Friday, June 24, 2011

கட்டபொம்மனின் கடைசி நாள் !



        காலையில தூக்கம் கலைஞ்சு முழிக்கிறார் ஜெகவீரபாண்டிய மன்னனின் மூத்த மகன். வீணராஜஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.அவர் உட்கார்ந்திருக்கிற பெரிய மஞ்சனத்தி மரத்தோட உச்சியில இருந்து இறங்கி கொஞ்ச கீழ வர்றார்.


அன்னைக்கு செவ்வாய்கிழமை 15 அக்டோபர் 1799....

        பாஞ்சாலங்குறிச்சியிலுருந்து வெளியேறி கடந்த மூணுவாரமா புதுக்கோட்டை முழுக்க சுற்றி திம்மியம் வந்து, இப்ப விராச்சிலை வழியா சிவகங்கை பக்கத்தில ஒரு அர்ந்த காட்டுக்குள்ள வந்து பதுங்கியிருக்கிறார் மன்னர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.


          கட்டபொம்மனுக்கு கருத்தையானு ஒரு செல்ல பேர் உண்டு.இப்ப காட்டில சுத்தி நல்லாவே கருத்து போயிட்டார்... 


         பலமுறை வேட்டைக்காக காடுகள்ல சுற்றியிருந்தாலும் இப்புடி உணவு,உறக்கம் இல்லாம சுத்துறது மன்னருக்கு இதுதான் முதல்முறை.


       அவர் தலைக்கு மேல ஒரு சிலந்தி அழகா பெரிய வலை பிண்ணியிருக்கு,அப்ப அண்ணாந்து பார்க்கிற மன்னரோட கண்ணுல அந்த வலை வழியா வர்ற சூரிய ஒளி பட்டு கூசுது.தலைய குனிஞ்சுக்கிறார் காட்டுக்குள்ள உற்று பார்த்துகிட்டிருக்கார்....

     பகல்லையே மரங்களோட அடர்த்தியால காடே இருண்டு போய் கிடக்குது, விலங்குகளோட உறுமல் சத்தத்துல அமைதியான அந்த இடமே அலறுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிக்கிட்டிருக்கார் மன்னர்.அவரோட படையில இருந்து ஆள் வர்றதா தகவல் வந்துருக்கு அதான் காத்துகிட்டிருக்கார் .

அப்ப பக்கத்தில ஏதோ காலடி சத்தம் கவனிச்சு கேக்குறாரு மன்னர் ...

       சருகுகளோட சலசலப்பு, கோட்டான்களோட அலறல், நெறைய காலடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி மன்னர நெருங்கி வந்துகிட்டிருக்கு .

அப்புறம்...... அப்புறம்........வார்த்தைய முழுங்குறான் விஜயன்......

      அப்ப அவன் மனைவி கேட்கிறா " என்னங்க ஆச்சு உங்களுக்கு இப்படி கண்ணாடி முன்னாடி நின்னு அப்புறம் அப்புறம்னுகிட்டு அரை மணிநேரமா புலம்பிகிட்டிருக்கீங்க?"

      ஏய் நீ வேற பயப்படதாங்கிறான் விஜயன் ...

அப்ப ஒழுங்கா பதில் சொல்லுங்கன்னு அவன் மனைவி சொல்றா ...
        அதுவா நா வெளியூர்ல வேலை பார்த்தவரைக்கும் வாரத்தில ஒருநாள் தான் வீட்டுக்கு வந்து போவேன். இப்ப நம்ம ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்த பிறகு நம்ம பையன் தினமும் கதை சொன்னா தான் நைட்டு தூங்குவேன்னு சொல்றான்....

         அதுவும் ராஜா கதை தான் சொல்லணுமாம் அவங்க மிஸ் நெறைய கதை கேக்க சொல்லிருக்காங்களாம். நமக்கு தாத்தா பாட்டி கூடவே இருந்தாங்க கதை கேட்டோம் அவனுக்கு அந்த வாய்ப்பும் இல்ல சரி ஒரு கதை சொல்லலாம்னு இன்னைக்கு காலைல இருந்து மனப்பாடம் பண்ணி வச்சேன். இதுக்கு அப்புறம் இந்த கதை மறந்து போச்சு... ச்சே....


     காலடி சத்தம் கேட்குது ,,,கட்டபொம்மன் உஷார் ஆகுறாரு.... அப்ப யாரோ? ஹம்..ஞாபகம் வரலியே....அப்படின்னு விஜயன் சொல்லிகிட்டிருக்கும்போதே ...



      அவன் மனைவி சொல்றாங்க "சரி சரி விடுங்க நம்ம பையனுக்கு ஹோம் வொர்க் செய்யவே நேரம் இல்லை.கதை கேட்கனும்னு அடம்பிடிச்சான்.2 அடி கொடுத்தேன். பாவம் பிள்ள சாப்பிட கூட இல்ல அழுதுட்டே தூங்கிட்டான்".



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்.
திருநெல்வேலியிலிருந்து...
காலம்:- மே மாதத்தில் ஒருநாள் -2011

Tuesday, June 14, 2011

நினைவோ ஒரு பறவை -1


கரையாத நினைவுகளுக்கு அஞ்சலி

பிறக்கும் போதே சரியாக அழவில்லையாம் அந்த குழந்தை பயந்தார்கள் சுற்றத்தார்.

பிறந்த பின் ஓவ்வொரு நாளும் அழுதுகொண்டே தான் இருந்தது ...

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றால் ஒளவை, ,
அதனினும் கொடிது நோய் முற்றி அதை தீர்க்க விடாத வறுமை...


அழுதான் ஒவ்வொரு நாளும் அழுதான் அதைத்தவிர அவனால் எதையுமே செய்ய முடியவில்லை ...

முயற்சிக்க அவன் தவறவில்லை பொறுத்து பார்த்த அவன் புறப்பட்டுவிட்டான்.

இப்பொழுது சந்தோசமாய் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டான்...

இன்று அவனைத்தவிர

எல்லாரும் அழுதோம் அழுதோம் அழுகை மட்டுமே கொண்டு இருக்கிறோம்.....

இன்று காற்றில் கலந்து விட்ட என் கல்லூரி நண்பன் குற்றாலிங்கம் ஆத்மா சாந்தியடையட்டும் இனிமேலாவது அவன் குடுமபத்தில் மழிழ்ச்சி பிறக்கட்டும்.....

இல்லாததை நினைத்து தினமும் வருந்தி கொண்டிருக்கும் என் போன்ற சாதாரணன்களுக்கு எதுவுமே இல்லமால் போராடி முடியாமல் போய் சேர்ந்த இவன் போன்ற உயிர்களின் வாழ்க்கை ஒரு பாடம்.....

வாழ்கை மிகவும் அழகானது தான் ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது....

14-06-2011

Friday, June 10, 2011

பாஸ்போர்ட் !!!


" சே ரேஷன் கார்ட்ல வீட்டு டோர் நம்பர் தப்பா இருக்குனாங்க மாத்துனேன், வோட் கார்ட்ல அப்பா பேர்ல கூட ஒரு A போட்டுட்டாங்க அத மாத்த சொன்னாங்க மாத்துனேன், அப்புறம் பெர்த் சர்டிபிகேட்ல என் இன்சியல் தப்பா இருக்கு மாத்துனாங்க அதையும் மாத்துனேன்."...


    "ஹ்ம்....இப்படி அவங்க கொடுத்ததெலாம் தப்பா கொடுத்துட்டு எனக்கு இப்ப மூணு மாசமா பாஸ்போர்ட் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க . இன்னும் போலீஸ் என்கொயரி,லஞ்சம் அப்பப்பா முடியலடா தீபன்னு" புலம்பி முடிக்கிறான் சங்கர் .ரெண்டு பெரும் ஸ்கூல்ல ஒன்னா படிச்சவங்க.ரொம்பா நாளைக்கு பிறகு  பார்த்துகிட்டாங்க.

        தீபன் ஒரு இலங்கை தமிழர். அகதியா இந்தியா வந்து இருபது வருஷங்களுக்கு மேல ஆகி போச்சு. கூலி வேலை தவிர பெரிசா எந்த வேலைக்கும் போக முடியல, என்னைக்காவது சொந்த நாட்டுக்கு போயிறலாம்ங்கற நம்பிக்கையில வாழ்க்கைய ஓட்டிட்டுருக்கான். எப்பயாவது சங்கர ரோட்டல பார்த்தா பேசுவான்.



      ரொம்ப நேரம் அமைதியா சங்கர் சொன்னத கேட்டுகிட்டிருந்த தீபன் பேச ஆரம்பிக்கிறான் .." டேய் சங்கர் எங்கடா நம்ம தமிழ்நாட்ட நம்பி தான் இங்க வந்தோம். கஷ்டப்பட்டு 50,000௦௦௦ சேர்த்து வச்சுருந்தேண்டா. ஏஜென்ட் ஒருத்தன் இத்தாலில வேலை வாங்கி தரேன்னு கேரளா கூட்டிட்டு போய் அடிச்சு விரட்டிட்டான்" எல்லாம் போச்சுடா அப்படிங்கறான்.

        அவனை ஆறுதல் படுத்திற மாதிரி சங்கர். "சரி விடுடா மாப்பிள்ளைங்கறான் அதுக்கு தீபன்... நாம பிரியறது கடவுளுக்கே பொறுக்கல போல " னு  சொல்லிகிட்டிருக்கும் போதே தீபன் செல்லுக்கு ஒரு போன் வருது யார்டானு கேட்கிறான் சங்கர்? டேய் நம்ம கூட டெண்த்ல படிச்சானே சுரேஷ்டா அப்படிங்கறான் தீபன்.

       போன வாங்கி பேசுறான் சங்கர் "டேய் சுரேஷ் டக்னு உன் முகம்
ஞாபகத்துக்கு வரல,  வாலிபால் விளையாட வருவியா ? இல்ல குமார் சார் கிளாஸ்ஸா ? என்.சி.சி ல இருந்தியான்னு விடாம பேசிகிட்டே போனான் சங்கர்.

         மறுமுனையில் சுரேஷ் "டேய் சங்கர் என்ன எல்லாரும் உளுந்தவடைனு கூப்பிடுவாங்கலேடா"

                 இப்ப சங்கர் கண்டுபிடிச்சிட்டான் "டேய் உளுந்தவடை ரொம்ப சந்தோசம்டா ! உன் போன் நம்பர் கொடுடா டெய்லி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன். அப்புறம் உன் ஆளு மூண்டகண்ணி எப்படி இருக்கா ? நம்ம பிரெண்டு பி.பி உங்க ஊர்தான டா அவன பார்த்தியா? நம்ம பாம்பு மெட்ராஸ் போய்ட்டான் தெரியுமா! கொசு என் கூட தான் வேலை பார்க்குறேண்டா " அப்படின்னு விடாமல் பேசிக்கொண்டே போனான் சங்கர் .

              உடனே சுரேஷ் " ஏய் சங்கர் ஒரு நிமிஷம் நில்லுடா எனக்கு பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை கிடைச்சுருக்கு. அத சொல்லத்தான் போன் பண்ணினேன். தீபன்ட்ட சொல்லிரு பேலன்ஸ் இல்ல கட் பன்னுறேண்டா எதவும் ஹெல்ப்னா கூப்பிடுறா மச்சான்னு போன வைக்கிறான்..........

          இப்ப சங்கர் தீபன பார்த்து லேசா சிரிக்கிறான் .......

இப்படிக்கு
திருநெல்வேலியிலிருந்து.மு.வெங்கட்ராமன்
காலம்:-ஜூன் இரண்டாவது வாரம் 2011.

Thursday, June 9, 2011

தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!



"சுலோச்சனா முதலியார் பாலம்" நெறைய பேருக்கு இப்படி சொன்னா தெரியாது, அதாங்க திருநெல்வேலி கொக்கிரகுளத்தில இருக்கிற தாமிரபரணி ஆற்றுப்பாலம் ...
      
   காலையில ஓர் ஏழு மணி இருக்கும்.

   'அங்க அவசரமா வண்டிய நிப்பாட்டி போன் அட்டென்ட் பண்றான் முத்து.
"டேய் நயினார் வடக்கு பைபாஸ் ரோடு ஆற்றங்கரைக்கு வந்திரு,
அங்க குளிச்சுக்கலாம்னு " சொல்லிட்டு போன் கட் பண்ணிட்டான் 

     அந்த இடத்தில கொஞ்சம் கூட்டம் கம்மி.அதுமட்டுமில்ல அங்க பக்கத்தில இருக்கிற கோபுரம் மட்டுமே மிஞ்சியிருக்கிற ஆசியாவிலேயே மிகப்பெரிய பிள்ளையார் மனிமூர்த்தீஷ்வர உச்சிஷ்ட கணபதி கோயிலும் ஒரு காரணம். வழக்கமா இங்க ஆறுல குளிச்சிட்டு அந்த கோவிலுக்கு போய் ஒரு கும்பிடு போட்டுட்டு போறது இவங்க இரண்டு பேர் பழக்கம்.




' முத்து-நயினார்' இரண்டு பசங்களும் கடப்பாரை நீச்சல் ஸ்பெஷலிஸ்ட்:"
நீச்சல்ல அவ்ளோ எக்ஸ்பெர்ட்டானு நெனச்சுராதிங்க. கடப்பாறைய தண்ணிக்குள்ள போட்டா என்ன ஆகும் ?..........
முழ்கிரும்... அதே தான் "நம்ம ஊருக்குள்ள சுனாமி வரதுக்குள்ள எப்புடியாவது நீச்சல் கத்துப்பேன்டானு" சபதம் போட்டு சுத்துற கூட்டத்தில இவனுங்களும் உண்டு...


      நயினாரும் வந்துட்டான் சாரத்த  கட்டிக்கிட்டு ரெண்டு பேரும் ஆற்றுக்குள்ள ஓரமா ஒரு பாறைய பிடிச்சு செட்டில் ஆகுறாங்க. முதல்ல முத்து கிழக்க பார்த்து தண்ணிக்குள்ள நல்லா முணு முங்கு முங்கி எந்திரிக்கிறான்.

          நயினாரும் ஆற்று தண்ணியில மூங்கிட்டே பேச்ச ஆரம்பிக்கிறான், "டேய் முத்து ஆனா நம்ம ஊர்ல யாருக்குமே பொறுப்பு இல்லடா...நம்ம தாமிரபரணி ஆற்றுல ஒரு இடம் விடாம மணல் அள்ளுறாங்க, எல்லா பாக்டரி சாக்கடையையும் ஆற்றுல கலக்குறாங்க..அரசாங்கமும் இதெல்லாம் கண்டுகிறதில்ல. ஏதோ கோடகம் கால்வாய் திட்டம்னு போட்டு சின்ன கால்வாய் எல்லாம் பாதுகாக்கிறாங்க. ஆனா இவ்வளவு பெரிய ஆறு ஜீவநதியா ஓடுற நம்ம தாமிரபரணிய கண்டுக்க மாட்டிக்கிறாங்க"...

         அப்ப முத்து சொல்றான் ."டேய் நயினார் நீ வேணா பாரு இன்னும் நாலஞ்சு வருஷம் தான் அப்புறம் தாமிரபரணியும், கூவம் நதி மாதிரி ஆயிரும்..... பிறகு நம்ம அரசியல்வாதிங்க சிங்கப்பூர்ல ஒரு ஆற்ற சீர்படுத்தின மாதிரி தாமிரபரணியையும் மீட்ப்போம்னு அறிக்கைவிட்டு ஒட்டு வாங்குவாங்க "

ரெண்டு பேரும் சத்தம் போட்டு சிரிச்சாங்க..... :-) .


           அப்ப நயினார் பாறை மேல வச்சுருக்கிற ரெண்டு ஷாம்பூ பாக்கெட்ல ஒன்ன எடுத்து வெட்டி நல்ல தலையில தேய்க்கிறான்.."என்னடா முத்து இதுல நுரையே வரல என்ன ஷாம்பூ இது... எவன் தயாரிக்கிறானோ சுத்தமா  நுரையே வரல ஏமாத்துறானுங்கடா விளம்பரம் மட்டும் பளபளக்குது சரி அந்த இன்னொரு ஷாம்பூவ வெட்டு"ன்னு அதையும் வாங்கி தலையில உடம்புல எல்லாபக்கமும் நல்ல தேய்க்கிறான் நல்ல நுரை வந்து நயினாரோட கருத்த உடம்பு வெள்ளையானத சந்தோசமா பார்த்துட்டே தண்ணிக்குள்ள ஒரு முங்கு மூங்கி எந்திரிக்கிறான் .....

             அப்ப நயினார சுற்றிலும் ஒரு நாலு அடி தூரத்துக்கு ப்ச்சை நிற தாமிரபரணி தண்ணி ஷாம்பூ நுரையால வெள்ளையா மாறி மறையுது ....

இப்படிக்கு...
திருநெல்வேலியிலுருந்து மு.வெங்கட்ராமன்
காலம்:-ஜூன் முதல் வாரம் 2011....