இருப்பார் என ரசிகர்களை பேச வைத்து இருக்கிறார்.


கமெர்சியல் தான் தன் அடையாளம் என்பதை மாற்றி பரிச்சார்த்த முயற்சிகளுக்கு நான் தயார் என்று உடல் வருத்தி உலக நடிகர்கள் வரலாற்றில் முதல் முறையாக மாறுகண் உள்ள நபராகவும் பெண் தன்மை உள்ள ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்து.இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தன அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.அடுத்து அஜித் மாஸ் ஹீரோ பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இவருக்கு ரசிகர்கள் அதிகம் இந்த வருடம் வெளிவந்திருக்கும் மங்காத்தா திரைப்படத்தில் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்து நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.


இந்த நடிகர்களின் புதிய அவதாரங்களை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல சக திரைப்பட நடிகர்களும் அசந்து போய் அடுத்த வருடத்தில் இவர்கள் நடிப்பில் வெளிவரயிருக்கும் படங்களை மிக ஆர்வமாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பது நிதர்சனம்.

நடிகைகள்:-

தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்திருப்பது கதாநாயகர்கள்தான். நடிகைகளை பொறுத்தவரையில் குறுகிய காலம் தான் அதிலும் அவர்கள் நடிப்பதற்க்கான வாய்ப்புள்ள படங்கள் அமைவது என்பது மிக அரிதான நிகழ்வாக கடந்த சில காலங்களில் இருந்தது.டைட்டிலில் பெயர் போட்டதற்காக இரண்டு காதல் காட்சிகள் நான்கு டூயட் பாடல்கள் என்று மட்டுமே நடிகைகளை பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாவில் தற்பொழுது மீண்டும் நடிகைகளை மைய்யப்படுத்திய கதைகளையும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களும் வர தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் இந்த் 2011ஆம் வருடத்தில் மிக அதிகமான புதுமுக கதாநாயகிகள் அறிமுகமும் கடந்த வருடம் புதுமுகங்களாக இருந்த கதாநாயகிகளின் அடுத்தடுத்த படங்களும் திரைக்கு வந்தன.அவற்றில் திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் திரும்ப திரும்ப நினைத்து பார்க்கும் அளவுக்கு நடிப்பால் கதாபாத்திரத்தால் பேசப்பட்ட சில நடிகைகளை நினைவுபடுத்தலாம்னு நெனைக்கிறோம்.முதலில் கல்கி தமிழ் சினமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் என்ற பெயரை மட்டுமல்லாது நல்ல நடிகை என்கிற பெயரையும் தக்கவைத்து அவரது வாழ்வியல் சூழலை ஒட்டி நடக்கும் கதாபாத்திரம் என்பதை உணர்ந்து நடித்து தான் சார்ந்துள்ள திருநங்கை சமுதாயத்தின் அடையாளமாக மாறினார்.

அடுத்து நடிகை அனுஷ்கா கவர்ச்சியான ரோல்களில் மட்டுமே தமிழில் தலை காட்டி வந்த இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெற்றிகரமாக ஓடிய அருந்ததி படத்தின் மூலம் நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்று, ஏற்றுகொண்ட முக்கியமான நேரடி தமிழ் திரைப்படம் தெய்வதிருமகள். இதில் ஒரு கனமான கதாபாத்திரத்தை மிக அழகாகவும் இயல்பாகவும் செய்து அனைவரையும் கவர்ந்தார். அடுத்து அஞ்சலி அறிமுகமான கற்றது தமிழ் என்ற முதல் திரைப்படத்திலிருந்தே சிறிய வயதிலேயே ஆழமான பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியிருந்த அஞ்சலி இந்த ஆண்டு நடித்த அனைத்து படங்களுமே அவரை பற்றி அதிகமாக பேசவைத்த படங்கள். அதில் குறிப்பாக அவரது வயதுக்கு முதிர்ந்த தோற்றத்தில் நடித்திருந்த கருங்காலி மற்றும் மிக இயல்பான காதலியின் பிரதிபலிப்பை காட்டியிருந்த எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் நல்ல நடிகை என எல்லாராலும் பாராட்டப்பட்டு அவரது நடிப்பிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அடுத்து இனியா இந்த வருடம் அறிமுகம். தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோயின்களின் தாய்மாநிலமான கேரளத்து வரவானாலும் தமிழக முகசாயலில் எல்லோராலும் கவரப்பட்ட நடிகையாக கிராமத்து நடிப்பில் முத்திரை பதித்த வாகை சூட வா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சி பயணத்தை தொடங்கியுள்ளார்.



இந்த வருடம் முழுக்க ஆடி பாடி ஓய்ந்த அத்தனை நடிகைகளையும் தன் நடிப்பாலும் வசீகரமான முகத்தாலும் வருட கடைசியில் வெளிவந்த ஒஸ்தி, மயக்கம் என்ன என்ற இரண்டு படங்களின் மூலம் கிராமம் நகரம் என இரு வேறு கதாபாத்திரங்களில் அசத்தி 2012 ஆம் வருடத்தின் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகியாய் இடம் பெறப்போவது நிச்சயம் என்பதை உணர்த்தியிருக்கிறார் ரிச்சா கங்கபாத்தியாய் . இந்த முறை தமிழ் சினிமா கனவுக்கன்னிகளை மட்டுமல்ல தரமான நடிகைகளையும் தந்திருப்பது இந்த வருடத்தின் சிறப்பு.


நகைச்சுவை நடிகர்கள் :-

திரைப்படங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவை என்கிற விஷயம் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது அதிலும் கதையோடு இணைந்த கருத்துக்கு முக்கியத்துவம் நகைச்சுவைக்கு மக்களிடம் என்றுமே குறையாத வரவேற்பு உண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் இருவர் முன்னணியில் இருப்பார்கள்.அன்றைய கலைவானர் என்.எஸ்.கே.மதுரம் தம்பதியினரில் தொடங்கி நேற்றைய வடிவேலு விவேக் வரைக்கான ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்கு எல்லா திரைப்படங்களிலும் ஆட்சி செய்வார்கள்.



அந்த வரிசையில் அடுத்தகட்டம் இது இந்த வருடம் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக்கின் படங்கள் அதிகமாக வெளிவரவில்லை வந்த ஒரு சில படங்களும் ஒரே மாதிரியானதாகவும், நாடகத்தனமானதாகவும் இருந்ததால் மக்களிடம் பெரிதும் எடுபடவில்லை.அவர்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்த வருடம் மற்ற நகைச்சுவை நடிகர்கள் கைப்பற்றி அவர்களுக்குரியாதாக மாற்றியிருக்கிறார்கள்.அந்த வரிசையில் முதலில் அதிகமான தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் எல்லா வீட்டினருக்கும் செல்லபிள்ளையாக மாறிப்போன சந்தானம்.தொடக்கத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக பேசும் நடிகராக பார்க்கப்பட்ட இவர் இன்று தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பதற்கு காரணம் இவரின் இயல்பான நடிப்பும் எளிமையான அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசனங்களும் மிக முக்கிய காரணம் குறிப்பாக சிறுத்தை,வானம் தெய்வதிருமகள் ஆகிய படங்களில் இவர் செய்த பங்களிப்பு இவரை நகைச்சுவை நடிகராக மட்டும் ஒதுக்கி விடாமல் படம் முழுவதும் வரும் செகன்ட் ஹீரோ அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.


அடுத்து வெண்ணிலா கபடி குழு ஐம்பது பரோட்டா சூரி என்று சொல்லும் அளவிற்கு ஒரே படத்தில் நகைச்சுவையின் உச்சம் தொட்ட இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை,போராளி போன்ற திரைப்படங்கள் இவருக்கான தனி அந்தஸ்தை 2011 -ல் பெற்று தந்துள்ளது. ஏற்கனவே நகைச்சுவையில் தனி பாணியில் கலக்கி கொண்டிருந்த கஞ்சா கருப்புக்கு இந்த ஆண்டு நகைச்சுவை நடிப்பில் ஒரு ஏற்றத்தை ஏற்படுத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.மொத்தத்தில் நகைச்சுவை என்கிற தனி டிராக்களாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் ஆரோக்கியமான நகைச்சுவை மாற்றத்தை தமிழ் சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறது இந்த 2011 ஆண்டு.


பாடலாசிரியர்கள்:-

கவிதைகள் இலக்கியமாக ஒதுங்கியிருந்த இரண்டு நூற்றாண்டுக்கு முன் இருந்த காலம் மாறி கடந்த நூற்றாண்டில் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி இன்று புதிதாய் பரிணமித்திருக்கிற எல்லா கவிஞர்கள் வரை அவை பாடல்களாக, இசை கோர்வைகளாக, குறுவட்டுகளாக இணையத்தில் என பல்வேறு பரிமாணங்களில் உலவி கொண்டிருந்தாலும் அவை திரைப்பட பாடல் என்ற பலகைக்குள் வரும் பொழுது அவை தனி அடையாளமாகி பட்டொளி வீச தொடங்கி விடுகிறது.அதிலும் தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் படங்கள் வருவது இல்லை என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடல்களில் புரியாத வார்த்தைகள் ஒரு பக்கம் தெறித்து கொண்டிருந்தாலும் அர்த்தமுள்ள வித்தியாசமான பாடல் வரிகளால் மக்கள் மனதில் சந்தோஷ முடிச்சு போட்டிருக்கிறது 2011 -ஆண்டின் தமிழ் சினிமா பாடலாசிரியர்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் இது.


முதலில் கவிஞர் தாமரை பாடல் எழுத தொடங்கிய முதல் படம் முதல் வேற்று மொழி கலக்காமல் ஆபாசமான வரிகள் இல்லாமல் தான் பாடல் எழுதுவேன் என்கிற உறுதி குறையாமல் பாடல்களை எழுதி வரும் இவர் இந்த வருடம் எங்கேயும் காதல் திரைப்படத்தின் எங்கேயும் காதல் பாடல் தொடங்கி எழுதிய சில பாடல்களையும் வருடம் முழுக்க உச்சரிக்கும் பாடல்களாக மாற்றியுள்ளார்.அடுத்து வாலிபம் குறையாத வாலி மூண்றாம் தலைமுறையினரும் கொண்டாடும் இவரது பாடல்களில் இந்த வருடம் புதுப் புனல், கலசலா ,மச்சி ஓபன் தி பாட்டில் ,நங்கை போன்ற இளைஞர் களின் வாயில் எப்போதும் முனுமுனுக்க செய்யும் படல்களை தந்திருக்கிறார்.


அடுத்து நா.முத்துகுமார்.இவரது திரைப்படப்பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெரும் நபர்கள் அதிகரித்து வந்தாலும் இவர் அலட்டிக்கொள்ளாமல் கடந்த வருடங்களின் தொடர்ச்சியாக இந்த வருடத்திலும் அதிக பாடல்களை மட்டுமல்லாமல் அழகான ஹிட் பாடல்களையும் தந்து தவிர்க்க முடியாத பாடலாசிரியராக மீண்டும் இடம்பிடித்தார். அடுத்து வைரமுத்து இந்த வருடம் தன் மகனோடு களம் இறங்கியுள்ளார். இருவரும் போட்டி போட்டு கொண்டு ஹிட் படல்களை கொடுத்த வருடம் குறிப்பாக வாகை சூடவா வில் சரசர சார காற்று தொடங்கி பல தனி அடையாள பாடல்களை தந்திருக்கிறார்.


அதேபோல் அவரது மகன் மதன் கார்க்கியும் நுட்பமான வரிகளால் அறிவியல் ரீதியான பல்வேறு வார்த்தைகளை தமிழ் பாடலகளில் உலவவிட்டு பாடல்களை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார் குறிப்பாக ஏழாம் அறிவு படத்தில் இவர் எழுதிய சீன பாடலை சொல்லலாம்,கோ திரைப்படத்தில் இவரின் என்னமோ ஏதோ இந்த வருடத்தில் அதிகமாக இணையத்தில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் இவரை மூத்த இளம் இசையமைப்பாளர்கள் வரை அனைவராலும் தேடபடுப்பவர்களில் ஒருவராகவும் மாற்றியிருக்கிறது.



அடுத்து இந்த வருடம் புதிய பாடலாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் நடிகர் தனுஷ் இளைஞர்களின் நாடித்துடிப்பை இவர் சரியாக புரிந்து கொண்டு இவர் சாதரணமான வார்த்தைகளால் பேச்சு வழக்கை பாடல்களாக மாற்றி எழுதிய பாடல்கள் இந்த வருடத்தின் மோஸ்ட் வாண்டட் சாங்க்ஸ் என்றால் அது மிகையாகாது.இந்த வருடம் படங்களில் கதைக்கு இடைஞ்சல் இல்லாமல் அதே வேளையில் அவசியமான இடங்களில் பாடல்களை இடம்பெற செய்து நல்ல பாடல்களுக்கான முக்கியத்துவத்தையும் நல்ல பாடலாசிரியர்களுக்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது தமிழ்சினிமாவின் 2011 ஸ்பெஷல்.


இசையமைப்பாளர்கள்:-1

இசையும் இயலும் நாடகமும் ஒருங்கிணைந்து ஒளிப்படமாகிய வரலாறு தான் சினிமா.காட்சிகளில் வசனங்கள் பூர்த்தி செய்யாத பல இடங்களை இசையால் முழுமை பெற செய்யும் வலிமை இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே உண்டு. உலக சினிமாவில் பின்னணி இசை மட்டுமே ஆட்சி செய்கிறது இந்திய சினிமாவில் பின்னணியும் பாடல்களும் தான் படத்தின் ஊக்கமாக இருக்கின்றன. படம் வெளிவருவதற்கு முன்னேரே இசை வெளியிட்டிற்கு பெரிய வரவேற்ப்பை கொடுப்பது இந்திய சினிமாவில் தமிழ் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது.


எம்.எஸ்.வி. இளையராஜா ஆண்ட தமிழ் சினிமா இசையை இந்த வருடம் பத்துக்கும் மேற்பட்ட புது இசையைமைப்பளர்கள் பழைய இசையமைப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டு 2011 ஆம் ஆண்டை ஒரு மியுசிக்கல் ஆண்டாக மாற்றியுள்ளனர்.இந்த வருடத்தின் புதிய வரவுகளான எங்கேயும் எப்போதும் -சத்யா,யுத்தம் செய் -கே.,வாகை சூடவா ஜிப்ரான்,கண்டேன் -விஜய் எபினேசர்,முரண்- சாஜன் மாதவ், ரவுத்திரம்- பிரகாஷ் நிக்கி,ஆகியோர்களால் இசை இன்னும் இளமையானதொடு மட்டுமல்லாமல் அந்த படங்களுக்கு பாடல்களால் தனி பெயரையும் வாங்கி தந்தது. அடுத்து இளையாராஜா இலக்கிய படைப்புகளான பொன்னர் சங்கர்,மற்றும் அழகர் சாமியின் குதிரை படங்களுக்கு த்ன் இசையால் உயிரும் மதிப்பும் குடுத்து தனி இடத்தில் நிற்கிறார்.


அடுத்து அவரது மகன் யுவன் சங்கர் ராஜா அப்பாவின் பெயரை இந்த வருடமும் அவர மெய்பிக்கும் வகையில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் மூலம் இந்த வருட இசை பயணத்தின் உற்சாக பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரியான மெட்டுகளையே இவர் எல்லா படங்களிலும் தருகிறார் என்கிற விமர்சனமிருந்தாலும் ரசிக்கும் படியான பால்களை தருவது இவரின் தனிச்சிறப்பு.அடுத்து ஜி.வி.பிரகாஷ் எ.ஆர்.ரகுமானின் மருமகன் என்கிற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல் அவரின் புகழுக்கு மேலும் புகழ சேர்க்கும் வகையில் இவர் இந்த் வருடத்தில் இசைஅமைத்த ஒவ்வொரு பாடல்களும் மெகா ஹிட்.


அடுத்து வித்யாசாகர் பெயரளவில் சில படங்களை இவர் இந்த வருடத்தில் செய்திருந்தாலும் அந்த படத்தின் பாடல்கள் கால ஓட்டத்தில் கரைந்து சென்று விட்டன என்றே சொல்லவேண்டும். அடுத்து காதலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். ரகுமானிடம் வேலை செய்துவிட்டு திரும்பி இந்த் வருடம் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்த வெப்பம் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் பேசப்பட்டவனாக இருந்தன.அடுத்து பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கில் கவனிக்க தக்க பாடல்களை கொடுத்து மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் தமன் . இன்று கடைசியாக விஜய் ஆண்டனி ஒரு பக்கம் நடிப்பை தொடர்ந்து இசையையும் கைவிடாமல் இவர் இந்த் வருடம் இசையமைத்த படங்கள் அனைத்தும் லோக்கல் குத்து மொத்தத்தில் இந்த வருட இசை ஜொலித்தது.


இசையமைப்பாளர்கள்:-2


இந்த வருடம் இசை மழை பொழிந்தாலும் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்த பாடல்களை தந்த இசையமைப்பளர்களை பற்றி கொஞ்சம் விரிவா பார்க்கலாமா? முதலில ஜிப்ரான் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வாகை சூட வா படத்தின் மூலம் தன் முதல் பட இசை வாய்ப்பை பெற்ற இவர் தன் பொறுப்பை உணர்ந்து சமகால வரலாற்று இசையை மிக அருமையாக தந்திருக்கிறார். அத்துணை பாடல்களும் ரசிக்கும் படியாக இருந்தது சிறப்பு,அடுத்து கண்டேன் படத்தின் அறிமுக இசையமைப்பாளர் விஜய் எபினேசர் படத்தின் காதல் பாடல்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் வெவ்வேறு விதமாக தந்து தனி இடம் பிடித்தார்.


அடுத்து எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சத்யா முதல் படம் என்பதை எந்த இடத்திலும் உணராத வகையில் பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் நம்மை படத்தோடு ஒன்ற வைத்து அந்த படம் மாபெரும் வெற்றியைடைய உறுதுணையாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று இருக்கும் மிக சிறிய வயது இசையமைப்பாளர்களில் குறிப்பிடும் படியான ஒருவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாடல் மற்றும் பின்னணி இசை அனுபவத்தின் மூலம் அந்த படத்தை தூக்கி பிடித்து செல்பவர் மற்றும் அந்த படத்தின் இன்னொரு ஹிரோ என்றே சொல்லவேண்டும்.இந்த வருடம் தெய்வ திருமகள் படத்தில் அவரது பாடல்களும் தீம் மியூசிக்கும் பெரும்பாலான தமிழ் ரசிகர்களில் ரிங்டோனாக இன்றளவும் நிலைத்திருப்பது அவர் இசையின் சிறப்பின் ஒரு சிறிய உதாரணம்.மேலும் ஆடுகளம்,மயக்கம் என்ன என அவர இசையமைத்த அத்துணை படங்களும் மாபெரும் மியுசிக்கல் ஹிட். அதற்கு வருடத்தில் அவரை பெரிய இயக்குனர்களோடு பணி செய்ய செய்துள்ளது.


அடுத்து யுவன் சங்கர் ராஜா இந்த வருடம் ஒன்றிரண்டு படங்கள் செய்திருந்தாலும் பேசப்பட்ட படம் என்றால் அது மங்காத்தா படத்தின் பாடல்கள் மட்டுமே.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இவரின் இசை ஆல்பங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது புரியாத வரிகளாக இருந்தாலும் திரும்ப திரும்ப பாட வைக்கும் இவரின் இசை அனுபவம் இந்த் வருடத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டிப்படைத்தது.என்றே சொல்ல வேண்டும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் இசை இன்றியமையாத ஒரு இடத்தை பிடித்து அடுத்த வருடத்தில் இன்னும் பல உயரத்தை தொட ஆயத்தமாக உள்ளது.


திரைப்படங்கள் 2011:-1


உலக அளவில் ஆண்டு தோறும் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படும் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த எண்ணிக்கையில் திரைப்படங்கள் வராத போதும் எதிர்பாராத படைபாக்கங்களால் தமிழ் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று .உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனதில் அதிகமாய் இடம் பிடித்த இந்த ஆண்டின் பத்து திரைப்படங்கள் பற்றி ஒரு அலசு அலசுவோமா....


முதலில் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து ஆறு தேசிய விருதுகளையும் அள்ளி சென்ற ஆடுகளம்.அடுத்து வழக்கமாக மென்மையான குடும்ப படங்களை தந்து வந்த இயக்குனர் ராதாமோகன் இந்த ஆண்டு பயணம் திரைப்படத்தின் மூலம் தனது விறுவிறுப்பான திரைப்பயனத்தை தொடங்கியிருக்கிறார் விமான கடத்தல் தான் படத்தின் கரு என்றாலும் தற்கால அரசியல் மற்றும் சமுக சூழலை மனதில் கொண்டு தனக்கே உரிய பாணியில் உணர்வுரீதியான ஒரு படைப்பை தந்திருக்கிறார். அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவமாக ஐந்து கதைகள் ஒரே இடத்தில் இணையும் திரைக்கதை பாணியில் இரண்டாண்டுக்கு முன் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற வேதம் படம் அதே இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் தமிழில் வானம்.



அடுத்து படம் வெளிவருவதற்கு முன்னரே உலக பட விழாக்களில் பங்கேற்று பரிசு பெற்ற திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்து திரையில் சில நாட்களும் விமர்சகர்கள் மத்தியில் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக பேசப்பட்டு வரும் இந்த படம் ஹிந்தியின் பிரபல நடிகர் ஜாக்கி சாரபின் முதல் தமிழ் படம் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லமால் முதல் படத்திலேயே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாகராஜன் குமாரரஜாவின் ஆரண்யகாண்டம். இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்க்கும் இருக்க வேண்டிய உறவை சமீபகாலமாக அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கும் இயக்குனர்களின் வரிசையில் ஒரு அழகான கிராமியம் சார்ந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அதன் வீரியம் குறையாமல் எந்த வித வியாபார சமரசங்களும் இல்லாமல் சிறந்த படைப்பாக அமைத்திருந்த சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை.


அடுத்து நர்த்தகி தமிழ் சினமாவில் அரிதாக பரிமளிக்கும் பெண் இயக்குனர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துகொண்ட இயக்குனர் விஜய பத்மா இந்த படத்தின் மூலம் எவரும் கையாள தயங்கும் ஒரு திருநங்கையின் கதையை முழுமையாக ஒரு திருநங்கையை வைத்தே தந்திருக்கிறார்.அடுத்து ஆங்கில திரைப்படத்தின் தழுவலாக பேசபட்டாலும் அது படமாக்கப்பட்ட அழகியலால் எல்லோரையும் கவர்ந்த விக்ரமின் தெய்வ திருமகள்,புதிய இயக்குனரானாலும் சரியான முறையில் கதை சொன்னால் குத்துப்பட்டு நாலு பைட்டு இல்லாமல் வெள்ளிவிழா கொண்டாட முடியும் என்று நிருபித்த முதல் முறையாக பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் பட நிறுவனம் தமிழில் தயாரித்து வெளியிட்ட எங்கேயும் எப்போதும்.


அடுத்து களவாணி மூலம் கடந்த வருடம் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சற்குணம் குழந்தை தொழிலாளர் பிரச்ச்னையை அடிப்படையாய் வைத்து இரண்டாவது படத்திலேயே 1960 களை நம் கண் முன் நிறுத்திய சமகால வரலாற்று படமாய் வடித்திருந்த வாகை சூட வா. செல்வராகவனின் வழக்கமான கூட்டணியோடு வித்தியாசமான கதை சூழலில் வெளிவந்து மனதை மயக்கிய மயக்கம் என்ன இது தான் இந்த 2011 ஆம் வருடத்தின் வணிகரீதியில் அல்லாமல் படைபாக்கத்தால் பேசப்பட்ட தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பத்து திரைப்படங்கள். ..


திரைப்படங்கள் 2011:-2




இந்த வருசத்தில் வெளிவந்து மறக்கமுடியாததா மாறின ஐந்து படங்கள் பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாம் .முதல்ல வர்றது ஆடுகளம் வெற்றிமாறன் துனுஷ் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையின் பின்னணியில் நம் மண்ணின் மனிதர்களிடம் புதைந்திருக்கும் பல்வேறு குணாதிசியங்களை இயல்பாய் பதிவு செய்து நம் கண் முன் உலவவிட்டுருக்கிறார் வெற்றிமாறன்.எல்லா கதாபாத்திரங்களும் மிகைப்படுத்துதலும் இல்லாமல் நேர்த்தியாய் செய்திருந்த்ததால் ஆறு தேசிய விருதுகளை அள்ளி தமிழ் சினிமா வரலாற்றில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படமாக அமைந்தது.


அடுத்து பொதுவா ஒரு நாவலையோ சிறுகதையையோ திரைபடமாக்குறதுங்கிறது இயக்குனருக்கு சவாலான வேலை.அந்த கதையின் இயல்பும் கெடாமல் அதேசமயம் திரை மொழியும் கச்சிதமாக படைக்கப்படுவது அரிதான ஒரு நிகழ்வு. அதை சாத்தியமாகி இலக்கியத்திற்க்கும் சினிமாவிற்குமான உறவுப்பாலத்தை அகலப்படுத்திய ஒரு படமாக அமைந்தது அழகர்சாமியின் குதிரை.அடுத்து தெய்வ திருமகள் ஐயம் சாம் என்கிற ஆங்கில திரைப்படத்தோட அப்பட்டமான காப்பின்னு சொல்லபட்டாலும் விக்ரமின் நேர்த்தியான நடிப்பாலும் நிரவ்ஷாவின் அழகான ஒளிப்பதிவாலும் கிறங்க வைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை மழையாலும் ஏ.எல்.விஜய்-ன்.சுவாரசியமான திரையாக்கத்தாலும் கவித்துவமான பதிவா வெளிவந்து வெற்றியும் பெற்றது இந்த படம்.


கதைய மட்டுமே நம்பி அத திறமையா சொல்ல முடிஞ்சா முன்னணி நடிகர்கள் யாரும் இல்லைனாலும் அசகாய வெற்றி பெறமுடியும்ங்கிற நம்பிக்கையோட புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் அழகான காதலோடும் ஆழமான கருத்தோடும் ஒரு விழிப்புணர்வு படமா வெளிவந்த எங்கேயும் எப்போதும் படம் இயக்குனர் சரவனனனுக்கு முதல் படம்னு சொன்னா யாராலையும் நம்பவே முடியாது.கடைசியா வருட கடைசியில் வெளிவந்தாலும் முன்னணியில் இருக்கிற மயக்கம் என்ன செல்வரகவனுக்கே உரிய பாணியில் தேசிய விருது பெற்ற தனுஷ் நடிப்புல வெளிவந்த படம் புதுப்பேட்டைக்கு அப்புறம் அண்ணன் தம்பி ரெண்டு பேர் கூட்டணியில வெளிவந்த இந்த படம் இயல்பான கதையாலும் தன்னை ஏமாற்றியவர்களை பழி வாங்க சிறந்த வழி ன்னு வாழ்ந்து காட்டுவது என்கிற மிக அருமையான கருத்தோடும் பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தனுஷ் செல்வராகவனின் புதுமையான பாடல் வரிகளாலும் இளைஞர்கள் மனதில் தனி இடம்பிடித்து வெற்றிகரமா ஓடிகொண்டிருக்கும் இந்தபடம் ஒரு நம்பிக்கை டானிக்.எத்தனையோ படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவந்தாலும் தமிழ் சினிமாவின் 2011 அடையாளாமாக இருக்கும் இந்த படங்கள் தான் உலக சினிமா ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் 2012 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் திரைப்படங்களின் மீதான ஆர்வத்த அதிகரிக்க செய்திருக்குனு சொன்னா அது மிகையாகாது.



இயக்குனர்கள்:-1

நாயகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா இயக்குனர்களின் கைகளில் மீண்டும் முழுவதும் மீண்டு வந்திருக்கிறது. இந்த 2011ம் ஆண்டில். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இயக்குநர் வெற்றி மாறன் 2 தேசிய விருதுகளோடு தமிழ் இயக்குநர்களின் பெயரையும், புகழையும் உயர்த்திக் காட்டினார். புதுமுக இயக்குநர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் பல படங்கள் வெளி வந்து வெற்றிகரமாக ஓடாவிட்டாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன. அதில் குறிப்பிடப்படவேண்டியவர் சமூகத்திற்கு தேவையான ஆழமான கருத்தை அழகியலோடு இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்கேயும் எப்போதும் திரைப்படமாகத் தந்த இயக்குனர் சரவணன்.


அடுத்து கடந்த வருடம் அதிகம் பேசப்பட்ட களவாணி படத்தின் எந்த சாயலும் இல்லாமல் இரண்டாவது படத்திலேயே ஒரு சமகால வரலாற்றை நல்ல கருத்தோடு கிராமத்துப் பின்னணியில் வாகை சூட வா திரைப்படமாகப் படைத்த இயக்குனர் சற்குணத்திற்கு முக்கிய இடமுண்டு. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமளவிற்கு படைப்புகளைத் தருகின்ற இயக்குநர் பாலா அவன் - இவன் படத்தின் மூலம் வித்தியாசமான கதாபாத்திரங்களை திரையில் உலவ விடுவதில் முத்திரை பதித்தார். அடுத்து தனி மனித கோபத்தை தனக்கே உரிய பாணியில் சுவாரசியமான படைப்பாக யுத்தம் செய் மூலம் தந்திருந்தார் மிஷ்கின்.

அடுத்து தன் முந்தைய படங்களின் அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அவருடைய அதே கூட்டணியோடு வெற்றிகர பயணத்தை முடித்திருக்கிறார் ராதா மோகன். அடுத்து அயல் சினிமாவின் தழுவல் என்றாலும் தனக்கே உரிய திரைக்கதை யுக்திகளாலும், மனதை மயக்கும் காட்சியமைப்புகளாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தெய்வத்திருமகள் தந்த விஜய். இறுதியாக இரண்டு வருடத்திற்குப் பிறகு தன் வழக்கமான குழுவோடு ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணத்தை யதார்த்தத்தின் சாயல் குறையாமல் மயக்கம் என்ன திரைப்படமாக தந்திருக்கிறார் செல்வராகவன். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை இவர்கள் இயக்கியதில் எந்தக்குறையும் இல்லை.

இயக்குனர்கள்:-2

எத்தனையோ படங்கள் வருகிறது. எவ்வளவோ இயக்குநர்களும் வருகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களில் வரும் சில காட்சியை வைத்தே யாரடா இந்த இயக்குநர் என்கிற எதிர்ப்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துபவர்கள் குறைவு தான். பலர் அந்த திரைப்படங்கள் திரையரங்கை விட்டு போகும் போதே மக்கள் மனதை விட்டும் போய் விடுகின்றார்கள். இதெல்லாம் தாண்டி ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த வருட தமிழ் சினிமாவின் அடையாளமாக நாங்கள் குறிப்பிட விரும்பும் மூம்மூர்த்திகளில் முதலாமானவர் இயக்குநர் சரவணன். இவர் இயக்கி வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவரின் முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவிற்கு மாற்றி இருக்கிறது. சினிமா மொழி தெரிந்த நல்ல இயக்குநராக இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு இவர் கிடைத்திருக்கிறார். ஒரு அருமையான விழிப்புணர்வுப் படத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொழுதுபோக்கான வெற்றிபடமாக மாற்றியதில் இவரை தமிழ் சினிமாவின் இந்த வருட சாதனையாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

அடுத்து வெற்றி மாறன், வருடத்தொடக்கத்தில் வந்து 2 தேசிய விருதுகளை அள்ளியதோடு அல்லாமல் மண்ணின் பதிவுகளை திரையில் கொண்டு வரும் இயக்குநராக மாற்றி இருக்கிறது. இறுதியாக ஏ.எல்.விஜய் மதராசப்பட்டினம் படம் மூலம் மூத்த கொண்டாடப்பட்ட இவர் தெய்வத்திருமகள் மூலம் தன் இடத்தை மீண்டும் தக்க வைத்திருக்கிறார். மனதை விட்டு நீங்காத இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இவர் இயக்கத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவை இந்திய சினிமாவைத் தாண்டி உலக சினிமாவோடு இணைக்கும் பயணத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.


இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 2011