Sunday, April 22, 2012

" நானும் அவளும் "


      அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.

      சென்னை கிண்டியில் ஒரு  பேருந்து  நிறுத்தம்..

      இராத்திரி 10 மணிக்கு மேல இருக்கலாம்...

      இரவு பூலோக பிரமாண்டங்களின் கல் பிம்பங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க தொடங்கியிருந்தது. தெருவிளக்குகளோட  மஞ்சள் வெளிச்சத்தில சில வாகனங்கள் அதிகபட்சமான ஹாரன் ஒலிய காற்றில உமிழ்ந்துட்டு  எங்கள கடந்து போய்க்கிட்டிருந்தது. பக்கத்தில எங்கேயோ ஒரு தள்ளுவண்டிகடையில கொத்துபரோட்டா போடுற சத்தம்  நல்லா கேக்குது.அந்த சத்தம் ஏதோ பாட்டுக்கு அடிக்கிற தாளம் மாதிரி பிசிறாம கேட்டுக்கிட்டே இருக்கு.அதோட வாசனை வேற மூக்க துளைச்சு  பசிய தூண்டுது.திடீர்னு திமுதிமுன்னு ஒரு ஆறு,ஏழு தெருநாய்கள் சத்தமா குறைச்சுக்கிட்டே என்ன கடந்து வேகமா ஓடியது. எனக்கு அடிச்ச அதே வாசனை அதுங்களுக்கும்  அடிச்சிருக்கும் போல...

   அந்த ரோட்டில அந்த பக்கமும் இந்த பக்கமும் ஒரு நாற்பது அம்பது கடையில வேலை பார்க்கிற நபர்கள், ரோட்டில நிக்கிற ஆட்டோ டிரைவர்கள், நேரமானதால கடைகள் எல்லாத்தையும்   மூட தயாராகிட்டிருக்கிற சாலையோர வியாபாரிகள்,அவரவர் பகுதிக்கு கடைசி பஸ்ஸுக்காக காத்திருக்கிற பயணிகள்னு ஒரு பெரிய கூட்டம் அதுல  நானும் என் நண்பர் ஸ்டீபன்  ரெண்டு பேரும் பஸ்ஸுக்காக காத்துக்கிட்டிருந்தோம்..

        என் பெயரா, அத விடுங்க உங்க எல்லாரும் மாதிரி சமுக வலைதலங்கள்ல மொக்கராசு ,கோமாளி இப்புடி எதாவது ஒரு பெயரில புரட்சிக்கருத்துக்கள்ல கொட்டிக்கிட்டு நிஜத்தில வாய பொத்திக்கிட்டு என் வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டிருக்கிற வீரத்தமிழர்கள்ல ஒருத்தன் தான் நான்.என்ன பத்தி சொல்றதுன்னா நா ஒரு பிரைவேட் கம்பனில வேலை பாக்குறேன்.காலேஜ்  படிக்கும்போதே பார்டைமா வேலைக்கு போக ஆரம்பிச்சேன். அப்புறமா படிச்சு மூச்சு இப்ப புல்டைமா வேலைக்கு போய்க்கிட்டிருக்கிறேன்.

     என்னோட இருபத்தி மூணு வயதுக்குள்ளேயே  சரியா ஞாபகம் இல்ல, ஒரு பதினாறு பேர் மேல காதல்,முதல் காதல் யார் மேலன்னு சொன்னா சிரிக்க கூடாது. என் மூணாங்கிளாஸ் டீச்சர்  மேல இத்தனைக்கும் அவங்ககிட்ட தான் நா அதிக அடி வாங்கியிருக்கேன் ஆனா என்னமோ அவங்கள ரொம்ப பிடிச்சிருந்தது.அப்புறம் கடைசி காதல் நா முன்னாடி வேலை பார்த்த கம்பெனில என் கூட வேலை பார்த்த ஒரு பொண்ணு மேல, இடையில உள்ள லிஸ்ட் சொல்ல ஆரம்பிச்சா பத்து ஆட்டோகிராப் படம் எடுக்கலாம்.எல்லாம் ஒன் சைட் தான். ஆமா கடைசி வரைக்கும் நா யார் கிட்டயும்  என் காதல் பத்தி சொன்னதே  இல்ல,என் பிரெண்ட்ஸ் கூட "டேய் நீ மட்டும் உன் காதல்ல யாராவது ஒருத்தர்கிட்ட சொல்லியிருந்தா,இந்நேரம் கல்யாணம் பண்ணி பாதர் ஆயிருக்கலாம்டா !போற நிலைமைய  பார்த்தா நீ உண்மையிலேயே சர்ச் பாதர் ஆயிருவ போலனு கிண்டல் பண்ணுவாங்க" ஆனா எனக்கு நல்லாதெரியும்.நா பீல் பண்ண யாருக்கும் என் மேல அந்த பீல் இல்லேன்னு, முதல்ல விஷயத்துக்கு வர்றேன். என்னை பத்தி இடையில அப்பப்ப சொல்றேன். 

           நாங்க நிண்ணுக்கிட்டிருந்த அந்த கிண்டி பஸ் ஸ்டாப் ஒண்ணுல நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாயிட்டே இருந்துச்சு.கொஞ்ச நேரம் பேசாம இருந்தேன்,என் பக்கத்தில நிண்ணுக்கிட்டிருந்த என் நண்பரும் பேசுற மாதிரி தெரியல, நானே முதல்ல பேச்ச தொடங்குனேன்."என்ன ஸ்டீபன் அண்ணா நேரம் போனதே தெரியல,என்னதான் நான் சென்னையில பிறந்திருந்தாலும் வளர்ந்ததெல்லாம் ஊர்ல தான். அப்பப்ப இங்க வந்து போயிருந்தாலும் இன்னைக்கு சென்னையில எனக்கு ஒரு வித்தியாசமான நாள், மறக்க முடியாத நாள் இதுக்கெல்லாம் நான் உங்களுக்குதான் நன்றி சொல்லணும் தேங்ஸ்னா,ஒரே நாள்ல எவ்வளவு இடங்கள்ல சுத்திக்காட்டிடீங்க" ரொம்ப சந்தோமா பேசி முடிச்சேன்.ஆனா அவர் கவனமெல்லாம் வேற பக்கம் இருந்துச்சு..

      அதுக்குள்ள என் செல்போனுக்கு அவகிட்ட இருந்து ஒரு கால் வந்தது..."உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி" கொரியன் செட் ரிங் டோன் ஒரு நிமிஷம் அந்த இடத்தில இருக்கிற எல்லாரையும் திரும்ப வச்சுடுச்சு .சுத்தி ஒரு லுக் விட்டுட்டு சிரிச்சுக்கிட்டே போன் கட் பண்ணிட்டு திருப்பி நான் தான் கால் பண்ணினேன்...அவ ஹலோ டியுன்ல முன்பே வா என் அன்பே வா ஊனே வா என் உயிரே வா...பாட்டு ஓடிட்டுருந்தது ...அவ என் கால் அட்டென்ட் பண்ணல . 

         நா அன்னைக்கு முந்தினநாள் சனிக்கிழமையே சென்னை போயிருந்தேன் .என் பிரெண்ட்ஸ் அவனுங்க ஆளோட வந்துருந்தாங்க அவங்க கூட நா அவளையும் கூட்டிட்டு சிட்டிகுள்ள ஒரு பெரிய ரவுண்ட்  போயிட்டேன்.எங்க போனாலும் ஜோடி ஜோடியா வர்றதையும்,போறதையும் பார்த்தப்ப தான்  எல்லா ஊர்லேர்ந்தும் சென்னைக்கு வந்தா பிழைச்சுக்கலாம்னு ஏன் கிளம்பி வர்றாங்கனு புரிஞ்சுது...."வந்தாரை வாழவைக்கிறது சென்னைன்னு" இனி மொட்டையா சொல்லக்கூடாது வந்தாரை வாழவைப்பது சென்னை காதலர்கள்னு தான் சொல்லணும். எல்லாருமே  வன்ஜனையில்லாம செலவு பண்றாங்க.நாங்களும் சில பல மகாத்மா பட தாள்களை காலியாக்கி முதல் நாள் முடிச்சோம்.

       ஓ! அவ யாருன்னு உங்ககிட்ட சொல்லவே  இல்லலே.ஒரு சின்ன பிளாஸ் பேக்....

       அவதான் என்னோட வைப். இருங்க ..இருங்க... இன்னும் கல்யாணமெல்லாம் ஆகல.கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு அப்படி  சொன்னேன். நாங்க ரெண்டுபேரும்  கடந்த எட்டு மாசமா லவ் பண்ணிக்கிட்டிருக்கோம். ஆனா நாங்க ப்பத்தான் இரண்டாவது தடவை சந்திச்சோம். பதினேழாவது காதல் இது. டபுள் சைட்ங்க, வழக்கம் போல இதையும் நா சொல்லல  'ஏதோ மேஜிக்' என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணி அவளே லவ்வ சொல்லிட்டா, யாரும் நம்மள லவ் பண்ணலியேனு வருத்தப்பட்டுக்கிட்டிருந்த நான் அவ லவ்வ சொன்னதும் உடனே ஒத்துக்கல, என் பேங் பேலேன்ஸ் தொடங்கி எவ்வளோ சம்பளம், எவ்வளவு கடன் இருக்குங்கிறது  வரைக்கும் எல்லா  உண்மையையும் சொல்லி கொஞ்சம் டைம்மெடுத்து தான் ஒத்துக்கிட்டேன்.ஏன்னா இடையில சண்டை பிரிவு,அது இதுன்னு பிரச்சனை வந்துரகூடாதுங்கிற  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான்....

      ஒரு தடவை ஐ.லவ்.யு சொல்லவே  பயந்து நா மிஸ் பண்ணின பல பேர பத்தி நினைக்கும் போது, இப்பலாம் தினமும் அவகிட்ட  போன்ல பேசும்போது  நா சொல்ற ஐ.லவ்.யூ எல்லாத்தையும்  கணக்கு பண்ண ஆரம்பிச்சா சூப்பர் கம்ப்யுட்டரே கூட  கன்பியுஸ் ஆகி போயிரும்.இதாங்க எங்க காதல் கதையோட சுருக்கம்.இப்பவரைக்கும்  நம்ம ஊரு கரென்ட் மாதிரி ரொம்ப நல்லாவே போய்க்கிட்டிருக்கு.

          பிளாஷ்பேக் ஓவர்...

             சென்னைக்கு வந்து இரண்டாவது நாள் வேற அதனால அன்னைக்கு என் பர்ஸ் கொஞ்சம் வீக்கா தான் இருந்துச்சு.என்ன ண்ணலாம்னு யோசிக்க டைம்  இல்ல, என் பிரெண்ட் ஸ்டீபன், அந்த நாள் முழுக்க ஸ்பான்சர் பண்ணிட்டார். அவரோட புண்ணியத்தில வழக்கமா வெளியில இருந்தே வேடிக்கை பார்த்த பல இடங்களை  உள்ள போய் சுத்தி பார்த்தோம்.அப்புறம் அவளோட செலவில நெறைய பர்சேஸ் பண்ணி முடிச்சு எல்லா இடமும் சுத்திட்டு ,அவள அவளோட ஹாஸ்ட்டல்ல டிராப்  பண்ணிட்டு, நாங்க வந்த டாக்ஸிய  கட் பண்ணிட்டு நடந்தேதான் அந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்துருந்தோம்அன்னைக்கு  ாலைலயிருந்தே  மனசு சந்தோமா இருந்ததால பசியும் தெரியல, நேரம் போனதும் தெரியல... 

        நானும் என் நண்பர் ஸ்டீபன்னும் அந்த பஸ் ஸ்டாண்ட்ல பசு வருதான்னு பார்த்துக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா தள்ளி வந்து  ஒரு ஓரமா வந்துருந்தோம். அப்ப திருப்பியும் அவளுக்கு கால் டிரை பண்ணினேன். அந்ததடவை அவ என் போன அட்டென்ட் பண்ணிட்டா  நா பேசிக்கிட்டிருந்தேன், பக்கத்தில சத்தமா ஒரு குரல்  "டேய் என்னடா இவ்ளோ நேரம் பார்த்து பேசிட்டு தான வந்தீங்க அதுக்குள்ள போன்ல என்னடா பேச்சு.முதல்ல போன் கட் பண்ணு. அப்புறம் பேசிக்கலாம், போய் கோயம்பேட்டுக்கு பஸ் இருக்கானு கேட்டுட்டு வா" கொஞ்சம் கோபமாவே சொன்னார் ஸ்டீபன்...

         நானும் அங்க இங்க நின்னவங்கள்ல ஒவ்வொருத்தரையா பார்த்து கேக்க ஆரம்பிச்சேன்.

   தெரியல பாஸ்,

   நான் இந்த ஊர் இல்ல, வேற யார்கிட்டையாவது கேளுங்க தம்பி...,

  இருக்கலாம் இல்லாமலும் போகலாம் சும்மா நேரங்கெட்ட நேரத்தில.....,

  கடைசி ஆள் தலைய  மட்டும்தான் ஆட்டினார் !?.

         இப்படி பல பேர்கிட்ட விசாரிச்சுக்கிட்டு வரும் போதே ,என் பின்னாடி வேகமா இடிக்கிற மாதிரி வந்து சடன் பிரேக் போட்டு  ஸ்டாப்பாச்சு  ஒரு ஷேர்ஆட்டோ. அது உள்ள இருந்து கடகடன்னு  பத்து பதினைஞ்சு பேர் இறங்குறாங்க... நான் அதிர்ச்சி ஆகி நின்னத கூட கவனிக்காம "கோயம்பேடு கோயம்பேடு ஏறுங்க ஏறுங்கனு குரல் கொடுத்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டிருந்தார் அந்த ஷேர் ஆட்டோ டிரைவர்"

        நா கொஞ்சம் தள்ளி வந்தேன். ஸ்டீபனுக்கு அப்ப தான் லேசா கோபம் குறைஞ்சது. "சரி சீக்கிரம் ஏறுடா" அப்படின்னு என்ன பார்த்து சொல்லிட்டு அவர் ஆட்டோக்குள்ள வேகமா  ஏறினார்.நானும் தான்...

        நாங்க ஏறின பின்னாடி என்னோட எங்க  பின் பக்கமிருந்த சீட்டில ஒரு நாலு பசங்க முன்னாடி டிரைவர் பக்கம் ரெண்டு பசங்க, என் பக்கத்துல ஒரு பையன்னு கொஞ்சம் பேர்  உள்ள ஏறி உட்கார்ந்துக்கிட்டாங்க. ஆனா யார் முகத்திலையும் ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல. அப்ப மணி கிட்டத்தட்ட இராத்திரி 10.30. ஒரு பெரிய திணறளோட  அந்த ஷேர்ஆட்டோ மெல்ல கிளம்ப ஆரம்பிச்சுது.

      அப்ப அவசர அவசரமா  என்னோட எதிர்ப்பக்கமா காலியா இருந்த சீட்டில ஒரு மூணு நார்த் இந்தியன் பொண்ணுங்க மாடர்ன் டிரெஸ்ல வந்து உட்கார்ந்தாங்க கூடவே  ஒரு நார்த் இந்தியன் பையன் நல்ல குண்டா வெள்ளையா ஹிந்தி காமெடி ஆக்ட்டர் மாதிரி வந்து உட்கார்ந்து இருந்தான்.அந்த பொண்ணுங்க பெர்சனாலிட்டிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல, ஆனாலும் ஆட்டோ  கிளம்பினதுலேர்ந்து அவங்க நாலு  பேரும் ஹிந்தியில ஜாலியா ஏதேதோ சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டே வந்தாங்க.நா  உட்பட சுத்தி இருக்கிற யாருக்குமே அவங்க பேசுறது என்னனு புரியலனாலும் ,என்ன தவிர எல்லாரும் சந்தோமா அவங்க நாலு பேரையும் பார்த்துக்கிட்டே ஒரு சின்ன சிரிப்போடையே வந்தாங்க.

             அப்போ அந்த ஷேர் ஆட்டோ டிரைவர் வண்டியில  இருந்த எப்.எம் ஆண் பண்ணினார்.டியூன் பணிதி இருந்தாரு கடைசில ஏதோ ஒரு எப்.எம்ல செட் பண்ணினாரு. ஒரு காதல் நிகழ்ச்சி அந்த புரோக்ராம் பண்ணிக்கிட்டிருந்த ஆர்.ஜே சில காதல் கவிதைகளை யாரோட காதல் நினைவுகளையோ உருகி உருகி ஹஸ்கி வாய்ஸ்ல பேசிக்கிட்டிருந்தார்.ஆஹா காதல் தான் எவ்வளோ பேர வாழவைக்குது....என்ன பேசினாருன்னு நா கவனிக்கல, "அடுத்து ஒரு நாலு பாட்டு வருதுன்னு" அவர் சொன்னது மட்டும் எனக்கு நல்லா கேட்டுச்சு.முதல் பாடலா காதல் ரோஜாவே பாடல் ரோஜா படத்தில இருந்து ஓட ஆரம்பிச்சுது டக்குனு எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அரவிந்த் சாமி மதுபாலா அந்த தீவிரவாதிகள் கூட்டம்னு எல்லாரும் நினைவுல வந்து வந்து போய்க்கிட்டிருந்தாங்க....

       அப்படியே  பாட்டுகேட்டுகிட்டே ஒரு மூணு  நாலஞ்சு கிலோமீட்டர் தூரம் அந்த ஷேர்ஆட்டோ சென்னையோட இரவு காட்சிகளை அழகா கடந்து போய்
க்கிட்டிருந்தது. டிராபிக் ரொம்பவே கம்மியாயிருந்தது.ரோட்ல ஆளே இல்லாட்டாலும் ரெண்டு மூணு இடத்தில ஒரு சில நிமிஷமாவது நிப்பாட்டி யாராவது வர்றாங்களானு பார்த்துக்கிட்டே தான் வண்டி ஒட்டினாரு அந்த  ஷேர்ஆட்டோ டிரைவர்.அங்கங்க பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு,அதோட வாசல்ல சின்ன சின்ன இட்லி கடைகள் முளைச்சிருந்தது.டிப் டாப்பா ஒரு கூட்டமே நின்னு அசராம சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்க... 

       நா ஸ்டீபன் அண்ணாவ திரும்பி பார்த்தேன் அப்ப அவரோட போன்ல அவர்  பிஸியாயிருந்தாரு.

       திடீர்னு ஹிந்தியில சத்தமா ஒருத்தரோட குரல் கேட்டுது, என் முன்னாடி இருந்த நாலுபேர்ல யாரோ ஒரு ஆள் பேசினாங்கனு மட்டும் புரிஞ்சுது.ஆனா 
யார் பேசினாங்க ?என்ன பேசினாங்கனு ?சத்தியமா எனக்கு தெரியல, டிரைவருக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவர் உடனே  ஷேர்ஆட்டோவ நிப்பாட்டினார். அந்த நாலு பேரும் இறங்க,அந்த இடத்துக்கு ஒரே ஒரு தமிழ் பொண்ணு மட்டும் வந்து உட்கார்ந்தா... 

       அந்த நார்த் இந்தியன்  பொண்ணுங்க இறங்கவும் லேசா சோகமான என்னோட சக பயணிகளின் முகம் இந்த பொண்ணு உள்ள வந்ததுக்கு அப்புறம் திரும்ப சந்தோசமாயிடுச்சு....

        ஆமா அந்த பொண்ணு 'தமிழ்னு' எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறீங்களா? எனக்கு கொஞ்சம் கால் முட்டு நீளம். நான் என் சீட்ல உட்கார்ந்தாலே எதிர் சீட்ல உட்கார்ந்துருக்குறவங்களுக்கு இடிக்கும் அதான் "கொஞ்சம் தள்ளிக்கோங்கன்னு" அந்த பொண்ணு என்ன பார்த்து சொன்னத வச்சு தான் அது தமிழ்னு கண்டுபிடிச்சேன். நானும் கொஞ்சம் நிமிர்ந்து அந்த பொண்ணோட முகத்த பார்த்தேன்.
அந்த பொண்ணுக்கு ஒரு 
 இருபத்து இரண்டு இல்ல இருபத்து  மூணு வயசுக்குள்ள தான் இருக்கும்.நல்ல பெரிய கண்ணு  கண்ணெல்லாம் நல்லா வீங்கி சிவந்து  போயிருந்தது.வொய்ட் கலர் லெக்கின் கத்திரிப்பூ கலர் குர்த்தா போட்டுருந்தா ,மாநிறம் தான் கையில ஒரு செல்போன் அத தவிர ஒன்னும் இல்ல...சின்ன சினுங்களோட அந்த பொண்ணு ஜன்னல் வழியா வெளியில பார்த்து  உட்கார்ந்துகிட்டா....

       அப்ப நா
ன் என் பிரெண்டு  ஸ்டீபன்ன பார்த்து திரும்ப, சரியா அவரும் என்ன பார்த்து திரும்ப நாங்க ரெண்டும் பேரும் ஒருத்தர ஒருத்தர பார்த்துக்கிட்டோம்.எதுவும் பேசிக்காம திரும்பியும் எதிர் எதிரா திரும்பிக்கிட்டோம். நாங்க போய்க்கிட்டிருந்த ஷேர் ஆட்டோ அப்ப இன்னும் கொஞ்ச தூரம் போயிருக்கும்.எனக்கு லேசா பசி எடுக்க ஆரம்பிச்சுருந்தது....

    அந்த நேரம் எங்க எதிர புதுசா வந்து உட்கார்ந்திருந்த  அந்த பொண்ணு எதோ இடம் சொல்லி அங்க ஆட்டோ நிக்குமானு எங்ககிட்ட கேட்டா,எனக்கு முன்னாடி முந்திகிட்டு "ஆமானு சொன்னாரு" ஸ்டீபன், பதில் கிடைச்ச உடனே திரும்பவும் அந்த பொண்ணு  ஜன்னல் பக்கம்  திரும்பி உட்கார்ந்துகிட்டா,சோகமாவே இருந்தா ,காற்று அடிக்கிற வேகத்தில முகத்தில வந்து விழுற முடிய கூட விலக்காம தீவிர சிந்தனையில இருந்தா... 

       அப்ப அந்த பொண்ணுக்கு ஒரு போ
ன்கால் வந்துச்சு.முதல்ல அவ கால் அட்டென்ட் பண்ணல,திரும்ப திரும்ப கால் வந்துட்டே இருக்கு...அதே நம்பரா தான் இருக்குமுன்னு நா நெனைச்சேன்.அது சரி தான் அவ அத அட்டன்ட் பண்ணினா,கண்ணீர் வேகமா வடிஞ்சுட்டிருந்துச்சு  உடனே லேசா கண்ண துடைச்சிக்கிட்டு கொஞ்சம் கோபமாவே பேச ஆரம்பிச்சா,...

     "சொல்லு நா தான் உன்  கால் அட்டன்ட் பன்னலலேலே ", இப்ப எதுக்கு எனக்கு திரும்ப திரும்ப கால் பண்ற.... 

       ஒரு நொடி அமைதி...திரும்பவும் பேசுனா... 

       "பொய் சொல்லாத நா பதினைஞ்சு நிமிஷமா அந்த ஓயின்ஷாப் வாசலில நின்னு உன்ன பார்த்துக்கிட்டு தான்     இருந்தேன். எனக்கு எல்லாம் தெரியும்" 

      "உன்கிட்ட பேசவே எனக்கு தோனல "

       வை போன ...

        இப்படி படபடனு அந்த ஆட்டோல இருந்த எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தமா பேசிட்டு அந்த பக்கம் பதில எதிர்பார்க்காம போன் கட் பண்ணிட்டு தலைய குனிஞ்சு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிச்சுட்டா, பார்க்கிறதுக்கே ரொம்ப பாவமா இருந்துச்சு.அப்ப அந்த பொண்ண பார்த்து தண்ணி குடிக்கீறீங்களா மேம்னு கேட்டாரு என் பிரெண்டு ஸ்டீபன், குனிஞ்ச தலை நிமிராம "தேங்க்ஸ் சார்னு "சொல்லிட்டு அந்த பொண்ணு தொடர்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சு....

     காற்று வேற ரொம்ப சில்லுனு அடிச்சிட்டிருந்தது ....ஆனா அத அனுபவிக்க முடியாத ஏதோ ஒரு விஷயம் என்ன தடுத்துது.எனக்கு அந்த பொண்ணுகிட்ட என்னமோ கேக்கனும்னு தோனுச்சு.ஆனா வார்த்தை வரல,  கொஞ்சநேரம் அந்த இடத்தில ஒரு பெரிய அமைதி யாரும் எதுவும் பேசிக்கல, நா  சுத்தி அங்கங்க பாக்கிற மாதிரி காட்டிக்கிட்டிருந்தாலும்  கடைசியில என் கண்ணு அந்த பொண்ணு பக்கமே போச்சு. அப்ப இராத்திரி11மணி கிட்ட நெருங்கியிருந்தது....

   அந்தநேரத்தில ஒரு பொண்ணு தனியா வெளியில தைரியமா வர்றது  சென்னையில சாதாரண விஷயம்னாலும்  ப்படி அழுதுட்டே வந்தது  பார்க்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா  இருந்துச்சு.என்ன பிரச்சனையா இருக்கும், நா  மனசில நெனைச்சுது  புரிஞ்ச மாதிரி  பேசுனாரு ஸ்டீபன் "எதாவது லவ் மேட்டரா தான்டா இருக்கனும். அவ ஆளு தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேனு சொல்லியிருந்துருப்பான். இப்ப கையும்களவுமா மாட்டிக்கிட்டிருப்பான். அதுதான் அவங்க இரண்டுபேர்க்குள்ள பிரச்சனையாகி  இருக்கும்" அவர் சொல்லி  முடிக்கவும் சரியா மறுபடியும் அந்த பொண்ணு செல்போன்ல ரிங் அடிச்சுது ...

      ஒரு நிமிஷம் .அந்த செல்போ
ன் டிஸ்ப்ளேய பார்த்து யோசிச்ச அந்த பொண்ணு அப்புறம்  என்ன நெனைச்சுதோ தெரியல, அந்த கால்ல அட்டென்ட் பண்ணி பேசினா "ஹலோ எனக்கு கால் பண்ணாதேன்னு சொன்னேன்லடா இப்ப எதுக்கு கால் பண்ற? அவ்ளோதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. நாளைக்கு பாரு எல்லா நியூஸ் பேப்பர்லயும் நா செத்து போயிட்டேன்னு என் போட்டோவோட நியுஸ் வரும் த பார்த்து தெரிஞ்சிக்கோ" முன்னாடி விட இந்த தடவ ரொம்ப சத்தமாவே கத்திட்டு போன்ன  கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ணிட்டா, அப்ப அவளோட அழுகை இன்னும் அதிகமாயிருந்துச்சு...

       அவ பேசினத கேட்ட  எனக்கு ஒரு நிமிஷம்  தூக்கி வாரி போட்ட மாதிரி இருந்துச்சு . ஏதோ விபரீதம் நடக்க போகுதோன்னு ஏன் மனசு படபடனு அடிச்சு
து.நா காதலிக்கிறதுக்கு முன்னாடியே எவ்வளவோ காதல் பிரச்சனைகள்ள பேசியே தீர்த்து வச்சுருக்கேன்.ஆனா இப்புடி சின்ன சண்டையில உயிரை விட போறேன்னு  சொல்லுதே இந்த பொண்ணுன்னு ஒரே யோசனையா இருந்தது.என்ன பண்றதுன்னு தெரியல ,அப்படியே ஸ்டீபன் பக்கம் திரும்பிக்கிட்டேன். 

        "ஹேய் நாளைக்கு பாரு,அவ ஆளுக்கிட்ட பேசிருவா, ப்ரீத்தாவும் அடிக்கடி இப்படித்தான் சாக
ப்போறேனு சொல்லிக்கிட்டேயிருப்பா, அப்படின்னு அவரோட  முன்னால் காதலியை பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லி முடிச்சார் ஸ்டீபன். அவர் காதலிக்கிறத பார்த்துதான் நானெல்லாம் கல்யாணம்னா அது காதலிச்சு தான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன். ஆனா அவர்  காதல் முறிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆகிபோச்சு. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கு.ஆனா இவரு இன்னும் "போனால் போகட்டும் போடா பாட்டுல ஆரம்பிச்சு லேட்டஸ்ட் போ நீ போ வரைக்கும் அத்தனை காதல் பிரிவு பாடல்களையும் போட்டு போட்டு கேட்டுட்டே  இருந்தாரு.அவர் செட் பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணியும் இவர் கல்யாணமே பண்ணாம இருந்தாரு.அவர் அனுபவத்தில சொன்ன விஷயம் சரியா தான் இருக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்தாலும் அந்த பொண்ணு முகத்த பார்க்கும் போது  மனசுகுள்ள லேசா பயமா இருந்துச்சு...

        
 அந்த ஆட்டோக்குள்ள எந்த பக்கமும் திரும்பினாலும் அந்த பொண்ணோட குரல் என்ன டிஸ்டர்ப் பண்ணுச்சு     அந்த பொண்ணு டிரைவர் பக்கம் திரும்பி "அண்ணா சீக்கிரம் வண்டிய நிப்பாட்டுங்க நா இறங்கிக்கிறேன்". அப்படின்னு சொல்லி அவசரமா ஒரு இடத்தில இறங்குனா, எனக்கென்னமோ அவ  இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு  இறங்கிருக்குமோனு  ஒரு சந்தேகம். எங்க ஷேர் ட்டோ  கிளம்புச்சு. நான் திரும்பி அந்த  பொண்ணையே  பார்த்துக்கிட்டிருந்தேன்...

       அவ  ரோட்டில எங்க போகனும்னு தெரியாம அப்படியே நிண்ணுகிட்டிருந்தா,அப்ப  மணி 11.30 அந்த ரோட்டில ஆள் நடமாட்டமே இல்ல,என் கண்ணவிட்டு அந்த பொண்ணு மறையுற வரை, நா அவள பார்த்துக்கிட்டே இருந்தேன் அவ அசையாம அதே இடத்திலேயே தான் நின்னா...அவ மனசு எவ்ளோ பாடுபட்டிருக்கும்.அவ உருவம் கொஞ்சம் கொஞ்சமா மறைய  நா பார்த்துக்கிட்டே வந்தேன் அசதியில அப்படியே கண்ணசந்து தூங்கிட்டேன்...

        கொஞ்ச நேரம் ஆயிருக்கும்......

       ஒரு கை வேகமா என் முதுகுல தட்டுச்சு,முழிச்சு பார்த்தா சுத்தியும் "பாம் பாம்"னு பயங்கர சத்ததோட நெறைய வாகனங்கள் 
போய்க்கிட்டிருந்தது. ஒரே புகைவாசனை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் வாசலில இறங்குறோம். நாங்க இறங்கினதும், "சாப்பிட வாரியாடான்னு கேட்டாரு " ஸ்டீபன் "பசியில்லண்ணா, நீங்க சாப்பிடுங்க நா கிளம்புறேன்னு "அவருக்கு பை சொல்லிட்டு, அங்க இருந்து நா கிளம்பி புறநகர் பஸ் நிக்குற இடத்துக்கு போயிட்டேன். வழக்கமா காலைல ஒன்பது மணிக்கு சாப்பிட்டாலே ஒரு மணி நேரத்துக்குள்ள திரும்ப பசிக்க ஆரம்பிச்சிரும் எனக்கு, ஆனா அன்னைக்கு என் வயிறு கப்புன்னு அடைச்சுக்கிச்சு. பசிய மறக்கிற அளவுக்கு நெறைய சிந்தனைகள்,அந்த பொண்ணோட அழுகை சத்தம் மட்டும் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்துச்சு.

       நா 
சென்னை புறநகர்ல உள்ள என் பிரெண்டு ஒருத்தன் கல்யாணத்துக்கு போகவேண்டியிருந்தது.அன்னைக்கு  சாயங்காலம் தான் கல்யாண ரிசெப்ன் முடிஞ்சிருந்தது. மறுநாள் திங்கள் கிழமை காலையில  கல்யாணம். மாப்பிள்ளை ஒரு காலத்தில எனக்கு நெருங்கின நண்பன். அவனுக்கு நா ரிசெப்சனுக்கு வராததுல கொஞ்சம் வருத்தம்தான்....

      எங்க ஊரில எல்லாம் கல்யானம்னா தாலி கட்டறப்பதான் போவாங்க  இங்கதான் முந்தினநாள்  ரிசெப்ன்லையே எல்லாரும் வந்துட்டு போயிடறாங்க. அதனால நா பிடிவாதமா முகூர்த்ததுக்கு தான் வருவேன்னு சொல்லி  ரொம்ப லேட்டா  தான் கிளம்பிருந்தேன். காலைல ஆறு மணிலேயிருந்து ஏழு மணி வரைக்கும் முகூர்த்தம். இராத்திரி ரொம்ப நேரமானதால நா போவேண்டிய ஊருக்கு பஸ்  எதுவுமே இல்ல. கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு...

     எனக்கு என்னமோ அந்த பொண்ணு ஞாபகமாவே இருந்துச்சு. என்னவாயிருக்கும் அவளுக்கு, வீட்டுக்கு போயிருப்பாளா? இல்ல தற்கொலை தாவது? ச்சீ ச்சீ அப்படியெல்லாம் எதுவும் இருக்காதுனு, நானே என் மனச தேத்திக்கிட்டு காத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப பஸ்சுக்கு அப்புறமா வந்த ஒரு ரூட்  பஸ்ல ஏறினேன்.அது பைபாஸ்ல தான் நிக்கும். அங்க இறங்கி நா போகவேண்டிய ஊருக்கு நடராஜா பஸ்தான்... வேற வழியில்லாம கூட்டம் நிரம்பி வழியுற அந்த பஸ்ல ஏற வேண்டியதாயிடுச்சு. ஸ் மெல்ல கிளம்புச்சு டிக்கெட் எடுத்துட்டு நா நின்னுக்கிட்டே தான் போய்கிட்டிருந்தேன்.

     கொஞ்ச நேரம் கூட ஆகல  லேசா கண்ணு சொக்குச்சு,எல்லாம்  அப்படியே மறையுது, திடீர்னு  ரு போன் "சார் ரஜினி வந்துட்டாரு அந்த மேனேஜர் என்னை கூப்பிட்டு சொன்னாரு, அம்மாவோட குரல் இட்லி ரெடியா இருக்குடா சாப்பிட்டுட்டு போ,ஹே பார்த்து போ இடிச்சுற போகுதுடா என் நாலாங்கிளாஸ் கிளாஸ்மேட் லக்ஷ்மணன் கத்துறான், சொல்லி முடிப்பதற்குள் எதிரே உள்ள மரத்துமேல மீது தூக்கி வீசப்பட்டு அலறுனேன், சம்பந்த சம்பந்தமில்லாம என்னலாமோ காட்சிகள் தோனுச்சு .என் முன்னாடி அந்த பொண்ணு அழுதுக்கிட்டே நிக்கிறா. ஒரு பயங்கர சத்ததோட ஷாக்காகி முழிச்சா, பஸ்ல என்னை தவிர எல்லாரும் நல்லா தூங்கிட்டிருக்காங்க, "நம்ம நினைவு பதிவுகள் தான் நமக்கு வர்ற கனவுகள்னாலும், நம்ம ஒவ்வொரு கனவுகளையும்  சரியா கோர்வையாக்கினா ஒரு திரைப்படத்துக்கு அருமையான திரைக்கதை பண்ணிரலாம் போல," நல்லவேளை நா போட்ட சத்தத்தில அந்த பஸ்ல யாரும் தூக்கம் கலைஞ்சு முழிக்கல, அதுக்கப்புறம் எனக்கு தூக்கமே வரல, அரைமணிநேரம் அப்படியே போச்சு. நா இறங்க வேண்டிய ஸ்டாப்பும்  வந்துடுச்சு. இறங்கி கல்யாணமண்டபத்து கிட்ட கொஞ்சதூரம் நடந்துருப்பேன்.

    அந்த பைபாஸ் ரோட்டில என்ன கடந்து  நைட் ரௌண்ட்ஸ் போய்க்கிட்டிருந்த  ஹைவே பேட்ரோல் வண்டி  ஒண்ணு  சடன் பிரேக் போட்டு என் பக்கத்தில நின்னுச்சு.அதுல மொத்தம் மூணு  போலிஸ்காரங்க இருந்தாங்க, முன்னாடி உட்கார்ந்திருந்த எஸ்.ஐ. என்ன கூப்பிட்டார். "சார் என்னவிஷயம், எங்க போறீங்க?" வழக்கமான விசாரிப்புகள் தான். நா என் ஆபிஸ் ஐ.டிகார்ட் காட்டி என் பிரெண்டு  கல்யாணத்துக்கு போய்கிடிருக்கேன்ங்கிறத புரிய வச்சுட்டு இருந்தேன்...

    அப்ப அந்த வண்டியில இருந்த ஓயர்லஸ்ல பீப் ஒலிக்கு பின்னாடி ஒரு குரல் "கோயம்பேடு பக்கம் ஒரு பொண்ணு டெத் ஓவர்......  சூசைடு பண்ணி இறந்து போயிருக்கு,ஒரு செல்போன் மட்டும்தான்  இருக்கு ஓவர்..." என தகவல் வந்து பீப் ஒலி நின்னுடுச்சு.எனக்கு பதட்டம் இன்னும் அதிகமாச்சு.எனக்கு நானே கேட்டுக்கிட்டேன் "நா வந்த ரூட்டுல தான் சூசைட் நடந்துருக்கு ஆட்டோல இருந்து  அழுதுட்டே இறங்கி போச்சே அந்த பொண்ணுதானா?" என்கிட்ட  விசாரிச்ச  போலிஸ்காரர்க்கிட்ட அந்த பொண்ண பத்தி விளக்கம் கேட்கலாம்னு  நினைக்கும் போதே, என் விசாரிச்ச  எஸ்.ஐ. "தம்பி நீங்க வெளியில ரொம்ப நேரம் நிக்காம சீக்கிரம் மண்டபம் போய் சேருங்கனு" சொல்லிட்டு அந்த டிரைவர்கிட்ட சைகை காட்ட, அந்த ஹைவே  பெட்ரோல் வண்டி வேகமா கிளம்பிடுச்சு. 

      எனக்கு ஒண்ணுமே ஓடல,என் கூட வந்த பிரெண்டு ஸ்டீபனுக்கு போ
ன் அடிக்கிறேன் அவர் என் போன் கால் அட்டென்ட் பண்ணல,ரொம்ப நேரம் அந்த தேசிய நெடுஞ்சாலையில் நின்னு வானத்தையே வெறிச்சு  பார்த்துக்கிட்டிருந்தேன்,நிலா நட்சத்திரம் எல்லாம் அங்கங்க அப்படியே தான் இருந்துச்சு.என் எண்ணங்கள் தான் எங்களாமோ போச்சு...

     "எல்லா  காதலியும்  காதலனை ஏமாத்துறதில்ல, எல்லா  காதலனும்  காதலிய ஏமாத்துறதில்ல அவங்களுக்குள்ள அப்பப்ப சில சண்டைகள் வரும் போகும்.ஆனா இப்படி சின்ன விஷயத்துக்கு போய் உயிரை விட்டுட்டுச்சே இந்த பொண்ணு, அவளுக்கு சென்னைதான் சொந்த ஊரா? இல்ல வேற எந்த ஊரோ? சென்னைக்கு படிக்க வந்துருப்பாளா? இல்ல வேலைக்காக வந்தவளா? அவ அப்பா அம்மாக்கு இந்த தகவல் தெரிஞ்சா என்னாவாங்க? எனக்கு ஒரே குழப்பம்,....

       காதலில் நேர்மை எவ்வளவு முக்கியம்.அந்த பையனின் நேர்மையின்மை தான்  இந்த பொண்ணோட உயிரை பறிச்சுடுச்சு" எவ்வளவோ கேள்விகள், விமர்சனங்கள் என்னை துளைத்தெடுக்க மௌனமா நடந்தே கல்யாண மண்டபம் போய் சேர்ந்தேன்.சிலமணி நேரங்கள் ஓடிபோச்சு.

        திங்கள்கிழமை.. 

      மணி அதிகாலை மூன்று மணிக்கு மேல இருக்கும்..

     கண்ணை மூடினா அந்த பொண்ணோட முகம் மட்டும் தான் ன்  ஞாபகத்துக்கு  வந்துச்சு."காதல் தோல்வினாலயோ இல்ல வேற பல பிரச்சனைகளாலயோ ஊட்டி,கொடைக்கானல் மாதிரி இடங்களின் தற்கொலை பாறைகள்ல ,ஊருக்கு வெளிய இருக்கிற குளங்கள்ல, ஊர் ஒதுக்குபுறமா இருக்கிற கிணறுகள்ல ஆறுகள்ல எல்லாம் விழுந்து இறந்தவங்க, மரங்கள்ளையும், வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கினவங்க, பாகற்காய் சாப்பிடவே கசப்பு என ஒதுக்கினவங்க எல்லாம்  எலி மருந்தையும் இன்னும் பிற வஸ்துக்களையும் சாப்பிட்டு  உயிர்விட்டவங்க,சின்ன காயம்பட்டா கூட தாங்காத பலபேர் தீக்குளித்து  இறந்துருப்பாங்க,இப்படி என் பக்கத்து வீட்டில,அடுத்து தெருவில,என் ஊரில ஏன் இன்னும் எங்கெங்கோ நடந்த விபரீதங்களை பலதடவை கேள்விப்படும்போதும் சரி, எங்கையோ பேப்பரில் இதுமாதிரி தற்கொலை இறப்பு செய்திகளை அப்பப்ப  படிக்கும்போதெல்லாம் ரொம்ப சாதாரனமா அத கடந்து போயிருக்கேன்.ஆனா அன்னைக்கு என்னால ஏனோ முடியல.

    மறுநாள் காலைல விடிஞ்சது. என் நண்பன் திருமணமும் நல்லபடியாக 
முடிஞ்சது. அதிகநேரம் அங்க இருக்கல, கிப்ட் மட்டும் கொடுத்துட்டு, நான் என் ஊருக்கு கிளம்ப தயாராயிட்டேன்.பஸ் ஏறி கோயம்பேடு பஸ்டாண்ட் வந்தேன்.சாப்பாடு ஒரு வாய் இறங்கல, தண்ணீ மட்டும் இரண்டு,மூணு அதக்கும் மேல பாட்டில் பாட்டிலாக வாங்கி குடிச்சு காலி பண்ணிக்கிட்டிருந்தேன்...

   அன்னைக்கு காலை செய்தித்தாள் சிலத வாங்கி படிச்சேன்.எல்லாத்திலையும் அந்த பொண்ணோட  தற்கொலை செய்தி பெரிசா வந்திருந்தது.பாலத்தில் இருந்து குதித்து இறந்திருந்ததுனும் ,மூளை சட்டினி ரத்த வெள்ளம் என வார்த்தைகளில் விளையாடிருந்தாங்.செய்தியோட போட்டுருந்த புகைப்படத்தில் முகம் மட்டும் தான் இருந்துச்சு ,ரத்தம் படிந்திருந்த அந்த பெண்ணின் முகம் சரியா தெரியல.அவளின் டிரெஸ் கலரோ வேறு எந்த அடையாளங்களோ அந்த பேப்பர் செய்தில இல்ல,அந்த பெண்ணின் செல்போனில் சிம்கார்ட் எதுவும் இல்லாததால் உறவுகளுக்கு தகவல் சொல்லமுடியவில்லை. என்ற விஷயம். என் இதயத்தை மேலும் கணமாக்கிடுச்சு.

    அந்த பொண்ணு சாகுறதுக்கு முன்னாடி என்ன நெனைச்சுருக்கும்" சாகுற வயசா இது , எத்தனை பேரோட கனவுகள் இருந்துருக்கும் அந்த பொண்ணு மேல.... கடைசியா அவ முகம் கூட சரியா தெரியலியே அந்த பொண்ணு முகத்த கொஞ்சம் கொஞ்சமா ஞாபகபடுத்தி பார்த்தேன்...முடியல...

     இப்ப போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுருக்குமா?

     இந்த சாவ வச்சு இன்னும் என்னன்னா கதை கட்ட போறாங்களோ தெரியலியே,

     அந்த பையன். ????...

     ஒட்டுமொத்தமா காதலர்கள் நாளே இப்படித்தான்னு ஆயிரும்ல...

      நானே தனியா புலம்ப ஆரம்பிச்சிட்டேன்...
       
       நாலு மணிநேரம்  பஸ் ஸ்டாண்டிலேயே ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன், எங்கயும் போகல , எனக்கு வந்த எந்த போ
ன் காலயும் எடுக்கல. ஸ்டீபன்,ஆபிஸ் கால், அவக்கிட்ட மட்டும் இருபது மிஸ்டு கால். பத்து மெஸ்சேஜ் எதுக்கும் ரிப்ளை பன்னால...

          சாயங்காலம் 5 மணி... 

      சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் இரண்டு  பஸ்  என் முன்னால நின்னுச்சு. அன்னைக்கு வார நாள்ங்கிறதுனால கூட்டம் கொஞ்சம் குறைவு தான், அதான் இரண்டு பஸ் கண்டக்டர்களும் கூவி  கூவி எல்லாரையும் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. நா தான் முதலில் டிக்கெட் வாங்கி அந்த பஸ்சில் ஏறி உட்கார்ந்தேன்...

     எனக்கு வலது பக்கம் இரண்டாவது ஜன்னல் ஓர சீட். பஸ் உள்ள இருந்த வெறுமையை பார்க்க பிடிக்காமல் ரொம்ப நேரத்திற்கு பிறகு வெளியில வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.அந்த பேருந்து நிலையம் அதோட வழக்கமான பரபரப்பு குறையாமலே இருந்தது.சொந்த ஊருக்கு போகிற சந்தோசம் சிலர் முகத்தில, சொந்த ஊர விட்டு போற வருத்தம் சிலர் முகத்தில, பல உணர்வுகள் கலந்த கலவையா அங்க இருந்த கதாபாத்திரங்கள் எல்லாரையும் உற்று கவனிச்சா சுவாரசியத்துக்கு குறைவிருக்காது மற்ற நேரம் இதெல்லாம் கவனிக்கிறவன் தான் நா, ஆனா அன்னைக்கு என்னால எதையும் சிந்திக்க முடியல...

       வாசல்ல நின்னு இன்னும் பத்து நிமிஷத்தில வண்டி கிளம்பிருமுன்னு கண்டக்ட்டர் கத்திட்டே இருந்தாரு. அப்படியே சில பல பத்து நிமிஷம் ஓடிடுச்சு.உள்ள இருந்து "வண்டிய சீக்கிரம் எடுங்க நாளைக்கு வேலைக்கு போகனும்ப்பானு" யாரோ சத்தம் கொடுக்க, சில நிமிடங்களில் ஒரு இருபது இருபத்தைந்து ஆட்களோடு அந்த அரசு பஸ் அதோட பயணத்தை தொடங்குச்சு.

       ஆடி அசைஞ்சு மெதுவா கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல இருந்து வெளியில் வந்த அந்த பஸ்,கொஞ்ச தூரம் போயிருக்கும் ஒரு டிரா
பிக் சிக்னலில் நின்னுது.அப்ப ஜன்னல் வழியா நா வெளியில பார்த்த காட்சி எனக்கு ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துச்சு சிரிப்பு,அழுகை தெல்லாம் கடந்த ஒரு மாதிரியான மனநிலை, நா பார்த்தது அந்த பொண்ண... 

photo

      எனக்கு நல்லா தெரியுது. ஆமா அது அந்த பொண்ணு தான்,ஒரு பையன் கூட பைக்ல பின்னாடி உட்கார்ந்து சிக்னல்ல அந்த ரோ கிராஸ் பண்றதுக்காக காத்துக்கிட்டிருந்தாநேத்து என் முன்னாடி ஷேர் ஆட்டோவில வச்சு போன்ல அழுது சண்டை போட்டு திடீர்னு இறங்கி போச்சே, நிச்சயமா அதே பொண்ணு தான்.இப்ப உயிரோட என் கண் முன்னாடி, அதுவும் பைக்ல ஒரு பையன்  பின்னாடி சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே உட்கார்ந்திருக்குறா...
  
   அப்ப  காலைல பேப்பர்ல இறந்து போனதா செய்தி போட்டிருந்ததே  அது இவ இல்லையா? அப்டின்னா அந்த பொண்ணு யாரு?அவளுக்கு  என்ன பிரச்சனை? அ  எதுக்கு தற்கொலை பண்ணிக்கிட்டா? இப்ப  என் கண் முன்னாடி நிக்கிற பொண்ணு கூட இருக்கிறது யாரு? நேத்து சண்டை போட்ட லவ்வரா? இல்ல இது  வேற பையனா? கேள்விகள் அடுக்கடுக்கா வந்துக்கிட்டே இருந்துது எனக்கு, அதுக்குள்ள என் பஸ் அந்த இடத்த விட்டு நகர்ந்துடுச்சு.அந்த ஜோடியும் வேகமாக அந்த ரோட்டில வேற பக்கமா திரும்பி போய் என் கண்ணை விட்டு  மறைஞ்சுட்டாங்க.

      அந்த பொண்ணோட பெயர் கூட எனக்கு தெரியாது ஆனா அவளோட உருவம் மட்டும் என் மனசில ஆழமா பதிஞ்சுருந்தது.எனக்கு ப்பதான் நிம்மதியா இருந்துச்சு.ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு உணர்வு சொல்லமுடியாத சந்தோஷம். கடவுளே நன்றி,அப்டி இப்படின்னு ஒவ்வொன்னா யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது மனசுக்குள்ள எங்கேயோ எப்பயோ படிச்ச ஒரு வாசகம் மட்டும் திரும்ப திரும்ப வந்துபோச்சு "தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ஏன் வாழ்ந்துபார்க்க கூடாது"...
         
இப்படிக்கு 
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் ஏப்ரல்-15 -2012.

5 comments:

Unknown said...

Very thrilling.



Kadaisi varaikum antha ethiparppu antha share auto ponnuku enna prachaniyo ngira parithavippu, ipadi ayiruka koodathu ngra parithavippu apuram antha ponnaiye traffic signalla parthen gira pothu yerpatta magilchi nu niraiya unarvugalai thatti vittathu end la super a oru mesaage.

செந்தில்பாரதி.. said...

உண்மைதான்... காதலிப்பதற்கு கூட தைரியம் வேண்டும்... தற்கொலை செய்து கொள்வதற்கும்...தைரியம் வேண்டும்....
நீங்கள் சொல்வதைபோல இவ்வளவு தைரியம் இருப்பவர்கள் வாழ்வதில் ஒன்றும் தப்பில்லையே....

Unknown said...

nice venkat.seekiram kathai mudincitaenu varutham.super.unga love eppadi poguthu? vazthukal venkat.

Unknown said...

nice venkat.seekiram kathai mudincitaenu varutham.super.unga love eppadi poguthu? vazthukal venkat.

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

thanku johny anna for you comment sorry for late rply

and thanku senthik bharathi

thanks preamlatha