Thursday, March 22, 2012

"மூவாயிரம்மம்ம்ம்ம்"

             டங்........ டங்.......... டங்னு ...........பெரிய சத்தத்தோடு ஒரு மூட்டை அந்த பச்சை பெயின்ட் அடிச்ச ஓட்டு வீட்டு மாடியில இருந்து ஒவ்வொரு படியா உருண்டு வர வர அந்த காம்பவுண்ட்ல இருக்கிற ஓவ்வொரு வீட்ல இருந்தும் மனுசாளுங்க வெளியில வர்றாங்க.....

         அந்த வீடு நூறு வருஷம் பழையது.அதோட கருங்கல்படிகள்ல உருண்டு வர்ற அந்த மூட்டையில இருந்து வெளியான சத்தம் சுத்தியுள்ள எல்லா சுவர்கள்ளையும் மோதி எதிரொலிச்சு காம்பவுண்டுக்கு வெளிய வர கேட்குது. அங்க சுத்திக்கிட்டிருந்த தெருநாய்கள் கூட அந்த சத்தத்த கேட்டு குரைக்க ஆரம்பிச்சுடுச்சு.......

           "ஏண்டி மதி இவ்ளோ பெரிய பிள்ளையா வளந்துருக்க ஒரு பொருள பார்த்து கொண்டு வரமாட்டியா? என்ன இருக்கு இந்த சாக்கில" சொல்லிக்கிட்டே மூட்டைய பிரிக்க போறாங்க குச்சி வீட்டு வள்ளி ஆச்சி..

            மாடியில இருந்து குடுகுடுன்னு இறங்கி வர்ற மதி அந்த மூட்டைய மெதுவா கையில எடுத்துட்டு அந்த இடத்த விட்டு நகர பார்க்கிறா, விட்டுருவாங்களா நம்ம ஆளுங்க, மாறி மாறி ஒவ்வொருத்தர்க்கிட்டயிருந்தும் வரிசையா ஒரு கேள்வி வருது. ஆனா எல்லா கேள்விகளோட அர்த்தமும் அந்த மூட்டைகுள்ள என்ன இருக்கு? அத எங்க கொண்டு போறா? அப்படின்னு தான் இருந்தது.

             மதி எல்லாரையும் ஒரு முறை சுத்தி பார்த்துட்டு அவ நாலு மணிநேரத்துக்கு முன்னாடியே  யோசிச்சு வச்சிருந்த அதே பதில வரி மாறாம சொல்ல ஆரம்பிக்கிறா, "இந்த குத்துபோனியில ஓட்டை இருக்கு.அதான் பாத்திர கடையில போட்டு வேற பொருள் எடுக்கலாம்னு மூட்டையில கட்டிட்டு எடுத்துட்டு போறேன்"... அப்படி சொல்லிட்டு யார் பதிலையும் எதிர்பார்க்காம அந்த இடத்த விட்டு கிளம்பிட்டா...

            இந்த மாதிரி சிற்றூர்கள்ல இருக்கிற நடுத்தர மக்கள் வாழுற காம்பவுண்ட் வீடுகள்ல எந்த வீட்டுக்கும் தெரியாம யாரும் ஒரு குண்டூசிய கூட வீட்டுக்குள்ளையோ இல்ல வீட்டில இருந்து வெளியையோ எதையுமே எடுத்துட்டு போக முடியாதுங்கிறப்போ இவ்ளோ பெரிய குத்துபோனிய மட்டும் மூட்டைகட்டி லேசில கொண்டு போயிர முடியுமா?ஆனா மதி புத்திசாலித்தனமா சமாளிச்சுட்டா..எல்லாரும் அவளையே பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சும் வேகமா வெளியில வந்து அங்க ஏற்கனவே பின் வாசல் வழியா பைக்கில வந்து காத்துக்கிட்டிருந்த அவங்க அண்ணன் கூட ஏறி கிளம்பிட்டா.....

           மதி வீட்டில் நான்கு மணி நேரத்திற்கு முன்பு ....

         "சே எரிச்சலா வருது எப்ப பார்த்தாலும் பணம் பணம்னு ஒண்ணும் வாங்க முடியல, ஏன் தான் நம்ம வீட்ல மட்டும் இப்படி கஷ்டமாகுதோ... அம்மா கையில் அம்பது ரூபா தான் இருக்கு இன்னிக்கு தேதி 21 தான், இன்னும் 10  நாள் கெடக்கு! இந்த மாசம் முடிய....." புலம்பிக்கிட்டே அடுப்பாங்கரையில இருந்து தோசைய கொண்டு வந்து அவ அண்ணன் தட்டுல போட்டா மதி 

        பாதியில் அவ பேச்ச மறிக்கிற அவ அம்மா "ஏட்டி அவன் என்ன செய்வான் யார்கிட்ட போய் காசு கேப்பான்? அவனும் மாசம் மாசம் சம்பளம் வாங்கி வீட்டுக்கு ஒழுங்கா காசு குடுக்கத்தான செய்யுறான். நமக்கு மட்டும் எப்புடி தான் காசு காலியாகுதோ தெரியல, ரெட்டியார் அம்மாகிட்டயும் வட்டிக்கு காசு கேட்டு பார்த்துட்டேன் இப்போதைக்கு  இல்லேன்னுட்டாங்க. நா என்ன செய்ய கவலப்படாத நம்ம அப்பா தெய்வமா இருந்து எதாவது வழி விடுவாவ " அந்த வாரியல எடுத்து போடு, நா புறவாசல போய் தூத்துட்டு வாரேன்னு சொல்றாங்க"
     
      வாரியல எடுக்க பரண்ல கைய விடுற மதிக்கு லேசா தட்டுப்படுது அந்த குத்துபோனி சந்தோசம் தாங்கல வாரியல விட்டுட்டு போனியோட பட்டாளைக்கு வர்றா "யம்மா இது பித்தள தான எதுக்கு இத சும்மா போட்டு வச்சுருக்க எடைக்கு போட்டுருவோமா அப்படிங்கறா"

      " ஏ புள்ள அது எனக்கு சீதனமா வந்ததுடி,உன் கல்யாணத்துக்கு பாத்திரம் வாங்குறப்ப அத வித்து வாங்கனுன்னு நெனைச்சு போட்டு வச்சுருந்தேன். சரி உனக்கு வேணுமுனா அத போட்டுட்டு வந்துரு, ஆனா அந்த கண்ணா கடைக்கு மட்டும் போகாத, இத்துனியோண்டு கொலுசையே எடை ஏமாத்தி கம்மி காச குடுத்துபுட்டான்.வேற கடையில போய் குடுன்னு சொல்றாங்க" மதி அம்மா.

      இதெல்லாம் தோசைய பிச்சு தின்னுக்கிட்டே வேடிக்கை பார்த்துகிட்டிருந்த மதியோட அண்ணன் முந்திக்கிட்டு சொல்றான் "யம்மா நீயும் மதியும் ஒரு ஆட்டோ பிடிச்சு போய் அத வித்துட்டு வந்துருங்க என்னல்லாம் போக சொல்லாதீங்க"

      அம்மா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கும்முனு நெனைக்காத மதி சந்தோசத்தில சொல்றா "யம்மா நா டவுனுக்கு அண்ணன் கூட போய் இத எடைக்கு போட்டுறேன், நீ வந்து கஷ்டப்பட வேண்டாம். எப்படியும் மூவாயிரத்துக்கு மே​ல கிடைக்கும்னு நெனைக்கிறேன்மா"

      அவ சொன்னதும் தான் தாமதம் மூணு பேரும் அவங்க அவங்க தேவைகள சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...

      அவ அம்மாக்கு கோவில்ல பூஜைக்கு குடுக்கணுமாம்.அப்புறம் மிச்சநாளுக்கு பலசரக்கு சாமானும் வாங்கனுமாம். 

      அவ அண்ணனுக்கு "கையில ஐநூறு ரூபா குடுத்துருங்க போதும். வேற எதுவும் கேக்கமாட்டேனு" சொல்லிட்டான்...

       மதிக்கு செல்போன் ரீசார்ஜ்க்காரனுக்கு கொடுக்க வேண்டிய கடன் அடைக்கணுமாம்.காலேஜ்ல ஸ்பெஷல் பீஸ் வேற கட்டணுமாம். 

தேவைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

      எல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போதே அந்த பித்தளகுத்துபோனிய வித்துறலாமுனு முடிவு பண்ணி தூசி தட்டி துடைச்சி வைக்கிறா மதி.

        ரொம்ப நேர யோசனைக்கு அப்புறமா வேற வழியில்லனு முடிவு பண்ணி ஐநூறு ரூபாய்க்கும் ஆசைப்பட்டு நானே கூட்டிட்டு போறேன் கிளம்பு மதின்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டான் அவ அண்ணன்.

          அம்மா ஒரு பிரச்சனை இருக்கே மதியே சொல்றா, இந்த பக்கத்து வீட்டுக்காரிகளுக்கெல்லாம் தெரிஞ்சா அவமானம் மா. யாரவது கேட்டா என்ன சொல்ல, எப்படி சமாளிக்க இத பத்தியே மூணு மணி நேரம் ஐம்பத்தி ஒன்பது நிமிடங்கள் பிளான் பண்ணி அந்த பித்தள போனிய ஒரு சாக்குல போட்டு தான் எடுத்துட்டு வந்தா கை தவறி விழுந்து அது இப்புடி பார்க்காதவங்கள எல்லாம் வீட்டுக்கு வெளிய வர வச்சு கேள்வி கேக்க வச்சுடுச்சேனு ஒரு வருத்தம் இருந்தாலும் "எங்க வீட்டு பொருளு நாங்க என்ன பண்ணினா எவனுக்கு என்ன? கண்டவங்களுக்கு நா ஏன் பயப்படனும்னு"புலம்பிக்கிட்டே தான் போறா...

         தெருவெல்லாம் இவ வண்டியில் கொண்டு போற மூட்டைய பார்த்து தெரிஞ்ச ஆளுக கேக்குற பல கட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி அவ அண்ணன் கூட டவுனுக்கு பைக்கில போய்க்கிட்டிருக்கா...

          ரோட்டில இரு சக்கர வாகனத்தில போற யார் முகத்தையுமே பார்க்க முடியல, வேற ஒண்ணுமில்ல போன ஒண்ணாம் தேதில இருந்து இந்த ஊரில ஹெல்மெட் கட்டாயம் ஆக்கிட்டாங்க அதான் இப்புடி,ஆனா சட்டம் போட்ட நெறைய போலிஸ்காரங்க ஹெல்மெட் இல்லமாலே அவங்க டூவீலர்ல போறாங்க....

         ஏண்டா இவங்கலாம் ஹெல்மெட் போடமாட்டங்களா? மதி வாய திறக்கவும் "கொஞ்சம் பேசாமா வாரியா" கத்திட்டு அமைதியாயிட்டான் அவ அண்ணன்..  

           அதுக்கப்புறமும் அடங்காம ஏதாவது பேசிட்டே வர்ற மதி,ரோட்டோட ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துட்டே போறா,இவ்வளவு பெரிய மூட்டைய தூக்கிட்டு போற இவங்க ரெண்டு பேரையும் ஊரே வேடிக்கை பார்த்துட்டு போகுது...

          ரெட்டபாலம் ஏறி இறங்கியாச்சு சுவாமி சன்னதி ரோடையும் நகைகார வீதின்னு மாத்திரலாம் போல ரெண்டு பக்கமும் கேரளா ஆந்திரா வடமாநிலம்ன்னு எல்லா ஊர்காரங்களும் புதுசா புதுசா நகை கடை திறந்துட்டு இருக்காங்க,இவங்க டவுன் வந்த நேரம் இன்னிக்கு அங்க ஒரு நகை கடை திறப்பு விழா யாரோ ஒரு பழைய சினிமா நடிகை இப்ப சீரியல்ல மட்டும்தான் நடிக்கிறாங்க, அவங்க அந்த கடை திறந்து விட வந்துருக்காங்க.அதுக்கே கூட்டம் பாதி ரோட்ட அடைச்சிகிட்டு டிராபிக் ஜாம்... அதனால மதியும் அவ அண்ணனும் காத்திருக்க வேண்டியாதாயிடுச்சு ...  

       "ஒரு பக்கம் புதுசு புதுசா நம்ம ஊர்ல திறக்கிற நகை கடையில்ல நகை வாங்க கூட்டம் மொய்க்குது இன்னொரு பக்கம் நம்மள மாதிரி வீட்டில மிச்சம் மீதி இருக்கிற பாத்திரத்த கூட விற்க அலைய வேண்டியிருக்கு"  அவ அண்ணன் பதில எதிர்பார்க்காம சொல்லி முடிக்கிற மதி பளபளக்கிற நகைகள்ள ஒரு ஏக்கத்தோட கண்ணாடி வழியா பார்த்துகிட்டே அவ கழுத்தில கிடக்கிற கவரிங் செயினையும் பார்க்கிறா ஏதோ புரிஞ்சவ மாதிரி அவ முகத்த எதிர் பக்கம் திருப்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டா...

          ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் அந்த ரோடே ஸ்தம்பிச்சு போச்சு.ஒருவழியா அந்த நடிகை டாட்டா காட்டிட்டு போன பிறகு தான் போக்குவரத்து காவலர்கள் டிராபிக் கிளியர் பண்ணினாங்க...அங்கே இருந்து புறப்பட்டு கோவில் வாசல் வந்துட்டாங்க.அங்க இருக்கிற பிரபல சைவ ஹோட்டலுக்குள்ள சாப்பிட போற மாதிரி போய் அங்க உள்ள பைக்க பார்க்கிங்க்ல நைசா வண்டிய பார்க் பண்ணிட்டு மூட்டையோட வெளிய வர்றாங்க....

          ஜஸ்டு மிஸ் ஹோட்டல் செக்கியூரிட்டிக்கிட்ட மாட்டாம வந்துட்டாங்க."ஏல ஆட்டோவில போனா மூண்ணூறு ரூபா பாரு, உன்ன கூட்டிட்டு நம்ம பைக்கிலையே வந்து காச மிச்சப்படுத்திட்டேன் எப்புடி ஏன் ஐடியா" மதி சொல்லிக்கிட்டிருக்கும் போதே கடைதெரு வந்துருச்சு. டவுண்ல அந்த தெரு முழுக்க பாத்திரக்கடைகள்தான், ஒரே பேர்ல நாலைஞ்சு கடை கூட இருக்கும்.

         எந்த கடைக்குள்ள போகலாமுன்னு கொஞ்சம்நேரம் யோசிச்சு முடிவு எடுத்து ஒரு கடைக்குள்ள போறாங்க மதியும் அவ அண்ணனும், "வாசல்லையே வாங்க வாங்கனு சொல்ற அந்த கடையாளு, இவங்க முகத்த பார்த்ததுமே பழைய பாத்திரம் எடைக்கு போட்டு விற்க வந்தவங்கன்னு கண்டுபிடிச்ச மாதிரி அவங்க கையில இருந்து மூட்டைய வாங்கி எடைமிஷின்ல வச்சு எடைய பார்த்துட்டாரு..

           மதி அண்ணன் லேசா பேச்சு கொடுக்கிறான் "நல்ல குத்துபோனி ஒரு ஓட்டை கிடையாது சார். வீடு காலி பண்றோம் பழைய பொருளு சும்மா இடத்த அடைச்சுட்டு கிடந்தது.இத மாதிரி நம்ம வீட்டில ரெண்டு மூணு குத்துபோனி கிடக்கு" அதான் எடைக்கு போட்டுறலாமுன்னு வந்தோம்ங்கிறான்."

          "நாலரை கிலோ இருக்கு பா வேற பொருள் எதாவது வாங்குறீங்களா இல்ல காச வாங்கிட்டு போறீங்களானு கடையாளு அவன் மனச படிச்ச மாதிரி கேக்குறாரு" பொருள எடைக்கு போட்டுட்டா வேற பொருள் தான் தருவாங்க காசெல்லாம் தரமாட்டங்க,அதான் வழக்கம் எப்புடி சொல்லி விற்க போறோமுன்னு குழம்பி நின்ன மதிக்கும் அவங்க அண்ணனுக்கும் கொஞ்சம் சந்தோசம் தான்..

       அதுக்குள்ள அங்க கல்லாவில உட்கர்ந்துக்கிற ஆளு ஏதோ கணக்கெல்லாம் போட்டு "ஒரு கிலோ 290 க்கு போகுது. மொத்தம் 1150 ரூபா வருது பா, நம்ம கடையில தான் அதிகமா கொடுக்கிறோம். தம்பி எடுத்துக்கலாமா?" அப்படிங்கறாரு...

         ஒரு நிமிஷம் சார்னு சொல்லிட்டு வெளியில வந்து நின்னு பேசுற மதியும் அவ அண்ணனும் அவங்க அம்மாக்கு போன் பண்ணி இவ்ளோ விலை தான் போகுதுமானு சொல்லிட்டு ஏதோ முடிவெடுத்துட்டு கடைக்குள்ள வர்றாங்க, "சார் அப்புறம்  வர்றோம்னு "அந்த குத்துபோனிய தூக்கிட்டு வெளியில வந்துட்டாங்க...

       அப்புறம் ஒரு மணி நேரமா அந்த ரத வீதி முழுக்க இருக்கிற எல்லா பாத்திர கடைகள்லையும் ஏறி இறங்கி சுத்தின பிறகு தான் ஒவ்வொரு கடையோட வியாபார தந்திரங்கள்,பேரங்கள் எல்லாம் புரிஞ்சி எல்லா கடையிலையும் பாத்திரம் எடைக்கு போட்டா பொருள் வாங்காம காச மட்டும் குடுக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சிகிட்டு ஆரம்பிச்ச கடைக்கே வந்து நிக்கிறாங்க...

       வெயில்ல அலஞ்சதுல கையில மிச்சம் இருந்த இருபது ரூபாய்க்கு சர்பத் வாங்கி குடிச்சிட்டாங்க.இப்ப இந்த கடையில ஏற்கனவே சொன்ன விலை கொடுத்தாபோதும்னு நெனைச்சிகிட்டே உள்ள நுழையுறாங்க...    

       "நீங்க வருவீங்கன்னு தெரியும் தம்பி. இதச் சொல்லிக்கிட்டே அந்த கடையாளு அவங்க கையில இருந்த மூட்டைய வாங்கி அதுக்குள்ள இருக்கிற பித்தள போனிய எடுத்து அடுத்த விற்பனைக்கு பாலிஷ் போட அனுப்பி வைக்கிறாரு. 

                                   

        தலைய குனிஞ்சிக்கிட்டே நிக்கிற மதிகிட்டையும் அவ அண்ணன்கிட்டையும்"அடிக்கடி வரணும் தம்பின்னு சொல்லிகூட ஐம்பது ரூபா வச்சுகோங்கனு குடுத்து வழி அனுப்புறாரு" அந்த பாத்திரக்கடை கல்லாவில உட்கார்ந்திருக்கிற ஆளு...

          வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்த மதியும் அவ அண்ணனும் எதுவுமே பேசாமல் "அந்த ஆயிரத்தி இருநூறு ரூபாவ ஆச்சிரியமா பார்த்துகிட்டே பைக்கில ஏறி வீட்டுக்கு கிளம்புறாங்க...."
                              
        இப்படிக்கு 
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் மார்ச்-21 -2012