Friday, June 24, 2011

கட்டபொம்மனின் கடைசி நாள் !



        காலையில தூக்கம் கலைஞ்சு முழிக்கிறார் ஜெகவீரபாண்டிய மன்னனின் மூத்த மகன். வீணராஜஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.அவர் உட்கார்ந்திருக்கிற பெரிய மஞ்சனத்தி மரத்தோட உச்சியில இருந்து இறங்கி கொஞ்ச கீழ வர்றார்.


அன்னைக்கு செவ்வாய்கிழமை 15 அக்டோபர் 1799....

        பாஞ்சாலங்குறிச்சியிலுருந்து வெளியேறி கடந்த மூணுவாரமா புதுக்கோட்டை முழுக்க சுற்றி திம்மியம் வந்து, இப்ப விராச்சிலை வழியா சிவகங்கை பக்கத்தில ஒரு அர்ந்த காட்டுக்குள்ள வந்து பதுங்கியிருக்கிறார் மன்னர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.


          கட்டபொம்மனுக்கு கருத்தையானு ஒரு செல்ல பேர் உண்டு.இப்ப காட்டில சுத்தி நல்லாவே கருத்து போயிட்டார்... 


         பலமுறை வேட்டைக்காக காடுகள்ல சுற்றியிருந்தாலும் இப்புடி உணவு,உறக்கம் இல்லாம சுத்துறது மன்னருக்கு இதுதான் முதல்முறை.


       அவர் தலைக்கு மேல ஒரு சிலந்தி அழகா பெரிய வலை பிண்ணியிருக்கு,அப்ப அண்ணாந்து பார்க்கிற மன்னரோட கண்ணுல அந்த வலை வழியா வர்ற சூரிய ஒளி பட்டு கூசுது.தலைய குனிஞ்சுக்கிறார் காட்டுக்குள்ள உற்று பார்த்துகிட்டிருக்கார்....

     பகல்லையே மரங்களோட அடர்த்தியால காடே இருண்டு போய் கிடக்குது, விலங்குகளோட உறுமல் சத்தத்துல அமைதியான அந்த இடமே அலறுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிக்கிட்டிருக்கார் மன்னர்.அவரோட படையில இருந்து ஆள் வர்றதா தகவல் வந்துருக்கு அதான் காத்துகிட்டிருக்கார் .

அப்ப பக்கத்தில ஏதோ காலடி சத்தம் கவனிச்சு கேக்குறாரு மன்னர் ...

       சருகுகளோட சலசலப்பு, கோட்டான்களோட அலறல், நெறைய காலடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி மன்னர நெருங்கி வந்துகிட்டிருக்கு .

அப்புறம்...... அப்புறம்........வார்த்தைய முழுங்குறான் விஜயன்......

      அப்ப அவன் மனைவி கேட்கிறா " என்னங்க ஆச்சு உங்களுக்கு இப்படி கண்ணாடி முன்னாடி நின்னு அப்புறம் அப்புறம்னுகிட்டு அரை மணிநேரமா புலம்பிகிட்டிருக்கீங்க?"

      ஏய் நீ வேற பயப்படதாங்கிறான் விஜயன் ...

அப்ப ஒழுங்கா பதில் சொல்லுங்கன்னு அவன் மனைவி சொல்றா ...
        அதுவா நா வெளியூர்ல வேலை பார்த்தவரைக்கும் வாரத்தில ஒருநாள் தான் வீட்டுக்கு வந்து போவேன். இப்ப நம்ம ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்த பிறகு நம்ம பையன் தினமும் கதை சொன்னா தான் நைட்டு தூங்குவேன்னு சொல்றான்....

         அதுவும் ராஜா கதை தான் சொல்லணுமாம் அவங்க மிஸ் நெறைய கதை கேக்க சொல்லிருக்காங்களாம். நமக்கு தாத்தா பாட்டி கூடவே இருந்தாங்க கதை கேட்டோம் அவனுக்கு அந்த வாய்ப்பும் இல்ல சரி ஒரு கதை சொல்லலாம்னு இன்னைக்கு காலைல இருந்து மனப்பாடம் பண்ணி வச்சேன். இதுக்கு அப்புறம் இந்த கதை மறந்து போச்சு... ச்சே....


     காலடி சத்தம் கேட்குது ,,,கட்டபொம்மன் உஷார் ஆகுறாரு.... அப்ப யாரோ? ஹம்..ஞாபகம் வரலியே....அப்படின்னு விஜயன் சொல்லிகிட்டிருக்கும்போதே ...



      அவன் மனைவி சொல்றாங்க "சரி சரி விடுங்க நம்ம பையனுக்கு ஹோம் வொர்க் செய்யவே நேரம் இல்லை.கதை கேட்கனும்னு அடம்பிடிச்சான்.2 அடி கொடுத்தேன். பாவம் பிள்ள சாப்பிட கூட இல்ல அழுதுட்டே தூங்கிட்டான்".



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்.
திருநெல்வேலியிலிருந்து...
காலம்:- மே மாதத்தில் ஒருநாள் -2011

1 comment: