Wednesday, January 23, 2013

பல நேரங்களில் பல மனிதர்கள்



               காலையில நாலு மணிய கடிகாரத்தில பார்க்கிற சிலர்ல பழனிசாமியும் ஒருத்தர்.அவருக்கு வயசு 55 க்கு மேல இருக்கும்.அதிகாலையிலேயே  குளிச்சு கிளம்பி நெத்தியில ஒரு பெரிய பட்டைய அடிச்சிட்டு நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு ஊர்வலம் கிளம்பிருவாறு....

      நம்ம பழனிசாமி போகிற வழியில ஆவாரம்பூவா பூத்திருக்கும்.அதுல ஒரு அஞ்சு பூவா பறிச்சு வெறும் வயித்துல மென்னு திம்பார். 45 வருஷபழக்கம் இதனாலயும்  அவர் உடம்புல பிரசர், சுகர்,கொலஸ்ட்ரால்னு ஒரு நோயும் கிடையாது. அவர் படிச்ச ஆள்தான் தான் பார்த்துட்டிருந்த கவர்ன்மெண்ட் வேலைய வாலண்டியர் ரிடயிர்ட்மெண்ட் கொடுத்துட்டு  இப்ப பென்சன் வாங்கிட்டு வீட்ல தான் இருக்கார்.

         ஊர  சுற்றி நடையா நடந்து காற்று வாங்கிட்டு வந்து வள்ளி விலாஸ்ல கடையில ஒரு கடும் காபி வாங்கி குடிப்பார். கொஞ்சம் மூக்குபொடி வேற எந்த கேட்ட பழக்கமும் கிடையாது.ஆனா இத அவர் ஒத்துக்கமாட்டார் "மூக்குபொடி மூலிகைகள் , நெய் எல்லாம் சேர்த்து செஞ்சது உடம்புக்கு ரொம்ப நல்லதாம்" பெருமையா சொல்வார் .

        அவர் பாக்கெட்ல சில்லறை காசு ,ஒரு செல்போஃன் ,ஒரு மூக்குபொடி டப்பா அவ்வளவுதான் இருக்கும். எப்பவும் வெள்ளை வேட்டி, கலர்சட்டை தோள்ல ஒரு குற்றாலதுண்டு போட்டுட்டு நடந்தே ஊர்  பெரிய கோவிலுக்குள்ள அவர் நுழையும் போது  மணி டான்னு 8 அடிக்கும்." நம்ம கடிகாரத்தையே அவர் உள்ள நுழையுற நேரத்தை  வச்சு சரி செஞ்சுக்கலாம். அவ்வளவு  தெய்வ பக்தி...

         அன்னைக்கு செவ்வாய்க்கிழமை வேற  அதனால கோவில்ல கூட்டம் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு....பழனிச்சாமி கோவிலுக்குள்ள நுழையுராறு, இவர் வந்தாலே கோவில்ல எல்லாருக்கும் கொஞ்சம் பயம்தான் "ஏன் சாமி பிள்ளையார் முன்னாடி நின்னுட்டு பெருமாள் மந்திரத்த சொல்றீய"அசால்ட்டா கேட்டுட்டு கடந்து போயிருவார். மகா கோபக்காரர்.எழல் விஷ்யத்திளையும் பெர்பக்சனிஸ்ட்டா இருக்குறதா காட்டிப்பார்.அதேமாதிரி அவர  சுற்றி இருக்கிறவங்களும் அப்படி இருக்கனுமுன்னு ஆசைப்படுவார். அதனாலேயே வெளியில நெறையபேர் ஏன் வீட்டுல அவர் பொண்டாட்டி பிள்ளைகள் கூட இவர் கூட  பேச்ச நிறுத்தி ரொம்ப நாளாச்சு.

         இவர் இன்னைக்கு பிரகாரத்தில நிக்கும்போது ஒரு சின்னபையன் சண்டிகேஸ்வரர் சன்னத்தியில நின்னு சத்தமா கைதட்டி சாமி கும்பிட்டுட்டு இருந்தான் அவன பார்த்து  " தம்பி சண்டீகேஸ்வரர் சன்னதியில இப்புடி சத்தமா கைதட்டி சாமி கும்பிட கூடாது பா அவர் தூக்கத்தில இருப்பார் முழிச்சிருவார். அவரு காவல் தெய்வம் கோவில விட்டு நாம வெளியில போகும் போது இங்கயிருந்து கோவில் சொத்து எதையும் நம்ம கையில எடுத்துட்டு  போகலனு  ரெண்டு கையையும் திறந்து காட்டி  ஒன்னும் இல்லனு உதறிட்டு போனா போதும் புரிஞ்சுதா" சொல்லிட்டு செல்லமா அவன் கண்ணத்த  தட்டிட்டு அந்த  இடத்த விட்டு நகர்ந்து மூலவர தரிசிக்க போயிட்டார்.

        இவர் எப்பவும் வெளியில் தான் நின்னு சாமி கும்பிடுவார்.சிறப்பு தரிசனம்னு காசு வங்கி கடவுளையே பிரிக்கிறாங்கப்பானு வருத்தப்படுவார்..."இவர் மூலவர் சன்னத்திகுள்ள நுழையவும் அங்க அப்ப  தீபாராதனை தொடங்கவும் சரியா இருந்துச்சு. அந்த அறையில அடிச்ச மணி சத்தத்த விட அதிகமா ஒரு குழந்தையோட அழுகுரல் விடாம  கேட்டுது .அந்த குழந்தையோட அம்மா சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணியும் அந்த குழந்தை அழுகைய நிறுத்தல.

          "அறிவில்ல, ஏம்மா சாமி  கும்பிடுற நேரத்தில ஏன் இப்படி குழுந்தைய அழ வச்சு பார்த்துகிட்டிருக்கீங்க, கோவிலுக்கு வரும் போது குழந்தைய வெளியில  யார்க்கிட்டையாவது கொடுத்துட்டு  வர வேண்டியதான  "சத்தம் போட்டு கத்திட்டு கண்ணா மூடி சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டாரு.

            அந்த பொண்ணு தலைய குனிஞ்சுட்டு வெளியே போயிட்டா,கொஞ்சம் கொஞ்சம் குழந்தை அழுகை சத்தம் மறையவும் பழனிசாமி மனசுல ஒரு பெருமிதம் என்னமோ உலகத்துக்கே அமைதியே உருவாக்கிட்ட மாதிரி  அடுத்த தீபராதனை தொடங்குது...அந்த நேரம் சரியா பழனிச்சாமி செல்போஃன் ல பழைய செட் பாலிபோனிக்  ரிங்டோன் சத்தமா  அந்த சன்னதியே அதிர கேட்குது."வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்....... 

   இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம்:-2011

No comments: