Wednesday, December 7, 2011

"போராடுவோம் போராடுவோம்"


        இன்னையோட மூணாவது தடவை இந்த வருஷத்தில ஸ்ட்ரைக் நடக்குது. பெட்ரோல் விலை உயர்வ மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லி மாநிலம் முழுக்க எல்லா கடைகளையும் தனியார் நிறுவனங்களையும் மூடச் சொல்லி ஊர்ல இருக்கிற எல்லா சங்கங்களும் அறிவிச்சிட்டாங்க.

        நெறைய பஸ்ஸூம் ஓடாததனால காலேஜ்,ஸ்கூல் போற பசங்களுக்கும் பிரச்சனை காலையில 6 மணியில தொடங்கி சாயங்காலம் 6 மணிக்கு முடியற இந்த ஒருநாள் பந்த்தால அரசாங்கம் பணியுற மாதிரி தெரியில...அவங்க ஓவ்வொரு காலகட்டத்திலையும் விலையேற்றிக்கிட்டுதான் இருக்காங்க.

     இவங்களும் ஒருநாள் ஸ்ட்ரைக் பண்ணிட்டுதான் இருக்காங்க,விலைவாசியும்  குறைஞ்சபாடில்ல. இதனால பாதிக்கப்படுறது. நம்ம முத்துக்குமார் மாதிரி தினக்கூலி சம்பாதிக்கிறவங்கதான் ஒருநாள் பட்டினி இருக்கவேண்டியதாயிருது.



       இந்த ஸ்ட்ரைக்கால இன்னைக்கு கடை லீவுங்கிறதால முத்துகுமார் வெளியில சுத்திட்டு வீட்டுக்குள்ள வரும் போது அவன் பொண்டாட்டி ஆரம்பிச்சுட்டா " இன்னைக்கு இருந்த அரிசியை வச்சு கஞ்சி காய்ச்சிட்டேன். நாளைக்கு பட்டினிதான் உங்க முதலாளி கடைய முடுறாருனா அட்வான்சா ஒரு 100ரூபாய் கொடுத்திருக்கலாம்ல, நம்மள பத்தி யாரு நினைக்கிறாங்க....சரியா உன்ன கல்யாணம் பண்ணின பாவத்துக்கு இந்த பசி கொடுமைய நா அனுபவிக்கலாம் உன் பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சு.நாளைக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது வழி பண்ணாம இராத்திரி வீட்டுக்கு வந்திராதணு " கத்திட்டு உள்ள போயிட்டா..



         என்ன பண்றதுங்கிற யோசனையோட வீட்ட விட்டு வெளியில் வர்ற முத்துக்குமார் கண்ண மூடி மேல பார்த்து கொஞ்ச நேரம் அப்படியே நிக்கிறான். அப்ப தூரத்தில மைக்செட்ல

     "நாளை இசக்கியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஏழு மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்  பக்தர்கள் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக"ஒரு குரல் அவன கடந்து போகுது... லேசா புன்னகையோட கண்ண திறக்கிறான் முத்துகுமார்.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011

No comments: