Thursday, December 30, 2010

விழாக்களும் சில விளக்கங்களும் -2



விழா -8வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.
நாள்:-டிசம்பர்15-டிசம்பர் 23 2010 .
கலந்து கொண்ட நாடுகள்:-45 .
திரையிடப்பட்ட படங்கள் :-சர்வதேச படங்கள்:-125
இந்திய படங்கள் :-14
தமிழ் படங்கள் -12
விழாவின் சிறப்பு :-அருமையான திரைப்படங்கள்.(ஆனால் வழக்கம் போல் ஹௌஸ் புல் ஆகாத காட்சிகள்)



வெற்றி பெற்ற தமிழ் படங்கள்:-

1. Best film in tamil competition- 'Angadi Theru".
2. Second Best film- 'Kalavani'
3. Best Director- 'Prabhu Solomon' for Mynaa
4. Special Jury Award for individual excellence - 'Parthiban' for Ayirathil Oruvan.
5. 'Orr Iravu' took the special award for independent films with a cash prize.
6. The online Film buff Award went to Dr.Varun Kumar of Velachery .




"விழாக்கள் என்றாலே இனிப்புகளும்,பட்டாசுகளும் நினைவில் வருவது இறந்த காலம் விழாக்கள் வந்தாலே திரைப்படங்கள் மட்டுமே நினைவில் வருவது இந்த காலம்"
திரைப்படங்கள் தான் இந்திய பண்டிகைகளின் உச்சகட்ட கொண்டாட்டமாக இருக்கிறது.உலகில் அநேக மக்கள் விரும்பும் ஒரு எது என்றால்,அது திரைப்படத்துறை என்று தைரியமாய் சொல்லலாம்.ஆனால் அப்படிப்பட்ட திரைப்படங்கள் ஒரு வியாபார பொருளாக மட்டும் பார்க்கப்படும் மனோபாவம் அதிகரித்து வரும் இன்றைய இயந்திர சுழலில் அதன் உருவாக்கத்தின் நோக்கத்தை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கும் முயற்சி தான் திரைப்பட விழாக்கள்.

இந்த சென்னை சர்வேதச திரைப்பட விழாவை பற்றி பலமுறை கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் கலந்துகொள்ள இந்த வருடம் தான் வாயப்பு கிடைத்தது. இந்தியாவின் சில குறிப்பிட்ட நகரங்களில்,சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே நடைபெறும் இது போன்ற திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள எல்லாராலும் முடிவதில்லை.அவரவர் நகரத்தில் நடக்கும் விழாக்களிலாவது கலந்துகொள்ளலாம்.அதற்கு அரசு உதவி செய்கிறது. விளம்பரங்கள்,ஊடகங்கள் இப்படி இன்னும் எத்தனையோ இருந்தும் கூட, விழா முடிந்த ஒரு சில நாள் கழித்து என் சென்னை நண்பன் (பிறந்ததிலிருந்தே சென்னையில் தான் இருக்கிறான்) ஒருவனிடம் பேசி கொண்டிருந்தேன்.அவனுக்கு இப்படி ஒரு விழா நடக்கிறது என்ற தகவலே சரிவர தெரியவில்லை இத்தனைக்கும் அவன் சினிமா பற்றி ஆர்வம் அதிகம் உள்ளவன் அதில் வரைகலை துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவன்.எனக்கு அதிர்ச்சி அப்பொழுது தான் எனக்கு நான் இணையத்தில் படித்த ஒரு வெளிநாட்டு மனோதத்துவ நிபுணர்களின் ஆய்வு பற்றி செய்தி நினைவில் வந்தது.நம் உலகம் சுருங்கிவிட்டது ஒரு நொடியில் எங்கிருந்தும் எந்த தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.பரிமாறி கொள்ளலாம் ஆனால் வழக்கத்தைவிட தற்பொழுது மக்களிடம் எதையும் முழுமையாய் படிக்கும் ஆர்வமும்,கவனிக்கும் உற்று நோக்கும் திறன்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஆழ்ந்து படிப்பதும் இல்லை. முழுமையாய் புரிந்து கொள்ளவும் இல்லை அதன் விளைவாக அனேகபேர் படிப்பதிலோ, கேட்பதிலோ,மேலோட்டமான நிலையிலேயே உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு முடிவு.


சரி விசயத்துக்கு வருகிறேன் இந்த வருடம் மொத்தம் ஐந்து திரையரங்குகள் 9 நாட்கள் விழா நடந்தாலும் எல்லா நாட்களும் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை ஆனாலும் நான் பார்த்த சில படங்ககளின் ஒரு வரி சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...


முதல் படம்:- "SOUL KITCHEN " 2009
germany film director-fathih akin.





ஜெர்மனியில் "Soul Kitchen " என்கிற பெயரில் ஒருவர் உணவகம் நடத்தி வருகிறார் அவர் தன் காதலியோடு வாழ சீனா செல்ல வேண்டியிருப்பதால் தன் அண்ணனுக்கு தன்னுடைய உணவகத்தை நடத்தும் உரிமையை மாற்றிகொடுத்து சீனா செல்ல தயாராகிறார்.இந்த நேரத்தில் அவருடைய அண்ணன் அந்த உணவகத்தை கதாநாயகனின் நண்பன் ஒருவனிடம் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டு இழந்து தவிக்கிறார்.இதற்கிடையில் காதலியை சந்திக்க போன கதாநாயகன் அவளை எதேச்சையாக ஜெர்மன் விமான நிலையத்தில் வேறு ஒரு ஆணுடன் சந்திக்க அதிர்ச்சியாகிறார்.பின் தன் இருப்பிடத்துக்கு திரும்பி உணவகம் வந்தால் அங்கே அவர் அண்ணன் அந்த உணவகத்தை தன் நண்பனிடமே சூதாட்டத்தில் இழந்ததை அறிந்து அதிர்கிறார்.பின்னர் அவர் இழந்த உணவகத்தை மீண்டும் பெற்றாரா? பிரிந்த காதலியுடன் சேர்ந்தாரா? அறிந்துகொள்ள
சுவாரசியாமான நகைச்சுவை படம் 2009 இல் வெளிவந்த "Soul Kitchen " திரைப்படத்தை பாருங்கள்.ஜெர்மனியின் உணவு பழக்கம் தொடங்கி அவர்களின் வாழ்க்கைமுறை, தற்போதைய கலாச்சாரம்,அனைத்தையும் கதைக்கு இடைஞ்சல் இல்லாமல் நமக்கு உணர்த்துகிறார்கள்.அன்றைய துவக்கவிழா படமாக திரையிடப்பட்ட இந்த படம் அனைத்து ரசிகர்களுக்குமிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.
(கொசுறு தகவல் :-நம்ம வெள்ளித்திரையில் இந்த படம் விரைவில் வெளிவரயிருக்கிறது )

இரண்டாவது நான் பார்த்த படம் "AS YOU ARE "2010
நாடு:-ஹங்கேரி



ஒரு நகரத்தின் மேயர் மிக நேர்மையானவராய் இருக்கிறார்.அந்த நகரத்து உட்கட்டமைப்பு பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியில் நடக்கும் ஊழலில் இருந்து தப்பிக்க நினைக்கும் இருவர்.சாமர்த்தியாமாக செய்யும் செய்கைகளால் அந்த நகர மேயர் எப்படி பாதிக்கபடுகிறார்.என்பதை இயல்பான வேகத்தில் ரியலிசம் முறையில் சுவாரசியம் குறையாமால் செய்திருக்கிறார்கள்.படம் பார்க்கும் அனைவரையும் ஹங்கேரியன் ஒரு கிராமத்துக்குள் கொண்டு போயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாடும்,மொழியும்,கலாச்சாரமும்,வேறுபடலாம் ஆனால் அடிப்படையில் மனித இயல்புகள்,அவர்கள் செய்யும் தவறுகள் உலகம் முழுவதும் பொதுவாகவே இருக்கின்றன என்ற கருத்தை இந்த படம் நமக்கு உணர்த்துவது சிறப்பம்சம்.மேயர் என்பவர் எதோ அரசியல் கட்சிக்காரர் என்ற அளவில் தான் நமக்கு இதுவரை காட்டப்பட்டு வந்தது.ஆனால் இந்த படத்தில் தான் அவரின் தனிப்பட்ட குணாதிசியங்கள் அவர் வீட்டிற்க்குள்ளேயே ஒரு குட்டி விமானம் செய்வது போன்ற காட்சிகள் என்பது போன்ற விஷயங்கள் அழகாக
காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கான கதை எங்கோ "ஏழு மழைக்கு அப்பால் உள்ள கடலில் புதைத்து வைத்து பூதம் பாதுகாக்கவில்லை நம்மோடு நம் அன்றாடத்தில் தான் புதைந்து கிடக்கிறது" என்ற உண்மையையை இது போன்ற படங்கள் நமக்கு மிகத்தெளிவாக உணர்த்துகிறது.

முன்றாவது படம் :-"THE BLUE BUTTERFLY"
நாடு-கனடா.



இந்த படம் ஒரு உண்மை சம்பவம் ஒரு சிறுவனுக்கு மூளை கட்டி நோய் அவன் சில காலத்தில் இறந்து விடுவான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். வழக்கமான படம் போல் ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்தும் கதையில்லை.இதில்
அந்த சிறுவனுக்கு தான் புத்தகத்தில் படித்த நீல நிற வண்ணத்துப்பூச்சியை
பார்க்க வேண்டும் என்கிற ஆசை அதற்காக அவன் ஒரு அம்மா மற்றும் ஒரு உறவினரோடு
ஒரு மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று அங்கே தன் உடன் வந்திருக்கும் ஒரு நடுத்தரவயது உறவினருடன் அடர்ந்த காட்டுக்குள் செய்யும் ஒரு பயணம் அதில் பல வகையான அனுபவங்களை அடைகிறார்கள் காடு, மழை,அருவிகள் ஒவ்வொன்றாய் தேடி தேடி அலைந்து ரசிப்பது அனுபவிப்பது போன்றவற்றை பார்க்கும் பொழுது எனக்கு நகர ஆசை உலகம் முழுவதும் நாகரிக மனிதர்களை எப்படி இயற்கையை விட்டு விலக்கி வைத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.அதில் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஒரு பள்ளத்தில் தவறி விழ,அந்த சிறுவன் மட்டும் தப்பித்து தன் அம்மா இருக்கும் இடத்திற்கு வர முயற்ச்சிப்பதும்,அங்கு வாழும் மழைவாழ் மக்கள் அந்த இருவரையும் பத்திரமாக அந்த காட்டில் இருந்து மீட்பதும் என ஒரு அருமையான வைல்ட் டிராவல் படத்தை தந்திருக்கிறார்கள்.இறுதியில் அந்த சிறுவன் ஆசைப்பட்ட அந்த நீல நிற வண்ணத்துப்பூச்சியையும் அவன் கண்டெடுத்துவிடுகிறான்.ஒட்டுமொத்த பயணத்தின் முடிவில் அவன் சொந்தஊர் திரும்பும் அந்த சிறுவனை சோதிக்கும் மருத்துவர்கள் அவனது மூளைக்கட்டி நோய் முழுவதும் குணமாகிவிட்டது என்று அறிவிக்கிறார்கள்.ஆம் நோய்களுக்கு மருந்து மருத்துவமனைகளின் மருந்துக்கடைகளில் மட்டுமில்லை.அது நம் மனத்திலும் நம் எண்ணங்களிலும் மறைந்து கிடக்கிறது என்கிற உண்மை புரிகிறது.இந்த நேர்மறை எண்ணங்களின் விளைவுகள் நிகழ்த்தும் மாற்றங்கள் எப்பவுமே மேஜிக் தான் என்பது இந்த படத்தில் இருந்து எனக்கு கிடைத்த ஒரு அருமையான அனுபவம்.

நான்காவது படம்:-"PUZZLE"2009
நாடு :-அர்ஜென்டினா



ஒரு படம் என்றால் அதில் ஹீரோ பதினெட்டு வயதில் இருந்து 30 வயது வரை இளமை குறையாமல் தான் இருக்க வேண்டும் அவர்களின் காதல்,கசமுசா,சண்டை,நட்பு,வெற்றி,பழிவாங்குதல் போன்றவை படத்தின் மையக்கருவாக இருக்க வேண்டும்.என்கிற எழுதபடாத விதியெல்லாம் இந்திய எல்லையோடு சரி.இந்த படத்தின் கதாநாயகி இரண்டு இருபது வயது இளைஞர்களின் தாய் முதல் காட்சியே அவளுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன் கையால் சமையல் செய்து வீட்டு விருந்தினர்களுக்கு பரிமாறுவதில் தொடங்குகிறது.(வெளிநாடுகளில் பெண்கள் குடும்பத்தை கவனிப்பதில்லை குடும்ப உறவுகள் சிதைகின்றன என்கிற மாயை உடைகிறது அங்கும் நன்றாகவே பெண்கள் செயல்படுகிறார்கள் அங்கேயும் பல ஆண்கள் தன் சரிபாதியை தனியாகவே வாழ்கை பாரத்தை சுமக்க வைக்கிறார்கள் என்பது புரிகிறது) அந்த பார்ட்டியில் ஒரு தட்டு உடைந்து விடுகிறது அதன் சின்ன சின்ன துண்டுகளை சேர்த்து கதாநாயகி ஒட்டி பார்க்கும் காட்சியிலேயே அவருடைய கதாபாத்திரம் விளக்கப்பட்டு விடுகிறது.அந்த பார்ட்டி முடிவில் வந்த பரிசு பொருட்களை பிரித்து பார்க்கும் பொழுது அதில் ஒரு படத்தின் துண்டுகளை முழு படமாக இணைத்து பார்க்கும் விளையாட்டு இருக்கிறது.ஒய்வு பெரும் வயதில் அவளுக்கு அந்த விளையாட்டு ஒரு புது உத்வேகத்தை தருகிறது அந்த பரிசு கொடுத்த நபரை தொடர்பு கொண்டு அதன் பெயர் அறிகிறார் அது எங்கே கிடைக்கும் என்ற விவரங்களையும் அறிகிறார் பின் அந்த கடைக்கு போய் அந்த விளையாட்டை வாங்கும் போது் ஒரு சுவரொட்டியையும் பார்க்கிறாள்.அதில் ஒரு முன்னால் படப்புதிர் போட்டிசாம்பியன் தனக்கு உடன் விளையாட ஒரு துணை வேண்டும் என்று அறிவித்திருக்கும் விளம்பரம் பார்க்கிறாள்.அவர் ஒரு 70வயது முதியவர் அவரோடு சந்திப்பு இவர்கள் போட்டிக்கு பயிற்சி செய்வது,பின் வெற்றி பெறுவது அவர்களுக்குள் ஏற்படும் அந்தரங்க உறவு என மனித மனயல்புகளை இயல்பாக காட்சிபடுத்தியிருக்கின்றனர்.இது அனைத்தும் தன் குடும்பத்துக்கு தெரியாமல் நடப்பதால் குடும்பத்தில் நிகழும் சங்கடங்களை அந்த பெண் எதிர்கொள்வது பின் அவள் பிள்ளைகளின் மனநிலை என படம் முழுவதும் கதாபாத்திர வடிவைம்ப்பு அற்புதம்.நாம் கற்றுகொள்வதர்க்கும், சாதனைக்கும், சந்தோசத்துக்கும் வயதில்லை நம் உணர்வுகளுக்கும் நாம் எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும் என்று புரிகிறது.மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கதை,நம் அம்மா, அத்தைகள், அக்கா, தங்கை,சித்திகள் என நம் குடும்ப பெண்கள் பலர் எப்படி நம்மால் அடுப்படியிலேயே கரைந்து போய்விட்டார்கள் என்பதை நினைத்து மனமும் கண்களும் கலங்கியது நிஜம்.(முயற்சிக்கிறேன் என் சரிபாதியோடாவது எல்லாவற்றையும் சரியாய் பகிர்ந்துகொள்ள "வாழ்கை சுகங்களை மட்டுமல்ல வேலை சுமைகளையும்" )

ஐந்தாவது படம் :-"T.D.DASAN VI 'B' " 2010
நாடு:-இந்தியா.
மாநிலம்:-கேரளா
மொழி:-மலையாளம்



ஒரு மாநிலத்தின் இரு குடும்பங்கள் வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறது ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கின்றனர்.அங்கே நடக்கும் திருப்பங்களும் மனதை வருடும் நிஜங்களும் அருமையான திரைக்கதை இந்த படம்.ஒரு குடும்பம் தந்தை இல்லை தாய் மகன் வயதான பாட்டி கிராமத்து ஏழைகள் வசிப்பது கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமம்.இந்த சிறுவனுக்கு நெடுநாட்களுக்கு முன்னால் ஊரிலிருந்து வேலைக்காக வெளியூர் சென்று இன்றும் ஊர் திரும்பாத தந்தையால் ஊரில் கேலி பேச்சுகள் இதனால் அதிகமாக வருந்தி வீட்டின் பழைய பெட்டியில் இருக்கும் தந்தையின் பழைய கடிதத்தை கண்டெடுத்து கடிதம் எழுதுகிறான் கதாநாயக சிறுவன் டி.டி தாசன் அவன் கடிதம் சென்று சேரும் இடம் பழைய முகவரியில் வசிக்கும் புதிய நபர்களிடம் அவர்கள் தொழில் நிமித்தமாக புலம் பெயர்ந்த ஒரு மலையாளி குடும்பம் பெங்களுருவில் வாழ்கிறது தந்தை மகள் தாய் இல்லை மேல்தட்டு வர்க்கத்தினர் அவர் ஒரு விளம்பர இயக்குனர் அந்த இல்லத்தில் இருக்கும் சிறுமி உறவுகளுக்காவும் ஏங்கும் நிலையில் இருக்கிறாள்.அங்கே வரும் கடிதம் அந்த விளம்பர இயக்குனர் பார்த்து கடிதம் மாறி
வந்திருப்பதையும் அந்த கடிதத்தின் சுவாரசியமான சோக கதையை காசாக்க அதை திரைப்படம் ஆக்க முயற்சிக்கிறார்.அவள் மகளோ அந்த சிறுவனின் ஏக்கத்தை உணர்ந்து தன்னை தந்தையாகவே நினைத்து பதில் எழுத தொடங்குகிறாள் விரிகிறது காட்சிகள் இறுதியில் என்ன நடக்கிறது இனிய முடிவு... ஒவ்வொரு ஊரின் காற்றிலும் ஆயிரம் கதைகள் ஒலித்து கொண்டே இருக்கின்றன அதில் ஒரு கதை இது என்ற குரலோடு படம் முடிகிறது இந்த படம். "மனதை உலுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் சோகங்கள் அது நாடு விட்டு நாடு பறந்தால் என்ன மாநிலம் விட்டு மாநிலம் நகர்ந்தால் என்ன எல்லாம் மறந்து எங்கோ சுகபோகமாய் வாழ்வதும் ஒரு கொடுமை தான்."



ஆறாவது படம்-"THE AQUARIUM"2010
நாடு:-எகிப்து



இது ஒரு நவீன கால கதை வானொலியில் இரவில் வரும் ஒரு நிகழ்ச்சி அதில் அறிவிப்பாளர் மக்களின் மன அந்தரங்க விசயங்களை கேட்பது வழக்கம் அதில் ஒரு மருத்துவர் அந்த அறிவாப்பாளரிடம் பழகும் கதை.அந்த ஊரின் மைய சுற்றுலதலங்களில் ஒன்றான மீன் அருங்காட்சியகத்தின் பின்னணியில் இந்த கதை உருவாகி விரிகிறது.ஒவ்வொரு பிரபலத்துக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒரு சராசரி மனிதனை பற்றிய கதை போல் அமைந்திருந்தது "இந்த படம் பிரமிட்களின் நகரமாகவே சித்தரிக்க பட்டு வந்த எகிப்தின் மற்றொரு நாகரிக பக்கத்தை வெளிப்படுத்தும் படமாக அமைகிறது."

ஏழாவது படம்:-Dennis.P
நாடு:-நெதர்லாந்து



இது உண்மையில் நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்து மறைந்த ஒரு நபரின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து எடுத்தது.கண்ணதாசன் அவர்களின் வனவாசம் நாமெல்லாம் எப்படி வாழ கூடாது என்பதற்காக ஒரு அடையாளமாக எழுதியதாக சொன்னாரோ அது இந்த கதைக்கும் பொருந்தும் என்று நினைக்கிறன் டென்னிஸ் என்கிற நபர் நகரின் மிகப்பெரிய வைர தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.அங்கே லாவகமாக நிர்வாகத்தின் கண்ணில் மண்ணை தூவி வைரங்களை எடுத்து சென்று கள்ளசந்தையில் விற்று பணம் சேர்த்து வருகிறார்.இவர் மேல் யாருக்கும் சந்தேகம் இல்லை.கிட்டத்தட்ட 150kilo எடையுள்ள அந்த நபர் 30 வயதிற்கு மேற்பட்டவர் வழுக்கை தலை.பெண் வாசம் அறியாதவர் ஒரு இரவு விடுதிக்கு சென்று ஒரு பெண்ணை புக் செய்கிறார் ஆனால் அவளோடு உறவு கொள்ளாமல் அவளை தனக்கு காதலியாக இருக்க
சொல்கிறான்.அதற்கு இங்கு கொடுப்பதை விட அதிகம் பணம் தருகிறேன் என்கிறான். அவளும் நம்புகிறாள் இருவரும் ஊர் சுற்றுகிறார்கள்.இறுதியில் அவனிடம் இருந்து தற்போதைக்கு அதிக பணம் கிடைத்தாலும் உண்மையில் இவன் பணக்காரன் இல்லை என்கிற சந்தேகம் அந்த பெண்ணுக்கு எழ அவள் சண்டையிடுகிறாள் இவன் அதை நிருபிக்க நீ என்னவேண்டுமானாலும் கேள் என்று சொல்ல அவள் என்னை மெக்ஸிகோஅழைத்து செல் என்கிறாள்.இவனும் சம்மதிக்கிறான் என்னோடு வாழ வேண்டும் என்று உறுதி பெற்று கொண்டு,பின் ஒரு மிகப்பெரிய ப்ளான் மொத்த வைர தொழிற்சாலையில் உள்ள நகைகளையும்,மூல வைரங்களையும் திருடி அவளோடு மெக்ஸிகோ செல்கிறான்.அங்கே அவள் வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்வதை அறிந்து துடிக்கிறான்.பின் தான் அது அந்த பெண்ணின் காதலன் என்றும் அவள் சொந்த ஊர் அது தான் என்றும் இவள் சூழ்நிலையால் எப்படி ஒரு விலைமகளாக மாற்றபட்டால் என்பதை விளக்குகிறாள்,அவளை நல்லபடியாக மெக்ஸிகோ அழைத்து வந்ததற்காக நன்றி சொல்கிறாள்.உன் உதவிக்கு இணையாக என்னை ஆசை தீர அனுபவித்து கொள் ஆனால் என் வாழ்கை என் காதலனுடன் தான் என்று சொல்லி கெஞ்சுகிறாள் அதற்கு இவன் சம்மதிக்க மறுக்கிறான்.இதற்குள் நெதர்லாந்தில் டென்னிஸ் அடித்த கொள்ளை செய்தி பரவி காவல்துறையினர் அவனை தேடி வருகிறார்கள்.தான் விரும்பிய பெண் விலைமகளாக இருந்தாலும் அவளோடு வாழ சொந்த ஊரில் தாய் தந்தையை கூட விட்டு விட்டு பல கனவுகளோடு வந்த அந்த மனிதனின் துடிப்பு கடைசியில் அவன் தற்கொலை செய்து கொள்ள கூட தைரியமில்லாமல் ஒரு வித்தியாசமான முடிவு எடுக்கிறான்.வயிறு வெடிக்கும்வரை உணவுஉண்டு இறந்துவிடலாம் என்று முடிவு செய்து மூக்கு முட்ட உண்டு ரத்தம் கக்கி மயங்கி சரிகிறான் பின் காப்பாற்றபடுகிறான். உடனே சொந்த ஊருக்கு கிளம்பி வந்து தாயை பார்க்க வருகிறான் அங்கே அவன் தந்தை இறந்து மறுநாள் இறுதியஞ்சலி தாய் தனிமையில் அழுகிறாள் வருந்துகிறாள் நீ நாளை இறுதிமரியாதை செய்ய வரவேண்டும் என்று சொல்கிறாள் முதலில் முடியாது என்று சொல்கிறான் ஏனென்றால் போலீஸ் அவனுக்காக அங்கே காத்துகொண்டிருக்கும் என்பதால் அப்பொழுது அவன் தாய் அவனுக்கு அவன் தந்தை கடைசியாய் கொடுத்த ஒரு பரிசை கொடுக்கிறாள் திறந்து பார்த்தால் தந்தையிடம் இவன் விரும்பி கேட்ட கார் சாவி அது. மறுநாள் இறுதி அஞ்சலி செய்ய அவன் வருகிறான் தந்தைக்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்து விடு அவனுக்காகவே காத்திருந்த போலீசிடம் தைரியாமாக சரணடைகிறான்.இந்த உலகத்திலேயே அதிகமாக கொள்ளையடித்தவன் என்கிற தனிநபர் பட்டியலில் எனக்கு தான் முதலிடம் என்கிற பெருமை போதும் என்கிற குரல் ஒலியோடு படம் முடிகிறது.(அவனுக்கு தண்டனை கிடைத்து அந்த காலத்தில் அவன் எழுதியபுத்தகம் மிக அழகாக படமாக்கபட்டிருக்கிறது சின்ன சின்ன லாஜிக் மிஸ்ஸிங் ஆனாலும் அருமையான படம் )தன் கணவர் இறந்து மருத்துவமனையில் இருக்கும் போதும் சாதாரணமாக வீட்டில் இருக்கும் ஒரு பெண் அவள் மனநிலை அழகாய் காட்சிப்படுத்தபட்டுள்ளது.நாம் நம் ஊர் இறுதிசடங்குகளில் நம் தாய் தொடங்கி மனைவி வரை அத்தனை பெண் உறவுகளுக்கும் மட்டுமல்ல உணர்வுகளுக்கும் வீட்டோடு விடை கொடுத்துவிடுகிறோம்.இங்கு பெண்ணுக்கு இன்னும் கிடைக்கவில்லை சுதந்திரம் "கலாச்சராம் சீரழிந்தது நாடுகள் என்று நாம் குறை கூறிக்கொண்டிருக்கும் நாடுகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் எண்ணிலடங்கா என்பது மறுக்க முடியாத
உண்மை தான்" ....



இவ்வளவு தான் இந்த 8ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நான் பார்க்க கொடுத்து வைத்த திரைப்படங்கள். மற்றவை அலுவலக பணிசூழலில் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.சென்னை வருவதற்கு முன் உலக திரைப்படங்கள் பலவற்றின் பெயர் அறிமுகமாயிருந்தது.சில படங்கள் பார்க்க கொடுத்து வைத்திருந்தது ஆனால் இங்கு வந்த பிறகு தான் அது பற்றிய ஒரு முழு தெளிவு கிடைத்தது.ஒரு கலையில் நாம் சிறக்க வேண்டுமென்றால் அதில் ஆழ்ந்த அனுபவம் வேண்டும்,அது நாம் பயிற்சி செய்வதால் மட்டும் சிறந்து விட முடியாது அதில் ஒரு ஆழ்ந்த புரிதல் வேண்டும். அதற்கு இந்த உலக படங்கள் ஒரு நல்ல வாய்ப்பு."திரைப்படத்துறை சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்ல மக்கள் அனைவருமே பார்க்க வேண்டிய ஒரு அற்புத கலைவடிவம் திரைப்படங்கள்.ஒரு நாட்டின் ஒருங்கிணைந்த அடையாளம் திரைப்படங்கள்.அதன் பெருமை,புகழ்,பெயர்,சிறப்பு,வரலாறு,
இதெல்லாம் வெளிப்படுத்த அவற்றை மனிதர்கள் வாழும் திசைதோறும் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் போல் வலிமையான சரியான ஆயுதம் வேறு எதுவும் இல்லை."நல்ல விசயங்களை சரியாய் பரிமாறினால் அன்று மொழியே இல்லாமல் தொடங்கிய சார்லி சாப்ளின் படங்களின் புரட்சியை இன்றும் மொழி கடந்து நாடு கடந்து சப் டைட்டில் கூட இல்லாமல் ஒரு கதையை திரைப்படமாக்கி மக்கள் மனதில் நிறுத்த முடியும்.."



(நல்ல வேலை 2011 திரைப்பட விழாவுக்குள் இந்த பதிவை போட்டுவிட்டேன் என்ன பன்றது என் அலுவலகத்தில் கிடைக்கும் நேரத்தில் அப்பப்ப டைப் செய்து தான் பதிவு போடுகிறேன். எப்படி தான் நாளைக்கு அஞ்சு பக்கம் அசராம பதிவு போடுறாங்களோ தெரியலியே ப்பா??????????????)

பிரெஞ்சு இயக்குனர் "ஜீன் ரெனார்" சொன்ன வரிகள் இவை...

"ஒரு திரைப்படத்திற்கு அதிகம் கதை தேவைப்படாது.மிகச்சிறிய கதையும் அதிகமான விவரங்களோடு உருவாவதே நல்ல திரைப்படம்"(நல்ல வார்த்தைகள்ல)



திரைப்படம் ஒரு நவீன கலை வடிவம் அது மக்களுக்கானது,உலக கலைகள் பல கலந்து வெளிப்படும் ஒரு அற்புத நிகழ்வு நல்ல திரைப்படங்கள்.அது எங்கெங்கு உருவாயினும் உலகின் கடைகோடி மனிதரையும் அது சென்று சேரும் பொழுது மட்டுமே அதன் முழுபயனையும் அடைகிறது.அப்படி உலக திரைப்படங்கள் உள்ளூர் வீதிகளில் உலவ தொடங்கி நம் மக்களிடம் நல்ல உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது இந்த திரைப்பட விழாக்களை காணும் பொழுது தோன்றுகிறது.ஆனால் அது ஏதோ ஒரு சில மனிதர்களோடு ஒடுங்கிவிடுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.எனினும் ஒரு விதை தூவப்படும் போது அதன் பலன் அறியப்படுவதில்லை.பொறுத்திருப்போம் துளிர்த்து ஓங்கி வளரும் வரை>>>>>>>>>>




இன்று இணையங்களிலும் கடைகளிலும் திரைப்படங்கள் மிக மலிவாக கிடைக்கின்றன.ஆனால் இன்னும் நம் மக்கள் அநேக பேர் தமிழ் தவிர சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே அறிந்திருப்பது வருத்தமளிக்க கூடிய விசயம் தான் ஆனால் தீர்வு நம்மிடம் தான் உள்ளது நாம் கற்று கொண்டதை,தெரிந்து கொண்டதை,புரிந்து கொண்டதை அனைவரிடமுமும் பகிர்ந்து கொள்வோம் கண்தானம்,அண்ணதானம்.உடல்தானம் இதெல்லாம் விட சிறந்தது அறிவுதானம் தான்.இன்று நம் உலகிற்கு தேவைப்படுவது என்பது என் தனிப்பட்ட கருத்து.இந்த விழாவில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான விளக்கம் இது.என் அறிவின் புரிதலின் சில துளிகளை உங்களோடு பகிந்துகொள்ள வாய்ப்பளித்தர்க்கும் இதை இவ்வளவு நேரம் பொறுமையாய் படித்ததற்க்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி முடிக்கிறேன்...


இப்படிக்கு
மு.வெ.ரா.
டிசம்பர்-2010

2 comments:

கனவு கனவானது said...

super venket very nice blogs.
now i thought why should i miss watch 8th film festival

குரங்குபெடல் said...

Good Article . . .

Pongal Wishes !