Sunday, April 3, 2011

வாசனை !!!





         மதியம் நாலாவது சயின்ஸ் பிரியட் ஆரம்பிச்சதிலிருந்தே மகேஸ்வரி கடிகாரத்தையே தான் பார்த்துகிட்டிருக்கா வேற ஒன்னும்மில்ல 4 மணி எப்ப ஆகும்ன்னு தான்....

        அஞ்சாவது  படிக்கிற மகேஸ்வரிக்கு தினமும் 4 மணிக்கு தான் ஸ்கூல் விடும். இன்னைக்கு அவளால கிளாஸ்ல இருக்க முடியல,எப்ப கிளாஸ் முடியும் வீட்டுக்கு ஓடலாம்னு உட்கார்ந்திருக்கிற பெஞ்சில இருக்க முடியாம உரு​ண்டுட்டு வர்றா ...

        கார்ட்டூன் பாக்க போவாளோ? இல்ல தெரு பிள்ளைகளோட கிடந்து விளையாட இவ்வளவு அவசரமா? வீட்டுல எங்கேயாவது வெளியில கூட்டிட்டு போவாங்களா இருக்கும். ஹூம்.. இப்ப உள்ள பிள்ளைங்களுக்கெல்லாம் வீடியோ கேம்ஸ் எத்தனை? எவ்வளோ டி.வி சேனல்ஸ்? எப்ப பார்த்தாலும் விளையாட்டு... கொடுத்து வச்சதுங்க.... அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்களே ! கொஞ்சம் பொறுங்க ..

      ஆமா எல்லாருடைய கதையும் ஒரே மாதிரி இருக்கிறதில்லையே!!!!!!!!

      ஸ்கூல்ல மணி அடிச்சுருச்சு.........

     முதல் ஆளா வெளிய வர்றா மகேஸ்வரி, ஒரு கையில இடுப்பு பாவடைய தூக்கி பிடிச்சுகிட்டா. தோள்ல புத்தகப்பைய போட்டு அதோட வார் இருக்குல்ல, அத  தலைக்கு மேல் வழியா கொண்டு வந்து வாயாலகவ்விகிட்டு வேகமா ஓடுறா!....

     மகேஸ்வரி ஸ்கூல்ல இருந்து நாலு தெரு தள்ளி இருக்குது அவ வீடு அஞ்சு நிமிஷம் கூட ஆகல,அவ்வளவு  வேகத்தில வீட்டுக்கு வந்துட்டா, உள்ள நுழைஞ்​சதும் ஸ்கூல்பைய தூக்கி ஒரு ஓரமா போட்டுட்டு, மூஞ்ச கழுவி,பொட்ட வச்சு, மேல்டாப்ல இருந்த கூடைய தூக்கிட்டு நேரா ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்புறா...

    மறுபடியும் ஒரு ஓட்டம் வீட்டிலயிருந்து நெனைச்சத விட வேகமாவே ரயில்வே ஸ்டேசனுக்குள்ள நுழைஞ்சுட்டா, ஆனா அங்க இவளுக்கு முன்னாடியே நெறைய பேரு ஆஜராயிருந்தாங்க.

     இங்கெல்லாம் முன்ன பின்ன மகேஸ்வரி இப்படி வந்ததது கிடையாது. இன்னைக்கு அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அதனால இவ இங்க வந்தாதான் அவங்க வீட்டுல இன்னைக்கு  ராத்திரி சாப்பாடு.


    அவ கூடையிலிருந்து வர்ற வாசம் மெல்ல மெல்ல காத்துல பரவுது....கூட்டத்தில இருக்கிற யாரவது ஒருத்தர் நிச்சயமா அவக்கிட்ட வருவாங்கங்கற நம்பிக்கையில சத்தம்போட்டு கத்துறா... ஆனா அவ குரல், பக்கத்துல நிக்கிற ஆளுக்கு கூட கேக்கல...

     ஆனாலும் தொடர்ந்து கத்துறா...."அம்மா பூவே , அக்கா பூவே, மல்லி கனகாம்பரம் பூவே... முலம் 5 ரூபா பூவே பூவேணு கத்துறா..."




எல்லா வீதிகளிலும் ஏதோ ஒரு பிஞ்சின் குரல் இப்படி மணத்து கொண்டே தான் இருக்கிறது..... 




இப்படிக்கு 

மு.வெ.ரா-
திருநெல்வேலியிலுருந்து


மார்ச் நான்காவது வாரம்...2011

1 comment:

குரங்குபெடல் said...

நன்று . . . . நன்றி