Saturday, December 24, 2011

"தமிழ் சினிமா 2011"

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு கதை கவிதைகள தாண்டி என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற சில விசயங்கள பகிர்ந்துக்கலாம்னு நெனைக்கிறேன்.கடந்த வருடம் சென்னையில இருந்ததால முதல் முறையா சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சுது.அதுல பாடல்கள் இல்லாம சண்டைகள் இல்லாம பல்வேறு நாட்டோட பல மொழிகள்ல வந்திருந்த படங்கள சப் டைட்டில தாண்டி பல உணர்வுகள உள்வாங்கி பார்த்தது ஒரு புதிய அனுபவமா இருந்தது. அதை வார்த்தைகளால விவரிக்கிறது கடினம் சென்னையில வருடத்திற்கு ஒரு முறை வர்ற இந்த விழாவ தமிழகத்தில சினிமா ஆர்வலர்களா தங்கள நெனைக்கிற எல்லாருமே கண்டிப்பா கலந்துகிட்டு பார்க்கணும். நாலு ஸ்டார் படங்கள முதல் நாள் பார்த்தா ஆகுற செலவு தான் இங்க ஒன்பது நாட்கள் மொத்த படங்களையும் பார்க்குறதுக்கு ஆகுது. சில இந்திய மொழிப் படங்கள் திரையிடப்படும் போது அதில பணியாற்றின கலைஞர்கள்கிட்ட உரையாடி பல விஷ்யங்கள தெரிஞ்சிக்கிற வாய்ப்பும் கிடைக்குது.


ஆனா இந்த வருஷம் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்து வைக்கல, நா திருநெல்வேலியிலேயே என் வேலைய தொட்ரறதுனாலயும்,சென்னையில இருக்கிற பல நண்பர்களோடையே தொலைபேசி புண்ணியத்தல தான் உறவே தொடருதுங்கிறதாலயும். இந்த வருஷம் தமிழ் சினிமால எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் என்ன பாதிச்ச சில படங்கள் நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், எல்லாரையும் பத்தி கொஞ்சம் சுருக்கமா திரும்பி பார்க்கிற மாதிரி சில விசயங்கல பகிர்ந்துக்குறேன் படிச்சு உங்க கருத்துக்கள பகிர்ந்துக்கனுமுனு கட்டாயமா கேட்டுக்குறேன்.


சினிமா:-2011





நடிகர்கள்:-1

நிழல் கதநாயகர்களே நிஜ கதாநாயகர்களாக இன்னும் திரையில் தோன்றி கொண்டிருக்க முடியாது. மாஸ் ரசிகர்கள் குறைந்து கிளாஸ் ரசிகர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்கிற இன்றைய தமிழ் சூழலை தமிழ் சினிமா கதாநாயகர்கள் உணர தொடங்கிய வருடம் 2011 . உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமலின் படங்கள் இந்த வருடம் இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் மற்ற எல்லா முன்னணி நாயகர்களின் படங்கள் வெளிவந்து அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டன.அவர்களோடு போட்டிபோட நாளுக்குநாள் திறமையான புதுமுகங்களும் அறிமுகமாக தொடங்கியுள்ளத்தால் முன்னணி நாயகர்கள் கூட வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை தேடி நடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.



இது தமிழ் சினிமாவின் நல்ல மாற்றத்தின் தொடக்கம்.இந்த வருட சிறந்த நடிகர்களாக திரையில் வாழ்ந்தவர்களில் மனதில் நின்றவர்களில் சிலரை பத்தி இப்ப பார்க்கலாம்.முதலில் தனுஷ் இவருக்கு இந்த வருடம் அவரது திரைப்பட வாழக்கையில் முக்கியமான வருடம் மொத்தம் ஐந்து படங்கள் வெளிவந்தன அனைத்தும் அவரின் முத்திரை பதித்த படங்களாக வந்தன.முதல் படமான ஆடுகளமே அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று தனி இடம் பெற செய்தது.அடுத்து சேரன் இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த திரை பிரபலம் சென்ட்மென்ட் கதைகளை தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் மிஷ்கினின் யுத்தம் செய்,அவரது உதவியாளர் ராஜேஷ் மாதவ் இயக்கிய முரண் என்ற இரண்டு வித்தியாசமான படங்களில் கதை நாயகனாக தோன்றி மக்கள் மனதில் அழுத்தமான இடம் பிடித்த ஆண்டு இது.


அடுத்து விமல் பசங்க மூலம் அறிமுகமாகி இந்த வருடம் தூங்கா நகரம்,எத்தன்,வாகை சூட வா என்ற மூன்று படங்களின் இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் பட்டியலில் தன் இடத்தை தக்க வைத்து கொண்டார்.இந்த வருடம் பல திரைப்பட வாரிசுகள் மட்டுமல்லா மால் பல்வேறு புதிய நாயகர்கள் தமிழ் சினமாவில் அறிமுகமானாலும் நாய்கர்களுக்கான இலக்கணத்தை உடைத்து கதை தான் ரியல் ஹீரோ என உணர்த்திய அப்புக்குட்டி அழகர் சாமியின் குதிரை படம் மூலம் திறமைகளை மட்டுமே நம்பி இருக்கும் பல புதிய நடிகர்களுக்கான வாசலை திறந்துவிட்டார்.


அடுத்து தென்னிந்திய சினிமாவின் ஆல் டைம் பேவரைட்டான சூர்யா ஏழாம் அறிவில் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றி கலக்கினார். அடுத்து பாலாவின் அவன் இவன் மூலம் உலகிலேயே முதல்முறையாக மாறு கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.ஏற்கனவே வித்தியாசமான் கதாபாத்திரங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ள விக்ரமிற்கு தெய்வ திருமகள் படம் மேலும் ஒரு மணிமகுடம்.ஹீரோ என்றால் நேர்மறையான கதாபாத்திரங்கள் தான் அவர் நல்லது செய்ய வேண்டும் அநீதியை கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற லாஜிக்கை உடைத்தெறிந்து வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடித்து மங்கர்த்தா படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார். எந்த நடிகர் வந்தாலும் ரசிகர் மன்றம் தொடங்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டிய ஒரு சில நடிகர்களில் இவர்கள் இந்த வருடத்தின் முக்கியமானவர்கள்.


நடிகர்கள்:-2

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் பெர்பாமன்ஸ் மட்டும்மல்லாமல் வியாபார ரீதியாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறியிருக்கும் ஒரு சிலரை பற்றி இங்கே விரிவாய் பார்க்கலாம்.ஹீரோவிர்க்கான எந்த வித முக லட்சணங்களும் இல்லாதவர் என தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்ட இவர்.தற்பொழுது முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளார். இந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்களில் மூன்று பெரியளவில் பேசப்படவில்லை என்றாலும் ஆடுகளம் மயக்கம் என்ன என்ற இரு வெவேறு பரிமாணங்கள் நடிகர் தனுஷை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடமும் இந்திய அளவில் மிக பெரிய பெயரும் புகழும் பெற செய்திருக்கிறது.அடுத்து எந்த வித குடும்ப பின்னணியும் இல்லாமல் முறையான பயிற்சியோடு பல வருட போரட்டத்திற்கு பிறகு பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இந்த வருடம் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் நல்ல நடிகர் இயக்குனருக்கான நடிகர் என்கிற பெயரை வாங்கி தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் நடிகர் விமல்.அடுத்து விக்ரம், இயக்குனர் பாலா மூலம் மறுபிறவி கிடைத்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிப்போன விக்ரம் தன்னை மீண்டும் நிருபித்திருக்கும் வருடம் 2011. பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தெய்வ திருமகள் படம் மூலம் உடல் மொழியால் அதிகமாய் பேசி இந்த வருடத்தின் தேசிய விருது பட்டியலில் இவரும் இருப்பார் என ரசிகர்களை பேச வைத்து இருக்கிறார்.


கமெர்சியல் தான் தன் அடையாளம் என்பதை மாற்றி பரிச்சார்த்த முயற்சிகளுக்கு நான் தயார் என்று உடல் வருத்தி உலக நடிகர்கள் வரலாற்றில் முதல் முறையாக மாறுகண் உள்ள நபராகவும் பெண் தன்மை உள்ள ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்து.இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தன அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.அடுத்து அஜித் மாஸ் ஹீரோ பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இவருக்கு ரசிகர்கள் அதிகம் இந்த வருடம் வெளிவந்திருக்கும் மங்காத்தா திரைப்படத்தில் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்து நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.


இந்த நடிகர்களின் புதிய அவதாரங்களை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல சக திரைப்பட நடிகர்களும் அசந்து போய் அடுத்த வருடத்தில் இவர்கள் நடிப்பில் வெளிவரயிருக்கும் படங்களை மிக ஆர்வமாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பது நிதர்சனம்.

நடிகைகள்:-

தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்திருப்பது கதாநாயகர்கள்தான். நடிகைகளை பொறுத்தவரையில் குறுகிய காலம் தான் அதிலும் அவர்கள் நடிப்பதற்க்கான வாய்ப்புள்ள படங்கள் அமைவது என்பது மிக அரிதான நிகழ்வாக கடந்த சில காலங்களில் இருந்தது.டைட்டிலில் பெயர் போட்டதற்காக இரண்டு காதல் காட்சிகள் நான்கு டூயட் பாடல்கள் என்று மட்டுமே நடிகைகளை பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாவில் தற்பொழுது மீண்டும் நடிகைகளை மைய்யப்படுத்திய கதைகளையும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களும் வர தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் இந்த் 2011ஆம் வருடத்தில் மிக அதிகமான புதுமுக கதாநாயகிகள் அறிமுகமும் கடந்த வருடம் புதுமுகங்களாக இருந்த கதாநாயகிகளின் அடுத்தடுத்த படங்களும் திரைக்கு வந்தன.அவற்றில் திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் திரும்ப திரும்ப நினைத்து பார்க்கும் அளவுக்கு நடிப்பால் கதாபாத்திரத்தால் பேசப்பட்ட சில நடிகைகளை நினைவுபடுத்தலாம்னு நெனைக்கிறோம்.முதலில் கல்கி தமிழ் சினமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் என்ற பெயரை மட்டுமல்லாது நல்ல நடிகை என்கிற பெயரையும் தக்கவைத்து அவரது வாழ்வியல் சூழலை ஒட்டி நடக்கும் கதாபாத்திரம் என்பதை உணர்ந்து நடித்து தான் சார்ந்துள்ள திருநங்கை சமுதாயத்தின் அடையாளமாக மாறினார்.

அடுத்து நடிகை அனுஷ்கா கவர்ச்சியான ரோல்களில் மட்டுமே தமிழில் தலை காட்டி வந்த இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெற்றிகரமாக ஓடிய அருந்ததி படத்தின் மூலம் நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்று, ஏற்றுகொண்ட முக்கியமான நேரடி தமிழ் திரைப்படம் தெய்வதிருமகள். இதில் ஒரு கனமான கதாபாத்திரத்தை மிக அழகாகவும் இயல்பாகவும் செய்து அனைவரையும் கவர்ந்தார். அடுத்து அஞ்சலி அறிமுகமான கற்றது தமிழ் என்ற முதல் திரைப்படத்திலிருந்தே சிறிய வயதிலேயே ஆழமான பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியிருந்த அஞ்சலி இந்த ஆண்டு நடித்த அனைத்து படங்களுமே அவரை பற்றி அதிகமாக பேசவைத்த படங்கள். அதில் குறிப்பாக அவரது வயதுக்கு முதிர்ந்த தோற்றத்தில் நடித்திருந்த கருங்காலி மற்றும் மிக இயல்பான காதலியின் பிரதிபலிப்பை காட்டியிருந்த எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் நல்ல நடிகை என எல்லாராலும் பாராட்டப்பட்டு அவரது நடிப்பிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அடுத்து இனியா இந்த வருடம் அறிமுகம். தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோயின்களின் தாய்மாநிலமான கேரளத்து வரவானாலும் தமிழக முகசாயலில் எல்லோராலும் கவரப்பட்ட நடிகையாக கிராமத்து நடிப்பில் முத்திரை பதித்த வாகை சூட வா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சி பயணத்தை தொடங்கியுள்ளார்.



இந்த வருடம் முழுக்க ஆடி பாடி ஓய்ந்த அத்தனை நடிகைகளையும் தன் நடிப்பாலும் வசீகரமான முகத்தாலும் வருட கடைசியில் வெளிவந்த ஒஸ்தி, மயக்கம் என்ன என்ற இரண்டு படங்களின் மூலம் கிராமம் நகரம் என இரு வேறு கதாபாத்திரங்களில் அசத்தி 2012 ஆம் வருடத்தின் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகியாய் இடம் பெறப்போவது நிச்சயம் என்பதை உணர்த்தியிருக்கிறார் ரிச்சா கங்கபாத்தியாய் . இந்த முறை தமிழ் சினிமா கனவுக்கன்னிகளை மட்டுமல்ல தரமான நடிகைகளையும் தந்திருப்பது இந்த வருடத்தின் சிறப்பு.


நகைச்சுவை நடிகர்கள் :-

திரைப்படங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவை என்கிற விஷயம் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது அதிலும் கதையோடு இணைந்த கருத்துக்கு முக்கியத்துவம் நகைச்சுவைக்கு மக்களிடம் என்றுமே குறையாத வரவேற்பு உண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் இருவர் முன்னணியில் இருப்பார்கள்.அன்றைய கலைவானர் என்.எஸ்.கே.மதுரம் தம்பதியினரில் தொடங்கி நேற்றைய வடிவேலு விவேக் வரைக்கான ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்கு எல்லா திரைப்படங்களிலும் ஆட்சி செய்வார்கள்.



அந்த வரிசையில் அடுத்தகட்டம் இது இந்த வருடம் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக்கின் படங்கள் அதிகமாக வெளிவரவில்லை வந்த ஒரு சில படங்களும் ஒரே மாதிரியானதாகவும், நாடகத்தனமானதாகவும் இருந்ததால் மக்களிடம் பெரிதும் எடுபடவில்லை.அவர்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்த வருடம் மற்ற நகைச்சுவை நடிகர்கள் கைப்பற்றி அவர்களுக்குரியாதாக மாற்றியிருக்கிறார்கள்.அந்த வரிசையில் முதலில் அதிகமான தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் எல்லா வீட்டினருக்கும் செல்லபிள்ளையாக மாறிப்போன சந்தானம்.தொடக்கத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக பேசும் நடிகராக பார்க்கப்பட்ட இவர் இன்று தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பதற்கு காரணம் இவரின் இயல்பான நடிப்பும் எளிமையான அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசனங்களும் மிக முக்கிய காரணம் குறிப்பாக சிறுத்தை,வானம் தெய்வதிருமகள் ஆகிய படங்களில் இவர் செய்த பங்களிப்பு இவரை நகைச்சுவை நடிகராக மட்டும் ஒதுக்கி விடாமல் படம் முழுவதும் வரும் செகன்ட் ஹீரோ அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.


அடுத்து வெண்ணிலா கபடி குழு ஐம்பது பரோட்டா சூரி என்று சொல்லும் அளவிற்கு ஒரே படத்தில் நகைச்சுவையின் உச்சம் தொட்ட இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை,போராளி போன்ற திரைப்படங்கள் இவருக்கான தனி அந்தஸ்தை 2011 -ல் பெற்று தந்துள்ளது. ஏற்கனவே நகைச்சுவையில் தனி பாணியில் கலக்கி கொண்டிருந்த கஞ்சா கருப்புக்கு இந்த ஆண்டு நகைச்சுவை நடிப்பில் ஒரு ஏற்றத்தை ஏற்படுத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.மொத்தத்தில் நகைச்சுவை என்கிற தனி டிராக்களாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் ஆரோக்கியமான நகைச்சுவை மாற்றத்தை தமிழ் சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறது இந்த 2011 ஆண்டு.


பாடலாசிரியர்கள்:-

கவிதைகள் இலக்கியமாக ஒதுங்கியிருந்த இரண்டு நூற்றாண்டுக்கு முன் இருந்த காலம் மாறி கடந்த நூற்றாண்டில் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி இன்று புதிதாய் பரிணமித்திருக்கிற எல்லா கவிஞர்கள் வரை அவை பாடல்களாக, இசை கோர்வைகளாக, குறுவட்டுகளாக இணையத்தில் என பல்வேறு பரிமாணங்களில் உலவி கொண்டிருந்தாலும் அவை திரைப்பட பாடல் என்ற பலகைக்குள் வரும் பொழுது அவை தனி அடையாளமாகி பட்டொளி வீச தொடங்கி விடுகிறது.அதிலும் தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் படங்கள் வருவது இல்லை என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடல்களில் புரியாத வார்த்தைகள் ஒரு பக்கம் தெறித்து கொண்டிருந்தாலும் அர்த்தமுள்ள வித்தியாசமான பாடல் வரிகளால் மக்கள் மனதில் சந்தோஷ முடிச்சு போட்டிருக்கிறது 2011 -ஆண்டின் தமிழ் சினிமா பாடலாசிரியர்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் இது.


முதலில் கவிஞர் தாமரை பாடல் எழுத தொடங்கிய முதல் படம் முதல் வேற்று மொழி கலக்காமல் ஆபாசமான வரிகள் இல்லாமல் தான் பாடல் எழுதுவேன் என்கிற உறுதி குறையாமல் பாடல்களை எழுதி வரும் இவர் இந்த வருடம் எங்கேயும் காதல் திரைப்படத்தின் எங்கேயும் காதல் பாடல் தொடங்கி எழுதிய சில பாடல்களையும் வருடம் முழுக்க உச்சரிக்கும் பாடல்களாக மாற்றியுள்ளார்.அடுத்து வாலிபம் குறையாத வாலி மூண்றாம் தலைமுறையினரும் கொண்டாடும் இவரது பாடல்களில் இந்த வருடம் புதுப் புனல், கலசலா ,மச்சி ஓபன் தி பாட்டில் ,நங்கை போன்ற இளைஞர் களின் வாயில் எப்போதும் முனுமுனுக்க செய்யும் படல்களை தந்திருக்கிறார்.


அடுத்து நா.முத்துகுமார்.இவரது திரைப்படப்பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெரும் நபர்கள் அதிகரித்து வந்தாலும் இவர் அலட்டிக்கொள்ளாமல் கடந்த வருடங்களின் தொடர்ச்சியாக இந்த வருடத்திலும் அதிக பாடல்களை மட்டுமல்லாமல் அழகான ஹிட் பாடல்களையும் தந்து தவிர்க்க முடியாத பாடலாசிரியராக மீண்டும் இடம்பிடித்தார். அடுத்து வைரமுத்து இந்த வருடம் தன் மகனோடு களம் இறங்கியுள்ளார். இருவரும் போட்டி போட்டு கொண்டு ஹிட் படல்களை கொடுத்த வருடம் குறிப்பாக வாகை சூடவா வில் சரசர சார காற்று தொடங்கி பல தனி அடையாள பாடல்களை தந்திருக்கிறார்.


அதேபோல் அவரது மகன் மதன் கார்க்கியும் நுட்பமான வரிகளால் அறிவியல் ரீதியான பல்வேறு வார்த்தைகளை தமிழ் பாடலகளில் உலவவிட்டு பாடல்களை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார் குறிப்பாக ஏழாம் அறிவு படத்தில் இவர் எழுதிய சீன பாடலை சொல்லலாம்,கோ திரைப்படத்தில் இவரின் என்னமோ ஏதோ இந்த வருடத்தில் அதிகமாக இணையத்தில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் இவரை மூத்த இளம் இசையமைப்பாளர்கள் வரை அனைவராலும் தேடபடுப்பவர்களில் ஒருவராகவும் மாற்றியிருக்கிறது.



அடுத்து இந்த வருடம் புதிய பாடலாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் நடிகர் தனுஷ் இளைஞர்களின் நாடித்துடிப்பை இவர் சரியாக புரிந்து கொண்டு இவர் சாதரணமான வார்த்தைகளால் பேச்சு வழக்கை பாடல்களாக மாற்றி எழுதிய பாடல்கள் இந்த வருடத்தின் மோஸ்ட் வாண்டட் சாங்க்ஸ் என்றால் அது மிகையாகாது.இந்த வருடம் படங்களில் கதைக்கு இடைஞ்சல் இல்லாமல் அதே வேளையில் அவசியமான இடங்களில் பாடல்களை இடம்பெற செய்து நல்ல பாடல்களுக்கான முக்கியத்துவத்தையும் நல்ல பாடலாசிரியர்களுக்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது தமிழ்சினிமாவின் 2011 ஸ்பெஷல்.


இசையமைப்பாளர்கள்:-1

இசையும் இயலும் நாடகமும் ஒருங்கிணைந்து ஒளிப்படமாகிய வரலாறு தான் சினிமா.காட்சிகளில் வசனங்கள் பூர்த்தி செய்யாத பல இடங்களை இசையால் முழுமை பெற செய்யும் வலிமை இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே உண்டு. உலக சினிமாவில் பின்னணி இசை மட்டுமே ஆட்சி செய்கிறது இந்திய சினிமாவில் பின்னணியும் பாடல்களும் தான் படத்தின் ஊக்கமாக இருக்கின்றன. படம் வெளிவருவதற்கு முன்னேரே இசை வெளியிட்டிற்கு பெரிய வரவேற்ப்பை கொடுப்பது இந்திய சினிமாவில் தமிழ் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது.


எம்.எஸ்.வி. இளையராஜா ஆண்ட தமிழ் சினிமா இசையை இந்த வருடம் பத்துக்கும் மேற்பட்ட புது இசையைமைப்பளர்கள் பழைய இசையமைப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டு 2011 ஆம் ஆண்டை ஒரு மியுசிக்கல் ஆண்டாக மாற்றியுள்ளனர்.இந்த வருடத்தின் புதிய வரவுகளான எங்கேயும் எப்போதும் -சத்யா,யுத்தம் செய் -கே.,வாகை சூடவா ஜிப்ரான்,கண்டேன் -விஜய் எபினேசர்,முரண்- சாஜன் மாதவ், ரவுத்திரம்- பிரகாஷ் நிக்கி,ஆகியோர்களால் இசை இன்னும் இளமையானதொடு மட்டுமல்லாமல் அந்த படங்களுக்கு பாடல்களால் தனி பெயரையும் வாங்கி தந்தது. அடுத்து இளையாராஜா இலக்கிய படைப்புகளான பொன்னர் சங்கர்,மற்றும் அழகர் சாமியின் குதிரை படங்களுக்கு த்ன் இசையால் உயிரும் மதிப்பும் குடுத்து தனி இடத்தில் நிற்கிறார்.


அடுத்து அவரது மகன் யுவன் சங்கர் ராஜா அப்பாவின் பெயரை இந்த வருடமும் அவர மெய்பிக்கும் வகையில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் மூலம் இந்த வருட இசை பயணத்தின் உற்சாக பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரியான மெட்டுகளையே இவர் எல்லா படங்களிலும் தருகிறார் என்கிற விமர்சனமிருந்தாலும் ரசிக்கும் படியான பால்களை தருவது இவரின் தனிச்சிறப்பு.அடுத்து ஜி.வி.பிரகாஷ் எ.ஆர்.ரகுமானின் மருமகன் என்கிற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல் அவரின் புகழுக்கு மேலும் புகழ சேர்க்கும் வகையில் இவர் இந்த் வருடத்தில் இசைஅமைத்த ஒவ்வொரு பாடல்களும் மெகா ஹிட்.


அடுத்து வித்யாசாகர் பெயரளவில் சில படங்களை இவர் இந்த வருடத்தில் செய்திருந்தாலும் அந்த படத்தின் பாடல்கள் கால ஓட்டத்தில் கரைந்து சென்று விட்டன என்றே சொல்லவேண்டும். அடுத்து காதலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். ரகுமானிடம் வேலை செய்துவிட்டு திரும்பி இந்த் வருடம் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்த வெப்பம் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் பேசப்பட்டவனாக இருந்தன.அடுத்து பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கில் கவனிக்க தக்க பாடல்களை கொடுத்து மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் தமன் . இன்று கடைசியாக விஜய் ஆண்டனி ஒரு பக்கம் நடிப்பை தொடர்ந்து இசையையும் கைவிடாமல் இவர் இந்த் வருடம் இசையமைத்த படங்கள் அனைத்தும் லோக்கல் குத்து மொத்தத்தில் இந்த வருட இசை ஜொலித்தது.


இசையமைப்பாளர்கள்:-2


இந்த வருடம் இசை மழை பொழிந்தாலும் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்த பாடல்களை தந்த இசையமைப்பளர்களை பற்றி கொஞ்சம் விரிவா பார்க்கலாமா? முதலில ஜிப்ரான் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வாகை சூட வா படத்தின் மூலம் தன் முதல் பட இசை வாய்ப்பை பெற்ற இவர் தன் பொறுப்பை உணர்ந்து சமகால வரலாற்று இசையை மிக அருமையாக தந்திருக்கிறார். அத்துணை பாடல்களும் ரசிக்கும் படியாக இருந்தது சிறப்பு,அடுத்து கண்டேன் படத்தின் அறிமுக இசையமைப்பாளர் விஜய் எபினேசர் படத்தின் காதல் பாடல்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் வெவ்வேறு விதமாக தந்து தனி இடம் பிடித்தார்.


அடுத்து எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சத்யா முதல் படம் என்பதை எந்த இடத்திலும் உணராத வகையில் பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் நம்மை படத்தோடு ஒன்ற வைத்து அந்த படம் மாபெரும் வெற்றியைடைய உறுதுணையாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று இருக்கும் மிக சிறிய வயது இசையமைப்பாளர்களில் குறிப்பிடும் படியான ஒருவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாடல் மற்றும் பின்னணி இசை அனுபவத்தின் மூலம் அந்த படத்தை தூக்கி பிடித்து செல்பவர் மற்றும் அந்த படத்தின் இன்னொரு ஹிரோ என்றே சொல்லவேண்டும்.இந்த வருடம் தெய்வ திருமகள் படத்தில் அவரது பாடல்களும் தீம் மியூசிக்கும் பெரும்பாலான தமிழ் ரசிகர்களில் ரிங்டோனாக இன்றளவும் நிலைத்திருப்பது அவர் இசையின் சிறப்பின் ஒரு சிறிய உதாரணம்.மேலும் ஆடுகளம்,மயக்கம் என்ன என அவர இசையமைத்த அத்துணை படங்களும் மாபெரும் மியுசிக்கல் ஹிட். அதற்கு வருடத்தில் அவரை பெரிய இயக்குனர்களோடு பணி செய்ய செய்துள்ளது.


அடுத்து யுவன் சங்கர் ராஜா இந்த வருடம் ஒன்றிரண்டு படங்கள் செய்திருந்தாலும் பேசப்பட்ட படம் என்றால் அது மங்காத்தா படத்தின் பாடல்கள் மட்டுமே.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இவரின் இசை ஆல்பங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது புரியாத வரிகளாக இருந்தாலும் திரும்ப திரும்ப பாட வைக்கும் இவரின் இசை அனுபவம் இந்த் வருடத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டிப்படைத்தது.என்றே சொல்ல வேண்டும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் இசை இன்றியமையாத ஒரு இடத்தை பிடித்து அடுத்த வருடத்தில் இன்னும் பல உயரத்தை தொட ஆயத்தமாக உள்ளது.


திரைப்படங்கள் 2011:-1


உலக அளவில் ஆண்டு தோறும் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படும் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த எண்ணிக்கையில் திரைப்படங்கள் வராத போதும் எதிர்பாராத படைபாக்கங்களால் தமிழ் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று .உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனதில் அதிகமாய் இடம் பிடித்த இந்த ஆண்டின் பத்து திரைப்படங்கள் பற்றி ஒரு அலசு அலசுவோமா....


முதலில் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து ஆறு தேசிய விருதுகளையும் அள்ளி சென்ற ஆடுகளம்.அடுத்து வழக்கமாக மென்மையான குடும்ப படங்களை தந்து வந்த இயக்குனர் ராதாமோகன் இந்த ஆண்டு பயணம் திரைப்படத்தின் மூலம் தனது விறுவிறுப்பான திரைப்பயனத்தை தொடங்கியிருக்கிறார் விமான கடத்தல் தான் படத்தின் கரு என்றாலும் தற்கால அரசியல் மற்றும் சமுக சூழலை மனதில் கொண்டு தனக்கே உரிய பாணியில் உணர்வுரீதியான ஒரு படைப்பை தந்திருக்கிறார். அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவமாக ஐந்து கதைகள் ஒரே இடத்தில் இணையும் திரைக்கதை பாணியில் இரண்டாண்டுக்கு முன் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற வேதம் படம் அதே இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் தமிழில் வானம்.



அடுத்து படம் வெளிவருவதற்கு முன்னரே உலக பட விழாக்களில் பங்கேற்று பரிசு பெற்ற திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்து திரையில் சில நாட்களும் விமர்சகர்கள் மத்தியில் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக பேசப்பட்டு வரும் இந்த படம் ஹிந்தியின் பிரபல நடிகர் ஜாக்கி சாரபின் முதல் தமிழ் படம் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லமால் முதல் படத்திலேயே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாகராஜன் குமாரரஜாவின் ஆரண்யகாண்டம். இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்க்கும் இருக்க வேண்டிய உறவை சமீபகாலமாக அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கும் இயக்குனர்களின் வரிசையில் ஒரு அழகான கிராமியம் சார்ந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அதன் வீரியம் குறையாமல் எந்த வித வியாபார சமரசங்களும் இல்லாமல் சிறந்த படைப்பாக அமைத்திருந்த சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை.


அடுத்து நர்த்தகி தமிழ் சினமாவில் அரிதாக பரிமளிக்கும் பெண் இயக்குனர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துகொண்ட இயக்குனர் விஜய பத்மா இந்த படத்தின் மூலம் எவரும் கையாள தயங்கும் ஒரு திருநங்கையின் கதையை முழுமையாக ஒரு திருநங்கையை வைத்தே தந்திருக்கிறார்.அடுத்து ஆங்கில திரைப்படத்தின் தழுவலாக பேசபட்டாலும் அது படமாக்கப்பட்ட அழகியலால் எல்லோரையும் கவர்ந்த விக்ரமின் தெய்வ திருமகள்,புதிய இயக்குனரானாலும் சரியான முறையில் கதை சொன்னால் குத்துப்பட்டு நாலு பைட்டு இல்லாமல் வெள்ளிவிழா கொண்டாட முடியும் என்று நிருபித்த முதல் முறையாக பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் பட நிறுவனம் தமிழில் தயாரித்து வெளியிட்ட எங்கேயும் எப்போதும்.


அடுத்து களவாணி மூலம் கடந்த வருடம் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சற்குணம் குழந்தை தொழிலாளர் பிரச்ச்னையை அடிப்படையாய் வைத்து இரண்டாவது படத்திலேயே 1960 களை நம் கண் முன் நிறுத்திய சமகால வரலாற்று படமாய் வடித்திருந்த வாகை சூட வா. செல்வராகவனின் வழக்கமான கூட்டணியோடு வித்தியாசமான கதை சூழலில் வெளிவந்து மனதை மயக்கிய மயக்கம் என்ன இது தான் இந்த 2011 ஆம் வருடத்தின் வணிகரீதியில் அல்லாமல் படைபாக்கத்தால் பேசப்பட்ட தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பத்து திரைப்படங்கள். ..


திரைப்படங்கள் 2011:-2




இந்த வருசத்தில் வெளிவந்து மறக்கமுடியாததா மாறின ஐந்து படங்கள் பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாம் .முதல்ல வர்றது ஆடுகளம் வெற்றிமாறன் துனுஷ் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையின் பின்னணியில் நம் மண்ணின் மனிதர்களிடம் புதைந்திருக்கும் பல்வேறு குணாதிசியங்களை இயல்பாய் பதிவு செய்து நம் கண் முன் உலவவிட்டுருக்கிறார் வெற்றிமாறன்.எல்லா கதாபாத்திரங்களும் மிகைப்படுத்துதலும் இல்லாமல் நேர்த்தியாய் செய்திருந்த்ததால் ஆறு தேசிய விருதுகளை அள்ளி தமிழ் சினிமா வரலாற்றில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படமாக அமைந்தது.


அடுத்து பொதுவா ஒரு நாவலையோ சிறுகதையையோ திரைபடமாக்குறதுங்கிறது இயக்குனருக்கு சவாலான வேலை.அந்த கதையின் இயல்பும் கெடாமல் அதேசமயம் திரை மொழியும் கச்சிதமாக படைக்கப்படுவது அரிதான ஒரு நிகழ்வு. அதை சாத்தியமாகி இலக்கியத்திற்க்கும் சினிமாவிற்குமான உறவுப்பாலத்தை அகலப்படுத்திய ஒரு படமாக அமைந்தது அழகர்சாமியின் குதிரை.அடுத்து தெய்வ திருமகள் ஐயம் சாம் என்கிற ஆங்கில திரைப்படத்தோட அப்பட்டமான காப்பின்னு சொல்லபட்டாலும் விக்ரமின் நேர்த்தியான நடிப்பாலும் நிரவ்ஷாவின் அழகான ஒளிப்பதிவாலும் கிறங்க வைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை மழையாலும் ஏ.எல்.விஜய்-ன்.சுவாரசியமான திரையாக்கத்தாலும் கவித்துவமான பதிவா வெளிவந்து வெற்றியும் பெற்றது இந்த படம்.


கதைய மட்டுமே நம்பி அத திறமையா சொல்ல முடிஞ்சா முன்னணி நடிகர்கள் யாரும் இல்லைனாலும் அசகாய வெற்றி பெறமுடியும்ங்கிற நம்பிக்கையோட புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் அழகான காதலோடும் ஆழமான கருத்தோடும் ஒரு விழிப்புணர்வு படமா வெளிவந்த எங்கேயும் எப்போதும் படம் இயக்குனர் சரவனனனுக்கு முதல் படம்னு சொன்னா யாராலையும் நம்பவே முடியாது.கடைசியா வருட கடைசியில் வெளிவந்தாலும் முன்னணியில் இருக்கிற மயக்கம் என்ன செல்வரகவனுக்கே உரிய பாணியில் தேசிய விருது பெற்ற தனுஷ் நடிப்புல வெளிவந்த படம் புதுப்பேட்டைக்கு அப்புறம் அண்ணன் தம்பி ரெண்டு பேர் கூட்டணியில வெளிவந்த இந்த படம் இயல்பான கதையாலும் தன்னை ஏமாற்றியவர்களை பழி வாங்க சிறந்த வழி ன்னு வாழ்ந்து காட்டுவது என்கிற மிக அருமையான கருத்தோடும் பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தனுஷ் செல்வராகவனின் புதுமையான பாடல் வரிகளாலும் இளைஞர்கள் மனதில் தனி இடம்பிடித்து வெற்றிகரமா ஓடிகொண்டிருக்கும் இந்தபடம் ஒரு நம்பிக்கை டானிக்.எத்தனையோ படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவந்தாலும் தமிழ் சினிமாவின் 2011 அடையாளாமாக இருக்கும் இந்த படங்கள் தான் உலக சினிமா ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் 2012 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் திரைப்படங்களின் மீதான ஆர்வத்த அதிகரிக்க செய்திருக்குனு சொன்னா அது மிகையாகாது.



இயக்குனர்கள்:-1

நாயகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா இயக்குனர்களின் கைகளில் மீண்டும் முழுவதும் மீண்டு வந்திருக்கிறது. இந்த 2011ம் ஆண்டில். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இயக்குநர் வெற்றி மாறன் 2 தேசிய விருதுகளோடு தமிழ் இயக்குநர்களின் பெயரையும், புகழையும் உயர்த்திக் காட்டினார். புதுமுக இயக்குநர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் பல படங்கள் வெளி வந்து வெற்றிகரமாக ஓடாவிட்டாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன. அதில் குறிப்பிடப்படவேண்டியவர் சமூகத்திற்கு தேவையான ஆழமான கருத்தை அழகியலோடு இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்கேயும் எப்போதும் திரைப்படமாகத் தந்த இயக்குனர் சரவணன்.


அடுத்து கடந்த வருடம் அதிகம் பேசப்பட்ட களவாணி படத்தின் எந்த சாயலும் இல்லாமல் இரண்டாவது படத்திலேயே ஒரு சமகால வரலாற்றை நல்ல கருத்தோடு கிராமத்துப் பின்னணியில் வாகை சூட வா திரைப்படமாகப் படைத்த இயக்குனர் சற்குணத்திற்கு முக்கிய இடமுண்டு. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமளவிற்கு படைப்புகளைத் தருகின்ற இயக்குநர் பாலா அவன் - இவன் படத்தின் மூலம் வித்தியாசமான கதாபாத்திரங்களை திரையில் உலவ விடுவதில் முத்திரை பதித்தார். அடுத்து தனி மனித கோபத்தை தனக்கே உரிய பாணியில் சுவாரசியமான படைப்பாக யுத்தம் செய் மூலம் தந்திருந்தார் மிஷ்கின்.

அடுத்து தன் முந்தைய படங்களின் அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அவருடைய அதே கூட்டணியோடு வெற்றிகர பயணத்தை முடித்திருக்கிறார் ராதா மோகன். அடுத்து அயல் சினிமாவின் தழுவல் என்றாலும் தனக்கே உரிய திரைக்கதை யுக்திகளாலும், மனதை மயக்கும் காட்சியமைப்புகளாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தெய்வத்திருமகள் தந்த விஜய். இறுதியாக இரண்டு வருடத்திற்குப் பிறகு தன் வழக்கமான குழுவோடு ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணத்தை யதார்த்தத்தின் சாயல் குறையாமல் மயக்கம் என்ன திரைப்படமாக தந்திருக்கிறார் செல்வராகவன். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை இவர்கள் இயக்கியதில் எந்தக்குறையும் இல்லை.

இயக்குனர்கள்:-2

எத்தனையோ படங்கள் வருகிறது. எவ்வளவோ இயக்குநர்களும் வருகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களில் வரும் சில காட்சியை வைத்தே யாரடா இந்த இயக்குநர் என்கிற எதிர்ப்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துபவர்கள் குறைவு தான். பலர் அந்த திரைப்படங்கள் திரையரங்கை விட்டு போகும் போதே மக்கள் மனதை விட்டும் போய் விடுகின்றார்கள். இதெல்லாம் தாண்டி ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த வருட தமிழ் சினிமாவின் அடையாளமாக நாங்கள் குறிப்பிட விரும்பும் மூம்மூர்த்திகளில் முதலாமானவர் இயக்குநர் சரவணன். இவர் இயக்கி வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவரின் முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவிற்கு மாற்றி இருக்கிறது. சினிமா மொழி தெரிந்த நல்ல இயக்குநராக இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு இவர் கிடைத்திருக்கிறார். ஒரு அருமையான விழிப்புணர்வுப் படத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொழுதுபோக்கான வெற்றிபடமாக மாற்றியதில் இவரை தமிழ் சினிமாவின் இந்த வருட சாதனையாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

அடுத்து வெற்றி மாறன், வருடத்தொடக்கத்தில் வந்து 2 தேசிய விருதுகளை அள்ளியதோடு அல்லாமல் மண்ணின் பதிவுகளை திரையில் கொண்டு வரும் இயக்குநராக மாற்றி இருக்கிறது. இறுதியாக ஏ.எல்.விஜய் மதராசப்பட்டினம் படம் மூலம் மூத்த கொண்டாடப்பட்ட இவர் தெய்வத்திருமகள் மூலம் தன் இடத்தை மீண்டும் தக்க வைத்திருக்கிறார். மனதை விட்டு நீங்காத இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இவர் இயக்கத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவை இந்திய சினிமாவைத் தாண்டி உலக சினிமாவோடு இணைக்கும் பயணத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.


இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 2011

Wednesday, December 14, 2011

"தெரிந்தது கைமண்ணளவு"



ஷாலி இந்த காலத்து பொண்ணு பி.இ(சி.எஸ்.இ) பைனல் இயர். ஒரு கையில உள்ள போன்ல எஸ்.எம்.எஸ் பண்ணிகிட்டே இன்னொரு கையில லேப்டாப்ல மெயில் சாட்டிங் பண்ணிகிட்டே,அப்பப்ப வர்ற போனுக்கு காதுல போட்டிருக்கிற ஹெட்செட் மூலமா பதில் சொல்லிக்கிட்டிருக்கா.

அப்ப காப்பியோட அந்த ரூம்க்குள்ள வர்ற அவங்க அம்மா பாப்பா நீ காலேஜ் போன பிறகு எவ்வளோ போன் வருது போகுது.எனக்கு பேச தெரியுதா ?அணைக்க தெரியுதா செல்போனெல்லாம் நீ வச்சுக்கோ வீட்டில வச்சுட்டு போகதேனா கேட்க்கமாட்டிக்கிற, இத எப்படி யுஸ் பண்றது?.

கோபமான ஷாலி "அம்மா ரெண்டுநாளா உனக்கு நா சொல்லி கொடுத்தெல்லாம் வச்சு ஒரு புக்கே போடலாம். ஆனா உனக்கு புரியவே மாட்டிக்குது. இங்கவா அந்த போன் இப்படி குடு நொள்ளை அவ அம்மாக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டா இந்த பச்ச பட்டன் அமுக்கினா கால் அட்டென்ட் பண்ணும்,செவப்பு பட்டன் கால் கட் பண்ண. நாலாம் நம்பர் அமுக்கினா அப்பாக்கு கால் போகும், இரண்டு அமுக்கினா எனக்கு கால் வரும்,ஒன்னு அமுக்கினா அண்ணாவுக்கு கால் போகும்.இவ்வளவு தான் சரியா! புரிஞ்சுதா எங்க சொல்லு பாப்போம்ங்கிறா"...

ஷாலி அம்மா திக்கி திணறி சொல்றாங்க "நாலு அமுக்கினா கால் வரும் இரண்டு அமுக்கினா கட் ஆகும். பச்ச பட்டன அமுக்கினா அப்புறம் ஐயோ மனசில நிக்கவே மாட்டிக்குதுமா"...அப்படிங்கிறாங்க

டென்சன் ஆகுற ஷாலி என்னமா இது கூட ஞாபகம் வைக்க முடியலையே உனக்கு, வயசாயிட்டாலே இப்படித்தான் உங்க ஜென்ரேசன் பீப்பிள் லாம் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?" அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே அவ அண்ணன்கிட்ட இருந்து கால் வருது அந்த கால அட்டென்ட் பண்ணி அம்மாகிட்ட குடுத்துட்டு இனி என்ன சொல்லிகுடுத்தாலும் உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாது உன் பையன் கிட்ட பேசு அப்படிங்கறா எரிச்சலா....


ஷாலி அம்மா போன கையில வாங்கி ஹலோ சொல்றாங்க எதிர் பக்கம் அவங்க பையன் அம்மா அந்த மளிகை சாமான் லிஸ்ட் தொலைச்சிட்டேன். என்னலாம் வாங்கனுமுனு ஒரு தடவை சொல்லுங்க நா எழுதிக்கிறேனு சொல்லவும், இந்த பக்கம் அவங்க அம்மா பரவாயில்லை தம்பி சொல்றேன் குறிச்சுக்கோனு ஆரம்பிக்கிறாங்க,"புளி கால் கிலோ, வத்தல் அரைகிலோ,மல்லி பொடி நூறு,அரிசி 25 கிலோ, தேங்காய் எண்ணெய் அரை லிட்டர்,நல்லெண்ணெய் -ஒரு லிட்டர்,உ.பருப்புஇரண்டு கிலோ,து.பருப்பு-இரண்டு கிலோ இப்படியே ஒரு 50பொருள் லிஸ்ட் படபடனு எதையும் பார்க்காமலே சொல்லிட்டு பார்த்து பத்திரமா வீட்டுக்கு வாடானு போன கட் பண்ணிட்டாங்க
ஷாலிக்கு அவங்க அம்மா போன்ல அவ அண்ணன் கிட்ட சொன்ன பொருள்ல பத்து பொருள் பேர் கூட ஞாபகம் வைக்க முடியில....



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து 
காலம் :-ஆகஸ்டு நாலாவது  வாரம் 2011

Wednesday, December 7, 2011

"போராடுவோம் போராடுவோம்"


        இன்னையோட மூணாவது தடவை இந்த வருஷத்தில ஸ்ட்ரைக் நடக்குது. பெட்ரோல் விலை உயர்வ மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லி மாநிலம் முழுக்க எல்லா கடைகளையும் தனியார் நிறுவனங்களையும் மூடச் சொல்லி ஊர்ல இருக்கிற எல்லா சங்கங்களும் அறிவிச்சிட்டாங்க.

        நெறைய பஸ்ஸூம் ஓடாததனால காலேஜ்,ஸ்கூல் போற பசங்களுக்கும் பிரச்சனை காலையில 6 மணியில தொடங்கி சாயங்காலம் 6 மணிக்கு முடியற இந்த ஒருநாள் பந்த்தால அரசாங்கம் பணியுற மாதிரி தெரியில...அவங்க ஓவ்வொரு காலகட்டத்திலையும் விலையேற்றிக்கிட்டுதான் இருக்காங்க.

     இவங்களும் ஒருநாள் ஸ்ட்ரைக் பண்ணிட்டுதான் இருக்காங்க,விலைவாசியும்  குறைஞ்சபாடில்ல. இதனால பாதிக்கப்படுறது. நம்ம முத்துக்குமார் மாதிரி தினக்கூலி சம்பாதிக்கிறவங்கதான் ஒருநாள் பட்டினி இருக்கவேண்டியதாயிருது.



       இந்த ஸ்ட்ரைக்கால இன்னைக்கு கடை லீவுங்கிறதால முத்துகுமார் வெளியில சுத்திட்டு வீட்டுக்குள்ள வரும் போது அவன் பொண்டாட்டி ஆரம்பிச்சுட்டா " இன்னைக்கு இருந்த அரிசியை வச்சு கஞ்சி காய்ச்சிட்டேன். நாளைக்கு பட்டினிதான் உங்க முதலாளி கடைய முடுறாருனா அட்வான்சா ஒரு 100ரூபாய் கொடுத்திருக்கலாம்ல, நம்மள பத்தி யாரு நினைக்கிறாங்க....சரியா உன்ன கல்யாணம் பண்ணின பாவத்துக்கு இந்த பசி கொடுமைய நா அனுபவிக்கலாம் உன் பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சு.நாளைக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது வழி பண்ணாம இராத்திரி வீட்டுக்கு வந்திராதணு " கத்திட்டு உள்ள போயிட்டா..



         என்ன பண்றதுங்கிற யோசனையோட வீட்ட விட்டு வெளியில் வர்ற முத்துக்குமார் கண்ண மூடி மேல பார்த்து கொஞ்ச நேரம் அப்படியே நிக்கிறான். அப்ப தூரத்தில மைக்செட்ல

     "நாளை இசக்கியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஏழு மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்  பக்தர்கள் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக"ஒரு குரல் அவன கடந்து போகுது... லேசா புன்னகையோட கண்ண திறக்கிறான் முத்துகுமார்.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011

Friday, December 2, 2011

"தெளிஞ்சுடுச்சு"


                அந்த பார்க்ல வந்து ராஜன் உட்கார்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். ஒரே குழப்பத்துல இருக்கான். அவனோடது நடுத்தரமான குடும்பம் ரெண்டு அக்காவ கல்யாணம் பண்ணி கொடுக்கணும் குடும்பத்த பார்த்துக்கணும். அவனும் செட்டில் ஆகணும்

            இப்ப அவன் வேலை பார்க்கிற தனியார் கம்பெனி சம்பளத்துல இதெல்லாம் கனவாவே கலைஞ்சுரும்னு நெனைச்சுகிட்டிருந்தான். ஆனாலும் எல்லார் மாதிரியும் வேலைக்கு போய் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு ஞாயிற்று கிழமையான ஒரு படம் ஐந்தாம் தேதியான ஹோட்டல்னு நல்லதான் போய்கிட்டிருந்தது வாழ்க்கை.


        இப்ப இன்னைக்கு ரொம்ப நாளா அவன வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டிருந்த அவங்க ஒன்னுவிட்ட மாமாவா பார்த்துட்டு வந்தததுலருந்துதான் இந்த குழப்பம், வீட்டுக்கு போகாம நேரா பார்க்குக்கு வந்து உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டான்.

       அவங்க நடத்திகிட்டிருக்குற ஒரு டிரஸ்ட்ட பார்த்துக்க யாரும் இல்ல . அதனால அந்த ட்ரஸ்ட்ட  நிர்வாகம் பண்ற பொறுப்ப ராஜன்கிட்ட கொடுக்கிறதா சொல்ல அதோட கணக்குவழக்கெல்லாம் மட்டும் நாங்க பார்த்துக்கிறோம் வர்ற லாபத்தா செலவுகணக்கு காட்டி குறைச்சு எழுதி பிரிச்சுக்கலாம்னு சொல்லவும். ராஜன் வருமானவரி கட்டாம எப்படின்னு அவங்க மாமாகிட்ட கேக்கிறான், "சின்ன சின்ன ஸ்வீட் கடை,பலசரக்கு கடை நடத்துறவங்களுக்கெல்லாம் எவ்வளவு வியாபாரம் நடக்குது. அவங்கெல்லாம் வருமானவரியா கட்டுறாங்க " நல்ல நாளா பார்த்து வந்து பொறுப்பு எடுத்துக்கோனு சொல்லி அனுப்பிட்டாங்க.


          குழப்பத்தோட வீட்டுக்கு வர்ற ராஜன் நேரா அவங்க தாத்தாகிட்ட போய் "நேர்மையா  தொழில் பார்த்தோம்னா வருமான வரி கட்டலேனா கூட தப்பு இல்லைலே அப்படின்னு கேக்கிறான்"         அதுக்கு 91 வயசுவரைக்கும் ஆரோக்கியமா இருந்து நாலுவருஷம் முன்னாடி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து நடக்கமுடியாம கிடக்கிற அவன் தாத்தா சொல்றாரு"அந்த காலத்துல என் முதலாளிக்கு வரி ஏமாத்த நட்டகணக்கு எழுதிகொடுத்ததுனாலதான் கடவுள் என்ன இப்படி நடமாடமுடியாம ஆக்கிட்டார்டா அப்படின்னு சத்தம் போட்டு சொல்லிட்டு ம்யுட்ல இருந்த டி.வில சவுண்ட் வச்சு சீரியல் பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

    


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து 2011