Wednesday, November 30, 2011

" அய்யோ அய்யோ "






                 "என்னதான் ஊருக்குள்ள இவ்வளவு பெரிய ஆறு ஓடுதுனாலும் காலையில அரை மணிநேரம் பைப்ல தண்ணீர் எடுக்கிறதே குதிரைகொம்பால இருக்கு" செல்வி சொல்லி முடிக்கும் போது பைப்பில தண்ணிவர ஆரம்பிக்குது.

           முதல் குடம் தண்ணி பிடிக்க ஆளாளுக்கு விட்டுக்கொடுக்குறாங்க, ஏன்னா தண்ணி கலங்கலா வரும். அப்ப ஒரு பாட்டி வாசல் தெளிக்க முதல்குடம் தண்ணிய எடுக்கிறாங்க,வரிசையில பேச்சு தொடங்குது.செல்வி அவ முன்னாடி நிக்கிற ஜானகிய பார்த்து ஆரம்பிக்கிறா...

             "ஏய் அப்படி என்ன நடக்குதுன்னு அந்த கோவிலுக்கு வாராவாரம் குடும்பத்தோட போறீங்க, நேத்து நைட்டு கூட 10 மணிக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வந்தீங்க. பக்தி ஓரளவுக்குத்தான் இருக்கணும் ஞாயிற்றுகிழமை கூட நாலு இடத்திற்கு போயிட்டு வராம சாமிய விட்டுட்டு ஆசாமிய போய் இப்புடி விழுந்து விழுந்து கும்பிட்டுட்டு வர்றீங்களே " செல்வி இப்படி சொல்லவும் ஜானகிக்கு கோபம் தலைக்கு மேல ஏறிடுச்சு.

            "உனக்கென்ன தெரியும் அந்த கோவில் மகிமை பற்றி,அந்த இடம் எவ்வளோ அழகு  அங்க வச்சுருக்கிற சிலைகள், ஏன் அந்த சாமியார் எவ்வளவு பவர்புல் தெரியுமா அவர் குறி சொன்னா அப்படியே நடக்கும். உன் முகத்தே பார்த்தே உன் ஜாதகத்த சொல்லிருவாரு வந்து பாரு எவ்வளவு கூட்டம் கால்கடுக்க அங்க காத்து கிடக்குதுன்னு "சொல்லிட்டு செல்விய பார்த்து மூஞ்ச வெட்டிகிட்டு காலி குடத்தோட திரும்பி பார்க்காம வீட்டுக்கு போயிட்டா ஜானகி.

        ரெண்டு நாள் கழிச்சு ஜானகி வீட்டுக்கு போற செல்வி காலையில பேப்பர்ல வந்த தலைப்பு செய்திய அவகிட்ட காட்டுறா, அதுல மீண்டும் ஒரு சாமியார் பாலியல் வழக்குல கைதுன்னு போட்டு ஜானகி வழக்கமா குடும்பத்தோட போற சாமியாரோட புல் சைஸ் கலர் போட்டோ அரை பக்கத்துக்கு போட்டுருக்கு.

          செல்வி அடுத்த வார்த்தை பேச வாய திறக்குறதுக்குள்ள ஜானகியே ஆரம்பிக்கிறா"அந்த ஆள் முகத்த பார்த்தப்பையே நெனைச்சேன் இப்படி எதாவது மாட்டுவான்னு, அந்த ஆள் நடவடிக்கையே சரியில்ல பொம்பளைங்கள சிறப்பு பூஜைக்கு தனியா வர சொல்லி பிரசங்கம் பண்ணிட்டிருந்தான், அந்த கோவில் கூட எதோ செட் போட்ட மாதிரி இருக்கும் ஒரு தெய்வீக கலையே இருக்காது தெரியுமா"படபடனு பேசினவ அடுப்புல சட்டி காயுது நா வரேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம உள்ள போயிட்டா...






இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 

காலம் :-ஆகஸ்டு முதல் வாரம் 2011

Tuesday, November 29, 2011

"கேட்டா தான் கிடைக்கும்"


               செல்வத்தோட அப்பா அப்படின்னு சொன்னாதான் அந்த காம்பவுண்டில எல்லாருக்கும் தெரியும். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். தினமும் காலையில 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கிளம்பி தயாராயிருப்பார்.ஏழு மணி வர்ற எல்லார் வீட்டு பேப்பரையும் ஒரு வரி விடாம படிச்சிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவார்.

             இன்னைக்கு அப்படி பேப்பெர படிச்சவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டார். இப்ப பேப்பேர்ல கொஞ்ச நாளா வர்ற உண்ணாவிரதம் செய்திகள், இரண்டாவது விடுதலை போராட்டம், காந்தியின் மறுஉருவம்னுலாம் சிலரை பத்தி செய்தி வர்றத பார்த்துட்டு தான் இந்த யோசனை.

           அந்த நேரம் வெளிய போயிட்டு வீட்டுக்குள்ள நுழையுற அவர் பையன் செல்வத்துகிட்ட "ஏம்ப்பா சத்தியாகிரகம் மாதிரி மாதிரி இந்த போராட்டங்கள்  எல்லாம்  ஊழல ஒழிச்சுரும் போலியே " அப்படின்னு கேக்கிறாரு.


                    செல்வம் எல்லாரும் அதிகமா சப்போர்ட் பண்ணினா அந்த பக்கமே போகமாட்டான். எப்பவுமே எல்லா விஷயத்துலயும் தனக்குன்னு தனி கருத்து வச்சுருப்பான்.இப்ப வேற எத பண்ணினாலும் விமர்சனம் பண்றதுக்குன்னு ஒரு கூட்டம் அதிகமாயிருக்காங்களே அவங்கள்ள இவனும் ஒருத்தன்.இப்ப அவங்க அப்பா செல்வத்துக்கிட்ட கேள்விகேட்டது வெறும் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆக அந்த காம்பவுண்டில இருக்கிற எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தம் போட்டு பேச ஆரம்பிச்சுட்டான்.


                  "அப்பா இவங்களுக்கு வேற வேலை இல்லை உண்ணாவிரதம் இருந்தா ஊழல் ஒழிஞ்சிருமா இதெல்லாம் பப்பிளிசிட்டிக்காக பண்றாங்கப்பா, நாட்டில இட ஒதுக்கீடு, சுற்றுசுழல்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு. இந்த உண்ணாவிரதம் நடத்தவே யார்யார்க்கெல்லாம் லஞ்சப்பணம் கொடுத்துருக்காங்களோ , இந்த உண்ணாவிரதமெல்லாம் மக்கள் மனசில எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" இத செல்வம் சொல்லி முடிக்கவும் அவன் பொண்டாட்டி மண்ணெண்ணெய் டின்னோடு வீட்டுக்குள்ள வரவும் சரியா இருந்துச்சு.


                "என்னடி பத்து பதினஞ்சு நாளா ரேசன் கடைக்காரன் மண்ணெண்ணெய் தராம பிரச்சனை பண்ணிகிட்டிருக்கானு புலம்பிட்டிருந்த இப்ப எப்படி வாங்கின? அப்படின்னு கேட்கிறான் செல்வம் . அதுக்கு அவன் மனைவி டி.வியில, பேப்பேர்ல எல்லாரும் எதுக்கோ உண்ணாவிரதம் இருக்காங்க அரசாங்கமும் அவங்க அஹிம்சை போராட்டத்த அரசாங்கத்தாலேயே ஒன்னும் பண்ண முடியலனு போட்டிருந்துச்சு. அத பார்த்த உடனே நானும் நம்ம தெருவில இருக்கிற முப்பது பொம்பளைகள கூட்டிட்டு போய் நம்ம ரேசன் கடை முன்னாடி மண்ணெண்ணெய் தரும் வரை உண்ணாவிரதம்னு உட்கார்ந்துட்டேன் . அவ்வளவு தான் பயந்துபோன அந்த கடைக்காரன் கடை திறந்த  உடனே எங்க எல்லாருக்கும் மண்ணெணெய்ய கொடுத்துட்டான்" சரி சரி  வாங்க காபி  போட்டு தரேன்னு சொல்லிட்டு  விறுவிறுனு வீட்டுக்குள்ள போயிட்டா....






இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து

காலம் :-ஜூலை நாலாவது வாரம் 2011

Friday, November 25, 2011

" பார்வைகள் பலவிதம் "



     "இன்னும் எத்தனை நாள் தான் நாம இப்படி இருக்க போறோமோவர்ற வருமானம் சாப்பாட்டு   செலவுக்கே சரியா இருக்கு. நாலு இடம் போக முடியுதாஇந்த உலகத்துல யாருக்குமே நன்றி இல்லசொந்த பந்தம் பத்தி எல்லாம் யாரு நெனைச்சு பார்க்கிறாங்க. எவ்வளவோ கெட்டது பன்றவங்க எல்லாம் நல்லாதான் இருக்காங்க"  அவ புருஷன் நல்லசிவத்த பார்த்து கத்திட்டு அடுப்படிக்குள்ள போறா தனலட்சுமி.

     
இந்த மாதிரி தினமும் ஒவ்வொரு வீட்டுல இருக்கிற சாதாரண மக்களோட உரையாடல்களை கவனிச்சா நாலு மெகாசீரியல்க்கு ஒரே நேரத்தில வசனம் எழுதலாம். அந்த அளவுக்கு வார்த்தைகள் வந்து விழும் அத கவனமா கேட்டுகிட்டு அமைதியாயிட்டா அன்னைக்கு பொழுதோட அந்த சண்டை முடிஞ்சிரும். இல்ல.... பானிபட் யுத்தம் மாதிரி பல ஆண்டுகள் இந்த சண்டை தொடரும். பாவம் இவங்களால புலம்பதான முடியுது..அப்படி ஒரு நல்ல நாளில தனலட்சுமி கத்தின குரல் தான் இது. நாலாவது வீட்டில இருக்கிற சலீமா மாமிக்கே தெளிவா கேட்கும். இங்க வீட்டில வெராண்டாவில உட்காந்திருக்கிற நல்லசிவத்துக்கு கேட்காதா என்னகேட்டுச்சுஆனா அவர் வாயவே திறக்கலையே.
  
       தனலட்சுமி நல்லசிவத்துக்கு கல்யாணமாகி நாலு வருஷம் ஆகுது.அடுத்தடுத்து ஆண் ஒண்ணு பெண்  ஒண்ணுனு ரெண்டு பிள்ளைங்க,ஊருக்கு வெளிய ஒரு வாடகை வீட்டில குடியிருக்காங்க. 
அவ கணவன் நல்லசிவம் அவங்க வீட்டில மூணாவது பையன். இரண்டு அண்ணன்களும் நல்ல வசதியா தான் இருந்தாங்க. ஒரே ஊரில பெண் எடுத்து பக்கத்தில தான் குடியிருக்காங்க.இரண்டாவது அண்ணன் பத்தி  பிரச்னை இல்ல ஒரு கடை வச்சுருக்காரு சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தாரு.

      முதல் அண்ணன் பேங்க்கில வேலை பார்த்தாருகை நெறைய சம்பளம் ரெண்டு பிள்ளைங்க காலைல பார்த்தா கட்டு கட்டா ரூபாநோட்ட எண்ணுவாரு சாய்ங்காலமான தமிழ்நாட்டோட முக்கிய நிதி ஆதாரமான டாஸ்மாக்ல போய் பணத்த எண்ணி குடுத்துட்டு குடிச்சு முடிச்சா தான் அவருக்கு அன்னைக்கு நாள் நிறைவடையும்.

      இப்படி அவரோட பல வருஷம் கடும் கடமை உணர்ச்சியின் பலனால் ஒரு அஞ்சு  வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு கிட்னி பெயிலியராயிடுச்சு.கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும்நல்ல ஹெல்த்தியான டோனர் வேணும் இல்ல உயிர் பிழைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.வெளிய முயற்சி பண்ணி பார்த்தா கிட்னி கிடைக்க நாளாகும்ங்கறதுனாளையும்  பார்மாலிடிஸ் அதிகம்ங்க்றதுனாலயும்அவன் அண்ணியோட யோசனையில அவன் அண்ணனே நேரடியா வந்து நல்லசிவத்துக்கிட்ட "உன் கிட்னி எனக்கு பொருத்தமா இருக்கு நீ குடு. உன்ன நல்லா பார்த்துக்குறேன்னு சொன்னாரு " அப்ப அவன் அண்ணன் வீட்டில தான் இருந்தான் கல்யாணம் ஆகல அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சேனு பதறி போயிருந்தவன் வேற எதையுமே யோசிக்காம, எந்த பலனையும் எதிர்பார்க்காம உடனே அவனோட ஒரு கிட்னிய கொடுக்க ஒத்துகிட்டான்.

      
அவங்க ஊர்ல நடந்த முதல் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை அதுதான்சொத்தயே பங்கு போட தயாரா இல்லாத அண்ணன் தம்பிங்க வாழுற காலத்தில அண்ணனுக்காக கிட்னி கொடுத்த தம்பின்னு பேப்பர்ல பெரிய நியூஸ்லாம் வந்துச்சு.சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கும் வந்தாச்சு   ஆனா நல்லசிவம் அண்ணன் கிட்னிய வாங்கிட்டு ஒரு மாசத்தில நல்லசிவத்த இரண்டாவது அண்ணன் வீட்டுக்கு விரட்டிவிட்டுட்டான்.அப்புறம் அவங்கதான் நல்லசிவம் உடம்ப தேத்தி தெம்பாக்கி ஒரு சின்ன கடையும் வச்சு கொடுத்து கொஞ்ச நாள் கழிச்சு தூரத்து சொந்தத்தில இருந்த தனலட்சுமிய கல்யாணம் பண்ணிவச்சாங்க.

      
இப்ப பொண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா தான் இருக்கான் நல்ல சிவம் ஆனா அவன் பொண்டாட்டி பிரசவத்திலையும் சரிபிள்ளைங்க பெறந்தப்பவும் சரிகிட்னி கொடுத்த பெரியஅண்ணன் கவர்ன்மென்ட் வேலைல நல்லா இருந்தாலும்எங்க கஷ்டபடுற தம்பி குடும்பம் எதும் காசு உதவி கேட்பாங்களோனு பயந்து ரெண்டு மூணு தடவை எட்டி பார்த்ததோட சரி கடைசி தம்பி நல்லசிவம் வீட்டுக்கு அடிக்கடி வர்றதில்ல.

     இத பத்தி நல்லசிவமும் தனலட்சுமியும் பெரிசா எடுதுக்கலனாலும் அடிக்கடி அக்கம் பக்கம் இருக்கிறவங்க பேசுற பேச்சுல கொஞ்சம் கத்திட்டு அமைதியாவா தனலட்சுமி. இப்ப தண்ணி பிடிக்க போன இடத்தில யாரோ எதோ சொன்னதுல கோபமாகி வீட்டுக்குள்ள வந்து இப்படி தாம்தூம்னு கத்திட்டு சமயலறைக்குள்ள போறா. ஆனா நல்லசிவம் எப்பவுமே அவன் மூத்த அண்ணன்ன விட்டுகொடுக்காம பேசுவான்."இப்ப என்னாச்சு உனக்கு சும்மாயிருக்கமாட்டியா ஆமா சாப்பாடு எப்ப தயாரகுமுனு" பேச்ச மாத்த பார்க்குறான் 

    அதுக்குள்ள தனலட்சுமி உள்ள இருந்து திரும்பவும் வெளியில வந்துட்டா அதே கோபம் குறையாம நல்லசிவத்த பார்த்து கேட்கிறா "ஏங்க உங்க சின்ன அண்ணனுக்கு இருக்கிற அக்கறை கூட இவங்களுக்கு இல்லநல்லா தான இருக்காங்க ஒரு பிள்ளைய கட்டி குடுத்தாச்சு.இன்னொரு பையன இஞ்சினியருக்கு படிக்க வைக்குறாங்க.சொந்தம்னு தான் பேரு நம்மள பார்த்து பேசுறதும் இல்ல ஒரு நல்லது கெட்டதுக்கு வந்து போறது கூட இல்ல,யாருமே செய்யாத உதவி செஞ்ச தம்பிய எப்படி தான் இப்படி ஒதுக்கி வச்சுட்டு இருக்க முடியுதோஹ்ம் "இந்த கடவுள் எப்பதான் நம்ம வாழ்க்கைய கண்ண திறந்து பார்ப்பாரோ" அப்படின்னு புலம்பி முடிக்கிறா" 
     எல்லாத்தையும் பொறுமையா கேட்டு முடிச்ச நல்லசிவம் அவன் மனைவி தனலட்சுமிகிட்ட சொல்றான்."ஏண்டி நீதான் ஒரு கிட்னி இல்ல எனக்கு என்னாகுமோ ஏதாகுமோனு பயப்படுற. நா நல்லா உழைக்கிறேன் தினமும் 300௦௦ ருபாய் சம்பாதிக்கிறேன் இன்னும் சில வருஷத்தில சொந்தக்கடை வச்சுருவேன். இதுவரைக்கும் நா காய்ச்சல்,தலைவலின்னு எதாவது நோய் வந்து படுத்திருப்பேனா,ஏன் நம்ம பிள்ளைங்களுக்கு கூட தடுப்பூசி தவிர வேற எதாவது மருந்து செலவு வந்துருக்குமா இதுக்கு மேல நமக்கு என்ன வேணும்.நீ சீக்கிரம் டிபன் பண்ணி வை இன்னைக்கு எங்க அண்ணனோட கல்யாண நாள் நா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துறேன் "ஆண்டவா எல்லாரையும் காப்பாத்துன்னு சொல்லிட்டு விறுவிறுனு வெளிய கிளம்பி போயிட்டான்"....








இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூலை மூன்றாவது வாரம் 2011

Thursday, November 24, 2011

"உணவு சங்கிலி"









        டேய் பாபு "இந்த சிலைய பாரேன் உடம்புல உள்ள நரம்பு கூட எவ்வளவு துல்லியமா தெரியிறமாதிரி செதுக்கியிருக்காங்க" வியப்பு அடங்காம சொல்றான்  சங்கர்.

        இரண்டுபேரும் நண்பர்கள் பக்கத்து பக்கத்து தெருவில தான் குடியிருக்காங்க. ஞாயிற்றுகிழமையான சினிமா தியேட்டர் கிரிக்கெட் மைதானம்னு போறவங்கள்ளுக்கு மத்தியில கோயிலுக்கு வந்து போற ஒரு சில இந்த கால இளைஞர்கள்ல இவங்களும் உண்டு  ...


            சங்கருக்கு தெரியாத கோவிலே ஊர்ல கிடையாது ஒரு கோவில்னு போனா வாசல்ல விநாயகர் சன்னதியில ஆரம்பிச்சு கருவறையில இருக்கிற மூலவர், சப்பரபவனி கொண்டு போற உற்சவர்,தட்சினாமூர்த்தினு ஒவ்வொரு சன்னதியா நின்னு அந்தந்த கடவுளுக்குள்ள பூசாரியே மறந்து போன மந்திரங்கள சொல்லிட்டு தான் கிளம்புவான் அவ்வளோ பக்தி.


               மூலஸ்தானத்துக்கு மேல உள்ள கோபுரம் விமானம்.உருவமா சிவன் இருந்தா அதாவது பார்வதி,முருகன் சேர்ந்து லிங்கமும் இல்லாம நடராஜர் வடிவமமும் இல்லாம முழுமனித வடிவுல காட்சி தர்றதுக்கு பேரு சோமாஸ் கந்தர்னு சொல்வாங்க. இப்படி போற போக்கில கோவிலோட கல்வெட்டுல இல்லாத விஷயங்கள கூட சொல்லுவான் சங்கர்.


              இப்ப ஒரு சிலைக்கு முன்னாடி நின்னு ரசிச்சுகிட்டிருக்கான்.பசியால வாடி போய் உடம்பு நரம்பெல்லாம் தெரியுற மாதிரி ஒரு மனுஷன் இறைவன்கிட்ட வேண்டி நிற்கிறமாதிரி இருக்கிற அந்த  சிலைய பார்த்து சொல்றான் "இப்ப உள்ள மனுஷங்ககிட்ட மனிதாபிமானம் குறைஞ்சு போச்சு, எறும்பில இருந்து எல்லாஉயிருக்கும் பகவான் தான் படியளக்கிறார்னு" புகழ்ந்துக்கிட்டுருந்தான் சங்கர். . அப்ப பாபு நேரமாச்சுன்னு சொல்ல பிரசாத தட்ட எடுத்துகிட்டு வெளியில் வந்த ரெண்டுபேரும் செருப்பு எடுக்க போறாங்க....


           அப்ப யாரோ சங்கர் முதுகுல கைவைக்க திரும்பிபார்க்கிறான் ஒரு மனநிலை சரியில்லாத ஆள் அழுக்கான வேட்டியோட வெறும் உடம்புல நிக்கிறான்.கழுத்து நரம்பு புடைக்க கத்தி கைய நீட்டுறான். அவ்வளோதான் பயந்துபோன சங்கர் பிரசாத தட்ட போட்டுட்டு கூட வந்த பாபுவையும் விட்டுட்டு ஓடியே போயிட்டான்.


                 சங்கர காணாம தேடுற பாபு குனிஞ்சு கீழ பாக்கிறான்,அப்ப அங்க அந்த பிரசாத தட்டுல இருந்து சிதறி விழுற பழத்த அந்த மனநிலை சரியில்லதாவர் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்.அவர உற்றுபார்க்கிற பாபுவோட மனசில ஓடுது "அந்த மனநிலை சரியில்லாத ஆளோட பலநாள் பசிக்கு இன்னைக்கு சங்கர் மூலமா படியளந்துட்டார் இறைவன்னு"



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூலை இரண்டாவது வாரம் 2011

"தண்ணீர் தண்ணீர்"








                "ஏய் அருவியில குளிக்க வந்துட்டு ஏண்டா படியில நின்னுகிட்டு பொம்பளைங்க குளிக்கிற பக்கம் வேடிக்கை பாருக்குறீங்க" கனமாக ஒலிக்கிறது துண்ட கட்டிட்டு லத்தியோட தண்ணியில் நனைஞ்சுகிட்டே கூட்டத்த கட்டுப்படுத்த முயற்சி பண்ணிட்டிருக்கிற ஒரு போலிஸ்காரரின் குரல்.



               லேசா சாரல் அடிக்குது, சோள பொறி அவிக்கிற புகை , மிளகாய் பஜ்ஜி,சிப்ஸ் சுடுற வாசனை எல்லாம் மோப்பம் பிடிச்கிகிட்டே கூட்டம் கூட்டமா அந்த ரோட்டில போற யார தொட்டாலும் வழுக்கிவிட்டிரும்.அந்த அளவுக்கு உடம்புல நல்லெண்ணைய தேய்ச்சுகிட்டு ஒரு வருஷத்து உடம்பு அழுக்க ஒரே நாளில் தொலைச்சிரனும்னு போட்டிபோட்டுட்டு அருவிக்குள்ள போற ஆட்கள தன்னோட அஞ்சு வயசு பையன கையில் பிடிச்சுட்டே வேடிக்கை பார்துட்டுருக்கிற ரமேஸ் திரும்பி அவன் மனைவிய பார்க்கிறான்.

                   "என்னங்க இன்னும் ஒரு பத்து நிமிஷம் குளிச்சிட்டு வந்துறேங்க குழந்தைய பத்திரமா பாத்துக்கோங்கனு" சொல்லிட்டு அருவி தண்ணிக்குள்ள மறைஞ்சு போயிட்டா ரமேஷோட மனைவி.

                    இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணின ரமேஷ் அவன் பையன தூக்கிட்டே அருவிக்குள்ள நுழைஞ்சு குளிக்க பார்க்கிறான். ம்ஹூம் உள்ள போன யாரும் வெளியில வர்றதா தெரியில ரமேஷ நெருக்கி வெளியில்ல தள்ளிட்டாங்க,அவன் பையன் பயந்து அழ ஓரமா வந்து உட்கார்ந்துட்டான் ரமேஷ்.

                  கூட்டத்தோட கூச்சல் நெருக்கடிய பார்த்து பயந்துபோன ரமேஷ் பையன்,அப்பா வீட்டுக்கு போகணுமுன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான். ஓங்கி ஒரு அடி விட்டான் ரமேஷ் ஏன்டா இப்புடி படுத்துற டூர் வந்தா கூட நிம்மதியா இருக்க விடமாட்டியானு திட்டிட்டு முகத்த திருப்பி உட்கர்ந்துகிட்டான்.



                  அருவி தண்ணியையே வேடிக்கை பார்த்துட்டே கொஞ்ச நேரம் அழுது முடிச்ச அவன் பையன் ரமேஷ முதுகுல மெதுவா தட்டி...கேக்கிறான்."அப்பா வீட்டுல பைப் ஒழுங்கா மூடலைனா தீட்டுவேல இந்த அருவியில இவ்வளோ தண்ணி வேஸ்டா போகுதே யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?"






இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து

காலம்:-ஜூலை முதல் வாரம் 2011

Wednesday, November 23, 2011

"" மறந்துபோனவைகள்""


             "ஒரு பெரிய மனுஷன் முணு நாளா சொல்லிகிட்டிருக்காரு உன் மகன் கேக்கிறானா? இந்த காலத்து பசங்களா எங்க பெரியவங்க பேச்ச கேட்கிறாங்க " இந்த டயலாக்க வார்த்தை மாறாம இன்னைக்கு மட்டும் தன் பொண்ணு அமுதாகிட்ட பல தடவை சொல்லிடுச்சு ராஜம் பாட்டி...

            தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா,அவங்க வீட்டில யார் சொல்லியும் கேட்கல இந்த ஹரி...

            ஸ்கூல் படிச்சு முடிச்சதோட சென்னை போனவன்தான்  நாலு வருஷம் இஞ்சினியரிங் படிச்சுட்டு அங்கேயே ஒரு ஐ.டி கம்பெனியில வேலை பார்துட்டுருந்தான். நல்ல சம்பளம்  வாழக்கை நல்லாத்தான் போய்கிட்டிருந்தது.

               திடீர்ன்னு  ஒரு நாள் ஹரிக்கு ஊர்ல அவங்க அம்மாகிட்ட இருந்து ஒரு போன் "அப்பாக்கு ஹார்ட் வீக்கா இருக்காம்டா புல் ரெஸ்ட்ல தான் இருக்கணும். எந்த வேலையும் செய்ய கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். நீ உடனே உன் வேலைய ரிசைன் பண்ணிட்டு வந்து அப்பாவோட  பிசினெஸ் பார்த்துக்கணும்னு" சொல்லி கட் பண்ணிட்டாங்க.

              ஒரு ரெண்டு முணு நாள் பீல் பண்ணிட்டு சுத்திகிட்டிருந்தான்.அப்புறம் சொந்த ஊருக்கு வந்து வியாபார பொறுப்புகள ஏற்றுக்கிட்டு கவனிக்க ஆரம்பிச்சு ஒரு மாசம் மேல ஆக போகுது.


              தினமும்  காலையில சீக்கிரம் எந்திரிச்சு லேட்டா எல்லாரும் தூங்கினப்புறம் வீட்டுக்கு வர்றதால தப்பிச்சுகிட்டிருந்தான்...

             நேற்று செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு ரொம்ப லேட்டா வந்ததால காலையில எந்திரிச்சு குளிச்சு முடிச்சு பசியில துண்ட கட்டினபடியே சாப்பிட வந்துட்டான். அப்பதான் அவன் தம்பி அத கண்டுபிடிச்சு வீட்டில போட்டுவிட்டுடான்.


            அதுக்கு தான் இப்புடி மாறி மாறி எல்லாரும் திட்டி தீர்த்துட்டுருக்காங்க,எவ்வளவோ   சொல்லி பார்த்துட்டாங்க இவன் கேக்கிறதா இல்ல. இனிமேல் பேசி பிரயோஜனம் இல்லைன்னு முடிவு பண்ணின அவங்க அம்மா ஒரு பிளான் பண்ணின்னாங்க...

         அடுத்த நாள் ஹரி வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து தூங்கி வழக்கம் போல காலைல முழிச்சு பார்க்கிறான். அப்ப அவன் நைட் பேன்ட் மேல டைட்டா அந்த அரைஞான் கயிறு. கட்டியிருக்கு 'அம்மான்னு கத்துர்றான் ' கோரசா வீட்டிலேர்ந்து அவங்க அம்மா தம்பிகிட்டருந்து வருது பதில்"டேய் ஹரி டேய் நாம் ஊர்ல ஆம்பளைங்க யாரும் இந்த கயிறு இல்லாம இருக்கிரதில்லடா ,பட்டணத்துக்கு போய் நீ  இதெல்லாம் அத்து எறிஞ்சிட்ட ,ஆனா நாங்க கண்டுபிடிச்சிட்டோம்ல சரி சரி  அந்த கயிற கட் பன்னிராதாடா.இத கட்டிருந்தா நேரம் கெட்டநேரத்துல வீட்டுக்கு வர்றப்ப காத்து கருப்பு எதுவும் பிடிக்காது.அப்புறம் அதென்ன ஹரிணியா ஹெரினியாவா அந்த நோய் கூட வரதாம்டா"சொல்லிட்டு அடுப்பங்கரைக்கு போயிட்டாங்க....




கேட்டுட்டே இருந்த ஹரி எந்த பதிலும் பேசல அதுக்கு அப்புறம் அவன் அந்த கயிற  அவிழ்க்கவே இல்லை......



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஜூன் நாலாவது வாரம் 2011